சென்னை “மெயில்” பத்திரிகையானது தனது 11-2-33 தேதி தலையங்கத்தில் எழுதுவதாவது:-
“சுயமரியாதை இயக்கமானது எல்லா மதங்களையும் துணிகரமாகத் தாக்கி வருவதுடன் மதங்களை அழிக்க வேண்டுமென்று பலமான பிரசாரம் செய்து வருகிறது. இதற்குக் காரணம் சர்க்கார் மத நடுநிலைமை வகித்திருக்கிறது என்ற ஒரே சாக்குத்தான். இதன் பயனாய் இப்பொழுது மத விஷயமான பிரசாரங்களுக்கு பொது மேடைகளில் இடமில்லாமல் போய் விட்டது. கோவிலிலும், பள்ளிவாசல்களிலும், சர்ச்சுகளிலும் மாத்திரம் தான் தனியாய் பேச முடிகின்றது. இதனால் சோவியத் ரஷியாவில் மதம் அழிந்தது அத் தேசம் நாசமுற்றது போல் இங்கும் நேரலாம் என்று கருத இடமேற்படுகின்றது. மத விஷயம் மறுபடியும் பொது மேடைகளுக்கு தாராளமாய் வர வேண்டுமானால் பள்ளிக்கூடங்களில் மதத்தைப் புகுத்தியாக வேண்டும். தோழர் காந்தியையும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வதை விட்டு விட்டு சுயமரியாதைக் கட்சியை ஒழித்து அதன் பிரசாரத்தை அடக்கும் விஷயத்தில் பாடுபட்டால் அது மிகவும் பயனளிக்கும்”
என்பது விளங்க எழுதி இருக்கிறது. இதைப் பார்த்து நாம் ஒன்றும் ஆச்சரியமடையவில்லை. ஏனெனில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இதுவரை இந்து மதக்காரரும் இஸ்லாம் மார்க்கக்காரரும், கிறிஸ்து சமயக்காரரும் எவ்வளவு தூரம் தாக்க வேண்டுமோ, குறையும் பழியும் கூற வேண்டுமோ, அவ்வளவு தூரம் தாக்கி, குறை கூறியும் அந்தப்படியே பிரசாரம் செய்தும் பாமர மக்களை ஏவியும் வருகிறார்கள்.
ஆனால் மேற்கண்ட இந்த பல மதக்காரர்களைப் போலவே மனப்பான்மையும், ஊரார் உழைப்பில் வாழும் சுகவாழ்வும் கொண்ட செல்வவான்கள் என்னும் மற்றொரு மதக்காரர், அதாவது பணக்கார சுகவாசி மதக்காரர்கள் ஆன “மெயில்” பத்திரிகை இனத்தாரும் தங்களது நலத்திற்கும் ஆபத்து வருமோ என்னமோ என்ற பயத்தால் நம்மை ஏதோ ஒரு வழியில் தாக்கியாக வேண்டியவர்கள் தான். ஆதலால் இவர்கள் இப்போது தாக்குவதில் நமக்கு அதிசயமொன்றுமில்லை.
ஆனால் ஒவ்வொரு தாக்குதல்காரர்களும் தாங்கள் தாக்குவதற்காகச் சொல்லும் காரணம்தான் இங்கு யோசிக்கத் தகுந்தது.
அதாவது, சுயமரியாதைப் பிரசாரத்தால் மதங்கள் ஒழிந்து கடவுள் உணர்ச்சி மறைந்து போகுமானால் இந்த மதப் பாதுகாப்பாளர்கள் என்பவர்கள் மக்களுக்கு “மோக்ஷம் கிடைக்காமல் போய் விடுமே” “கடவுள் சன்மானம் கிடைக்காமல் போய்விடுமே” “எல்லோரும் நரகத்துக்குப் போய் விடுவார்களே” என்றுதானே கஷ்டப்படவேண்டும். அப்படிக்கெல்லாம் இல்லாமல், எதற்கெடுத்தாலும் சுயமரியாதைகாரர்களை உச்சரிப்பதுடன், சோவியத் ருஷியாவை ஜெபித்து, சர்க்காரைக் கூப்பிட்டு பூச்சாண்டி காட்டுவதின் இரகசியம் என்ன என்பதைக் கவனித்தால் மதத்தின் இரகசியமும், கடவுள் உணர்ச்சியின் இரகசியமும் தானாய் விளங்கி விடும் என்றே கருதுகிறோம்.
சோவியத் ருஷியாவில் மதமும் கடவுளுணர்ச்சியும் போய் விட்டதால் அது கடலுக்குள் முழுகிப் போய்விடவுமில்லை. காற்றில் பறந்து போய் விடவுமில்லை. தீப்பற்றி எறிந்து விடவுமில்லை.
மற்றபடி சோவியத் ருஷியாவைப் பற்றி யாராவது ஏதாவது யோக்கியமான - உண்மையான குற்றம் சொல்ல வேண்டுமானால் அங்கு (சோவியத் ருஷியாவில்) “ஒருவன் உழைப்பை ஒருவன் அனுபவிப்பதில்லை. எல்லோரும் எல்லோருக்காகவும் பாடுபட வேண்டியது பலனை எல்லோரும் சரி சமமாய் அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள்” இந்தப்படியே நடக்கிறார்கள். இது தான் அங்குள்ள கெடுதி. இந்தக் கெடுதி சோவியத் ருஷ்யாவைத் தாண்டி அதற்கு 250 மைல் தூரத்திலிருக்கும் இந்தியாவுக்கும் வந்து விடுமேயானால் யாருக்கென்ன ஆபத்து வந்துவிடும். அல்லது இந்தியா எந்த சமுத்திரத்தில் மூழ்கி விடும். எந்தக் காற்றில் பறந்துவிடும் அல்லது எந்த நெருப்பில் எறிந்து சாம்பலாகி விடும். புலி வருகின்றது! புலி வருகின்றது!! என்று போலி மிரட்டு மிரட்டுவதானது புலி வருவதைத் தடுத்துவிட முடியாது. அந்தப்படி புலியும் கிடையாது. பசுதான் வரப் போகிறது.
ஆகவே இவ்வித மிரட்டல்களையும், பழி சுமத்தல்களையும் இனியாவது இந்தக் கூட்டங்கள் கை விட்டுவிடும் என்று கருதுகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.02.1933)