கழக செயற்குழு முடிவு
15.6. 2008 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் கணேஷ் மகாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் கூடியது. கழகப் பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், செயற்குழு உறுப்பினர் சி. அம்புரோசு, பால் பிரபாகரன் - தூத்துக்குடி; துரை. சம்பத், க.சூ.இரவணா - திண்டுக்கல்;
செ.த. இராசேந்திரன் - திருச்சி; இரா. டேவிட், செ. மார்ட்டின், மேட்டூர்கி.முல்லைவேந்தன் - சேலம்; ந. பிரகாஷ் - கோவை தெற்கு; ந. அய்யனார் - விழுப் புரம்; கா.நாத்திகசோதி - ஈரோடு; இலட்சுமணன் - பெரம்பலூர்; மா.மாயாண்டி - மதுரை; எ.கேசவன், தபசி. குமரன் - சென்னை ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். வருகை புரிந்து கருத்துகளைத் தெரிவித்த கழகப் பொறுப்பாளர்களின் விவரம்:
வழக்கறிஞர் வை.இளங்கோவன், தி. தாமரைக் கண்ணன், கை வண்டி கருப்பு, ம.ரே. ராசுக்குமார், எம்.பாண்டியன், தங்கம், இரா. உமாபதி, சி. இராவணன், து.சுப்ரமணி, அன்பு தனசேகர், ப. திலீபன்.
காலை முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து கழகத்தின் செயல்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) தமிழகத்தில் மிகப் பெரிய சமுதாய விழிப் புணர்வை ஊட்டிய ‘குடிஅரசு’ இதழில் பதிவாகி யுள்ள பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் தொகுத்து, இதழ் தொடங்கப்பட்ட 1925 மே மாதம் முதல் 1938 முடிய உள்ள சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதையும் சுமார் 400 பக்கங்களாகக் கொண்ட 27 தொகுதிகளாக எதிர்வரும் பெரியார் பிறந்த நாளில் (17.9.2008) வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் வரவேற்ற செயற்குழு, மாவட்ட கழகத் தோழர்கள் அதன் முன் வெளியீட்டுத் திட்டத்தில் முழு முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டு, பெரியார் சிந்தனைகளை தமிழ்நாடு முழுதும், நாட்டு எல்லைகளைக் கடந்தும் பரப்புவதில் உற்சாகத்துடன் செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
2) பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அமைப்பாளர்களான கோவை பன்னீர் செல்வம், மதுரை அகராதி, மயிலாடுதுறை இளைய ராஜா ஆகியோர் அமைப்பு பணிகளுக்காக ஜூலை மாத தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ளனர். மாவட்ட கழகப் பொறுப்பாளர்களும், முன்னணி தோழர்களும் அவர்களுக்கு கழக மாணவர்களை அறிமுகப்படுத்தியும், பகுதிகளில் நிலவுகிற கல்வி நிலையங்கள் குறித்தான சிக்கல்களைத் தொகுத்து அளித்தும் அவர்களது அமைப்புப் பணிகளுக்கு ஊக்கம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
3) 80 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புக் கருத்துக்கள் பெரியார் அவர்களது காலத்தி லிருந்து தங்குதடையற்று நடந்து வந்த நிலைக்கு மாறாக சென்னை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும், கோவை மாநகரில் சில ஆண்டுகளாகவும் காவல்துறையிடம் அனுமதிக்கு அணுகும்போது, வெகு சிலரின் எதிர்ப்புக்குப் பணிந்து மூட நம்பிக்கை ஊர்வலங்களுக்கும், சில வேளைகளில் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகளுக்கும், பொது கூட்டங்களுக்கும் அனுமதி மறுப்பது வழக்கமாகிவிட்டது.
4) அதே வேளை, மதச் சார்பற்ற அரசு அலுவலகங்களில் குறிப்பாக காவல் நிலையங்களில் கடவுள் படங்களை வைப்பதும், இந்துமத பூஜைகள் நடத்துவதும், புதிய கோயில்கள் கட்டுவதும் - அரசு விழாக்களில்கூட பூமி பூஜை, யாகம் என நடைபெறுவதும், (அரசியல் சட்டம் வழிகாட்டும் அறிவியல் மனப்பான்மை, ஆய்வு மனப்பான்மை வளர்த்தல் ஆகியவற்றுக்கு முரணாகவும்) இயல்பாகிப் போய்விட்டது.
மாணவர்களின் கல்வியைக் குலைக்கும் வகையில் அரையாண்டு தேர்வின்போது அய்யப்பன் பேராலும், இறுதியாண்டு தேர்வின்போது மாரியம்மன், காளியம்மன் பேராலும் இரவு முழுவதும் ஒலி பெருக்கி வைத்தும் திருவிழாக்களின் பேரால் இரவு முழுவதும் மேளம் அடித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக காவல்துறை அனுமதிப்பதும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.
எனவே, அவ்வாறான நிகழ்வுகளின்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மனுக்கள் கொடுத்தும், உயர் அதிகாரிகளுக்கு நகல்கள் அனுப்பியும் நமது எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டு மெனவும், உரிய பலன் இல்லாமற் போகுமானால் ஆயுத பூஜை போன்ற ஏதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்குள் குறிப்பாக காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து அத்தகைய சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனவும் முடிவெடுக்கப் பட்டது.
5) பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணி அமைப்பாக தமிழர் கலை இலக்கிய மன்றம் தொடங்க முன்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை புதுப்பித்து சிறப்பாக இயங்க வைக்கும் முயற்சியாக, அவ்வமைப்பின் பெயர், செயல் வரைமுறை, அமைப்பு வடிவம் போன்ற வற்றை கலந்தாலோசித்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிக்கு கீழ்க்கண்ட தோழர்கள் அறிவிக்கப்பட்டார்கள். திருப்பூர் இராவணன், தாராபுரம் குமார், செம்பட்டி இராசா, பொள்ளாச்சி கா.சு.நாகராசு, சேலம் கொளத்தூர் செல்வேந்திரன், புதுவை மா.இளங்கோ, காரைக்கால் சரவணன். ஆகியோர் குழு உறுப்பினர்களாக செயல்படுவர்.
6) மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.