எனது கவலை, லட்சியம் யாதெனில் அந்நியன் என்றால் வெள்ளையன், பனியா, முல்தானி, மார்வாடி, காஷ்மீரி, குஜராத்தி ஆகிய இவர்கள் ஆதிக்கத்திலிருந்து அதாவது, எந்தவித ஆரிய ஆதிக்கத்திலிருந்தும் விலகுவதும், பிரிட்டிஷ்காரன், அமெரிக்கன், ரஷியன், மேற்கண்ட மார்வாடி, பனியா, பார்ப்பனன், மேலோகத்தான் என்பவன் எவனும் நம்மைச் சுரண்டக் கூடாது என்பதாகும்.

வெள்ளையனே வெளியேறு என்பது பற்றி காந்தியார் அர்த்தம் சொல்லும்போது அவன் சுரண்டிக் கொண்டு வெளியே போகாமல் இங்கேயே இருப்பதைப் பற்றிக் கவலையில்லை என்று சொல்லுகிறார்.

periyar 465நாம் இங்கு உள்ள பார்ப்பனன் சமுதாயத்தின் பேரால், ஆரியத்தின் பேரால் சுரண்டக்கூடாது என்றும், மீறி எவன் சுரண்டினாலும் திராவிட நாட்டைவிட்டு வெளியே கொண்டு போகக்கூடாது என்றும் சொல்லுகின்றோம். விளக்கமாக, சென்னை மாகாணம் முழு சுயேச்சையுடன் இருக்க வேண்டும். பிர்லாக்கள், டாட்டாக்கள், மகாத்மாக்கள், நேருக்கள், வெள்ளைக்காரர்கள் யாராயிருந்தாலும், சென்னை மாகாணம் என்னும் திராவிட நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டுமென்றால் பாஸ்போர்ட் அனுமதிச்சீட்டு வாங்கிக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும். எந்த வடநாட்டானோ, அல்லது வேறு எந்த அந்நியனோ நமது நாட்டுக்குத் தலைவனாகவோ, ராஷ்டிரபதியாகவோ, மகாத்மாவாகவோ இருக்கக் கூடாது. மனிதரெல்லாம் சமமாக வாழ வேண்டும், மனித வர்க்கத்தில், பறையனோ, சூத்திரனோ, சக்கிலியோ, பிராமணனோ, இழி ஜாதியானோ இருக்கக் கூடாது. இத்தகைய கொள்கைகள் காங்கிரசில் இருக்கின்றனவா? இதற்குக் காங்கிரஸ் சம்மதிக்கின்றதா? அப்படி சம்மதிக்காவிட்டால் யார் பித்தலாட்டக்காரர்? யார் உண்மை விடுதலைக்கு சமத்துவத்திற்கு எதிரிகள்?

உலக நாடுகள் பெற்றுள்ளமை போல நமது நாடும் சுதந்திரம் பெற்றுத் தனிநாடாக இருக்க வேண்டும். நாலு கோடி மக்களிலே யார் வேண்டுமானாலும், மந்திரியாகவோ, மகாத்மாவாகவோ இருக்கட்டும். நம்மிலே அத்தகைய தகுதியுடையவர்கள் இல்லையா? நமக்கு அரசியல் தெரியும், பரம்பரை பரம்பரையாக அரசாண்டவர்கள் நாம். நமக்குக் கப்பலோட்டத் தெரியும். பரம்பரை பரம்பரையாகக் கப்பலோட்டி வாணிபம் செய்தவர்கள் நாம். பிறன் ஆதிக்கம், உயர்வு இங்கு வேண்டாம், திராவிடர்கள் இங்கு நான்காவது ஜாதியினராக இருக்கின்றார்கள். திராவிடரல்லாத ஒரு கூட்டம் முதலாவது ஜாதியாக இருக்கின்றது. நூற்றுக்குத் தொண்ணூறு பங்காக உள்ள திராவிட இனம் இன்று சட்டத்திலே, சாஸ்திரத்திலே, சூத்திரனாக, பஞ்சம இழிமகனாக வாழ்கின்றது. திராவிடன் மனிதனாக வாழ வேண்டாமா? திராவிட நாடு இழிமக்கள் இல்லாத நாடு ஆக வேண்டாமா?

இக்காலத்திலே சிம்மாசனத்திற்கோ மகுடத்திற்கோ மதிப்பில்லை. ஜனநாயக ஆட்சியே இக்காலத்திற்குத் தேவை எனப்படுகின்றது. நாணயம், ஒழுங்கு, மனிதத் தன்மையுடன் யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தட்டும் இன்றைக்கு அரசராகவும் இருக்கட்டும்.

நீதி, நேர்மை, சமத்துவ ஆட்சிதான் நமக்கு வேண்டும். இராமாயணத்தில் சொல்லப்படுவது போன்று ஒரு ஜதை செருப்பு ஆண்டாலும் நமக்குக் கவலையில்லை ஆனால் சாஸ்திரத்திலே, சட்டத்திலே, நடைமுறையிலே நமக்கும், நம் இனப் பாட்டாளியான மக்களுக்கும் இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும். சோம்பேறி அயோக்கியர்களுக்கு இருக்கும் பிராமணோத்துவப் பட்டம் ஒழிய வேண்டும். சாஸ்திரத்திலே, மதத்திலே, கடவுளிலே ஜாதி இருப்பதை, பிரிவு இருப்பதை, பிறவி இழிவு இருப்பதை ஒழித்து விடுவதாகக் காங்கிரசில் எங்கேயாவது கொள்கைத் திட்டம் இருக்கின்றதா? எப்போதாவது எந்தத் தலைவராவது சொன்னார்களா? காந்தியாருக்கு இப்போது வேண்டுமானாலும் தந்தி கொடுத்து கேட்டுப் பாருங்கள். ஒப்புவாரா பார்க்கலாம்.

இராமன் காலத்தில் இருந்துதானே பறையன், சூத்திரன், பிராமணன் என்றும் மேல், கீழ் ஜாதிகள் இருந்திருக்கின்றன. சாமி கும்பிட்ட குற்றம் செய்த ஒரு சூத்திரன் கொல்லப்பட்ட பிறகுதான் இறந்து போன பார்ப்பனன் உயிர்பெற்று எழுந்ததாகப் புராணம் (இராமாயணம்) சொல்கின்றது. அரிச்சந்திரன் காலத்திலிருந்த பறையன் இன்றும் இருக்கின்றானே. ஆகவே, இத்தகைய இழிவுகளைப் போக்குவதற்காகத்தான் திராவிடர் கழகம் ஓர் உண்மையான ஒப்பற்ற விடுதலை ஸ்தாபனமாக விளங்கி வேலை செய்து வருகிறது.

இந்தியா என்னும் இப்பரந்த உபகண்டம் சுமார் 3000 மைல் நீளம் 2000 மைல் அகலம் உள்ளதாக இருக்கின்றது. இங்கு மக்களிடையே பண்டைக்காலம் தொட்டு இன்று வரையில் பல பேதங்கள் வளர்ந்து வந்துள்ளன. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடுவதில்லை. மணந்து கொள்வதுமில்லை. பல பாஷைகள், பல நாகரிகங்கள், பல உயர்வு தாழ்வுகள் ஆகிய வித்தியாசங்கள் இருந்து வருகின்றன. இத்தகைய பேதமுள்ள பிரதேசம் உலகத்தில் எங்குமேயில்லையே. இவ்வளவு வேற்றுமை கருத்துடைய ஒரு பெரிய உபகண்டத்தை ஒரே நாடு என்றும், ஒரே ஆட்சியில் இருக்க வேண்டுமென்றும் சொன்னால் இதை நாம் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம். அவன் எதற்கும் எங்களுக்குத் தேவையில்லை. நாட்டை ஆண்டு வந்த நாங்கள், வெள்ளையன் வந்த பிறகு பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிலாக இருக்கிறோம். ஆனால் பிச்சை எடுத்த கூட்டத்தார், இன்று அய்கோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜெனரலாக, திவானாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றும் இல்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போக வேண்டுமென்ற கவலை. ஏனெனில், வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள்தான் அடிமைகளாக இருக்கின்றோம்.

கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும் எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும் சூத்திரப் பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே. இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்று தானே கருத்து. இதற்குத்தானே _ இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம். ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தம் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மைப் பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யக்ஞவல்கியர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. கடவுளாலே கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படும், இந்த சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப் பட்டத்தை ஒழிப்பது?

(18.08.1946 அன்று கும்பகோணத்தில் காங்கேயன் பார்க்கில் தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு – ‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 12.10.1946

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா)

Pin It