அகில இந்திய தீண்டாமை விலக்குச் சங்கத்தின் சென்னைக் கிளையின் ஆதரவில் சென்ற 17 - 3 - 32 வியாழனன்று, காலஞ் சென்ற சுவாமி சிரத்தானந்தர் அவர்களின் உருவப் படத்தை வைக்கும் பொருட்டு, சர். ஏ. பி. பாத்ரோ அவர்கள் தலைமையில் சென்னைக் கோகலே மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் கூடிற்று. கூட்ட ஆரம்பத்தில், திரு. பாத்ரோ அவர்கள்,
“தீண்டாதாருக்கு இந்து சமூகம் செய்துள்ள தீமைகள் கொஞ்சம் அல்ல. அதை அகற்றுவதற்குப் பல சீர்திருத்தக்காரர்கள் பாடுபட்டு வந்திருந் தும், இன்று வரையிலும் இக்கொடுமை அழியாமல் இந்தியாவில் நிலைத்து வருவது வருந்தத் தக்கதாகும். ஒரு சமூகத்தாரைத் தொடவும் கூடாதென மிருகங்களைக் காட்டிலும் இழிவாக நடத்துவதை விடக் கொடுமையான விஷயம் வேறொன்றுமில்லை. புத்தர் போன்ற பெரியார்களின் உபதேசங்கள் இந்நாட்டில் தோன்றியிருந்தும், இன்னும் இத்தீண்டாமைக் கொடுமை ஒழியா மலிருப்பதற்குக் காரணம் இந்து சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே யாகும்”
என்று பேசியிருக்கிறார். இதைக் கொண்டு, நமது நாட்டில் தீண்டாமை நிலைத்திருப்பதற்குக் காரணம் இந்து மதமும், அதைக் கைப்பற்றியிருக்கும் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே யென்பதை அறியலாம். ஆனால் அதே சமயத்தில் சேலம் திரு. சி. விஜய ராகவாச்சாரியார் அவர்கள் பேசும் போது,
“இப்பொழுது நாம் யோசிக்க வேண்டிய விஷயம் தீண்டாமையை எப்படி விலக்கலாம் என்பதைப் பற்றியேயாகும். தீண்டாமை எப்படி வந்தது என்பதைப் பற்றி யோசிப்பதோ, அல்லது இந்து மதத்தின் மேல் குறைகூறிக் கொண்டிருப்பதோ தீண்டாமையை விலக்குவதற்குரிய வழியாகாது. இந்து மதந்தான் தீண்டாமை தொல்லையைப் புகுத்தி விட்டது என்று சொல்லவே முடியாது. இந்து சமூகம் தீண்டாமை நிலைத்திருப்பதை ஒப்புக்கொள்ளவே யில்லை என்று துணிந்து கூறுவேன்.”
என்று இந்து மதத்தைப் புகழ்ந்தும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டும் பேசியிருக்கிறார். ஆகவே இவ்விருவர்களின் கருத்துக்களையும் கவனித்தால் “தீண்டாமைத் தொல்லைக்கு இந்து மதம் காரணம்” என்று திரு. பாத்ரோ கருதுவதாகவும், இந்துமதம் தீண்டாமையை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகையால் இந்து மதத்தைக் குறை கூறுவது தவறு என்று திரு. விஜயராகவாச்சாரியார் கருதுவதாகவும் அறியலாம். ஆனால் எது உண்மையான அபிப்பிராயம் என்பதைப் பற்றி நாம் சிறிது ஆராய்வோம்.
இன்று தீண்டாத மக்களை உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்கள் வசிக் கும் தெருவில் நடக்கக் கூடாது என்று தடுப்பதற்கும், தீண்டாதார்களை, உயர்ந்த சாதியினர் என்பவர்கள் தண்ணீர் எடுக்கும் குளம், கிணறு முதலிய வைகளில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தடுப்பதற்கும், அவர்களைப் பொதுப் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று தடுப்பதற்கும் காரணம் இந்து மதமும், அதில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களும் அல்லவா என்று கேட்கிறோம்.
இன்று மலையாள நாட்டைச் சேர்ந்த குருவாயூரில், தீண்டாத மக்கள் கோயில் பிரவேசத்திற்காகச் செய்யும் சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நிற்கின்ற வர்கள், உயர்ந்த சாதியென்று சொல்லிக் கொண்டிருக்கும் வைதீக இந்துக்கள் தானே. இதைப் போலவே பம்பாய் மாகாணத்தில் உள்ள நாசிக் என்னும் ஊரில் தீண்டாதார்கள் கோயில் பிரவேச உரிமையின் பொருட்டுச் செய்யும் சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நிற்பவர்களும் உயர்ந்த சாதி யென்று சொல்லிக் கொண்டிருக்கும் வைதீக இந்துக்கள் தானே. இந்த உயர்ந்த சாதிக்காரர்களான வைதீக இந்துக்கள் இவ்வாறு தீண்டாதவர்களின் உரிமைகளுக்கு எதிரி டையாய் இருப்பதற்கு, இந்து மதத்தையும் இந்து மத சாஸ்திரங்களையும் தவிர வேறு ஏதாவது காரணம் உண்டா? என்றுதான் கேட்கிறோம்.
பார்ப்பனர்கள் வருணாச்சிரம தருமத்தின் பேராலும், சனாதன தருமத்தின் பேராலும், கூட்டங்கள் கூட்டுவதற்கும், மகாநாடுகள் நடத்துவதற் கும், அந்தக் கூட்டங்களிலும் மகாநாடுகளிலும் தீண்டாதவர்கள் ஆலயங் களுக்குள் செல்ல வேண்டுமென்று கேட்பதும் அதற்காக முயற்சி செய்வதும் இந்து மதத்திற்கு விரோதமான தென்றும், தீண்டாதார்க்குக் கோவில்களுக்குள் செல்லவும், உயர்ந்த சாதி இந்துக்களுடன் சமத்துவமாகப் பழகவும் உரிமை கொடுத்து விட்டால் இந்துமதம் அழிந்து விடுமென்றும் தீர்மானங்கள் செய்வதற்குக் காரணம் இந்து மதமும் இந்துமத சாஸ்திரங்களும் அல்லவா என்று தான் கேட்கின்றோம்.
பாமர மக்களால், மகாத்மாவாக மதிக்கப்படும் திரு. காந்தி அவர்கள் தீண்டாமையின் கொடுமையைப் பற்றியும், அதை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், பேசியும் எழுதியும் வருகின்றார். ஆனாலும் “தீண்டாமை ஒழிய வேண்டும்; ஆனால் வருணாச்சிரம தருமம் நிலைத்திருக்க வேண்டும்” என்றும், ‘பிறப்பினால் ஒவ்வொருவரிடமும் குண வேறுபாடு உண்டு’ என்றும், ஆத்மாவில்தான் எல்லாரும் சமத்துவமே ஒழிய உடம்பில் சமத்துவமில்லை’ என்றும் சொல்லிக் கொண்டு தான் தீண்டா மையை ஒழிக்க வழி தேடுகிறார். இவ்வாறு அவர் சொல்லுவதற்குக் காரணம் அவர் படித்த இந்து மத சாஸ்திரங்களும், அவர் நம்பும் இந்து மதமும் அல்லவா என்றுதான் கேட்கிறோம்.
இனி இந்துமத நூல்களில் வருணாச்சிரம தருமத்தைப் பற்றிக் கூறப்படாத சாஸ்திரங்கள் எவையேனும் உண்டென்றும் எவராலேனும் சொல்ல முடியுமா? திரு. காந்தியினாலும், மற்றும் இந்து மத வைதீகப் பண்டிதர் களாலும் மற்றும் சீர்திருத்த வாதிகளாலும் கூடப் புகழ்ந்து பேசப்படும் ‘கீதை’ யில்தான் வருணாச்சிரம தருமத்தைப் பற்றிக் கூறப்படவில்லை என்று சொல்ல முடியுமா?
‘பார்த்தனே! பெண்கள் வைசியர்கள் சூத்திரர்கள் பாப யோனியில் பிறந்தவர்களானாலும் அவர்களுள் என்னை நம்பி யிருப்பவர்கள் யாரோ அவர்கள் பரமபதத்தைச் சேர்வார்கள்.
‘புண்ணிய ஜென்மமுள்ள பிராமணர்களும் ராஜரிஷிகளும் பக்தி யுள்ளவர்களாய் என்னை ஆதரிப்பதற்குச் சொல்ல வேண்டுமா?’! (பகவத்கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32, 33)
மேற்காட்டியுள்ள பகவத்கீதை எதைப் போதிக்கின்றது. பிறப்பினால் ஜாதி உண்டு என்பதைப் போதிக்க வில்லையா? இந்த கீதையைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருப்பதுதான் சுயராஜியம் பெறுவதற்கும் மோட்சம் பெறுவதற்கும் வழி என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் வருணாச்சிரம தருமம் அழிவதற்கு எவ்வாறு சம்மதிப்பார்கள்?
‘ஆத்ம ஞானிகள் கல்வியில் தேர்ந்தவனிடத்திலும், கல்வியில்லாத பிராமணனிடத்திலும் பசு, யானை, நாய் என்பவைகளிடத்திலும் நாயைத் தின்கிற சண்டாளனிடத்திலும் அறிவுடையவர்கள் ஆத்மாக் களின் சமத்துவத்தையே பார்ப்பார்கள்’ (பகவத்கீதை அத்தியாயம் 5, சுலோகம் 18)
என்று காணப்படும் கீதை வாக்கியத்தைக் கொண்டு பகவத்கீதையில் தீண்டாமைக்கு ஆதரவில்லையென்று சொல்லக்கூடும். ஆனால் இதில் ஆத்மாவுக்குத்தான் சமத்துவம் கூறப்படுகிறதே ஒழிய உடம்புக்குச் சமத்துவம் கூறப்படவில்லை என்பதை அறிந்தால் தீண்டாமை விலக்குக்கு இடமில்லை என்பதை அறியலாம்
பகவத்கீதையில் இந்த சுலோகத்தைக் காட்டிலும் சமத்துவத்தை வற்புறுத்துவதற்கு வேறு சிறந்த சுலோகமில்லை. இதுவே இப்படி இருக்குமானால் மற்றவை எப்படியிருக்குமென்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.
இனி தமிழர்களால் சமதர்மநூல் என்று சொல்லப்படும் குறளில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதன் உண்மை நிலை என்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமையால்”
என்ற குறளைக் கொண்டு பிறப்பு வித்தியாசத்தைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளவில்லையென்றும் தொழில் வேற்றுமை பற்றியே உயர்வு தாழ்வு வித்தியாசம் உண்டென்றும் கூறுகின்றனர். இதுவும் தீண்டாமையை ஒரு வழியில் ஒப்புக் கொள்ளுகின்றதென்பதே நமது அபிப்பிராயமாகும். உயர்வு தாழ்வு வித்தியாசத்தைக் கற்பிப்பது பிறப்பாயிருந்தாலும் சரி அல்லது தொழிலாயிருந்தாலும் சரி, அவை மூலம்தான் தீண்டாமையும் உற்பத்தியா கின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாது.
அல்லாமலும் திருவள்ளுவரும் வருணாச்சிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளமலில்லை யென்றே சொல்லலாம்.
“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”
என்னும் குறள்பாடல்கள் வருணாச்சிரம தருமத்தைப் போதிப்பனவேயாகும். “பார்ப்பான் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய பிறப்பிற்குரிய ஒழுக்கத்தை விட்டு விடுவானானால் கெடுவான்”.
‘அரசன் சரியாக அரசாட்சி செய்யாவிட்டால் பசுக்களின் நன்மை குறையும் ஆறுவகைத் தொழிலையுடைய பார்ப்பனர்கள் வேதத்தை மறந்து விடுவர்’
என்பனவே மேற்கூறிய குறள்களுக்கு அர்த்தம் என்பதைக் கொண்டு ஆராயும் போது திருவள்ளுவர் வருணாச்சிரம தருமத்தை ஒப்புக் கொள்ள வில்லையென்றாவது, உயர்வு தாழ்வு வித்தியாசங்களை ஒப்புக் கொள்ள வில்லை யென்றாவது, தீண்டாமைக்கு இடங்கொடுக்க வில்லையென்றாவது சொல்ல முடியுமா? ‘தமிழ் வேதம்’ ‘சமதர்ம வேதம்’ என்று சொல்லப்படும் குறளின் நிலமையே இப்படி இருக்குமானால் மற்ற நூல்களின் நிலைமையைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
இனி புராணக்கதைகளை எடுத்துக் கொண்டாலும் அவைகளும் தீண்டாமையை ஒழிக்க இடந்தரவில்லை என்பதைப்பற்றி நாம் அதிகமாக ஒன்றும் கூற வேண்டிய அவசியமில்லை. பெரிய புராணத்திலுள்ள நந்தனார் கதை ஒன்றே போதுமானதாகும். நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளிடத்தில் பக்தியுள்ளவராகிக் கோயிலுக்குள் செல்ல விரும்பிய தீண்டாதாராகிய நந்தனாரை அந்த உடம்புடன் கோயிலுக்குள் வந்து தன்னை வணங்குவதற்கு அந்த நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளே சம்மதிக்காமல் நெருப்பில் மூழ்கி இறந்து பார்ப்பன சரீரத்தைப் பெற்றுக் கொண்டபின் கோயிலுக்குள் வர வேண்டுமென்று சொல்லி அவ்வாறே நந்தனாரும் நெருப்பில் மூழ்கிப் பார்ப்பன உடம்பு பெற்றுக் கொண்டு கோயிலுக்குள் போனதாகத்தானே பெரிய புராணத்தில் சொல்லப் படுகின்றது? தீண்டாமை விலக்குக்கும் சமத்துவத்துக்கும் இடமிருப்பதாகச் சொல்லப்படும் பெரியபுராணம் என்பதே இவ்வளவு கொடுமையாக இருக்குமானால் மற்ற சின்ன புராணங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
இனி, சங்கராச்சாரியார் என்பவர் தீண்டாமையை ஒழிக்கப் போதனை செய்தார் என்று கதை சொல்லுகிறார்கள் அவர் ஒருநாள் கங்கையில் ஸ்நானம் பண்ணிவிட்டு வரும் போது எதிரில் வந்த ஒரு தீண்டாதானைக் கண்டு விலகியதாகவும், உடனே அத்தீண்டாதான் சங்கரரை நோக்கி ஆத்மாவில் என்ன வித்தியாசம்? என்று கேட்டதாகவும், பிறகு சங்கராச்சாரியார் ஆத்ம சமத்துவத்தை யறிந்து அவனைக் கட்டித்தழுவிக் கொண்டதாகவும், அவனுடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டியதாகவும், அதற்காக சங்கராச்சாரி யார் பஞ்சதசி என்ற நூலைச் செய்ததாகவும் அவருடைய கதையில் சொல்லப்படுகிறது. இந்தக் கதையும் ஆத்ம சமத்துவத்தைச் சொல்ல வந்ததே ஒழிய சரீர சமத்துவத்தைச் சொல்லவரவில்லையே! ஆகையால் இந்தக் கதையினால் பிறப்பு வித்தியாசமும், தீண்டாமையும் இருப்பதைக் காணலாம்.
மேற்கூறிய காரணங்களிலிருந்து தீண்டாமை நமது நாட்டில் தோன்றி நிலைத்திருப்பதற்கு இந்து மதமும், இந்து மத சாஸ்திரங்களும் அவைகளின் மூலம் உண்டான மூட நம்பிக்கைகளும், குருட்டுப் பழக்க வழக்கங்களுமே என்பதை அறியலாம். இந்த உண்மையை மறைத்துவிட்டு “இந்து மதத்தில் தீண்டாமைக்கு அனுமதியில்லை ஆகையால் இந்து மதத்தின் மேல் குறை கூறக் கூடாது” என்று சொல்லுவது இந்து மதத்தின் பேரில் வைத்துள்ள குருட்டு நம்பிக்கையும் இந்து மதம் அழிந்து போனால் தங்களுடைய கௌரவத்துக்கும் சுய நலத்துக்கும் பங்கம் வரும் என்னும் எண்ணமுமே தவிர வேறல்ல என்றே நாம் கூறுவோம்.
திரு. விஜயராகவாச்சாரியார் அவர்கள் “தீண்டாமை எப்படி வந்தது என்பதைப் பற்றி யோசிப்பதோ, அல்லது இந்து மதத்தின் பேரில் குறைகூறிக் கொண்டிருப்பதோ தீண்டாமையை விலக்குவதற்குரிய வழியாகாது” என்று கூறியிருப்பது எவ்வளவு மோசமான அபிப்பிராயம் என்று யோசித்துப் பாருங்கள்! ஒரு வியாதியைப் போக்க வேண்டுமானால் அது எவ்வாறு உண்டாயிற்று என்பதை முதலில் தெரிந்துகொண்டு அது தோன்றுவதற்குக் காரணமாயிருந்த தீமையை ஒழிப்பதன் மூலமாக அன்றோ எப்பொழுதும் அந்த வியாதியை வர வொட்டாமல் தடுக்க முடியும்? இதை விட்டு விட்டுத் தற்கால சாந்தியாகச் சில மருந்துகளைக் கொடுத்து அதன் தொந்தரவைத் தணித்து விட்டால் போதுமா? மறுபடியும் அடிக்கடி அவ்வியாதி உண்டாகித் துன்பப்படுத்தாதா? என்று யோசனை செய்து பாருங்கள்! இது போலவே தீண்டாமை உண்டானதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அக்காரணத்தை அடியோடு கல்லி யெறிந்து சுத்தப்படுத்தினால் அல்லவா தீண்டாமை அடியோடு அழியும்?
ஆதலால் தீண்டாமை எப்படி வந்தது என்பதைப்பற்றி யோசனை பண்ணிப் பார்த்தால் இந்து மதத்தின் மூலமாகத் தான் வந்தது என்னும் உண்மை யாருக்கும் விளங்காமற் போகாது. இவ்வுண்மையை யறிந்தவர்கள், தீண்டாமையை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் இந்து மதத்தையும் அடியோடு ஒழித்துத்தானாக வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரக்கூடும். ஆகையால்தான் இந்துமதமே தங்கள் உயர்வுக்குக் காரணம்; அது அழிந்தால் தங்கள் மதிப்பும் போய்விடும் என்று முடிவு செய்து கொண்டு எந்தக் காரியங்களைச் செய்தாலும் அவைகளுடன் இந்து மதப் பிரசாரத்தையும் சேர்த்துக் கொண்டு வருகின்ற பார்ப்பனக் கூட்டத்தைச் சேர்ந்த திரு. விஜயராகவாச்சாரியாரவர்கள் “தீண்டாமை எப்படி வந்தது?” என்பதைப் பற்றி ஆராய வேண்டாமென்று கூறினார் என்பதில் என்ன சந்தேகம்?
ஆகவே இந்தக் கொடிய தீண்டாமையை அடியோடு ஒழிப்பது எப்படி என்பதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தைப் பலமுறை வெளியிட்டிருக் கிறோமாயினும் இச்சந்தர்ப்பத்திலும் சுருக்கமாகக் கூறிவிடுகின்றோம். தீண்டாமை எப்பொழுதும் நிலைத்திருந்தால் தான் இந்து மதம் நிலைத்திருக்கும் என்ற அபிப்பிராயமுடைய வைதீகக் கூட்டத்தை ஒதுக்கித்தள்ளி விட்டு மற்றவர்களில் தீண்டாமையை ஒழிப்பதற்கு யோசனை கூறுவோருடைய அபிப்பிராயத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். “இந்து மதத்தில் தீண்டாமைக்கு ஆதரவில்லை. ஆகையால் இந்து மத தர்மங்களைக் கைப் பற்றுகிறவர்கள் எல்லோருக்கும் மத சம்பந்தமான சமூக சம்பந்தமான தடை கள் இரக்கக் கூடாது” என்று சொல்லுகின்றவர்கள் ஒரு சாரார். “இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமிருக்கிறது; இதனாலேயே இந்து மதம் பாழடைந்து வருகிறது. ஆகையால் இக் கொடுமையை இந்து மதத்தை விட்டு ஒழித்துப் பரிசுத்தமாக்க வேண்டும்” என்று சொல்லுகின்றவர்கள் ஒருசார்பார்.
ஆனால் நாமோ இந்த இரு சார்பினர்களின் அபிப்பிராயங்களையும் ஒப்புக் கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும், மதத்தையும், சாஸ்திரங் களையும் நம்பிக்கொண்டு, அவைகளை ஒழிக்க மனமில்லாமல் அவைகளின் மூலமாகவே தீண்டாமையை ஒழித்துச் சமத்துவத்தை உண்டாக்க வேண்டுமென்று விரும்புகின்றார்கள். இவர்களுடைய விருப்பம் எந்தக் காலத்திலும் நிறைவேறப் போவதில்லையென்பதை, மதத்தையும், சாஸ்திரங்க ளையும் நம்பிக் கொண்டு தீண்டாமையை ஒழித்துச் சமதர்மத்தை உண்டாக்க முன் வந்த, ராமாநுஜர், சைதன்யர், குரு, கோவிந்தசிங், குருநானக், தயானந்த சரஸ்வதி, விவேகாநந்தர், ராமலிங்க சுவாமி போன்றவர்களின் முயற்சி என்ன ஆயிற்று என்று ஆலோசித்துப் பார்ப்பவர்கள் ஒப்புக் கொள்ளுவார்கள். இவர்களுடைய முயற்சியினால் ஒரு கடுகளவாவது தீண்டாமையைப் போக்க முடிந்ததா?
இவ்வாறு இவர்களுடைய முயற்சிகளும், உபதேசங்களும் பலன் தராமல் போனதற்குக் காரணம், அவர்கள் தங்கள் முயற்சிகளுக்கும், உப தேசங்களுக்கும் மதங்களையும், சாஸ்திரங்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவைகளுக்குத் தத்துவார்த்தங்கள் கூறித் தங்கள் கொள்கைகளுக்கு ஆதரவு தேடியதேயாகும் என்பதில் என்ன சந்தேகம்?
ஆகையால், மதமும், சாஸ்திரங்களும் ஒழிந்தாலல்லாமல் தீண்டாமை ஒழியப் போவதில்லை என்பதே நமது முடிவான அபிப்பிராயமாகும். இந்த அபிப்பிராயத்தினால் தான், சுயமரியாதை இயக்கம், மதங்களையும் சாஸ்திரங் களையும், அதிலும், அவசரமாகவும் அவசியமாகவும் இந்து மதத்தையும், இந்துமத சாஸ்திரங்களையும் அடியோடு ஒழிக்க வேண்டுமெனக்கூறியும், அந்த வேலையைச் செய்தும் வருகிறது.
உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களான - இந்து மதத்திலும், இந்துமத சாஸ்திரங்களிலும், நம்பிக்கையும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் உடைய இந்துக்களிடம் உள்ள மத நம்பிக்கையையும் சாஸ்திர நம்பிக்கையையும் ஒழிப்பதன் மூலமே தீண்டாதவர்கள் சமத்துவம் பெற முடியும் இந்து மதத்தை வைத்துக் கொண்டு ஒரு பொழுதும் சமத்துவம் பெற முடியாது. ஆகையால் இந்து மதம் ஒழியும் வரையிலும் தீண்டாமைக் கொடுமையை சகித்துக் கொண்டு இந்து மதத்துடன் போர் புரிந்து கொண்டிருக்க முடியாதவர்கள் இந்து மதத்தையே அடியோடு விட்டு விட்டுத் தங்களுக்குச் சமத்துவம் அளிக்கின்ற வேறு மதத்தில் சேருவதும் தவறாகாதென்றும் சொல்லுகின்றோம். அவசரமாகச் சமத்துவம் பெற விரும்புகிறவர்களுக்கு இதைத்தவிர வேறுமார்க்கமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.
(குடி அரசு - தலையங்கம் - 27.03.1932)