போர்ட் சைட்டிலிருந்து எழுதிய வியாசம் கிடைத்திருக்கலாம். அதில் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” என்கின்ற கப்பல் விஷயத்தைப் பற்றி மாத்திரம் எழுத முடிந்தது. மற்றபடி கொழும்பிலிருந்து கப்பல் புறப்பட்டதற்குப் பின் கண்ட விஷயங்களைப்பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.

கொழும்பிலிருந்து

டிசம்பர் 17 -ம் தேதி காலை புறப்பட்ட கப்பல் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ‘ஜிபுட்டி’ என்கின்ற பிரஞ்சு துறைமுகம் வந்து சேர்ந்தது. இது ஏடனுக்கு எதிர்பாகத்தில் இருப்பதும் பிரஞ்சுக்காரருடைய துறை முக முமாகும். நாங்கள் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணம் செய்ததால் பிரஞ்சு கப்பல் அங்கு செல்ல வேண்டியதாயிற்று. பிரஞ்சுக்காரருக்குச் சொந்தமான தீவாகிய மடகாஸ்கர் என்னும் தீவுக்கு அனுப்பப்படும் சாமான்களும் அத்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சாமான்களும் ஜிபுட்டி என்கின்ற துறைமுகத்தின் வழியாகத்தான் வர வேண்டும். இந்த துறைமுகத்தில் நாங்கள் இரங்கினதும் “கமாலியர்” என்கின்ற ஒரு ஜாதியார் நீக்கிறோவர்களைப் போல் அதிக கருப்பும் மிகவும் சுருண்ட தலைமயிரும் உடையவர்கள் தான் இந்தத் தேசத்தில் அதிகமாய் இருக்கிறவர்கள், இவர்கள் பாஷை அரபு - மதம் இஸ்லாம். மிகவும் இளைத்த சரீரம் உள்ளவர்கள், பார்வைக்கு விகாரமா னவர்கள், ரொம்பவும் ஏழைகள், அழுக்கு துணியுடையவர்கள் இவர்கள்தான் இவ்விடத்திய கூலிகள். பெண்கள் விகாரமாய் மலைலம்பாடி ஜாதியாரைப் போல் நகை அணிந்துகொண்டு நீண்ட குப்பாயம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். இங்கு சில அரபியரும், நம் பக்கத்திய அதாவது மரைக்காயர்கள், றாவுத்தர்மார்களைப் போல் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல உடை உடுத்திக் கொண்டு சுத்தமாகவும், நல்ல தோற்றமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் முதலாளிகளாகவும், சற்று நாகரீக வாழ்க்கைகாரராகவும் காணப்படுகிறார்கள்.

karunanidhi and periyarதினசரி வாழ்க்கை

ஜிபுட்டி துறைமுக பாகம் மாத்திரம் நல்ல உயர்தரக் கட்டடங்களும், நல்ல உயர்தர ஷாப்பு கடைகளும், பிரஞ்சுக்கார வெள்ளையர்களால் மிகுதியும் குடியிருக்கப்பட்ட மாளிகைகளும் உடையதாக காணப்படும். மற்றப்படி ஊருக்கு ஒரு பெண் கூட முகத்தை மூடிக் கொண்டு போனதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் முக்காடு மாத்திரம் போட்டிருக்கிறார்கள். இங்கு பம்பாய் குஜராத்தி வியாபாரிகள் சிலரைப் பார்த்தோம். இங்கு தபால் எழுதிவிட்டு சில சாமான்கள் சாப்பாட்டுக்கு வாங்கினோம். பிறகு 24ந்தேதி மாலை - 5 மணிக்கு ஜிபுட்டியிலிருந்து கப்பல் புறப்பட்டு 29ந்தேதி சூயஸ் துறைமுகத்துக்கு வந்தது. அத்துறைமுகம் மிக்க அழகானதாகவும், ஊர் மிகவும் புதிய முறையில் ஏற்படுத்தப்பட்டதாகவும் இருந்தது.

ஜிபுட்டியிலிருந்து செங்கடலில் கப்பல் புறப்பட்டவுடன் தினம் 1க்கு 3, 4 கப்பல் வீதமும், சூயசுக்கு பக்கத்தில் வரவர ஒரு மணி ஒன்றுக்கு ஒரு கப்பல் வீதம் கடலில் போவதையும் வருவதையும் பார்த்துக் கொண்டே இருந்தோம். சூயசுக்கு பக்கத்தில் வந்தவுடனே சிறிது சிறிதாய் குளிர் அதிகப்பட்டு சூயசில் நடுங்கும்படியான குளிர் ஏற்பட்டது. ஏனெனில் அங்குதான் முதலில் குளிர்கண்டோம். கப்பலில் எங்களுடைய இடம் 4வது வகுப்பு (மேல் தட்டு) ஆனதால் அங்கு சென்னையில் கப்பல் ஏறினது முதல் 4, 5 நாள் வெய்யிலாலும், மழையாலும் மிகவும் கஷ்டப்பட்டதுடன், சாமான்களுடன் அடிக்கடி மூட்டைகள் இறக்கும்போதும் ஏற்றும் போதும் இடம் மாற வேண்டியதாயும் இருந்தது.

புதுச்சேரி துறைமுகத்தில் எனக்கு சிறிது காச்சலும், மயக்கமும், தலை வலியும் அதிக தொந்தரவு செய்ததுடன், வெய்யிலிலேயே இருக்க வேண்டி இருந்ததாலும் சற்று மன வருத்தமும் உடல் நிலையைப் பற்றி கவலையும் ஏற்பட்டதால் 4வது வகுப்பில் இருந்து 3-வது வகுப்புக்கு மாற்றலாம் என்று தீர்மானித்து புதுச்சேரியிலிருந்து எங்களைக் காண வந்திருந்த திரு. பாரதிதாசன், திரு. நோயேல், திரு. செல்வம், அவர்களுடைய காரியதரிசி ஆகியவர்கள் மூலமாய் கப்பல் கமிஷனரிடம் சென்று மாற்றும்படி கேட்டதில் அவர் சென்னையில் 3-வது வகுப்புக்காக சொல்லப்பட்ட சார்ஜை விட 2 - பவுன் அதிகமாக கூட்டி 1 - டிக்கட்டுக்கு 120ரூ. வீதம் அதிகம் கொடுக்க வேண்டுமென்று சொன்னார். அதற்கும் சம்மதித்ததில் இங்கிலீஷ் பவுன்நோட்டு எடுக்க மாட்டேன் என்று சொல்லி இந்திய நாணய நோட்டே வேண்டுமென்று கேட்டார்.

எங்களிடம் இருந்த துகைகள் எல்லாம் இங்கிலீஷ் நாணய நோட்டாகவே மாற்றப் பட்டிருந்ததால் புதுச்சேரி டவுனுக்கு இங்கி லீஷ் பவுன் நோட்டை அனுப்பி, இந்திய நாணயமாக மாற்றிக் கொண்டு வந்து கொடுப்பதாகச் சொல்லி நாணயம் மாற்ற திரு. பாரதிதாசன் அவர்களை புதுச்சேரி ஊருக்குள் அனுப்பினோம். அவர் இந்திய நாணயத்தையும் சில தின் பண்டங்களையும் ஒரு டாக்டர் வசம் அனுப்பி கொடுத்தார். அதற்குள் எனக்கு சற்று குணமாயிருந்ததாலும், டாக்டர் பரீக்ஷித்துப் பார்த்து சில பக்குவம் சொன்னதாலும் 3-வது வகுப்புக்கு மாறாமல் 4-வது வகுப்பிலேயே இருந்து கொண்டோம். பிறகும் 2, 3 நாள் கஷ்டப்பட்டோம். கப்பலில் நாங்கள் மூட்டைகளை விட கேவலமாகவே நடத்தப்பட்டோமானாலும் 4-ம் நாள் ஒரு கீழ் தட்டில் சாமான்களை வைத்துக் கொள்ள கப்பல் கமிஷனர் அனுமதி கொடுத்தார். அந்த கீழ்தட்டானது மூட்டைகள் போடவும் ஒரு பக்கம் பிரஞ்சு சோல்ஜர்கள் இருக்கவும் ஏற்பட்டது. அதில் 50 சோல்ஜர்கள் இருக்க இடமுண்டு. 50 சோல்ஜர்கள் ஏற்கனவே இருந்தார்கள். நாங்கள் மூட்டைகளின் மேல் இருந்தோம். இரண்டொரு நாள் சோல்ஜர்கள் எங்களுடன் பழகி விட்டதாலும், மூன்று தமிழ் பிரஞ்சு இந்திய சோல்ஜர்கள் மிக்க பழக்கமாகி விட்டதாலும் பிரயாணம் சிறிது கூட கஷ்டமாக தோன்றவில்லை.

ஆகாரம் இந்த சோல்ஜர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆகாரமே தான் எங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதாவது தினம் 2 வேளை வேக வைத்த உருளைக் கிழங்கும், கொள்ளு, அல்லது அவரை, கடலை முதலிய ஏதாவதொரு தானியமும் வேகவைத்துக் கொடுப்பதுடன், உருண்டை ரொட்டி 3-ம் இதுகளும், மாட்டு மாம்ச துண்டும், சாராயமும் கொடுக்கப்படுவது வழக்கம். காலையில் பால் இல்லாத காப்பியும் ரொட்டியும் உண்டு. இவற்றுள் சாராயம் மாட்டு மாம்சம் ஆகியவைகளை நாங்கள் உபயோகிக்கவில்லை. மற்றதுகளுடனும், கொளும் பிலும், சென்னையிலும் புதுச்சேரியிலும் வாங்கின பிஸ்கட், ஆரஞ்சுப்பழம் ஆகியவைகளுடனும் காப்பி, டீயுடனும் சரிப்படுத்திக் கொண்டோம்.

சூயஸ் கால்வாய்

சூயசிலிருந்து 29-தேதி பகல் 2 மணிக்குக் கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக போர்ட் சைட்டுக்குப் புறப்பட்டது. இந்தக் கால்வாயானது செங்கட லுக்கும் மத்தியதரை கடலுக்குமாக சுமார் 100 மைல் நீளம். மணல் தரையில் வெட்டப்பட்ட கால்வாயாகும். இதன் அகலமெல்லாம் சுமார் 150 அடி தானிருக்கும். நமது வாய்க்கால் போலவே இருபக்கம் கரையில் நடக்கும் ஜனங்களுடன் பேசிக் கொண்டே கப்பலில் போகலாம். ஆனால் 40 ஆயிரம் 50 ஆயிரம் டன் கனமுள்ள கப்பல்கள் எல்லாம் தாராளமாய் போகத் தகுந்த ஆழம் வெட்டப்பட்டிருக்கிறது. கால்வாய் வேலைகள் இன்னமும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றது. எதிரில் கப்பல் வந்தால் ஒதுங்கி நிற்க ஆங்காங்கு வசதி இருக்கின்றது. கால்வாய்க்கு நெடுக வாட்சுமேன்களும், காவல்களும், பந்தோபஸ்துகளும் உண்டு. இந்த கால்வாய் “சூயஸ் கால்வாய் கம்பெனியார்” என்கின்ற ஒரு கம்பெனியாரால் முதல் போட்டு வெட்டப்பட்டு ஒவ்வொரு கப்பலுக்கும் சுங்கம் வாங்குவதன் மூலம் பங்குக்காரர்களுக்கு லாபம் கிடைத்து வருகின்றது. ஒரு கப்பலுக்குச் சுமார் 10, 000 பத்தாயிரம் ரூபாய், 15,000 ரூபாய் போல் சுங்கம் வசூலிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டோம். சூயஸிலிருந்து போர்ட் சைட்டுக்கு போவதற்குள் குளிர் அதிகப்பட்டுக் கொண்டே வந்துவிட்டது.

போர்டு சைட்

29- தேதி இரவு 10 மணிக்கு கப்பல் போர்ட் சைட்டுக்கு வந்தது. இரவு 11 மணிக்கே பிரயாணிகளை கப்பலை விட்டு இறக்கிவிட்டார்கள். துறைமுகம் சென்னையைப் போலவே கப்பலிலிருந்து தரையில் கால் வைக்கலாம். ஸ்தல யாத்திரைகளில் எப்படி பண்டாரங்களும் அர்ச்சகர்களும் யாத்திரை வழி காட்டிகளும் ரயிலிலேயே வந்து தொந்திரவு செய்வார்களோ அதுபோல் Guide என்று சொல்லப்படும் வழிகாட்டிகள் கப்பலுக்குள்ளாகவே வந்து சூழ்ந்து கொண்டு இம்சைப்படுத்தி விட்டார்கள். பிறகு ஒருவன் எங்களுடன் விடாப்பிடியாய்த் தொடர்ந்து எங்கள் சாமான்களைக் கப்பலில் இருந்து போட்டில் ஏற்றிக் கொண்டு, எங்களை கஸ்டம் ஆபீசு, டாக்டர் சோதனை, சாமான் சோதனை முதலியவைகளை நடத்திக் கொடுத்து ‘அக்ராப்போல்’ என்கின்ற ஒரு ஓட்டலில் கூட்டிக் கொண்டு வந்து இரவு 12 மணிக்கு விட்டான். இங்கு ஓட்டல் என்பது தங்குமிடம் மட்டுந்தான். அதாவது ஒரு அறையில் சாமான் வைத்து படுத்துக் கொள்ளலாம். கட்டில், நாற்காலி, மேஜை உண்டு. சாப்பாட்டுக்கு வேறு ஏற்பாடுதான் செய்து கொள்ள வேண்டும். இந்த ஓட்டலில் நாள் 1க்கு 3 பேருக்கும் தங்குவதற்கு தினம் 3 ரூ. வீதம் பேசி ஒரு வாரம் இருந்தோம். சாப்பாடு சொந்தத்தில் செய்து கொண்டோம். வழிகாட்டி 7 ரூபாய் வாங்கி விட்டான். வழிகாட்டிகளின் கஷ்டத்தைத் தவிர வேறு கஷ்டமில்லை. பாஷை தெரியாதவர்கள் இந்த கஷ்டம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

போர்ட்சைட் ஊரானது சூயசைப் போலவே புதிதாக உண்டாக்கப்பட்ட சிறிய பட்டணம் 3 புறமும் தண்ணீர் சூழ்ந்தது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் எகிப்தியர்கள். அநேகமாக 100க்கு 90 பேர் இஸ்லாம் மதக்காரர்கள் மற்ற பல தேசத்தாரும் இங்கு இருக்கிறார்கள். துறைமுகம் என்பதைத் தவிர இதற்கு வேறு பெருமை கிடையாதானாலும் பெரிய பெரிய ஷாப்புகளும், அலங்கார சாமான் கடைகளும் தாராளமாய் உண்டு. சரி பகுதி காப்பிக் கடைகள் இருக்கும். சாமான்கள் நிலவரமெல்லாம் நமது ஊர்களிலுள்ளது போலவேயொழிய அதிகமில்லை. ஆனால் கடைகளில் சாப்பிட்டால் செலவு அதிகம். ஜனங்கள் பார்வைக்கு வெள்ளைக்காரர்களை போலவே இருக்கிறார் கள். எகிப்திய இஸ்லாம் பெண்களுக்கும், ஐரோப்பிய பெண்களுக்கும் வித்தி யாசம் கண்டு பிடிப்பது கடினம். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கூட அடையாள வித்தியாசம் கிடையாது. 3ல் 2 பாகம் பெண்கள் ஐரோப்பிய உடையுடனும் தொப்பிகளுடனுமே திரிகிறார்கள். ஆண்கள் எல்லாம் ஐரோப்பிய உடைதான், சில ஏழைக் குடும்பப் பெண்களும், சில கிராமக் குடும்ப பெண்களும் மாத்திரம் உள்ளே ஐரோப்பிய உடை அணிந்து மேலே கருப்புத் துணியினால் போர்த்துக் கொண்டு வாய் மாத்திரம் மறையும் படி ஒருவித வலை துணிகட்டிக் கொள்ளுகிறார்கள். (நெற்றி, கண், மூக்கு எல்லாம் தெரியும்)

ஆண்கள் ஐரோப்பிய உடையுடன் சிலர் ஐரோப்பிய தொப்பியும் துருக்கி தொப்பியும் அணிகிறார்கள். தாடி என்பது கிடையவே கிடையாது. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் இங்கு அடையாளம் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த ஊர் ஜனங்கள் எல்லோருக்கும் இந்த துறைமுகத்திற்கு வந்து போகும் பிரயாணக்காரர்களால்தான் வியாபாரமும் பிழைப்பும் நடக்க வேண்டியதே தவிர வேறில்லை. எகிப்திய இஸ்லாம் பெண்களின் டேன்சு தினமும் நடக்கும். பலர் உடம்பெல்லாம் பலவித பச்சைகுத்திக் கொள்ளுகிறார்கள்.

கெய்ரோ

போர்ட் சைட்டில் ஒரு வாரம் இருந்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி காலை 8 மணிக்கு கெய்ரோவுக்குப் புறப்பட்டு ரயிலேறி 5-ந் தேதி பகல் 1 மணிக்கு கெய்ரோவுக்கு வந்தோம். 150 மயில் தூரம் 3 வது வகுப்புக்கு மயிலுக்கு அரை அணா ரயில் சார்ஜ் விகிதம் ரயில் வண்டிகள் எல்லாம் S. I. R சின்ன வண்டிகளில் இரண்டு, இரண்டு பேருக்கு பெஞ்சிகள் இருப்பது போலவே எல்லா வண்டிகளிலும் இருக்கின்றது. வண்டிகள் எல்லாம் பெரிய வண்டிகள்.

முதல் வண்டியிலிருந்து கடைசி வண்டி வரை வண்டி நடுவில் நடந்து போகலாம். கெய்ரோ பட்டணமானது ஆப்பிரிக்கா தேசத்திலேயே பெரிய பட்டணமாகும். இதில் 10 லட்சம் ஜனங்கள் வசிக்கிறார்கள். இது ஈஜிப்ட் (எகிப்திய) தேசத்தின் தலைநகரமுமாகும். எகிப்திய தேசம் என்பது உலகத்தில் உள்ள பழமையான தேசங்களிலெல்லாம் மிகப் பழமையானது. நாகரிகங்க ளிலும் எகிப்திய நாகரிகமே மிகப் பழமையானது. இது உலகுக்கு மத்திய தேசமுமாகும், இவ்விடத்திய சீதோஷ்ண நிலை குளிர் காலத்தில் பெங்களூரைப் போலவும் வெய்யில் காலத்தில் நமது ஊர்களைப் போலவும் இருக்கும். இங்குள்ள மலைகள் அநேகமாய் மணல் மலைகளேயாகும். நிலங்கள் பெரும்பாகம் வெரும் மணல் பூமிகளாகவே இருக்கும்.

கெய்ரோவில் ஒரு பெரிய நதி ஓடுகின்றது. அதற்குப் பெயர் நில் (Nile) நதி என்று பெயர். இது உலகத்திலேயே பெரிய நதியாகும். இதன் நீளம் 3500 மைல். இதில் கப்பல்கள் தாராளமாகப் போகின்றன. இதற்கு பல வாய்க்கால்களும் தாராளமாகப் பாசனங்களும் உண்டு. இங்கு மழை என்பதே கிடையாது. ஒட்டகம், குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகியவைகளால்தான் எல்லா வேலையும் செய்யப்படுகின்றது. பசுமாடு பால்கரக்கவும், காளை மாடுகள் சாப்பிடவும் தான் பயன்படுகின்றன. உருளைக் கிழங்கு, முட்டை கோஸ் முதலிய குளிர் தேசக் காய்கரிகளே தான் அதிகம். எல்லோரும் கோதுமை ரொட்டியும் சப்பாத்தியும் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். உடை விஷயங்கள் நம் ஊர் உடைகளைவிட அதிகம் தேவை இருக்கிறதுடன் அதிகமாகவே உபயோகிக்கிறார்கள். அவற்றின் விலைகள் எல்லாம் நமது பக்கத்தை விட நயமாகவே இருக்கின்றன.

பொதுவாக கிராமங்கள் எல்லாம் மண் சுவர் வீடுகளாகவும் மேற்கூரைகள் எல்லாம் மரம் போட்டு பலகை போட்டு மண் பரப்பியதாகவுமே இருக்கின்றன. மழை இல்லாததால் கூரையைப் பற்றி இவர்கள் கவலைப் படுவதில்லை. பட்டணங்களில் வீடுகள் 3, 4, 5, 6, 7 மாடி வரையில் இருக்கின்றன. 3, 4 மாடிகளே அதிகம். பொதுவாகப் பம்பாய்க் கட்டடங்கள் போலவே காணப்படும்.

நிற்க, நான் இதுவரை எனது உடைகளை மாற்றிக் கொள்ளவில்லை. தலைக்கு மாத்திரம் ஒரு கம்பளி குளிர் (மங்கி கேப்) குல்லாய் போட்டுக் கொண்டேன். ஆகாரம் ரொட்டி, முட்டை, காப்பி இவைகள் தான் முக்கியமாய் உபயோகிக்கிறேன். முட்டை இவ்விடம் மிக மலிவு. 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது.

இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு நான் ஒருவனே தாடி வைத்தவனாகவும், ஒரு புதுமாதிரி மனிதனாயும் காணப்படுவதால் யாரும் குறிப்பாய்ப் பார்ப்பதும் மற்றும் மரியாதை செய்வதுமாய் இருக்கிறார்கள். கூடுமான வரையில் ஜனங்கள் நமது ஜனங்களை விட நல்ல குணமுள்ளவர்களாகவும், விவேகிகளாகவும் இருக்கிறார்கள். இந்தியன் என்றால் மிகப் பிரியமாய்ப் பேசுகிறார்கள். ஐரோப்பியரிடம் வெறுப்பாய் இருக்கிறார்கள். இவ்விடத்திய பெண்கள் மிகவும் சுருசுருப்பாகவும், சுதந்திர உணர்ச்சியும், தைரியமும், துணிவும் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவர்கள் ஆகியவர்களுக்கு நமது பக்கத்திய குழந்தைகளை விட அதிக புத்தியும், சுதந்திர உணர்ச்சியும் துணிவும் இருக்கின்றன. மற்ற அரசியல் மதவியல் சம்மந்தமான விஷயங்கள் பின்னால் எழுதுகிறேன். இன்னும் இரண்டு மூன்று தினத்தில் ‘ஏதன்சுக்கு’ (கிரீக் தேசம்) போவோம்.

(குடி அரசு - பயணக் கடிதம் - 07.02.1932)