நாள் 4

காலை 7 மணிக்கு மேல் மட்டுமே விடுதியில் குறைவான அளவில் குளிப்பதற்கு வெந்நீர் வரும்.

பின்னர், அனைவரும் எழுந்து, சிலர் குளித்தும், சிலர் கை கால்களை அலம்பித் தயாராகி, உணவருந்தச் சென்றோம்.

அங்கு காலை உணவிற்கு முந்தய நாள் இரவே சொல்லி வைக்க வேண்டும். நங்கள் அதைச் செய்யாததால், தேநீர் மட்டுமே குடித்து காலைப் பசியை அடக்கினோம்.

நான்காம் நாள் பயணம் மோட்டார் சைக்கிளில் என்பதால் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

kashmir 676அதனைத் தொடர்ந்து ஒரு ஹிமாலயன் வாகனத்தில் நானும் ஆதியும், இரண்டாமொன்றில் அரவிந்த், மூன்றாமொன்றில் கிரியும், விக்ராந்த் வாகனத்தில் அண்ணன் பழனியும், ஸ்கூட்டரில் சிவகுமாரும் என உண்மையான சாகசப் பயணம் தொடங்கியது.

லே நகரத்தை அடைந்து, தனியாய் வாங்கிய கொள்கலனில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு, மூன்று நாள் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். ஏனென்றால் இதற்கடுத்து ஹண்டர் எனுமிடத்தில் மட்டுமே எரிபொருள் கிடைக்கும். அங்கும் இருப்பது சற்றே அரிது..!

முதல் நாள் எங்கள் இலக்கு நுப்ரா பள்ளத்தாக்கில் உள்ள ஹண்டர் எனும் இடம். இது லே நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் பயணம். செல்லும் வழியில் "வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் மிக உயரமான இடங்களில் ஒன்றான கர்துங்லா மலை (18380 அடிஉயரம்) முகடை கடந்து செல்ல வேண்டும்.

நான் ஏற்கனேவே கூறியது போலவே இவ்விடங்களில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உடலில் நீரிழப்பு அதிகமாகும். ஆதலால் ஆக்ஸிஜன் குடுவை ஒன்றை வாங்கிக் கொண்டோம். இது தோராயமாக நமது ஒரு லிட்டர் தண்ணீர் குடுவையின் அளவை விட சிறியது. இதில் 250 முறை மூச்சை உள்ளிழுக்கலாம். (ஒரு முறை என்பது இதை வாயில் வைத்து 6 நொடிப் பொழுது ஆழ்ந்து உள்ளிழுத்து பிறகு மூச்சை மெதுவாக வெளியிட வேண்டும்.)

அதுமட்டுமில்லாமல் நீரிழப்பைக் கட்டுப்படுத்த, கரையும் தன்மை கொண்ட உப்புப் பொடிகளை நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது அதற்கான மாத்திரைகளை உண்ணலாம். இவ்வாறாக தேவையான பொருட்களை ஒரு பெரிய பட்டியலிட்டு, அதில் அவரவர் வாங்கி வரவேண்டிய பொருட்களையும் பிரித்து, ஏற்கனவே வாங்கியிருந்தோம். அவ்வாறு வாங்கி வராதவற்றை இப்பொழுது வாங்கிக் கொண்டோம்.

நான் புகைப்படம் எடுக்க ஏதுவாக பின்னிருக்கையில் அமர்ந்து, நான்காவதாக எங்கள் வாகனம் சென்றது. முதலில் கிரி, இரெண்டாவது அரவிந்த் மூன்றாவதாக சிவகுமார் மற்றும் கடைசியாக பழனி அண்ணன்.

ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு சென்ற பின், சோதனைச் சாவடியில் எங்களது சுற்றுலா அனுமதிச் சீட்டை சரிபார்த்து அனுப்பினர்.

ley ladakh checkpostசாலையும் அருமையாக அமைந்திருந்ததால் மலைகளை ரசித்துக் கொண்டு, பயணம் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. மேலே உயரம் செல்லச் செல்ல பசி எடுத்தது.

இருப்பினும் மேகக்கூட்டங்களின் நிழல்கள், மலைதொடர்களை நிற வேறுபடுத்திக் காட்ட, இயற்கையின் மாயாஜாலத்தை கண்டு வியந்தோம்.

அதன் பிறகு உயரே செல்லச் செல்ல ஸ்கூட்டர் வாகனத்தின் இழு திறன் குறைந்து மிகவும் மெதுவாகச் சென்றது.

பின்னர் எங்கள் வாகனம் ஸ்கூட்டரைப் பின்தொடர்ந்து மெதுவாகச் செல்ல, மற்ற வாகனங்கள் முன்னே சென்றன.

தெற்கு புல்லு என்ற இடத்தில் காலை மற்றும் மதிய வேளைக்குச் சேர்த்து துரித உணவுகளும், தேநீரும் அருந்தி கடுமையான குளிர் காற்றில் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வெறும் 40 கிலோமீட்டர் பயணத்தில், 11000 அடி உயரத்திலிருந்து 18000 அடி உயரத்திற்குச் சென்றோம். ஆதலால் காலநிலை மாற்றம் எங்களை வெகுவாகத் துன்புறுத்தியது.

15000 அடி உயரத்திற்கு மேல் செல்லும் போது ஸ்கூட்டர் நகரவில்லை. இருப்பினும் சிவகுமார் இடைவிடாது கால் ஊன்றித் தள்ளித் தள்ளிச் சென்றது எங்களை மிகவும் கடுப்பேற்றியது.

என்ன..? இவனுக்கு வாகனத்தை ஓட்டத் தெரியவில்லையா? ஏன் இந்த சிரமம் என கேட்க பதிலேதும் இல்லை..! மிகவும் களைத்துப் போயிருந்தான்.

அதற்கேற்றவாறு சாலையும் மிக மோசமாகக் காணப்பட்டது. ஆங்காங்கே கற்கள், மண்மேடுகள், வலதுபுறம் உயரே உருளவிருக்கும் ராட்சச பாறைகள், மாசு படிந்த பனிக்கட்டிகள், உருகிய பனிக்கட்டியின் சிறிய நீரோட்டம், இடப்புறம் 6 ஆயிரம் அடிப் பள்ளம் என மிரள வைத்தது கர்துங்லா மலைத்தொடர்.

இத்தனையும் புகைப்படங்களாக மாற்றிக் கொண்டே வந்தேன்.

ley ladakh 1இங்கு வருடம் முழுவதும் உறைபனி நிலவுவதால், பாறைகள் உறைபனிச் சிதைவடைகின்றன. விரிசல் உள்ள பாறைகளில் மழைபொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. இது இரவு நேரங்களில் உறைந்து பனிக்கட்டியாக மாறும் மேலும் பகலில் உருகும். பனிக்கட்டி திடப்பொருளாக இருப்பதால் இடுக்குகளில் அழுத்தத்தை உருவாக்குகிறது. ஆதலால் நாளைடைவில் பாறையில் உறைதல் மற்றும் உருகுதல் செயல்முறையானது தொடர்ந்து நடைபெறுவதால், பாறைகள் உடைந்து சிறு பகுதிகளாக மாறுகிறது. உடைந்த துண்டுகள் இறக்கத்தை நோக்கி உருளும். இந்த சரிவான நிலத்திலே சமன்படுத்தி சாலையமைக்கப்படும்.

ஸ்கூட்டர் எங்களுக்கு மிகவும் சோதனையைத் தந்தது. சிவக்குமார் முடியாமல் ஓரிடத்தில் நிற்க, நாங்கள் சிறிது தூரம் முயற்சி செய்ய, நாங்களும் நீரிழப்பு ஏற்பட்டு சோர்ந்துவிட்டோம்.

ஸ்கூட்டர் போன்ற குறைவான இழுதிறன் கொண்ட வாகனங்கள் இப்பகுதியில் நகர மறுத்தது. வாகனத்தை முழுவதும் முறுக்கியும் ஒரு அடி கூட நகரவில்லை.

வழியில் சென்ற அனைவரும் எங்களை உற்சாகப்படுத்த எங்களுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. இப்படியே வாகனத்தை திருப்பி லே சென்றிடலாமா என்று கூடத் தோன்றியது. இருப்பினும் ஒரு கட்டத்தில் எங்களால் ஒரு அடி கூட நகர முடியவில்லை.

இத்தனையும் கர்துங்லா மலை உச்சியின் 5 கிலோமீட்டர் முன்னதாக நடந்தது.

எங்களுக்கு முன்னே சென்ற கிரி மற்றும் அரவிந்த் ஏறக்குறைய 2 மணிநேரமாக அங்கு இருக்க, அவர்களும் மூச்சு விட சிரமப்பட்டு, தலை சுற்றிக் காணப்பட்டனர்.

ley ladakh 2கூடவே வழியில் பாறைகள் சரிந்து சாலை முழுவதுமாக தடைபட்டிருந்தது. அங்கே சுமார் 1 மணி நேரம் காத்திருந்து, சாலையைச் சரி செய்யும் பணியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

சாலைகளில் கிடந்த பாறைகளை 4000 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு, அது கீழே சென்றடைய சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. அவ்வாறு உருண்ட பாறைகள் ஆங்காங்கே தட்டி தெறித்து சிறு கற்களாக உடைந்து, தெறித்தோடி பள்ளத்தாக்கை அடைந்தது.

இது நம்மைத் தலை சுற்றவைத்து. நமக்கு மேலே உள்ள பாறைகள் உருண்டு வந்தால் என்ன ஆகும் என நினைத்து பயம் தலைக்கேறியது.

சில நிமிடங்களில் சாலைச் சீரமைப்புப் பணி முடிவடைய, கர்துங்லாவை சிறிது நேரத்தில் சென்றடைந்தோம்.

ley ladakh 3அண்ணன் பழனி அங்குள்ள தேனீர் விடுதி உரிமையாளரிடம், ஸ்கூட்டர் நிலைமையை எடுத்துக்கூற, “1000 ரூபாய் மற்றும் கடை முகவரி தாருங்கள். ஒப்படைத்து விடுகிறேன்” என்றனர். இதுவே எங்களுக்கு நல்ல யோசனையாக தெரிந்தது. அனைவரும் திரும்ப லே சென்றால் முழுத்திட்டமும் வீணாகிவிடும் என்று புரிந்தது. ஆனால் வாகனம் சரியாய் ஒப்படைத்து விடுவாரா ? இல்லை ஏமாற்றி விடுவாரா? என்ற எண்ணமும் இருந்தது.

எதையும் சந்திக்கலாம் என முடிவெடுத்து அவரிடம் பணத்தை கொடுத்து அங்கேயே நூடுல்ஸ் மற்றும் தேநீர் அருந்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். இடைப்பட்ட நேரத்தில் அங்குள்ள ராணுவ முகாம்களில் முடியாதவர்களுக்கு ஆக்ஸிஜன் வாயு கொடுத்து சிகிச்சையளித்துக் கொண்டிருந்தனர். அங்குள்ள ராணுவ வீரர்களில் தமிழர்கள் சிலர் இருந்ததால், பேசிக் கொண்டே நமது கிரியும், அண்ணன் பழனியும் சிகிச்சை பெற்றனர். நாங்கள் கொண்டு சென்ற ஆக்ஸிஜன் குடுவையை யாரும் உபயோகிக்கவில்லை.

இவ்விடங்களை அதிகபட்சம் 20 நிமிடங்களில் கடந்து விட வேண்டும். இல்லையெனில் மேற்கூறிய பிரச்சினைகளால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என ஒவ்வொன்றாகத் தொற்றிக் கொள்ளும்.

ley ladakh 4ஏறத்தாழ 2 மணி நேரம் நாங்கள் இங்கு தங்கியிருந்தோம். கிரி மற்றும் அரவிந்த் 4 மணி நேரமாக இங்கிருந்துள்ளனர். எனவே உடனடியாக சில புகைப்படங்களை எடுத்து விட்டு, நான்கு மணி நேர தாமதத்தோடு எங்களது இலக்கை நோக்கி பயணம் ஆரம்பித்தது.

மலையை விட்டு மறுபுறம் இறங்க இறங்க உயரம் குறைந்தது. ஆதலால் சுவாசிக்க சற்றே இதமாய் இருந்தது. அனைவரையும் முன்னே அனுப்பிவிட்டு சிறுது தூரத்தில் பனிபடர்ந்த மலைகளையும், ஹிமாலயன் வாகனத்தோடு சேர்த்து சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு எங்கள் வாகனம் நகர்ந்தது.

சரியான தலைக்கவசம், பனியைத் தாங்கக்கூடிய மேற்சட்டை, கையுறை இல்லாததால் மிகவும் அவதியுற்றோம். அனைவரும் ஓரளவிற்குப் பனியைத் தாங்கக்கூடிய ஆடைகள் மற்றும் காலணிகளை மட்டுமே பெற்றிருந்தோம். இது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று..!

இதில் நாங்கள் சரியாய்க் கவனம் செலுத்தவில்லை என்பதே சரியான கூற்று.

கர்துங்லாவிற்கு முன்னர் மற்றும் பின்னர் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் நிலைமை மிகவும் மோசம்.

இன்னும் ஏறத்தாழ 80 கிலோமீட்டர் பயணம் மீதமிருந்தது. இருக்கும் பகல் நேரமோ 3 மணி நேரம் மட்டுமே..!

அவ்வாறே இன்றைய பயணத்தின் நிலைமையை அறிந்து வாகனம் நிதானமாக சென்று கொண்டிருந்தது . பிறகு வடக்கு புல்லு என்னுமிடம் வர அங்கேயும் சாலைகளில் பாறைகள் சரிந்ததால் சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எங்களுக்கு இடப்புறத்தின் மேலே சாய்வான சறுக்கலில் பாறைகள் உருளத் தயாராக இருக்குமாறு தெரிந்தது.

பாதுகாப்பாக பெரிய வாகனங்களில் மறைவில் சென்று நின்று கொண்டிருந்தோம். இருபது நிமிடங்களில் பாதை சரியாக, முதலாவதாகக் கடந்து சென்றோம் அவ்விடத்தை..! ஏனென்றால் பாறைகளின் அமைப்பு எங்களை பயத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.

அதன் பின்னர் சோதனைச்சாவடி வர அனுமதிச் சீட்டை காண்பித்து வந்தோம். நாம் நிற்குமிடங்களில் மேகக்கூடங்கள் இருந்தால் பனியின் ஆதிக்கம் மற்றும் குளிர் வாட்டியெடுத்தது. எனக்கு அடிவயிறு சிலிர்க்க, கை கால்கள் உதற, மேல் மற்றும் கீழ் தாடைகள் ஒன்றை ஒன்று அடித்துப் பற்களின் ஓசை வரத் தொடங்கியது. அன்றைய தினத்தின் உச்சக்கட்டகொடூர நிலையை உணர்ந்தேன்.

பிறகு சாலையின் நிலை அருமையாய் மாறத் தொடங்கியது. ஒரு பேருந்து மட்டும் செல்லக்கூடிய அளவில் குறுகிய தார் சாலையாயினும், அருமையான பயணத்தை எங்களுக்கு அளித்தது. ஆதலால் மிதமான வேகத்திலாவது எங்களால் செல்ல நேர்ந்தது. வெறும் 140கிலோமீட்டர் தூரத்தை 8மணிநேரம் ஆகியும் இன்னும் சென்றடைய முடியவில்லையே எனக் கவலையுற்றோம். அத்தனையும் ஸ்கூட்டரால் வந்த வினை..!

கடினமான பாறைகளை உடைத்து, வளைந்து நெளிந்து சாலைகள் அமைக்கப்பட்டிருந்ததால் சற்று நிதானமாக பயணம் செய்தோம். ஏனென்றால், வலப்புறம் சறுக்கலாக ஏறத்தாழ 2000 அடிப்பள்ளம் இருக்கும். அத்தனையும் பனி உருகி செல்லும் ஆறுகள். தற்போது வெறும் மணல் மட்டுமே காற்றில் பறந்துகொண்டிருந்தது.

மேலும் இரெண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் கல்சார் என்ற ஊர் வர ஓரளவிற்கு நிம்மதியுண்டாயிற்று. இங்கிருந்து சாலையின் அமைப்பு பள்ளத்தாக்கில் சில கிலோமீட்டர் பயணம் செய்வதாக இருக்கும். அனைவரும் ஓரிடத்தில் நின்று, சிறிது நேர ஓய்விற்குப் பிறகு கிளம்பிச் சென்றோம்.

சில நிமிடங்களில் நுப்ரா நதியும், சியோக் நதியும் இணைந்து ஏறத்தாழ 4 கிலோமீட்டர் அகலத்தில் பள்ளத்தாக்காக காணப்பட்டது. நதியின் குறுக்கே 3 கிலோமீட்டர் நீளத்தில் அருமையான சாலை அமைக்க பட்டிருந்தது.

(நீர் அதிகமாக வரும் போது மலையின் அடிவாரத்தையொட்டி மற்றொரு சாலையும் நதியின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்தது. )

வளைவு நெளிவின்றி நேரான தார் சாலை. ஆதலால் வாகனத்தின் வேகம் 100யைத் தொட்டது. இது மிகவும் ஆபத்துதான். ஏனென்றால் இருபுறமும் புதைமணல் போன்ற மணல் படுகை…! இன்றைய பயணத்தில் ஏறத்தாழ 10 மணி நேரம் முடிந்தும், வாகனத்தின் வேகம் அதிகபட்சமாக 35யை தாண்டவில்லை.

ley ladakh 5அந்த வெறுப்பும், சாலையில் அமைப்பும் எங்களுக்கு இந்த வேகத்தைத் தூண்டியது.

சில நிமிடங்களில் ஆற்றைக் கடந்து மறுபடியும், மலை அடிவாரத்தில் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டே சென்றோம்.

டிஸ்கிட் எனும் கிராமத்தை அடைந்த போது மாலை 6. 30 மணியானது. நான்குமணி நேரமாக இடைநில்லாமல் வாகனம் ஓட்டி வந்த களைப்பில் தேநீர் அருந்த ஒரு கடையில் வாகனத்தை நிறுத்தினோம்.

தேநீர் மிக மோசமாக, கூடவே ரொட்டி துண்டுகளை சேர்த்து சாப்பிடலாம் என முயற்சி செய்ய, அது அதை விட கொடியதாய் இருந்தது.

பின்னர் இலக்கை அடைய சிறிது தூரமே இருந்ததால், மெதுவாக சென்று இரவு 7 மணியளவில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதியை அடைந்தோம்.

இரு மலைகளுக்கு இடையே, இரெண்டு கிலோமீட்டர் அகலத்தில் செல்லும் சியோக் நதியின் பக்கவாட்டில் அமைத்துள்ள கூடாரங்கள் எழில்மிகு தோற்றத்தை அளித்தது. கூடாரங்களினுள்ளே மூன்றடுக்கு போர்வைகள், மெத்தைகள், கழிப்பறை வசதி, மின்விளக்கு என அனைத்தும் அமையப் பெற்றிருந்தது.

ley ladakh 6சிறிது நேர ஓய்விற்குப்பிறகு, இரவு உணவிற்காக முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்தோம். முப்பது நிமிடங்களுக்கு பிறகு ரொட்டி, சாதம், பருப்பு, காய்கறி என கிடைக்கப் பெற்றது. அனைவரும் உணவருந்தி விரைவாகத் தூங்கச் சென்றோம். தண்ணீர் மிகவும் குளிர் நிலையிலிருந்ததால் அனைத்துப் பயன்பாடுகளுக்கும் சிரமமாகவே இருந்தது. குளிப்பதற்கு காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே வெந்நீர் வரும்.

இச்சமவெளி, லே உயரத்திற்கு 1000 அடி கிழே அமைந்திருந்ததால் இரவில் நிம்மதியான தூக்கம் இருந்தது.

நாள் 5

மறு நாள் காலையில், எனது விரல் பூரண குணமடைந்ததால், மிக்க மகிழ்ச்சியுற்றேன். ஆதலால் எழுத்து குளித்து கிளம்பி, ஹிமாலயன் வாகனத்தை எடுத்து சிறிது தூரம் தனியாக சென்று வந்தேன். சில்லென்ற குளிர் காற்றும், 24 குதிரைகள் சேர்ந்து இழுக்கும் வாகன சக்தியும், சிறு சிறு வேகத் தடையும், காலைச் சூரியனும் என்னை மிகவும் உற்சாகமாக்கியது.

பிறகு காலை உணவு உண்டு, கிளம்பும் நேரத்தில் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற்றோம்.

ley ladakh 7விடுதியின் மேலாளரின் உதவி மனப்பான்மை எங்களை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால் முந்தய நாள் இரவு, மறு நாள் காலை என அவரிடம் தொலைபேசி பெற்றுக்கொண்டே வீட்டிற்கு தொடர்பு கொண்டோம் ஆறு பேரும். எவ்வித சலமின்றி எங்களுக்கு இவ்வாறான உதவிகளை மேற்கொண்டார்.

அவ்வாறே அங்கிருந்து கிளம்பி, சியோக் நதியின் மணல் திட்டுகளை ரசித்துக் கொண்டே சென்றோம். இன்றைய பயணம் ஹண்டர் முதல் பாங்காங் ஏரி வரை சுமார் 230 கிலோமீட்டர்.

ley ladakh 8வழியில் எரிபொருள் நிலையம் தென்பட, வாகனத்தின் கொள்கலனில் மீதமுள்ள இடத்தை நிரப்பிக்கொண்டோம். இங்கு எரிபொருள் விலையானது நம்மூர் விலையிலிருந்து ஒரு சில ரூபாய்கள் மட்டுமே வித்தியாசம்.

டிஸ்கிட் ஊரில் மிகப்பெரிய புத்தர் கோவில் உள்ளது. சிறு குன்றின் மேல், 106 அடி உயரமுள்ள புத்தர் சிலை வண்ணமிகு தோற்றத்தில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்தது. நுழைவுக் கட்டணமாக ரூபாய் 30 செலுத்திவிட்டு சென்று, குன்றின் மேலே சென்றோம். அங்கிருந்து பள்ளத்தாக்கின் பசுமை, சாம்பல் போன்ற மலைமுகடுகள் என இயற்கையின் மாயாஜாலம் நிறைந்த காட்சியைக் கண்டு ரசித்தோம்.

ley ladakh 9நுப்ரா பள்ளத்தாக்கில் நேற்று 100கிலோமீட்டர் வேகத்தில் சென்ற இடம் வர வாகனத்தை நிறுத்தி சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு பயணம் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்ததது.

கல்சர் எனும் ஊரிலிருந்து லே மற்றும் பாங்காங் ஏரிக்கு சாலை பிரிந்து செல்கிறது. இன்றைய பயணம் முழுவதும் சியோக் நதியின் குறுக்கேயும், பக்கவாட்டிலும் செல்லுமாறு சாலை இருந்தது. ஆகையால் உயரமான மலைகளை கடக்க அதன் உச்சிக்கு செல்லத் தேவை இல்லை.

ley ladakh 10ஆதலால் பயணம் மிகவும் நன்றாகவே இருந்தது. ஆனால் சிறுது கவனக்குறைவானால் கூட சில நூறு அடி பள்ளத்தில், குளிர்ந்து செல்லும் நதியிலோ அல்லது நதியின் ஈரத்தினால் ஏற்பட்ட கழிமுகத்திலோ விழ நேரிடும். பெரும்பாலான இடங்களில் சாலையின் ஓரத்தில் தடுப்புகள் இல்லை.

“மிகக் கவனமான பயணம் மட்டுமே நாம் விரும்பிய இடத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்” என்று எண்ணிக் கொண்டு நிதானமாய்ச் சென்றோம்.

ley ladakh 11

அகம் எனும் ஊரில் தேநீர் அருந்த நிறுத்தி, கூடாரத்தின் உள்ளே சென்று அமர்ந்தோம். கூடாரத்தில் உட்ப்பகுதியை பார்க்கும் போது, அதன் வண்ணமயமான அழகு, சூரிய வெளிச்சத்தில் சிறப்பாய் இருந்தது.

அதன் அழகை எனது புகைப்படக்கருவியின் உள்ளே செலுத்தி, சிறிய மாற்றங்களுடன் வெளியிட்ட படம் எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.

ley ladakh 12மலைகளுக்கு நடுவே சமவெளிப்பகுதியின் அழகிய தார்சாலை, வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கத் தூண்டியது.

சமவெளியில் சிறியதாய் பனியாறு ஓடிக் கொண்டிருந்ததால் பசுமையான புல்வெளியாய்க் காட்சியளித்தது.

ley ladakh 13ஆங்காங்கே ஹிமாலயன் குதிரைகள் மற்றும் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இவ்வாறாக பயணம் செல்லச் செல்ல பசுமைப் புல்வெளி மறைந்து சிறிய மணல் திட்டுகளைப் போன்ற நிலப்பரப்பைக் காண முடிந்தது. சிறு மணல், காற்றில் வேகத்தினால் அலை அலையாய் சாலையில் சென்றது. அவ்வாறு சென்ற மண்துகள்கள் பள்ளமான சாலை இடங்களில் மணல்த்திட்டை உண்டுபண்ணியது. அரை அடிக்கும் மேலாக இருந்து மண்மேடுகள் வாகனத்தை சறுக்கி விடும் அளவிற்கு ஆபத்தாயிருந்தது.

மிகவும் மெதுவாகச் சென்றாலும் வண்டி மாட்டிக் கொள்ளும். வேகமாய்ச் சென்றால் சறுக்கிவிடும் அபாயமும் உண்டு. ஆதலால் மிதமான வேகத்தில் கவனமாய் ஓட்ட வேண்டியியிருந்தது. அவ்வாறு செல்லும் போது சாலையில் நடுவே சிறிதாய் சறுக்கி கீழே காலூன்றி நின்றோம். பின்னே ஒரு டெம்போ வாகனம் வேகமாய் வந்து எங்கள் பின்னே ஒலி எழுப்பிக் கொண்டே வந்து நின்றது. பிறகு ஆதியும் நானும் சமாளித்து வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி, வழிவிட்டோம். ஏனென்றால் நான்கு சக்கர வாகனங்கள் மணலில் மாட்டிக் கொண்டால் எடுப்பது மிகுந்த சிரமம். வாகனம் வேகத்தைக் கூட்டி முன்னேறிச் சென்றது. பிறகு நாங்களும் மெதுவாய் நகர்த்தி, நிதானமாய்ச் சென்றோம்.

ley ladakh 14சில தூரத்தில் வாகனங்கள் சில வரிசையாய் நின்று கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால் குறுகிய இரும்புப்பாலத்தில் எதிரே வரும் வாகனங்கள் வருவதில் சிரமம்..!

இடைப்பட்ட நேரத்தில், சொகுசுக் கார் ஒன்று தமிழகப் பதிவெண்ணில் எங்களருகே வந்து நின்றது. அடடே நம்ம ஊரு, என்று பேச்சுக் கொடுக்க, அவர்கள் கரூரில் இருந்து வருவதாய்க் கூறினார்கள். பின்னர் அவர்களும் சாலை வழியாக கரூரில் இருந்து ஸ்ரீநகர் வந்து எங்களது திட்டம் போலவே மணாலி வழியாய் மீண்டும் ஊருக்கு செல்வது எனக் கூறினர்.

சில நிமிடங்களில் வாகனங்கள் நகரத் தொடங்கியது. துருப்பிடித்த மிகப்பழமையான இரும்புப்பாலத்தில் வாகனம் சென்றது.

எங்கே சிதிலமடைந்த இரும்புத்துண்டுகள் வாகனத்தின் சக்கரத்தை பதம் பார்த்து விடுமோ எனத் தோன்றியது.

பாலத்தைக்கடந்து கரடு முரடான இறக்கத்தை நோக்கிச் சாலையானது சென்றது.

ley ladakh 15சில தூரத்தில் சாலையின் நிலைமை சீராகி வேகமாய்ச் செல்ல ஆரம்பித்தோம். இன்னும் ஏரி வரவில்லையே என நினைத்துக் கொண்டு செல்லும்போது மலைகளுக்குக்கிடையே சிறியதாய் நீலநிறத்தில் பாங்காங் ஏரியில் முதல் தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது.

சந்தோஷத்தில் “ஏஏஏய்ய்ய்ய்” என உரத்தக்குரலில் கத்த ஆதி பயந்து போய் என்னாச்சுண்ணா என கேட்க, பாங்காங் ஏரியை காட்டினேன்... !

(தொடரும்)

- ப.சிவலிங்கம்

Pin It