சகோதரர்களே!
இராமநாதபுரத்திற்கு அடுத்த சுமார் 15-மைலுக்கப்பால் திருப்பாலைக்குடி என்னும் ஊரில் ஓர் சாமியார் இருக்கின்றார். அவர் மகமதிய சாமியாராம். அவர் வெளிவந்து நான்கு மாதம் ஆயிற்றாம். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர் பூமிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டாராம். 3-மாத காலமாய் உள்ளேயே இருந்து பின் வெளிவந்து அந்த திருப்பாலைக் குடிக்குச் சென்று அங்குள்ள ஓர் வறண்ட குளத்தில் போய் அவர் கைவைத்த மாத்திரத்தில் தண்ணீர் பெருகி விட்டதாம். அவரிடம் வரம் கேட்க போகின்றவர்களுக்கு அந்த குளத்துத் தண்ணீரை எடுத்து வரச் சொல்லி கொடுக்கின்ராறாம். அதைச் சாப்பிட்ட மாத்திரத்தில் சகல நோய்களும் ரோகங்களும் நிவர்த்தி யாகின்றதாம். ஆஹா!என்னே ஆச்சரியம்! இவ்விருபதாம் நூற்றாண்டில் கடவுள் என்ற ஒன்று அரூபி என்று சொல்லுவதற்கும் ஆதாரமில்லாமல் தத்தளிக்கும் பொழுது ஒரு மனிதன் மேற்சொன்ன கடவுளும் செய்யொணாத காரியங்கள் செய்வதென்றால், பகுத்தறிவுள்ள எவரும் நம்ப ஹேது வுண்டா?
நிற்க, இன்னுமோர் அதிசயமாம். குழந்தையில்லாதவர்களுக்கு அந்தக் குளத்துத் தண்ணீரைச் சாப்பிட்ட மாத்திரத்தில் கெர்ப்பம் உற்பத்தி யாகின்றதாம்!.
முன்தேவர்களுடைய கலிதமான இந்திரியத்தைச் சாப்பிட்ட பின்னாவது குழந்தைகளோ மிருகங்களோ உற்பத்தியானதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. இப்பொழுதோ குளத்துத் தண்ணீரைக் குடித்த மாத்திரத்தில் குழந்தை உற்பத்தி ஆகின்றதென்றால், என்போன்ற சகோதர ஆண்பிள்ளைகளுக்கு இனி அந்த சம்மந்தப்பட்ட வேலையில்லை என்றே நினைக்கின்றேன்.
இருந்தாலும் குழந்தை பெறும் வழி இலேசானதாக இருந்தாலும் கர்ப்பத்தடை அவசியம் என்பதை சகோதரர்கள் அறிவார்கள் என்று நம்புகின்றேன்.
இந்த சாமியாரிடம் வரங்கேட்க நூறு மைல் சுற்றுப்புறமிருந்து நம் இந்து சகோதர சகோதரிகள் பதினாயிரக்கணக்காக வந்து குவிந்து ஒரு செம்பு தண்ணீர் கொண்டு போகின்றார்கள். செலவோ:- ரயில் சார்ஜ், கார் சார்ஜ், வண்டி சார்ஜ், சாப்பாட்டுச் செலவு, சாமியார் தக்ஷணை, சிப்பந்திகள் பிடுங்கள் வகைகளில் லக்ஷக்கணக்காக விரயமாகின்றது. கூடிய சீக்கிரம் அவ்வூரில் ஜனநெருக்க மிகுதியால் காலரா போன்ற வியாதிகள் கண்டிப்பாய் வரும் போலிருக்கின்றபடியால் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அதை உடனே நிவர்த்தி செய்ய வேண்டுமாயும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
நம் இந்தியர்கள் இந்த அற்ப விஷயத்தில் பகுத்தறிவைச் செலுத்த அசக்தர்களாயிருக்கையில் சுயராஜிய பாரத்தைத் தாங்குவதற்கு அருகதை யுள்ளவர்களா என்பதைச் சற்று யோசித்துப் பார்த்தால் பள்ளிப்பிள்ளைகளும் நகைப்பார்களென்றால், கனம் மிஸ் மேயோ போன்றவர்கள் நமக்கு புத்தி புகட்டுவதில் நாம் அவர்களை குற்றம் சொல்லுவது பொறாமையும் ரோஷமின்மையும் அல்லவா! ஆதலால் சகோதரர்களே! சகோதரிகளே! இம்மூன்று மாதங்களும் உங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகியவைகளை வீண் விரயம் செய்தது போதும் போதும்!! இனியாவது நம் யேழைப் பாமர மக்களுக்கும், நம் உடன் சகோதரர்களான தாழ்த்தப்படுத்தி வைத்திருப்பவர்களுக்கும் உதவி புரியும் வண்ணமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
(குடி அரசு - கட்டுரை - 12.07.1931)