சிவராத்திரி துருவனின் உற்சாகமும் என் உறக்கம் தொலைதலும்

எங்களது குடும்பம் முழு நாத்திகக் குடும்பம். குடும்பமாக நாங்கள் எந்தக் கோயிலுக்கும் வழிபட இதுவரை சென்றதில்லை. எனது 3 ½ வயது மகன் தூய‌வன் கடந்த தீபாவளி அன்று எங்கள் பக்கத்து வீட்டுக்காரருடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது நெருப்புக்கு தீப்பெட்டி எடுத்து வா என பக்கத்து வீட்டுக்காரர் சொல்ல, எனது மகன் தூய‌வன் "எங்கள் வீட்டில் தான் சாமி படமே இல்லையே... தீப்பெட்டி எப்படி இருக்கும்?" என எதிர்க் கேள்வி கேட்க, கேட்டவர் வாயடைத்து நின்றார். இப்படியான எங்கள் சூழ்நிலையில் எனது 8 வயது பெரியய மகன் துருவன் 2 நாட்களாக சிவராத்திரிக்கு சத்குருவின் ஈஷாவுக்கு அவனை அழைத்துச் செல்ல வற்புறுத்தி வந்தான். சிவராத்திரியன்று எனது மனைவியிடம் சொல்ல அவனை அழைத்துச் செல்ல மனைவியின் ரெகக்மண்டேசனும் சேர்ந்தது. "துரு உனக்கு எப்படி சத்குரு ஈஷா எல்லாம் தெரியும்?" என்று கேட்டேன். "பள்ளித் தோழர்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சுவரொட்டி வழியாக..." என்றான். எனக்கு அழைத்துச் செல்ல விருப்பமில்லை, தடுக்கவும் மனமில்லை. முகத்தில் ஏக்கம் படர நின்றான். என் முகத்தில் மகிழ்ச்சி பரவுவதைக் கண்டு என்னைத் தழுவி நின்றான். "துரு உனக்கு நேரடி ஒளிபரப்பு காட்டுகிறேன்" எனக் கூறி காட்டினேன். சிறிது நேரத்தில் போர் அடிக்கத் தொடங்க இடத்தைக் காலி செய்தான். எனக்கு காக்கா முட்டை பீட்ஸா நினைவுக்கு வந்து மறைந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவின் சிவராத்திரி நிகழ்வை நேரடியாகப் பார்த்து விட்டு முகநூலில் 'ஆன்மீக பஃப்' என்று எழுதினேன். அப்பொழுது இவ்வளவு பிரமாண்டம் கிடையாது. என் மகனின் கேள்விகள் என்னைத் தொற்றிக் கொள்ளவே நேரடியாக செல்வது என முடிவு செய்து இரவு சுமார் 9 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றேன். கூட்டம் மிக அதிகம் எனக் கேள்விப்பட்டு பேரூரில் வண்டியை நிறுத்தி விட்டு பஸ்சில் ஏறினேன். செம்மேடுக்கு மேல் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் நீண்ட நேரம் நகரவே இல்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டும் எறும்பு ஊறுவது போல் மெல்ல நகர்ந்தன. பஸ்சிலிருந்து இறங்கி நடக்கலானேன். ஜனத்திரள் நிரம்பி வழிந்தது. ஓர் இந்திக்கார தம்பியிடம் இரு சக்க‌ர வாகனத்தில் லிப்ட் கேட்டேன், கொடுத்தார். உரையாடல் நிகழ்த்திக் கொண்டே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மெல்ல ஊர்ந்து சென்றோம்.

jaggi vasudev

அழகிப் போட்டி நடைமேடையும், ஜக்கியின் ஆன்மீகப் பிரச்சார டார்ச்சரும்

நிகழ்ச்சி நடைபெறும் திறந்தவெளி அரங்கத்திற்குள் செல்ல பதிவு செய்து, கையில் அடையாள அட்டை கட்ட வேண்டும் என்றனர். எனக்குப் பிடிக்கவில்லை. வெளியேவே மிகப் பெரிய பிரமாண்ட டிஜிட்டல் திரையில் நிகழ்ச்சிகளைக் காணலானேன். ஈஷாவின் நுழைவாயிலில் ஏராளமான கடைகள் போடப்பட்டிருந்தன. யோகத்தின் தொன்மையை, நன்மையைப் பற்றிய காட்சிகள் நகரப் பின்னணியில் கணீர் குரலில் ஒலிக்கத் தொடங்கிய வேளையில். ஏராளமான ஜோசியக்காரர்களைச் சுற்றி அடித்தட்டு மக்கள் குறி கேட்டுக் கொண்டிருந்தனர். ஆச்சரியம் என்னவெனில், பல உயர்த்தட்டு மக்கள் குவிந்திருந்தும் ஒருவர் கூட ஜோசியக்காரர்களிடம் குறி கேட்க வரவில்லை. அவர்கள் Inner engineering யோகா குறித்த அருளுரையில் மூழ்கியிருந்தனர். வர்க்க குணாம்சம் ஆன்மீகத்தில் திரையைக் கிழித்து இரண்டாகக் காட்டியது. இவைகளைப் புரிந்து கொள்ள மக்களை விழிப்படையச் செய்யும் முற்போக்கு சக்திகளின் social engineering திறன் குறித்து என் மனம் அசைபோட்டது.

ஜக்கியின் அருளுரை இரைச்சலில் எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்தெழுந்து அடங்கியது. பக்தி இலக்கியம் முதற்கொண்டு இசையை ஆன்மீக வளர்ச்சிக்கு மதவாதிகள் பயன்படுத்திக் கொண்டு தான் வந்திருக்கின்றனர். தாராளமயத்திற்குப் பின்பு அரங்கில் நிகழ்த்தப்பட்ட ஆன்மீக இசைவடிவமானது உலக இசையை உள்ளூர் மக்களுக்கும், உள்ளூர் இசையை உலக மக்களுக்கும் வாசித்து வசப்படுத்தும் வித்தையை எண்ணி வியந்தேன். இசையில் முற்போக்கு சக்திகளின் நிலையை எண்ணி அயர்ந்தேன். கடந்த 10 ஆண்டுகளில் பல ஆய்வுகளின் வழியே 'கோக்கின்' தீமை வெளிப்பட்டும் மக்களிடம் எப்படி விளம்பரம் வழியாக சந்தையை தக்க வைத்துக் கொண்டுள்ளதோ. அதே போல் ஜக்கியின் குற்றச்செயல்கள் அம்பலப்பட்டும் ஆன்மீக சந்தையில் தனக்கான சந்தையை நிலைப்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொள்வது நினைவுக்கு வந்து சென்றது.

அழகிப் போட்டி போன்ற மேடை அமைப்பும், அதில் ஜக்கி கேட்வாக் (Catwalk) போவதும், காவி பவுன்சர்கள் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் நிற்பதையும் பார்த்தபோது, 'துறவி'யின் பயத்தை உணர முடிந்தது. உலக அழகிகளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அழகிகளின் 'பொது அறிவு' பல்லிளிப்பது போல் பக்தர்களின் உள்ளம் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கு ஜக்கி ஆங்கிலம் மற்றும் கொச்சைத் தமிழில் பேசும்போது ஜக்கியின் ஆன்மீக அறிவு பல்லிளித்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ஏனோ எனக்கு திருவிளையாடல் சினிமாவில் சிவன் "நக்கீரா... உம் தமிழோடு விளையாடவே வந்தோம்" என்று வசனம் பேசுவது என் மனக்கண் முன் வந்து சென்றது.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் ஜக்கியின் மொன்னை பிளேடு உரைகளை பெண் பிரபலங்கள் ரசித்து வியப்பது போன்று நொடிக்கு ஒரு தரம் குளோசப் ஷாட்களில் மக்களுக்குக் காட்டி, 'நீயும் ரசி' என்ற மிரட்டாமல் மிரட்டிக் கொண்டிருந்தனர். அருளுரை அரங்குக்கு வெளியே ஜக்கியின் அறுவை தாங்காமல் அடித்தட்டு பக்தர்கள் அறுவடை செய்த நெல் வயலின் குத்தும் அடிக்கட்டைகளின் மேல் குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட அடித்தட்டு மக்களின் ஆன்மீக மயக்கத்தைத் தெளியவும். புரியவும் வைப்பது எளிதென்று துலக்கமாகத் தெரிந்தது. அரங்கில் VIP பிரமுகர்களும், உயர் நடுத்தர வர்க்கப் பிரமுகர்களும் அருளுரைப் பிதற்றலை எப்படி ரசிக்க முடிகிறது? கல்விப் புலம் உள்ளவர்கள் எளிதில் சாமியார்களிடம் சரணடைவது புரியாத புதிராகவும், அவர்கள் ஆயுட்கால அடிமைகளாக தொடர்வதை தடுப்பது கடினம் என்றும் தோன்றியது.

ஜக்கியின் ஆன்மீக ஆடல்-பாடலும், ஒற்றைக் கயிற்றில் வயிற்றுப் பாட்டுக்கு ஆடும் சிறுமியும்

யோகத்தின் முத்திரைகள், ஆசனங்களின் பலன்களைப் பற்றி ஜக்கி அருளுரை நிகழ்த்தும் அரங்குக்கு வெளியே என் மகன் வயதை ஒத்த சிறுமி ஒற்றைக் கயிற்றில் பெற்றோரின் இசைக்கு ஏற்ப சாகசம் புரிந்து கொண்டிருந்தாள். ஒற்றைக் கயிற்றில் பிஞ்சுக் கால்கள் லாவகமாக மாறி மாறி நடனமாடியது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் சாகசத்தைக் காட்டி காசுக்கு மக்களிடம் இறைஞ்சினர் அவளது பெற்றோர்கள். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பெற்றோர்கள் மட்டும் கற்றிருந்து, பிஞ்சுச் சிறுமியின் உடலை வளைத்து நெளிப்பது யோக ஆசனங்களின் வளைவு என்று ஆன்மீக விற்பனையை செய்திருந்தால், அச்சிறுமியை ஜக்கியின் 'குட்டி வெர்க்ஷனாக' பெற்றோர்கள் மாற்றியிருப்பார்கள்.

அனைத்தையும் சுவாகா செய்யும் ஜக்கியின் யோகா - அறிவியல் கண்ணோட்டம்

ஜக்கி, பாபாராம் தேவ், ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் மூலதனம் யோகக் கலை. யோகக்கலை குறித்த அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கும் பெரியாரின் பகுத்தறிவு வழித் தோன்றல்களும், முற்போக்கு சக்திகளும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. எனது சீனியரிடம் மகன் கொலை வழக்கு சம்பந்தமாக மறைந்த பகுத்தறிவாளர் பிரேமானந்தா அவர்கள் வருவார். அப்பொழுது அவருடன் உரையாடும் சந்தர்ப்பங்கள் பலமுறை கிடைத்தது. அவரும் பாபா ராம்தேவும் ஒரு குருவிடம் யோகம் பயின்றதையும், யோகத்தின் தீமைகள் குறித்து எளிய விளக்கங்களுடன் புரிய வைத்தார், உதாரணமாக, தலைகீழாக நிற்கும் சிரசாசனம் செய்வதால் ஒட்டு மொத்த உடலின் எடையும். கழுத்தில் தாங்குவது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதும், பரிணாம வளர்ச்சி விதிப்படி கால் உடலின் முழு எடையைத் தாங்கும் திறன் கொண்டது. அதற்கேற்ற வகையில் காலின் வலு உள்ளது. ஆனால் கழுத்து அவ்வளவு வலுவாக இருக்கத் தேவையில்லை, எனவே அக்கழுத்தில் உடல் எடையைத் தாங்குவது இயற்கை நெறிக்கு எதிரானது என்பதை விளக்கினார்.

அதே போல் உடற்பயிற்சி என்பது ரத்த ஓட்டம் பாயும்படி கால்களை, கைகளை அசைக்க வேண்டும். கை கால்களை மடக்கி நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படும் கோளாறுகளை விளக்கினார்.

ரவிசங்கரின் வாழும் கலை பயிற்சியின் இறுதிநாளில் 'சுதர்சன கிரியா' என்றொரு யோகா உண்டு. நான் வாழும் கலை வகுப்பு சென்று கற்றிருக்கிறேன். அது என்னவெனில். (ஓ-உம்) சம்மணங்கால் போட்டு உட்கார்ந்த நிலையில் 'ஓ' என்னும்போது மூச்சை உள்ளிழுத்து, 'ம்' என்னும்போது வெளியே விட வேண்டும். மெதுவாக ஆரம்பிக்கும் பயிற்சி பின் நேரம் செல்லச் செல்ல மிக வேகமாக நடக்கும். அரை மணி நேரத்திற்குப் பின்பு படுக்கச் சொல்வார்கள். உடம்பு ஐஸ் கட்டி ஆகி மிதக்கத் தொடங்கும். நான் நாத்திகன், எனவே ஓம் என்று சொல்ல விருப்பமில்லை எனச் சொன்னபோது. “So-Come” என உச்சரிக்கச் சொன்னார்கள். பயிற்சிக்குப் பின் படுக்கச் சொன்னபின் 15 நிமிடம் ஒவ்வொருவரின் அனுபவமும் கேட்பார்கள். ஒவ்வொருவரும் நான் கடவுளைப் பார்த்தேன், முன்னோர்களைப் பார்த்தேன் என்று பல அனுபவங்களைச் சொல்வார்கள்,

இது குறித்து பகுத்தறிவாளர் பிரேமானந்தா அவர்களிடம் கேட்ட பொழுது, ஓடிய பின் மூச்சு வாங்குவது ஆரோக்கியம் என்றும், ஒரே இடத்தில் நின்று மூச்சு வாங்குவது கோளாறு என்றும் விளக்கினார். நான் மேற்படி கடவுள், பெற்றோர் சம்பவங்களைக் கேட்டேன். மூளைக்கு ஆக்சிஜன் செல்லாததானால் ஏற்படும் கோளாறு என விளக்கினார். நிற்க...

இன்று ஐ.நா.வில் யோகா அங்கீகரிக்கப்பட்டு அதற்கொரு நம்பகத்தன்மையை உலகம் முழுவதும் கிடைத்துள்ளது. ஆனால். யோகா - உடற்பயிற்சியா, ஆன்மீகத் தேடலா? அறிவியல் பூர்வமான யோகா குறித்த வெளியீடுகள் எவ்வளவு? யோக மாயை தெளியாமல் ஜக்கி வகையறாக்களின் சுவாகாவைத் தடுக்க முடியுமா?

isha yoga centerநமது முற்போக்காள‌ர்கள் ஜக்கியின் காடு அழிப்பு, நில ஆக்கிரமிப்பு, மின் திருட்டு, பண மோசடிகள், ஆசிரம‌ சொத்துக்கள் - இவை குறித்து அம்பலப்படுத்துவது மிகச் சரியே. இது புற விளைவை அம்பலப்படுத்துவதாகும். ஜக்கியின் மர்ம ஸ்தானம் என்பது யோகா. அதனை பகுத்தறிவாளர்கள் ஓங்கி மிதிக்காமல் ஜக்கியின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. இந்த திருப்பணி செய்ய பகுத்தறிவாளர் பிரேமானந்த் போன்றவர்கள் இன்றைய‌ அத்தியாவசியத் தேவை. இல்லையேல் கீதா, லதா என்ற இரண்டு பெண்குழந்தைகளை இழந்து துயருறும் பேராசிரியர் காமராஜர் போன்றோரின் கதறல் தொடரும். ஏனோ என் இரு மகன்கள் ஞாபகம் வந்து சென்றது.

ஈஷாவை வளர்த்தெடுக்க - பூண்டி வெள்ளிங்கிரி மலை புறக்கணிப்பு

எனது பள்ளிப் பருவத்தில் எனது தந்தை பலமுறை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறச் சொல்லி ஏறியுள்ளேன். 7 மாலை ஏறி ஈசனைத் தரிசிக்கும் நோக்கோடு பல்லாயிரம் சிவ பக்தர்கள் மாலை போட்டு வருவார்கள். எனவே தற்பொழுது பூண்டி எவ்வாறு உள்ளது என்பதை காணும் நோக்கத்தோடு ஈஷாவிலிருந்து ஆட்டோவில் பூண்டிக்குப் பயணமானேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டிக்கு வரும் சிவ பக்தர்கள் சிலர் ஈஷாவைக் காணச் செல்வார்கள். இன்று மெல்ல வளர்ந்து வியாபாரம் முதல் அரசியல் தரகு வேலை வரை செய்து தனியார் பள்ளி போல் வளர்ந்து நிற்கிறது ஈஷா. பூண்டியோ அரசுப் பள்ளி போல் தேய்ந்து வருகிறது. ஜக்கியின் தூண்டுதலால் அரசும், அதிகாரிகளும் பூண்டி சிவ பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்க விடுவதில்லை என்றும், மையிருட்டில் பூண்டி இருப்பதையும், பெரும் மின் வெளிச்சத்தில் ஈஷா மிதப்பதையும் வெள்ளிங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் பேசும்போது வயிறு எரிந்து சொல்வதைக் கேட்க முடிகிறது. தனியார்மயம் அரசுத் துறைகளை மட்டும் ஒழிக்கவில்லை, ஆலயத்தையும் ஒழித்துக் காட்டுவதில் வெற்றி கண்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலையும் ஜக்கியின் வேதாந்தா ஆதரவும்

யோகா என்ற பெயரில் ஜக்கியின் சாம்ராஜ்யம் எதிர்ப்புகளைத் தூள் தூளாக்கி நாளுக்கு நாள் பரந்து விரிந்து, பல இலட்சம் பக்தர்களை ஈர்த்துள்ளது. கட்சி வித்தியாசமின்றி ஜக்கியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுக் கொடுத்துள்ளார்கள். இன்று அரசியல் கட்சிகள் ஜக்கியைச் சார்ந்து நிற்பதால் ஜக்கியின் அதிகார அத்துமீறல்கள் உச்சகட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. ஆன்மீக பாஷாவாக ஈஷா ஜக்கி வளர்ந்துள்ளார். இதன் மூலம் அப்பாவி பக்தர்களை பாசிசத்தின் பின்னால் அணிவகுக்கச் செய்யும் பணியை ஜக்கியால் திறம்பட செய்ய முடிகிறது. 'மக்கள் திரள்' கொடுக்கும் தெம்பும், திமிரும் தூத்துக்குடியில் 13 பேர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட‌போது தமிழ்நாடே வேதாந்தாவை வெறுத்து ஒதுக்கிய வேளையில், ஆதரித்துப் பேசும் அளவு திமிரைக் கொடுத்துள்ளது. ஆறுகள் இணைப்புக்கு மிஸ்டு கால் கொடுப்பது போன்ற விஷமப் பிரச்சார இயக்கங்கள் எடுக்கும் துணிவு இவர்களுக்கு வருவதற்குக் காரணம் 'பெரியார் பிறந்த மண்' என்று நாம் அசால்டாக இருப்பது தான்.

ஜக்கியின் ஆன்மீக - அரசியல் - வணிகக் கூட்டை துடைத்தெறிய பகுத்தறிவு வெள்ளம் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டியது அவசர அவசியமாகும்.

ஜக்கியின் பார்வையில் நானும், நீங்களும், நமது எதிர்காலமும்

ஸ்டெர்லைட் போராளிகள் தீ வைத்த‌தால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நாடகமாடிய காவல்துறையை அம்பலப்படுத்தி 'கொளுத்தியது யார்?' ஆவணப்படம் வெளியிட்ட பின் தோழர் முகிலன் கடத்தப்பட்டது தொடர்பாக கோவையில் 'முகிலன் எங்கே?' என்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டேன். சுமார் 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் சற்று அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிவராத்திரி இரவு அன்று மக்கள் கூட்டத்தில் மிதந்து சென்றது ஏனே என்னை வதைத்தெடுத்தது. என்னைப் போன்றவர்களைப் பற்றி ஜக்கியின் பார்வை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு 'நாணத்தோடும் - நாணயத்தோடும்' என்னை நோக்கி நானே கேட்டுக் கொண்டேன்.

சமணர்கள் கழுவேற்றம், சிலுவைப் போர்கள், ஜிகாத் (புனிதப் போர்கள்) என வரலாறு நெடுகிலும் ஆன்மீக வெறியர்களால் அழிக்க முடியாத இரத்தக் கறைகள் வழிந்தோடினாலும் மனித குலம் அதிலிருந்து பெற்றதும், கற்றதும், இழந்ததும் குறித்து படிப்பினை இருந்திருந்தால் அண்மைக்கால பௌத்த ஆன்மீக வெறியாட்டத்தால் ஈழத் தமிழர்கள், பர்மா ரோங்கியாக்கள் பச்சைப் படுகொலைகள் நிகழ்ந்திருக்குமா என்ன?

'யோகி ஆதித்யநாத்' சாமியாராக வாழ்க்கை தொடங்கி இன்று முதலமைச்சராக ஆக வளர்ந்து நிற்கிறார். இந்த அபாயகரமான மாதிரி இந்தியாவெங்கும் பரவினால், சாமியார்களுக்குப் பொற்காலம். சாமானியர்களுக்கு..?

உலகம் முழுவதும் காட், டங்கல் ஒப்பந்த காலத்திற்குப் பின்பு கார்ப்பரேட்டுகள் தங்கள் சுரண்டலை, ஒடுக்குமுறையை, இயற்கை வளக் கொள்ளையை ட்ரம்ப், ராஜபக்சே, மோடி போன்ற அரசியல் பாசிஸ்டுகளைக் கொண்டு மட்டும் அடக்கி விடுவதில்லை. இந்து, பௌத்த, இஸ்லாம், கிறிஸ்துவ ஆன்மீக பாசிஸ்ட்களான ஜக்கி, ஜாகிர் நாயக், பால் தினகரன், PJ போன்றவர்களைக் கொண்டும் மடை மாற்றி விடுகிறார்கள். இத்தகைய ஆன்மீக பாசிஸ்ட்டுகளின் சரணாகதி தத்துவப்பிடியில் சிக்கும் பக்தர்களை ஆன்மீக அடிமைத் தனத்திலிருந்து அரசியல் அடிமைத் தனத்திற்கு நகர்த்தி, ஆன்மீக அரசியல் பாசிஸ்ட்டுகள் ஆக்கி அறியாமை பக்தர்களை அபாயகரமான பக்தர்களாக மாற்றி சீரழிக்கிறார்கள்.

உலகெங்கும் அரசியல் பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவது நடந்து வருகிறது. ஆன்மீக அரசியல் பாசிஸ்ட்டு சாமியார்களை அம்பலப்படுத்துவது?

சாதாரண மக்களின் இறை நம்பிக்கை யாருக்கும் தீங்கு விளைவிக்காதவை. அவை தனிமனித நம்பிக்கைகள். அதை நாம் மதிப்போம். ஆனால் ஆன்மீக பாசிஸ்ட்டுகளின் இறை நம்பிக்கை வளர அனுமதித்தால் நாம் அவர்களின் இரையாவோம். 'மதம் ஓர் மார்க்சிய பார்வை' நூலில் தலைவர் லெனின் எழுதுகிறார் "(சாரம்) கம்யூனிஸ்ட் கட்சியில் எவ்வளவு திரள் இருந்தாலும் அவர்கள் பல்வேறு மத நம்பிக்கையில் மூழ்கியிருந்தாலும் கட்சியின் உயர்மட்டத் தோழர்கள் நாத்திகர்களாக இருப்பது அடிப்படை விதியென்றும், அத்தகயை நாத்திகர்களே பல இலட்சம் தொண்டர்களை இயக்குவார்கள்" என்ற நிரூபணமான நம்பிக்கை என் இதயத்தைப் பற்றி நின்றது.

வரலாற்றில் சாமியார் ரஸ்புடீன் (ஒழுக்கம் கெட்டவன் என்று பொருள்) என்ன கதிக்கு ஆளானான் என்று நாம் அறியாதது அல்ல.

கார்பரேட் மதவாத சாமியார்கள் எத்தனை இலட்சம் மக்களைத் திரட்டினாலும், பகுத்தறிவாளர்கள் சில பேரால் வலுவாகக் கட்டியமைக்கப்படும் அமைப்புகள் மூலம் பாசிச ஆன்மீக அரசியல் அமைப்புகளை சுக்கு நூறாய்த் தகர்த்தெறிய முடியும், முடிந்திருக்கிறது, எதிர்காலத்தில் நம்மால் முடியும்.

- மு.கார்க்கி