மொழி வழித் தேசியமாக தமிழ்த் தேசிய இனத்தை நோக்கினால் தமிழர்கள் இன்று இரண்டு நாடுகளில்தான் வாழ்ந்து வருகிறார்கள். பண்டைய காலத்தில் இவ்வாறு தமிழன் வாழ்ந்த நாடுகள் பன்னிரண்டு என்று கூறுகிறார்கள். இன்று நமக்கிருப்பது இரண்டுதான். ஒன்று இந்தியாவிலுள்ள தமிழ்நாடு. மற்றொன்று இலங்கையிலுள்ள ஈழம். இந்த இரண்டு பகுதிகளிலிருந்தும் தொழில் நிமித்தமும் புகல் தேடியும் உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றும் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈழத்தில் மிகக் கோரமான முறையில் தமிழினம் நமது கண்ணுக்கு முன்னால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நாம் கவனித்துக் கவலை அடைய வேண்டிய அம்சங்கள் பின்வருமாறு ஒன்று நமது இனம் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது அந்த அழித்தொழிப்பில் இலங்கை அரசுடன் கை கோர்த்து இந்திய அரசு செயல்படுகிறது. அதுவும் தன்னுடைய பகை நாடாக விளங்கக் கூடிய பாகிஸ்தான் அரசுடன் இணையாக நின்று இலங்கை அரசுக்கு உதவுகிறது.

Periyarதன்னுடைய நாட்டின் நிலப்பரப்பில் முக்கியக் குடிமக்களில் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய தமிழினத்தை அழித்தொழிப்பதில் இந்திய அரசுக்கு இருக்கும் இந்த ஆர்வத்தின் உண்மையான பொருள் என்ன? இங்கிருக்கும் காங்கிரசுக்காரர்கள் குல்லா வைத்துக் கொண்டு போனாலும் வட இந்தியர்களாகி விடப் போவதில்லை. இவர்கள் இன்னும் எவ்வளவுதான் மானங் கெட்டுப் போனாலும் அவர்களின் பார்வையில் இவர்களும் தமிழர்கள்தானே? இந்தியாவின் தமிழின விரோதத்தில் இவர்களும் அடக்கம்தானே? மூன்றாவதாக உலக அரங்கில் இன்று காசா நகர மக்களுக்கு அய்.நா சபையில் கிடைக்கும் ஆதரவு ஏன் தமிழினத்துக்குக் கிடைக்கவில்லை? இலட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து விடுதலைப் புலிகளுடன் ஒன்றிணைந்து காட்டுக்குள் வசிக்க சென்றிருக்கிறார்களே, இந்த பரிதாபகரமான உண்மைச் சித்திரம் ஏன் உலக மக்களின் மனச்சாட்சியைத் தொடவில்லை? 

இந்த உலகம்தான் விளிம்பு நிலை மக்களுக்காக எத்தனை தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறது? விளிம்பு நிலை மக்களுக்காக எத்தனை அமைப்புகள் உலகளாவிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன? ¢ஆனால் காலத்தின் பரிணாம வளர்ச்சியில் நூ ற்றாண்டுகளை பின்னுக்குத் தள்ளி வனங்களுக்குள் வாழ்வதற்கு வரலாற்றின் விளிம்புகளை நோக்கி பின்னோக்கி பயணிக்க நிர்ப்பந்திக்கப்ட்டிருக்கும் ஓர் இனத்தின் அவலம் ஏன் அய்.நா. மன்றத்தில் எதிரொலிக்கவில்ல? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இன்றைய உலகில் தமிழினம் அரசியல் அனாதையாக நிற்கிறது என்பதுதான்!!! தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் உண்மையான அரசியல் உரிமை பெற்றிருந்தால் இந்தியக் கூட்டாட்சியில் நாம் உண்மையான பங்காளிகளாக இருந்திருந்தால் தமிழகத்தின் ஒருமித்த குரலை அலட்சியப்படுத்தும் துணிச்சல் இந்தியாவுக்கு வந்திருக்குமா?

ஒற்றுமைதான் பலம். இதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் அந்த ஒற்றுமை பல்வேறு நல்ல உணர்தல் மற்றும் புரிதல்களின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். தமிழர்களைத் தங்கள் நாட்டு மக்களாக நினைத்திருந்தால் இலங்கை அவர்கள் மீது குண்டு வீசாது. தமிழர்களைத் தங்கள் நாட்டு மக்களாக நினைத்திருந்தால் இந்தியா அவர்கள் குரலை வேண்டுகோளை காலில் போட்டு மிதித்திருக்காது.

தாஜ் விடுதியில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்கினார்கள் என்றவுடன் ‘போர், வேண்டுமா வேண்டாமா?’ என்று கருத்துக் கணிப்பு நடத்துகிற தமிழ் நாளேடுகள், தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொல்லும்போது இலங்கை மீது போர் தொடுக்க வேண்டுமா என்ற கேள்வியையே முன்வைப்பதில்லையே? அதை விட அதிசயம் எந்த நாடாவது தன்னுடைய குடிமக்களைக் கொன்ற கொல்கின்ற ஒரு நாட்டிற்கு இராணு வ உதவி செய்யுமா ?

“ஈழத்தில் தமிழினம் அழிக்கப்படுமேயானால் தமிழகத்திலிருக்கும் ஏழு கோடித் தமிழர்கள் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்” என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு செயலர் நடேசன் நம்பிக்கையோடு பேசுகிறார். அந்த நம்பிக்கை நமக்குக் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஈழத்தின் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களாகட்டும் உலகின் பிற பகுதிகளுக்கு தொழில் தேடி இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களாக இருக்கட்டும் தங்களுக்குப் பிரச்சனை வரும் போதெல்லாம் நமது முகம் நோக்குகிறார்கள். ஆனால் நமது நிலை......????

உண்மையில் இருபதாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இந்தியாவின் அரசியல் சூழல்கள் மாநிலக் கட்சிகளுக்கு சாதகமாக மாறியிருக்கின்றன. அகில இந்திய அளவில் உத்திரப் பிரதேசம் மட்டுமே இந்த நாட்டின் ஆட்சியாளர்களை தீர்மானிக்க முடியும், இந்த நாட்டின் தலைமை அமைச்சர்களைத் தரமுடியும் என்ற நிலையெல்லாம் கூ ட மாற்றப் பட்டிருக்கிறது. வி. பி சிங் என்ற மாமனிதரின் அரசியல் தலைமை மற்றும் அரசியல் தியாகத்திற்குப் பிறகு இந்தியாவிலும் கூட்டாட்சியைப் பற்றி சிந்திக்க முடியும் என்ற நிலையெல்லாம் கூட உருவாகியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்திலிருந்து ஒரு பெரிய மந்திரி பட்டாளமே தில்லியில் டெண்டு போட்டு தங்கியிருக்கிறது. இவ்வளவு சாதகமான மாற்றங்களுக்குப் பிறகும் இந்தத் தமிழினத்தின் நிலை மட்டும் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது?

தன்னுடைய நாட்டில் தமிழர்களைக் கொல்வது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கேவலமாகப் பேசி ஏளனம் செய்கிற அளவுக்கு இராஜபட்சேக்கு துளிர் விட்டிருக்கிறது. ஒருவேளை இராஜபட்சே குறிப்பிட்டு எந்த தமிழ் சாதியையாவது திட்டியிருந்தால் தமிழகத்தில் அந்த சாதியைச் சேர்ந்தவர்களாவது கொதித்துப் போயிருப்பார்கள்.

இந்த இடத்தில்தான் நாம் புறக் காரணிகளை சற்றே தள்ளி வைத்து விட்டு அகக் காரணிகளையும் முன்னிறுத்தி சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த இந்தியாவுக்குள் தமிழர்கள் எந்த அளவுக்கு அரசியல் வலிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உலக அளவில் அவர்களது அரசியல் இடத்தைத் தீர்மானிக்கும். உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்புக்குப் பிறகும் கூ ட காவிரி தண்ணீரை பெற நம்மால் முடியவில்லை. காவிரி பிரச்சனையைத் தீர்த்திருந்தால் தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்கின்ற துணிச்சல் (முல்லைப் பெரியாறு பிரச்சனையில்) கேரள முதலமைச்சருக்கு வந்திருக்காது. அப்படிச் சொன்ன போது கேரளத்தைக் கேள்வி கேட்கும் அரசியல் சொரணையும் அதிகாரமும் தமிழகத்திற்கு இருந்திருந்தால் நமது ஊர் ஒகேனக்கல்லில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்கின்ற நாட்டாண்மைக்காரனாக கர்நாடகம் விசுவரூபம் எடுக்க முடியாது. இப்படித் தொடரும் தோல்விகள் ஈழத்தில் மட்டும்தான் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறதா இல்லையா?

சேலம் கோட்டம் அமைக்க வேண்டும் தமிழகத்தின் இரயில்வே நிர்வாகம் அது சார்ந்த வருமானம் தமிழகத்தின் வசம் தமிழ்ப் பகுதிகள் வசம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த ஆட்சியில் யாரிடம் கொடுக்கப் படுகிறது என்றால், அது யாரிடமிருந்து எடுக்கப் பட வேண்டுமோ அந்த கேரளத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப் படுகிறது. இந்த நாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என்று கோரிக்கை வைக்கின்ற போது அது ஊழலுக்கு வழி வகுத்து விடும் எனவே பிற மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்கிறோம் என்று பதில் தருகிற இந்த ஆட்சியினர் இரு மாநிலங்களுக்கிடையே ஒரு பிரச்சனை வருகின்ற போது அதனைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பில் அந்த இரு மாநிலத்தவரைச் சேர்ந்தவருமே இருக்கக் கூடாது என்றாவது விதிமுறை வைத்திருக்க வேண்டுமல்லவா ஏன் அந்த வழிமுறை இல்லை?

இந்த இடத்தில் நான் சில ஆண்டுகளாக முன் வைத்துக் கொண்டிருக்கிற ஒரு கோரிக்கையின் பொருத்தப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பல்வேறு பட்ட இனத்தவர். மாநிலத்தவர் வாழும் இந்தியாவில் மத்திய ஆட்சிப் பணிகளில் சாதி வாரி இட ஒதுக்கீடு கேட்டால் மட்டும் போதாது. மொழி வாரி, மாநில வாரி இட ஒதுக்கீடும் கேட்கப்பட வேண்டும். மேலும் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள குழுக்களில் இந்த விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே அக்குழு எடுக்கும் முடிவுகள் செல்லத் தகுந்ததாகும் என்ற அமைப்பினை நாம் ஏற்படுத்தியாக வேண்டும்.

இந்தியா என்ற அமைப்பு உண்மையான கூட்டாட்சியாக மலர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் இந்த ஆட்சி அமைப்பு கட்டுமானங்களை அதற்குத் தகுந்ததாக மாற்றியமைத்தால் மட்டுமே இயலும். அப்படிப்பட்டதொரு உண்மையான கூட்டாட்சி அமைப்பில்தான் பல்வேறு தேசிய இனங்கள் ஒரு நாடாக இணைந்து வாழ முடியும். இப்போது இந்த கூ ட்டமைப்பில் நம்மை பிரதிநிதித்துவப் படுத்த நாம் நமது அரசியல் வாதிகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆனால் நிரந்தர ஆட்சியாளர்களாக இருப்பவர்களாகிய அய்.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளைப் பற்றியும் மத்திய அரசின் அதிகாரங்கள் குறித்தும் புரிதலை உள்ளடக்கிய அரசியலை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

மற்றொரு புறம் நாம் நம்பியிருக்கிற அரசியல் பிரநிதித்துவம் என்பது மேலும் மேலும் சாதிய மயமாகிக் கொண்டிருக்கிற சூழல் வளர்ந்து வருகிறது. தமிழரின் வீழ்ச்சிக்கு முக்கிய அகக்காரணியாக நிற்கும் சாதிய உணர்வுகள் வலுப்பெற்று வருவது கவலையளிக்கக் கூடிய அளவில் பெருகி வருகிறது. சாதியை எதிர்த்த போராட்டத்தில் அதன் ஏற்றத் தாழ்வுகளை நாம் ஓரளவிற்கு மாற்றி வெற்றி கண்டிருக்கிறோம் என்பது உண்மையே எனினும் சாதி அடிப்படையிலான பிரிவினை உணர்வுகள் வளர்ந்து வருவது நல்ல அறிகுறியல்ல. பெரியார் காலத்தில் பெற்றெடுத்த மக்கள் தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்று மாற்றியமைத்ததன் மூலமாகவும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒழித்ததன் மூலமாகவும் ஆதிக்க சாதியினர் தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதிலின் வலிமையைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிகழ் காலத்தில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இனி ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை சதவீதம் என்று முட்டி மோதிக் கொண்டிப்பார்கள். இதனை அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மட்டுமே தீர்க்க முடியும். இது மட்டும்தான் தீர்வு என்று இப்பிரச்சனையைப் பற்றி சிந்திக்கின்ற பச்சைப் பிள்ளைக்குக் கூட புரியும். ஆனால் இன்று அய்யா ஆனைமுத்து தலைமையிலான பெரியாரிய மார்க்சிய பொதுவுடமைக் கட்சி தவிர வேறு எந்த இயக்கத்திடமும் இக் கோரிக்கையே இல்லை. ஏன்? இமாலய கேள்வி இது.

‘சாதி வளர்ந்து வருகிறது’ என்பதை விட பெருங்கவலை கொள்ளத்தக்க மற்றொரு விசயம் சாதியற்றோருக்கான பொதுவெளி குறிப்பாக அரசியல் அரங்கில் கடந்த இருபதாண்டுகளில் குறைந்திருக்கிறது என்பது. நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சாதியற்ற வெளியில்தான் தமிழ் தேசியத்தின் உண்மையான வேர் பாய்ச்ச முடியும். சாதி களையப்பட களையப்படத்தான் தமிழ்த் தேசியப் பயிர் வளரும்.

இன்று தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் அது நிலம் கையகப் படுத்தும் பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது தங்களது மாநிலத்திற்கு ஏதோ ஒரு வசதியைக் கோருகின்ற பிரச்சனையாக இருந்தாலும் சரி அது அரசியல் பிரச்சனையாக அல்லது கோரிக்கையாக உருவாக வேண்டுமென்றால் அதனால் பாதிக்கப் படும் அல்லது பலனடையும் பிரிவு எந்தச் சாதி என்ற கேள்வி முந்திக் கொள்கிறது. அதன் அரசியல் பிரதிநிதித்துவம் அல்லது வலிமையே அந்தப் பிரச்சனையின் வலிமை அல்லது நிலையை முடிவைத் தீர்மானிக்கிறது. இந்த எதார்த்தமே தமிழ்ச் சமூகத்தின் ஓர்மையை மீண்டும் மீண்டும் கலைத்துப் போடுவதாக அமைந்து போகிறது.

இந்தியாவின் மிக முக்கிய மத்திய அரசு நிறுவனம் ஒன்று தனது வேலை வாய்ப்புகளோடு இணைந்து பயன் பெறத் தக்க விதத்தில் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியை கேரளத்தில் துவங்கியுள்ளது. இது குறித்து விவாதம் வந்த போது அந்நிறுவனத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தமிழகத்தில் சும்மா கிடக்கிறது. அங்கு இந்தக் கல்லூரியைத் துவங்கச் சொல்லி கேட்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். இது வெறும் கல்லூரி பிரச்சனையல்ல இத்¢ததுடன் மறைமுகமாக இத்துறையின் வேலைவாய்ப்புகள் இணைக்கப்பட இருக்கின்றன என்பதையும் எடுத்துக் கூறினோம். இந்தக் கோரிக்கை ஓர் அரசியல் ஈர்ப்பு உள்ள கோரிக்கையாகவே ஏற்றுக் கொள்ளப் படவில்லை. கடைசியில் அப்பகுதியில் உள்ள சாதிச் சங்கம் இந்தப் பிரச்சனையை ஓரளவு எழுப்ப முயன்றது, அதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதன் விளைவு என்ன? இந்திய அரங்கிலும் சரி, சர்வதேச அரங்கிலும் சரி தலைகாட்டும் தமிழர்கள் தங்களுக்குப் பின்னால் ஏழு கோடி மக்கள் தொகையுள்ள தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற பின் புலத்தை இழந்து தனியர்களாக நிற்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சர்வதேச அரங்கிற்கு உயர்ந்து பயணித்து ஓடினார் ‘சாந்தி’ என்ற தமிழ்ப் பெண். அந்த அரங்கில் அவர் செயல்பட முடியாமல் திருப்பியனுப்பப் படுகிறார். ஏன் என்று கேட்டதா தமிழகம்? தமிழக அரசியல் கட்சிகளுக்கு அது ஒரு பிரச்சனையேயில்லை நமது பத்திரிகைகளுக்கு அது ஒரு வியாபாரச் செய்தி. அவ்வளவுதான். அனைத்து அரங்குகளிலும் தமிழர்கள் தனியர்களாகவே விடப்படுகிறார்கள்.

எந்த அரங்கிற்கு தமிழர் போனாலும் அவர்கள் கால் வைப்பதற்கு முன்பே தமிழன் என்று நினைப்பு உனக்கு இருந்தாலே இந்தத் துறையில் பதவி உயர்வோ, பாராட்டுக்களோ உனக்குக் கிடையாது என்று அவர்களுக்கு இந்த அமைப்பு உணர்த்தி விடுகிறது. மற்ற யாருக்கு வேண்டுமானாலும் மொழி வெறியே இருக்கலாம். அதற்குப் பெயர் மொழிப் பற்றுதான். ஆனால் தமிழரின் மொழிப் பற்றுக்குப் பெயர் மொழி வெறி. தமிழர்களுக்கு இருக்கும் இனப்பற்றுக்குப் பெயர் இனவெறி. இந்த பரப்புரையை தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள் வாய் மொழி பிரச்சாரத்தின் மூலமும் ஊடகங்கள் வாயிலாகவும் வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு இனம் இல்லை. தமிழ் ஆண்களுக்கு சாதி இருக்கிறது. தமிழ்ப் பெண்களுக்கு என்ன இருக்கிறது? அதுவும் இல்லை. மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை உதாரணத்திற்கு ஒரு சில சம்பவங்கள். அவ்வளவுதான்.

இதையெல்லாம் தாண்டி மற்றொரு மிகப் பெரிய பலவீனமான பகுதி ஒன்று தமிழரின் தலை மீது தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பெண்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் பெரும்பணி பல முற்போக்கான களங்களை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் சராசரி வாழ்வியலில் அவர்கள் முன்னேறியிருக்கும் அளவுக்கு அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. தமிழகத்தின் அரசியல் வெளி இன்னும் பெண்ணுக்கு சாதகமாக மாற வேண்டியிருக்கிறது. பெரியாரின் மொழியில் சொன்னால் ‘கற்பபிமானம்’ அரசியல் வெளியில் இயங்கும் ஆண்களுக்கு சில நேரங்களல் மற்றெல்லா பிரச்சனைகளையும் விட முக்கியமானதாகிப் போகிறது. நமது எதிரி, இல்லாத அந்தக் கடவுள் மட்டுமல்ல இல்லவே இல்லாத இந்தக் ‘கற்பும்’ கூடத்தான். இதில் என்ன பெரிய வியப்புக்குரிய விசயம் என்றால் இன்று இந்த மண்ணில் சாதிய அரசியல், பொருளியல் சார்ந்த அரசியல், தேசிய இனம் சார்ந்த அரசியல் என்று ஒவ்வொரு தளத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மிகவும் அரசியல் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் அரசியல் தேசிய இன அரசியல்தான். ஆனால் அவர்கள்தான் ‘கற்பு’ பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுகிறார்கள். எப்படி அவர்களுக்கு இதற்கு நேரம் ஒதுக்க முடிகிறது என்ற ஆச்சரியமாக இருக்கிறது. பெரியார் சொன்னதையே திரும்பச் சொல்ல வேண்டும். தயவு செய்து பெண்களின் கற்பு பற்றி அந்தந்தப் பெண்கள் கவலைப் பட்டுக் கொள்ளட்டும். பெண்களின் பங்களிப்பை அதிகம் பெறுவதற்கான களமாக இதனை மாற்ற வேண்டியது இன்றைய இன்றியமையாத பணியாகும்.

எனவே தமிழர்கள் புறப்பகை மீது எவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமோ அதை விட அதிகமான கவனத்தை தங்கள் அகக் காரணிகள் குறித்தும் செலுத்த வேண்டும். ஒரு வலிமையான தேசிய இனமாக அவர்கள் வளர வேண்டுமெனில் இந்தியக் கூட்டாட்சியில் தங்களுக்குரிய இடத்தை அவர்கள் பெற்றாக வேண்டும் அதற்கு அவர்கள் முதன்மையாக பின்வரும் கோரிக்கைகளுக்காக போராடியாக வேண்டும்.

1. உடனடி சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

2. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதியற்றோருக்கான அங்கீகாரம்

3. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான 100 சதவீத இட ஒதுக்கீடு (சாதியற்றோருக்கான ஒதுக்கீட்டை உள்ளடக்கியது)

4. மத்திய அரசுப் பணிகளிலும் முடிவெடுக்கும் குழுக்களிலும் மாநில/மொழி வாரியான ஒதுக்கீடு

5. அனைத்து ஒதுக்கீடுகளிலும் பெண்களுக்கான உள் ஒதுக்கீடு

உள்நாட்டில் இப்பணிகளுக்கான வேலையில் ஈடுபடாமல் தமிழ்த் தேசிய இனச் சிக்கலை தனிப் பிரச்சினை ஆக பேசிக் கொண்டிருப்பதன் மூலம் நாம் அச்சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி நகர முடியாது. 

(நன்றி: தமிழர் கண்ணோட்டம் ஜனவரி 2009)

- ஓவியா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It