இந்திய நாட்டில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில் வாழும் பார்ப்பனர்கள் ஒரே குறிக்கோளு டைய, உயர்சாதிய எண்ணம் கொண்டவர்கள். பார்ப்பனியம் என்கிற பிறரை அடிமை கொள்ளும் தன்மையும், தகுதியும் தங்களுக்கும் இருக்கிறது என்ற போலியான மனநிலையோடு வாழும் பார்ப்பனரல்லா தார், பார்ப்பனியம் என்றால் என்னவென்றறியாதார், பார்ப்பனியத்தை எதிர்க்கின்ற பார்ப்பனரல்லாதார் யாவருமே-பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடிகளைச் சேர்ந்த மக்களேயாவர். இவர்கள் ஆரியத்துக்கெதி ராகப் போராடக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால், ஆரிய - திராவிடப் போராட்டம் தென்னிந்தியாவில் மட்டுமே வடிவெடுத்தது. அதிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் வருகைக்குப் பிறகே ஆரியம்-திராவிடம் என்ற உணர்வு மக்களிடம் உருவானது. இதனால்தான் இன்றளவும் பார்ப்பனர்கள் தந்தை பெரியாரைப் பற்றித் தவறாகவே மக்களிடத்தில் சித் திரித்து வருகின்றனர். ஆனால், பார்ப்பனர்களிடத்தில் தந்தை பெரியார் நன்றாகவே வாழ்ந்து வருகிறார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட பார்ப்பனரல்லா தாராகிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே தயங்குகின்றனர். நாம், தமிழர் என்று சொன்னால் அதில் பார்ப்பனரும் உரிமை கொண்டாடுவர் என் பதால்தான் நம்மைத் திராவிடர்கள் என்று அடையா ளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை நிறுவினார்.
நாம் - தமிழர், தமிழர் என்று கூச்சலிடும் சில அரசியல் கட்சியினர் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள பயந்தும், பார்ப்பனர்கள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டுத் தங்களின் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இடையூறாக நிற் பார்களோ என அஞ்சியும் தங்களின் தனித்தன்மை யை இழந்துவருகின்றனர்.
இந்தியாவெங்கிலும் வாழும் பார்ப்பனரல்லாதா ருக்கு அத்தகைய உணர்வு இருப்பதற்கோ, தென் னிந்தியாவில் வாழும் பார்ப்பனரல்லாதாருக்கு திரா விடர் என்ற உணர்வு ஊட்டப்படுவதற்கோ, தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனரல்லாதாருக்காவது திராவிடர் என்ற உணர்வு ஊட்டப்படுவதற்கோ தேவையான புரிதல் இன்றைய தலைமுறை அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியேயாகும்.
தமிழ்நாட்டு மக்களுக்குத் தாங்கள் திராவிடர்கள் என்ற நினைப்புக்கூட இல்லாவிட்டாலும், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் யாவரும் பார்ப்பனரல்லாதார் என்கிற ஒரே குழுவாக ஒற்றுமை யாக வாழ வேண்டும் என்ற புரிதலாவது இருக்கிறதா என்றால், அது கோடி ரூபாய் பெறுமான கேள்வியாக வல்லவா இருக்கிறது! ஏனெனில், தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு அடி பணிந்தே வருகின்றனர்.
பார்ப்பனரல்லாதார் அனை வருக்கும் ஒரே மாதிரியாகத்தான் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஏன் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் ஆகவேண்டும்-கல்வியிலும், வேலையிலும் எதற்காக இடஒதுக்கீடு வேண்டும் என்பதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டியது முதன்மை. இங்கே பலரும் தங்களின் தகுதியாலும், திறமை யாலும் மட்டுமே கல்வியும் வேலையும் பெற்றுவிட்ட தாக நினைக்கின்றனர்.
நீதிக்கட்சி ஆதரவு பெற்ற ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறையால்தான் இங்கே பார்ப்பனரல்லாதாருக்கும் கல்வியும், வேலையும் கிடைத்து வருகிறது என்பதை முதன்மையாகப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் - இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி கற்று வேலையிலிருக்கும் இலட்சக்கணக்கான அரசுப் பணியாளர்களும், ஆசிரியர்களும் ஆவார்கள். இவர்கள் இடஒதுக்கீட்டின் அவசியத்தையும், தேவை யையும் தங்களது வாரிசுகளுக்கோ, அடுத்த தலை முறைக்கோ கொண்டு செல்லக் கடமைபட்டவர்கள் ஆவர். இதைப்பற்றி தி.மு.க. மட்டும் பேசி வருகிறது; அ.தி.மு.க. பேசுவதில்லை.
ஏனெனில், அதன் தலை வர், திராவிடராக இல்லை. மற்றபடி, தந்தை பெரி யாரின் பெயரிலுள்ள பல அமைப்புகளும் இடஒதுக்கீடு பற்றிப் பேசி வருகின்றன. ஆனால், இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதற்குத் தேவை யான புரிதல்களையும், செயல் திட்டங்களையும் வகுத்து அதை நாடெங்கும் நடைமுறைப்படுத்துவதற் குத் தொடர்ந்து போராடி வருபவர் அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களே என்பதே யாவரும் அறிந்திட வேண்டும்.
எனவே, தமிழர்களே, நமக்குத் திராவிடர் என்ற உணர்வு ஏற்பட வேண்டுமாயின் இங்கு நிலவும் பறையர், பள்ளர், வண்ணார், செட்டியார், முதலியார், வன்னியர், ரெட்டியார், தேவர் என்ற பல்வேறு சாதியமைப்புக்குள் சிக்கித் தவிப்பதிலிருந்து விடுபட்டு, அனைவருக்கும் “நாம் அனைவரும் சமம்” என்ற உணர்வு தோன்ற வேண்டும். அத்தகைய உணர்வு தோன்றாதவரையில், இந்த நாட்டில் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஒன்று தேவைப்பட்டுக் கொண்டேயிருக் கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மக்களிடத்தில் இப்போது “அனைவரும் சமம்” என்ற நிலை வேண்டுமா, வகுப்புவாரி இடஒதுக்கீடு வேண்டுமா என்று கேட்டால், வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்கே ஆதரவு கிடைக்கும். அதேவேளையில், அனைவரும் சமம் என்ற நிலையும் வேண்டாம்.
வகுப்புவாரி இடஒதுக்கீடும் வேண்டாம். பார்ப்பனர்களை மட்டுமே உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு நாம் அனை வரும் அவர்களுக்கு அடிமையாகவே இருந்துவிட லாமா என்றால், இதற்கு மக்கள் கூறும் விடை - இடஒதுக்கீடு வேண்டாம்; ஆனால், அனைவரும் சமம் என்ற தளத்திலேயே பார்ப்பனரையும் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகவே இருக்கு மென்றால் - அந்த காலம் கனியும் வரை இந்த நாட்டில் இடஒதுக்கீடு தேவையான ஒன்றாகவே இருக்கும். எனவே, பார்ப்பனியத்தைப் புறந்தள்ளாதவரை, அனை வரும் சமம் என்ற நிலையேற்படாதவரை-இடஒதுக் கீடும், தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இந்திய நாட்டு மக்களுக்குத் தேவையே.
இந்திய அரசியலில் ஓரிரு தலைவர்கள் தவிரப் பிறரிடம் நேர்மை, நாணயம் என்பது இருந்ததில்லை. ஊழல், இலஞ்சம் பற்றியெல்லாம் பேசுவதற்கு எந்த அரசியல் அமைப்புக்கும் இங்குத் தகுதியும், அரு கதையும் இல்லையென்றே கூறவேண்டும். பொது வாக ஆட்சிபுரிந்தவர்கள் அல்லது ஆட்சிபுரிபவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காவது நடைமுறை.
ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வராதவர்கள், வரவிய லாதவர்கள், வரத்துடிக்கின்ற இன்றைய அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் ஊழல், ஊழல் என்று கூச்சலிடுவதைப் பார்த்து ஊழலே வெட்கித் தலைகுனிந்துவிடும் போலும்! ஏனெனில், இவர்களும் கூட்டணி என்ற பெயரில் ஆட்சி புரிந்தவர்களோடு சேர்ந்துகொண்டு ஊழல்களுக்குத் துணை நின்றவர் கள்தானே. பிறகு, இவர்களெல்லாம் எப்படி ஊழல் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியிலிருந்த போது ஊழல் புரிந்தவர்களைக் காட்டிலும் ஊழலுக்கு எதிராகப் பேசி ஆட்சிக்கு வரத்துடிப்பவர்களும் மிகவும் ஆபத்தானவர் களே என்பது சிந்தனைக்குரியது. யார் ஆட்சிக்கு வந்தாலும் கடந்தகால அல்லது நிகழ்கால ஊழலைவிட எதிர்கால ஊழலின் அளவீடு கூடவே செய்யும்.
ஏனெனில், ஊழலின் ஆரம்பமே மக்கள் நலப் பணித்திட்டங்களிலிருந்து தொடங்குகிறது. திட்டங்கள் வகுக்கப்படும்போதே ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக் கப்படுகிறது. மக்கள் நலப்பணித் திட்டங்கள் யாவும் மக்களின் வரிப்பணத்திலோ, லாட்டரி சீட்டுகள், போதைப் பொருட்கள் விற்பனை மூலமாகவோ கிடைக்கின்ற வருவாயிலிருந்தே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
மக்களின் இந்தப் பணத்தைக் கொண்டு எந்தவொரு அரசியல் கட்சியாலும் நலத்திட்ட உதவிகளைச் செய்யக் கூடும். ஒரு குறிப்பிட்ட கட்சியால்தான் இதைச் செய்ய முடியும் என்பதில்லை. ஆட்சிகைக்கு வந்துவிட்டால் குப்பனும், சுப்பனும் கூட நலத்திட்டங்களை நடை முறைப்படுத்தலாம். ஏனெனில், பணம் மக்களுடையது. இதற்கு எந்தவொரு அரசியல் கட்சியாவது ஆட்சியில் இருக்க வேண்டுமென்பதைத் தவிர வேறு எந்த முயற்சியோ, தகுதியோ தேவையில்லை. ஆனால், அரசியல் கட்சிகளுக்குத் தேவை, பெரும்பாலான மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய-சிறுபான்மையினர்க்கும் உதவக்கூடிய கொள்கைகள், கோட்பாடுகள் ஆகும். கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் பற்றிப் பேசித் தங்களை அடையாளப் படுத்துகின்றன.
அதிலும், சில கட்சிகள் தாங்கள் ஆட்சி யிலிருக்கவேண்டும் என்பதை மட்டுமே கொள்கை களாகக் கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் அடை யாளம் கண்டு ஒதுக்க வேண்டியது மக்களின் கடமையாகும். அரசியல் கட்சிகள் மக்கள் நலக் கொள் கைகளை செயல்படுத்துவதற்கும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. ஆட்சி அதிகாரம் என்ற நல்ல வாய்ப்பையும், மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்குப் பணம் தேவையில்லை. இதில் ஊழலுக்கும் வழி யில்லை. ஆனால், மக்கள் நலப் பணித்திட்டங்களைச் செயலாக்க பணம் மட்டுமே தேவைப்படும்.
எனவே, கொள்கை வழி நின்று நலத்திட்டப் பணி களை மேற்கொள்ளத் தேவையான மாற்றங்களுக்கு மக்களும், அரசியல்வாதிகளும் வித்திட வேண்டும்.
தாய்மொழிவழிக் கல்வி, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி, கல்வி நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல், இலவச மருத்துவ சேவைகள், வேளாண் துறைக்குக் கவுன்சில் அமைப்பு, பெண்களுக்கு வேலையிலும், ஆட்சியிலும் சமவாய்ப்பு, வகுப்புவாரி விகிதாசார இடஒதுக்கீடு, நில, நீர் வளங்களை மேம்படுத்துதல் போன்ற மக்களின் தேவை கருதிய கொள்கைகளை முன்வைக்கின்ற கட்சிகளும், அதை நடைமுறைப்படுத்துகின்ற ஆட்சியா ளர்களுமே நமக்குத் தேவையென்பதை ஒவ்வொரு வரும் புரிந்துகொள்ள வேண்டும்.
சாதியக் கொடுமைகளைத் தடுக்கவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதைத் தவிர்க்கவும், காலத் திற்கு ஒவ்வாத மூடப்பழக்கவழக்கங்களிலிருந்து மக் களை விடுவிக்கவும், அரசியல் கட்சிகள் கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும், நலத்திட்ட உதவிகளை முன்னிலைப் படுத்தி, மக்களை மயக்கி, வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது எளிதாக உள்ளதாக அரசி யல் கட்சிகள் கருதுகின்றன. கொள்கைகள் தோற்பதற்கு இதுவே காரணமாகும். இதில் மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் இலவச மாகக் கிடைக்கும் சில தட்டுமுட்டுச் சாமான்களுக் காக வாக்களிப்பதைக் காட்டிலும், மக்களின் கல்வியறிவு, வேளாண் தொழில், வேலை வாய்ப்பு கள், மருத்துவ வசதிகள் போன்ற பயன்தரும் திட்டங்களுக்கான கொள்கைகளைச் செயல் படுத்துகின்ற ஆட்சியாளர்களே நமக்குத் தேவை யென்பதை மக்கள் உணர வேண்டும்.
இந்தியாவில் எந்தவொரு பார்ப்பனரும் இன்னொரு பார்ப்பனருக்குக் கெடுதல் நினைப்பதில்லை. ஆனால், பார்ப்பனரல்லாதாராகிய பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களிடத்தில் கேடு நிறைந்த எட்டப்பன் குணம் புரையோடிக் கிடக்கிறது என்பதுமிகவும் வருந் தத்தக்கதொரு நிலையாகும். இந்திய அளவில் பார்ப்ப னர்களின் ஆதிக்கத்திலிருந்தது காங்கிரசுக் கட்சி; அதிலிருந்து விடுபட்டு ஆட்சிபுரிந்தவர் பெருந்தலைவர் காமராசர். ஆனாலும், காங்கிரசை வீழ்த்துவது தி.மு.க. வின் நோக்கமாக இருந்தது. அந்த தி.மு.க.வை வீழ்த்துவதற்குத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் பணியாற்றி வருகின்றன என்றால் மிகையல்ல. தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளை அகற்றப் போகிறோம் என்று பேசிவருகின்ற சில கட்சிகள் கூட, பார்ப்பனிய ஊடகங்களை எதிர்க்கத் துணிவின்றிப் பல்லிளித்து நாடகமாடுகின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையமோ மாபெரும் புரட்சி அமைப்புப் போலக் காட்டிக் கொள்கிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களிடமோ ஏதாவது நிறுவனங்களிடமோ கட்சிக்காக நிதி திரட்டுவதைக் கண்காணித்து, அதற்கான வரிசெலுத்தவோ, கணக்குக் காட்டவோ தேர்தல் ஆணையம் ஏன் முன்வர வில்லை?
மக்கள் அனைவரும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னேற வேண்டுமென்பதே யாவரும் ஏற்கக் கூடியது. தந்தைபெரியார் காலந்தொட்டு, விடுதலை பெற்ற இந்தியாவில் நிலவுகின்ற சாதியமைப்புகளை ஒழிக்கவே முடியவில்லையென்ற நிலைமைதான் உள்ளது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த அனைவரும் சமம் என்ற நிலையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் ஏன், எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டது? மனிதருள் சமநிலையற்ற தன்மையைக் கட்டிக்காக்கும் ஒரு அமைப்புக்குத்தான் மதம் என்று பேரா? அப்படிப்பட்ட மதங்கள் தேவையா? அப்படியானால் மக்களுக்கு மதம் பிடித்துள்ளதா? இல்லை மதத்திற்கு மக்களைப் பிடித்துள்ளதா? உயிர்களின் தோற்றம் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளது.
மனிதன் தோன்றிய போதும், இப்போதும் மனிதனாகவே கருதப்படுகிறான். இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலைமையும் அதனடிப்படையில் சாதிகளும், மதங்களும் ஏன், எவ்வாறு, எங்கிருந்து புகுந்தன? இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுடன் மனித னைக் கடவுள் படைத்திருக்க முடியாதல்லவா! எனவே, கடவுளின் பேரால் ஏற்றத்தாழ்வுகள், சாதிகள், மதங்கள் யாவுமே மனிதர்களாலேயே ஏற்படுத்தப்பட்டவை என்பது தெளிவாகிறது. மனிதர்களால் ஏற்பாடு செய் யப்பட்ட இயற்கைக்கு மாறான இந்த சாதி, மத, கடவுள் அமைப்புகளைக் கைவிடுவதற்குத் தடையாக இருப் பது என்னென்ன என்பதைப் பகுத்தறிய வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
கடவுள் இருந்தால் அது அனைவராலும் பார்க்கப்பட வேண்டும்; ஆத்மா இருந்தால் அது அனைவராலும் உணரப்பட வேண்டும். மாறாக, அவை இருப்பதாகப் பாசாங்கு செய்வதைக் காட்டிலும் இல்லையென்பதே சிறந்தது என்பதுதான் நாத்திகக் கொள்கையாகும். சாதியிருந்தால் அது அனை வருக்கும் சமத்துவத்தைத் தரவேண்டும்.
மதங்கள் இருந்தால் அவை அனைவர்க்கும் சமமான அதிகாரத்தைத் தரவேண்டும். கடவுள் இருந்தால் அது அனை வரிடத்தும் ஒற்றுமையைத் தரவேண்டும். இல்லையேல் சாதி, மதம், கடவுள் என்பவையெல்லாம் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்கான கருவிகளேயாகும்.