இந்திய மக்களுக்கு காங்கிரசு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதைப் பற்றியும், சட்டசபைகள் எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதை பற்றியும், இவைகளில் உள்ள தலைவர்கள் என்போர்களும் அங்கத்தவர்கள் என்போர்களும் எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையவர்கள் என்பதைப் பற்றியும் நாம் பொது மக்களுக்கு அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

periyar anna veeramaniசாதாரணமாக காங்கிரசு என்பது பார்ப்பனர்களுடையவும் படித்த சிலருடையவும் நன்மைக்காக, அதாவது, உத்தியோகமும், பிழைப்பும் பெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கம் என்பதாக நாம் பல நாளாக சொல்லிக் கொண்டே வந்திருக்கிறோம். அதுபோலவே சட்டசபை முதலியவைகளில் அங்கம் பெறவும் அது சம்மந்தமான தேர்தல்களில் ஏழைகளை, பாமர மக்களை நாணயக் குறைவான காரியங்களால் ஏமாற்றி சுயநலத்திற்காக ஸ்தானம் பெறவும் ஆன ஸ்தாபனங்கள் என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். இவற்றை இதுவரையில் எவரும் மறுத்ததில்லை. ஸ்ரீமான் காந்தியும் இவைகளை ஒப்புக் கொண்டு பாமர மக்களுக்கு அறிவு வரும்வரை இப்படித்தான் ஏமாற்றப்பட்டு வரக்கூடும் என்று சொன்னாரேயல்லாமல், பாமர மக்களுக்கு அறிவு உண்டாக்கும் விஷயத்தில் ஒரு சிறிது முயற்சியும் எடுத்துக் கொண்டவரல்ல. எனவே மகாத்மா என்றவர்களெல்லாம் பாமர மக்களின் அறிவில்லாத தன்மையை உபயோகித்துக் கொள்ளாமல் இருக்க முடியாமலும் பாமர மக்களுக்கு அறிவு வரும் மார்க்கத்தைச் செய்ய முடியாமலும் தலைவர்களாக இருந்து வரும்போது மற்றவர்களைப்பற்றி நாம் சொல்லுவது வீண் வேலையாகும்.

தேசீயத் தலைவர்கள் என்கின்ற முறையில் இந்தியாவுக்கு சுயராஜ்யத் திட்டம் வகுக்க அநேக கூட்டங்கள் கூட்டியாகிவிட்டது. அதிலும் இந்தியா சுயராஜ்யத்திற்கு எவ்வளவு தூரம் அருகதை உடையது என்பதை அறிவதற்காக பார்லிமெண்டாரால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் இந்தியாவுக்கு வேண்டியதை அதனிடம் தெரிவித்துக் கொள்வது இந்தியாவின் சுயமரியாதைக்கு அழகல்ல என்று சொல்லிக் கொண்டு தாங்களாக பல பல திட்டம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். எனவே, இவர்கள் இந்தத் திட்டத்தை என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை சற்று யோசித்தால் இதன் புரட்டு இன்னது என்பது மக்களுக்கு விளங்காமல் போகாது.

இவர்கள் போடும் திட்டம் காங்கிரஸ் மூலமோ, சட்டசபைகள் மூலமோ, அல்லது தனித்தனி நபர்களின் சொந்த ஓதாவின் மூலமோ, அல்லது சர்வ கட்சி மகாநாடு என்பதன் மூலமோ, பார்லிமெண்டுக்கு அனுப்பியோ அல்லது அறிவித்தோ தான் அதன் பலன்களை எதிர்பார்க்க வேண்டுமேயல்லாமல் திட்டம் போட்ட ஸ்தாபனங்களோ திட்டம் போட்ட ஆசாமிகளோ “இனிமேல் இந்தப்படியே ராஜரீகம் நடைபெற்று வரத்தக்கது” என்று வெளிப்படுத்தி விட்டால் அந்தப்படி அனுபவத்தில் நடக்கப் பெற்று விடுமா என்று கேட்கின்றோம்.

‘சொன்னதைச் சொல்லுமாங் கிளிப்பிள்ளை’ என்பது போல் சுய அறிவு இல்லாதவர்களும் அரசியல் பிழைப்புக்காரரும் ஏமாற்றி வாழும் சில மக்களும் சேர்ந்து கொண்டு ‘கமிஷன் பஹிஷ்காரம்’ ‘கமிஷன் பஹிஷ்காரம்’ என்று கத்துவதால் எல்லா காரியமும் சரிப்பட்டுப் போகுமா? என்று கேட்கின்றோம் சர்வ கட்சி மகாநாட்டின் பேரால் சீர்திருத்த திட்டம் என்பதாக ஸ்ரீமான்கள் சாப்புரூ. மாளவியா, சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் சில திட்டங்களை தனித்தனியாய் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலுள்ள முக்கிய விஷயமும் ஒற்றுமையான விஷயமும் ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் மகமதியர்களுக்கு தனித் தொகுதி அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாது என்பதுதான். இந்த திட்டம் குறிப்பிட்ட தலைவர்கள் என்பவர்கள் மூவரும் பார்ப்பனர்கள்.

இவர்களுக்கு இப்போது உள்ள கவலையெல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாது என்பதும், முகமதியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதையும் பிடுங்கிக் கொள்ளல் வேண்டும் என்பதுமே தவிர வேறில்லை. இதற்காக இதுவரை சுமார் நூற்றுக்கணக்காக இந்து முஸ்லீம் ஒற்றுமை மகாநாடும், சர்வ கட்சி மகாநாடும், ஒழுங்குத் திட்டங்களும் போட்டாய்விட்டது. ஒன்றும் பலித்தபாடில்லை.

சர்வகட்சி மகாநாட்டிற்குச் சென்றிருந்த ஸ்ரீமான் ராமசாமி முதலியாரால் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போனாலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (தனித்தொகுதி தேர்தல்) அவசியம் இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. யார் சொன்னாலும் லக்ஷியம் செய்யாமல் எல்லோரையும் லஞ்சம் கொடுத்தாவது ஏமாற்றி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒழிக்க வேண்டியதைத் தவிர பார்ப்பனர்களுக்கு வேறு கதியில்லை. சைமன் கமிஷன் பஹிஷ்காரத்தின் தத்துவமே இதுதான். தவிர ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் தனித்திட்டத்தில் மற்றொரு விசேஷம் இப்போது புதிதாகக் காணப்படுகின்றது. அதாவது மாகாண நிர்வாகங்களைப் பற்றிய முழு அதிகாரமும் இந்திய சட்டசபைக்குத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அநேகம் பேர் அநேக நாளாக ஸ்ரீ சீ. ஆர். தாஸ் முதற்கொண்டு மாகாண சுய ஆக்ஷி (புரொவன்ஷியல் அட்டானமி) கொடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க பல அரசியல் மகாநாடுகளும் தீர்மானித்திருக்க இப்போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மாகாண நிர்வாக அதிகாரம் இந்திய சட்டசபைக்கு இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன என்பதைப் பற்றியும் அதுவும் இந்தியாவுக்கு அரசியல் விசாரணைக் கமிஷன் வந்திருக்கும் சமயம் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றியும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

என்னவென்றால் சென்னை மாகாணத்தில் உள்ள மக்களைப்பற்றி பார்ப்பனர்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. சென்னை மாகாண பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி பரவத் தக்க வேலைகள் நடந்து வருகின்றது. வயிற்றுச் சோற்று தேசபக்தர்களாக இருக்கும் இரண்டொருவரைத்தவிர மற்றவர்களை இனி ஏய்க்க முடியாது என்கின்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனருடன் இருந்து வந்த பார்ப்பனரல்லாதார் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்து, ஸ்ரீமான்கள் வரதராஜுலு, கந்தசாமி செட்டியார், குழந்தை, குப்புசாமி முதலியார், அண்ணாமலை முதலியார், ஷாபிமுகமது சாயபு போன்ற சில நிர்ப்பந்தமுடைய ஆசாமிகள் தவிர மற்றவர்கள் எல்லாம் அவர்களைவிட்டு வெளிபட்டு விட்டார்கள். இந்தக் கனவான்கள் தங்களுடன் இருப்பதாலும் தங்களுக்கு ஒரு நன்மையும் உண்டாவதாக தெரிவதில்லை.

அன்றியும் சென்னை மாகாணமானது ஆந்திர மாகாணம், தமிழ் மாகாணம் என இரண்டு பிரிவாய் பிரிக்கப்பட போவதாகவும் அவர்களுக்குத் தெரிய வருவதால் சுத்த சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. ஆதலால் தமிழ்நாட்டு நிர்வாக அதிகாரம் மாகாண சட்டசபையில் இருக்க கூடாதென்றும் இந்திய சட்டசபைக்கு இருக்க வேண்டுமென்றும் சொல்ல வேண்டிய நிலைக்கு பார்ப்பனர்கள் வந்து விட்டார்கள். இதிலி ருந்தே இந்திய சட்ட சபை பார்ப்பன ஆதிக்கத்திற்குத் தக்கதாயிருக்கின்றது என்பது நன்கு விளங்க வில்லையா? என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.

தவிரவும் இந்திய சட்டசபையில் இது சமயம் தமிழ்நாட்டு பிரதிநிதிகளாய் உள்ளவர்கள் யார் என்பதைப் பார்த்தால் ஸ்ரீமான். ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைத் தவிர எல்லோரும் அய்யங்கார்கள் ஸ்ரீமான்கள் எ. ரங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், சீனிவாசய்யங்கார், துரைசாமி அய்யங்கார், சேஷய்யங்கார் ஆகிய அய்யங்கார் ‘சுவாமி’களாகவே இருக் கிறார்கள். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் பார்ப்பனர் கூட இருந்து கோவிந்தா போட்டதால் தான் அங்கு போக முடிந்தது. இந்த பிரபுக்கள் உள்ள கூட்டத்தில் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தீர்மானம் செய்வது அதிசயமல்ல.

ஸ்ரீமான் எம்.சி. ராஜா அங்கிருக்க நேர்ந்ததும் உள்ள நிலையை எடுத்துச் சொல்ல இடம் கிடைத்ததும் பார்ப்பனதாசராய் இல்லாமல் சர்க்கார் தயவு பெற்றதால்தான். அப்படி இருந்தும் அவர் தனது சமூகத்தைப் பற்றி கொஞ்சம் பேச ஆரம்பித்த உடனே “ஸ்ரீமான் எம்.சி.ராஜா எங்கள் பிரதிநிதி அல்ல” என்று சில வரதராஜுலுக்களையும் சாம்பசிவங்களையும் பிடித்து தந்தி தருவித்து விளம்பரம் செய்துவிட்டார்கள். ஆதலால் இப்போது நமது பார்ப்பனர்களுக்கு இந்திய சட்டசபைதான் பிரதிநிதித்துவமுடையதாகி விட்டது. அங்குதான் தமிழ் நாட்டைப்பற்றி அறியாத ஆசாமிகள் கூட்டம் கூடும். அங்கு என்ன வேண்டுமானாலும் பொய்யும் புளுகும் வண்டி வண்டியாய் அளக்கலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது. இந்திய சட்டசபையில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது என்பதற்கும் தெரிந்திருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்கள் சொல்வதையே ‘ஆமாசாமி’ போடுகிறவர்கள் என்பதற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டுகின்றோம்.

சென்ற காங்கிரசின்போது, சென்னைக்கு வந்திருந்த பல வெளிமாகாண பிரமுகர்கள் என்பவர்களில் ஸ்ரீமான் கோஸ்வாமி என்பவரும் ஒருவராவார். அவருக்கு தமிழ்நாட்டு நிலையைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் என்பதாக ஒரு சிறு விருந்து வைத்து அதில் எல்லா சங்கதியும் எடுத்துச் சொல்லப்பட்டது. அந்தச் சமயம் ஸ்ரீமான் கோஸ்வாமி தமிழ்நாட்டில் தொடக் கூடாத ஜாதி, பார்க்கக் கூடாத ஜாதி, தெருவில் நடக்கக் கூடாத ஜாதி இருப்பதாகத் தனக்குத் தெரியாது என்றும், தனது நாடாகிய வங்காளத்தில் ஜாதி வித்தியாசம் இருந்தாலும் இம்மாதிரி தொடக்கூடாத ஜாதி முதலியவைகள் இல்லையென்றும் சொன்னார். அதற்காகவே இங்கு சுயமரியாதை சங்கம் முதலியவைகள் ஏற்படுத்தி இருப்பதாகவும் அது மும்முரமாக வேலை நடக்கின்றது என்றும் இன்னின்னார் அதில் முக்கியமாய் உழைக்கின்றார்கள் என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது; அந்த சமயம் நன்றாய் குறிப்பாய் கேட்டுக் கொண்டுமிருந்தார்.

 இப்படி இருக்க சமீபத்தில் கமிஷன் விஷயமாய் இந்திய சட்டசபையில் பேச நேர்ந்த இதே ஸ்ரீமான் கோஸ்வாமி சென்னையில் புதுப் புதுச் சங்கங்கள் தோன்றி இருக்கிறது. சுயமரியாதை சங்கம் கூட தோன்றியிருக்கின்றது என்று பரிகாசமாய் பேசி இருக்கிறார் எனவே அங்குள்ள ஆட்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி எவ்வளவு கவலை இருக்கும் என்பதும் அவர்கள் எப்படி நடந்து கொள்ளக் கூடும் என்பதையும் இதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பாடுபடும் பெரியோர்களும் தொண்டர்களும் இவற்றை உத்தேசித்தே இந்திய பொது ஸ்தாபனங்களால் ஒரு நன்மையும் விளையாதெனக் கருதியே தனி ஸ்தாபனங்கள் மூலமாகவே வேலை செய்து வந்திருக்கிறார்கள். இதனாலேயே தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் இம்மாதிரி ஸ்தாபனங்களை அழிக்கப் பலப் பல சமயங்களில் ஸ்ரீமான்கள் வரதராஜுலு, கந்தசாமி செட்டியார், குப்புசாமி முதலியார் போன்றவர்களை கையில் போட்டுக் கொண்டு முயற்சி செய்தும் வருகிறார்கள். இம்மாதிரி நிலையில் தமிழ் மக்கள் இனியும் உறங்கிக் கொண்டிருப்பது பெருத்த ஆபத்துக்கிடமானதாகும்.

அடுத்த தேர்தலிலாவது இந்திய சட்டசபை தேர்தலுக்கு பார்ப்பனர்களை விடாமலும் பார்ப்பன அடிமைகளை விடாமலும் விரட்டி அடிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழ் மக்கள் சுயமரியாதை அடைய வேண்டிய விஷயத்தில் பார்ப்பன தாசர்களாயிருந்து தேசத்திற்கும், சமூகத்திற்கும் துரோகம் செய்வதை விட சர்க்கார் தாசர்களாகவாவது இருந்து ஸ்ரீ மான் எம்.சி. ராஜாவைப் போல் நமது சமூக இழிவை நீக்க முயற்சிப்பது ஆண்மைத்தனமும் யோக்கியப் பொறுப்புமுடையதாகும்.

ஆதலால் இனிவரும் இந்திய சட்டசபை தேர்தல்களில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 26.02.1928)