இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டி யதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது. 10 வருஷங்களுக்கு ஒரு முறையோ 20 வருஷங்களுக்கு ஒரு முறையோதான் ஏற்படுகின்றது. அதை தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கொடுமை செய்து வருவது ஒரு பக்கமிருந்தாலும் பார்ப்பன ரல்லாதார்களில் அரசியல் பிழைப்புக்காரரும் கோடாரிக் காம்புகளும் முடத் தெங்குகளும் மற்றொரு பக்கமும் இருந்து கொண்டு நாடு முழுவதும் பாழாகும் வண்ணமும் சமூகம் முழுவதும் இழிவுபடும் வண்ணமும் துரோ கச்செயல்கள் செய்து வருகின்றார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இதுசமயம் முக்கியமாய் விழித்திருக்க வேண்டியதாய் இருக்கின்றது.

periyar anna 501நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி விசாரிப்பதற்கென்றோ எவ்வகை சீர்திருத்தம் வழங்க வேண்டுமென்பதை அறியவோ, இதுசமயம் ஒரு கமிஷன் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதை தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமை. எனவே இப்போது வந்திருக்கும் இந்த கமிஷனிடம் நமது நிலைமைகளையும் தேவைகளையும் சொல்லிக் கொள்வது எவ்வழியிலும் இழிவானதாகாது. ஆதலால் இப்போது நமது நிலை என்ன? நமக்கு இப்போது வேண்டியது என்ன? சுயமரியாதையும் ஒற்றுமையும் தரவல்ல சமூக சீர்திருத்தமா அல்லது நாட்டை இழிவுபடுத்தி பிரித்து வைக்கும் அரசியல் திருத்தமா என்பதுதான் முக்கியமான கேள்வி. அரசியல் சீர்திருத்தம் என்பது நமக்கு இரண்டு மூன்று தடவை வழங்கப் பட்டாய்விட்டது. அதனால் எதிர்பாராத பதவிகள் எல்லாம் நமக்கு கிடைத்திருக்கின்றது. மாதம் 5500 ரூ, 6500 ரூ, 7500ரூ. கிடைக்கும்படியான உத்தியோகங்கள் கிடைத்துவிட்டன. அதுவும் தெருவில் பிச்சை எடுத்தும், பஞ்சாங் கம் சொல்லி பணம் பறித்தும், முனிசிப்பாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தும் வந்தவர்களுக்கு உயர்தர நீதிபதி பதவியும் நிர்வாக பதவியும் கிடைக்கத்தக்க சீர்திருத்தம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

பிரபு பட்டமும் கவர்னர் பதவியும் கிடைத்திருக்கின்றது. இனி நமக்கு கிடைக்க வேண்டிய பதவி இன்னது பாக்கி இருக்கின்றது என்று சொல்ல மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அரசர் பதவியும் அரசு பிரதிநிதி பதவியும் சேனாதிபதி பதவியும்தான் இனி பாக்கி இருக்கின்றது என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் இது வரை நமக்கு கிடைத்த மேல்கண்ட பதவிகளை நாம் உபயோகமற்றதென்று சொல்லித் தள்ளிவிடவும் இல்லை. ஒருவர் மேல் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அதை அடைய முயற் சிக்கின்றோமே யொழிய அடைந்து வருகின்றோமே ஒழிய, வேண்டா மென்று ஒருவரும் சொல்லவே இல்லை. அவைகளை எந்த அரசியல் இயக்கமும் தள்ளவும் இல்லை. இந்த நிலையில் நாடு என்ன முன்னேற்ற மடைந்திருக்கிறது என்று கேட்கின்றோம். ஒருசமயம், பதவியும் சம்பளமும் மாத்திரம் கிடைத்ததேயல் லாமல் அதற்கேற்ற அதிகாரம் கிடைக்கவில்லை என்று யாராவது சொல்லக் கூடுமா?

நீதிபதி அதிகாரங்களில் நம்நாட்டு மக்களின் சகல சொத்துகளைப் பற்றியும் அவர்களது உயிரைப்பற்றியும் நீதி வழங்கத்தக்க அதிகாரம் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம். அது மாத்திரமல்ல. இந்த நீதியை மக்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு பாடுபடுகின்றவர்களுக்கும் µ ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 50000 ரூபாய் 100000 ரூபாய் வரையிலும் கூட வரும்படி சம்பாதிக்கதக்க நீதி வழங்கும் முறைகளையும் நீதி அடையும் முறைகளையும் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம். அந்நீதிகள் இன்ன விதம் இருக்க வேண்டுமென்று சட்டம் ஏற்படுத்தும் பொறுப்பும் நமக்கே கொடுக்கப்பட்டி ருப்பதைக் காட்ட சட்ட நிருமாண சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளும் உபயோகமற்றவை யென்று யாராலும் வெறுத்துத் தள்ளிவிடப் படவும் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா விதமான அரசியல் தலைவர் களும் இந்தச் சட்ட நிரூபண சபைகளில் இன்றும் உட்கார்ந்து கொண்டு சட்டமியற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அதுவும் தங்களது சொந்த ஓதாவில் அல்லாமல் சீர்திருத்தத்தின் மூலம் ஏற்பட்ட நியதிப்படி பொது ஜனங்களின் வாக்குப் பெற்று பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்கின்ற முறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்க சபை தவிர மற்ற 7, 8 மாகாண சட்ட சபைகளிலும் இந்திய சட்டசபைகளிலும் ஜனப் பிரதிகளே அதிக எண்ணிக்கை இருக்கத்தக்க விதமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சர்க்காரை தோற்கடிக்கத்தக்க அதிகப்படிக்கான எண்ணிக்கை யாகவே இருப்பதுடன் பல தடவை சர்க்கார் தோற்கடிக்கப்பட்டும் இருக்கிறது.

நீதி இலாக்கா, சட்டசபை இலாக்கா மாத்திரமில்லாமல் நிர்வாக இலாக் காவிலும் நமக்கு அதிக எண்ணிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்வோம். நிர்வாக சபையில் ஏழு மெம்பர்களும் ஒரு தலைவரும் இருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் ஐந்து பேர் இந்தியர்களாகவே இருக்கத்தக்க மாதிரி இருக்கின்றது.

இந்த ஐவர்களிலும் மூன்று பேர் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களின் நம்பிக்கையை பெற்றே இருக்கத்தக்க வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இருவர்களும் இந்தியப் பிரமுகர்களாகவே நியமிக்கப்படத் தக்கதாயிருக்கின்றது. அந்தப்படியே நியமிக்கப்பட்டும் வருகிறது. அந்தப்படி நியமனம் பெறுகின்றவர்களும் அற்பத்தனமாய் நடந்து கொள்வதற் கில்லாமலும் கண்ணியமாய் நடக்கத்தக்க மாதிரியாகவும் µ 5550 ரூபாய் சம்பளமும் µ சுமார் 1500 ரூபாய் படித்தரமும் பெறும்படியான சவுகரியங் களும் அமைக்கப்பட்டு இராஜபோகமும் கொடுக்கப்பட்டு அந்தப்படியே அடைந்தும் வருகின்றார்கள்.

இந்திய ஜனப் பிரதிநிதித்துவம் கொண்ட இவ்வளவும் அரசியல் ஸ்தாபனங்கள் என்பது மூலமாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்டதாக இருக்கின்றதேயல்லாமல் வேறல்ல. எனவே இவைகளினால் நாட்டிற்கோ நாட்டிலுள்ள பற்பல ஜனசமூகங்களுக்கோ ஏற்பட்ட நன்மைகள் என்ன? ஏழைகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? கூலிக்காரருக்கு ஏற்பட்ட நன்மை என்ன? வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? தொழிலாளிக்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேட்கின்றோம்.

ஏழைகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்கு பிச்சைக்காரர்களின் தொல்லையும் ஒழுக்கக் குறைவுகள் அதிகப்படுவதும் போதிய சாக்ஷியாகாதா? என்று கேட்கின்றோம்.

விவசாயகாரர்களுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்குப் பூமிகள் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கே அதுவும் விவசாயம் செய்யத் தெரியாதவனுக்கே போய்ச் சேர்ந்து வருகின்றதும் விவசாயிகள் அவர் களுக்கு உழைத்துப் பட்டினி கிடப்பதும் போதிய சாக்ஷியாகாதா? என்று கேட்கின்றோம்.

கூலிக்காரர்களுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்கு தூத்துக் குடி, மண்டபம், நாகப்பட்டணம், சென்னை, காகிநாடா முதலிய துறைமுகங் களில் தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வாரம் ஒன்றுக்கு பதினா யிரக்கணக்கான மக்கள் கூலிக்காரர்களாக கப்பல் ஏறுகின்ற காக்ஷி போதாதா? என்று கேட்கின்றோம்.

தொழிலாளிகளுடைய நன்மையின் யோக்கியதைக்கு திடீர் திடீர் என்று ஆயிரக்கணக்காக பதினாயிரக்கணக்கான தொழிலாளர்களை முத லாளிமார்கள் வேலையிலிருந்து தள்ளுவதும் அவர்களது வேலைகளை இயந்திரங்களைக் கொண்டு சரி செய்து கொள்வதும் அத் தொழிலாளிகள் தெருத்தெருவாய் திண்டாடுவதும் µ 100 ரூ. வரும்படி பெற்ற தொழிலாளி கூலி போதாது என்று கேட்டதற்கு நீக்கப்பட்ட நிமித்தம் ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவதும், பால் கறந்து விற்பதுமான வேலையில்கூட ஜீவனம் செய்ய முடியாமல் திண்டாடுவதுமான நிலைமை போதாதா? என்று கேட்கின்றோம்.

மற்றபடி நாடு முன்னேற்ற மடைந்தது என்பதற்கு சாக்ஷியாக மக்களின் அரசாங்க நிர்வாகச் செலவுக்காக வரி வசூலிப்பது வருஷத்திற்கு வருஷம் விஷம் ஏறுவது போல வருஷம் ஒன்றுக்கு 40 கோடியிலிருந்து 165 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதும், நாட்டிலிருந்து வியாபாரத்தின் மூலம் வருஷத்திற்கு வருஷம் மேல்கண்டபடியே கோடிக்கணக்கான ரூபாய்கள் உயர்ந்து கொண்டே வெளிநாடுகளுக்கு போய்க் கொண்டு இருப்பதும் எங்குப் பார்த்தாலும் படித்த மக்கள் முதற் கொண்டு வேலை யில்லாமல் திண்டாடுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

வியாபாரிகள் நிலைக்கு சாக்ஷியாக நாணய மாற்றுதல் மூலமாகவும் வருமான வரி மூலமாகவும் பத்து லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு வரு ஷா வருஷம் நூற்றுக் கணக்கான பெரிய பெரிய வியாபாரிகளும் இயந்திர சாலை களும் தீபாவளி ஆகிவருவது போதாதா என்று கேட்கின்றோம்.

நாடு ஒழுக்கத்தில் முன்னேறியிருக்கின்றது என்கின்ற யோக்கியதைக்கு சாக்ஷியாக கோர்ட்டுகளும் நியாயாதிபதிகளும் நியாயவாதிகளும் காவலாளிகளும் நிர்வாக ஸ்தாபனங்களும் ஜெயில்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது போதாதா? என்று கேட்கின்றோம்.

சமூக ஒற்றுமையின் யோக்கியதைக்கு சாக்ஷியாக நாளுக்கு நாள் இந்து முஸ்லீம் கலவரங்களும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விவாதங் களும், கீழ் ஜாதி மேல் ஜாதி தொல்லைகளும் புதிய புதிய வகுப்பு உரிமை களும் வளர்ந்து கொண்டு போவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

நாடு அரசியல் அறிவு பெற்றிருக்கும் யோக்கியதையை அறிய சாக்ஷி யாக எலக்ஷன் கஷ்டங்களும் விவகாரங்களும் வேற்றுமை விரோதங்களும் போதாதா? என்று கேட்கின்றோம்.

சமூக முன்னேற்றமடைந்திருப்பது என்பதின் யோக்கியதையை அறிய கேவலம் மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம், பார்த்தால் பாவம் என்பதை ஒழிப்பதில் உள்ள கஷ்டங்களும் காங்கிரசில் இருந்த தீண்டாமைத் திட்டமும் மனித சமத்துவத் திட்டமும் எடுத்தெறியப்பட்டிருப்பதும் வீதியில் நடப்பதற்கும் பள்ளியில் படிப்பதற்கும் கிணற்றில் தண்ணீர் மொண்டு குடிப்பதற்கும் நம்மால் ஒப்புக் கொள்ளப்படாமல் சர்க்கார் கோர்ட்டுகளில் நீதி பெற வேண்டியிருப்பதும் பல சந்தர்ப்பங்களில் அங்கும் இந்திய அதிகாரிகளாலேயே இவைகள் மறுக்கப்படுவதும் வருணாசிரம மகாநாடுகள் நடப்பதும் வகுப்பு மகாநாடுகள் பெருகிக் கொண்டு போகவேண்டிய அவசிய மேற்படுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

நாட்டின் பொது நாகரீக முன்னேற்றத்தின் யோக்கியதையைப்பற்றி அறிவதற்கு சாட்சியாக மிஸ்.மேயோ போன்ற நூற்றுக்கணக்கான பேர்கள் எழுதி இருக்கும் புஸ்தகங்களும் அதை நாடக ரூபமாக அன்னிய நாடுகளில் நடத்திக் காண்பிக்கப்படுவதும், இன்னும் பலர் இப்போதும் அம் மாதிரி விஷயங்களில் பிரவேசித்து புஸ்தகமெழுதி பணம் சம்பாதிப்பதும், இவ்வளவுமல்லாமல் மதத்தின் பேரால், கோயில்களின் பேரால், சுவாமிகளின் பேரால் விபசாரப் பெண்கள் உற்பத்தியையாவது தடுக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை கொண்ட சட்டம் செய்வதில் மதத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று மதத் தலைவர்களும் உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், வாதாடுவதும் அறியாக் குழந்தைகளை பொம்மைக் கல்யாணம் செய்து பெண்ஜாதி புருஷர்களாக்கி வீட்டிற்குள் தள்ளக் கூடாது என்பதாக சட்டம் ஏற்படுத்த பெண்மணிகள் முயற்சித்தால் அதையும் மதத் தலைவர்களும், உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், அரசியல் தலைவர்களும் மதத்தின் பேராலும் தேசத்தின் பேராலும் தடுப்பதும், மற்றும் ஒருவரை ஒருவர் தொடுவது பாவம் என்றும் ஒருவர் தொட்ட தண்ணீர் சாப்பிட்டால் நரகம் கிடைக்குமென்றும், ஒருவர் தொழும் இடத்தில் மற்றொருவர் தொழுதால் கடவுள் அருள் போய்விடும் என்றும், ஒருவர் குளிக்கும் இடத்தில் மற்றொருவர் குளித்தால் நதியோ குளமோ கெட்டுப் போகும் என்றும் மதத்தின் பேராலும் கடவுள்கள் பேராலும் நிர்பந்தப்படுத்தி வருவதும் போதாதா? என்று கேட்கின்றோம். அன்றியும் இவைகள் முழுவதும் ஒழிய வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அதற்கு “நாஸ்திகம்” என்றும் “தேசத் துரோக”மென்றும் பெயர் கொடுத்து அம்முயற்சிகளை ஒழிக்கமுற்படுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

எனவே அரசியல் சீர்திருத்தத்தால் இந்தியர் இந்திய மக்கள் அடைந்திருக்கும் நன்மைக்கு மேல் கண்டவைகளைவிட இனியும் வேறு என்ன உதாரணங்கள் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆதலால் இனியும் அதிகமான அரசியல் சீர்திருத்தம் கிடைத்தால் இந்தியாவுக்கு என்ன பலனைக் கொடுக்கக்கூடும், இந்தியா என்ன கதியை அடையக் கூடும், என்பவைகளை யோசித்துப் பார்த்தால் உண்மையான இந்தியனுக்கு இப்போது என்ன வேண்டும்? அதாவது அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா? என்பது புலனாகாமல் போகாது என்று சொல்லுவோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியல் திருத்தத்தால் நமது நாடு முன்னேற முடியவே முடியாது என்பது இதுவரையில் கிடைத்த அனுபவத்தினாலேயே தெரிந்து கொண்டோம். அன்றியும் எந்நாடும் முதலில் சமூக சீர்திருத்தமும் சமூக ஒற்றுமையும் பெறாமல் அரசியல் சுதந்திரம் பெற்றதாக யாரும் கூற முடியாது.

தேசீயம் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். தேசீயம் என்பது தேச மக்களின் சுயமரியாதை முன்னேற்றத்தைப் பொறுத்தது. அதை பலர் தப்பாக அர்த்தம் செய்து காட்டி பாமர மக்களை ஏமாற்றி உயிர் வாழ்கிறார்கள். அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எம்மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் விஷயமாகும். இப்போதைய அரசியல்வாதிகள் எல்லாம் தங்கள் தங்கள் தனி ஆதிக்கத் திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்ற முறைகளை வகுக்கின்றார்களே யொழிய தேசத்திற்கும் தேசத்திலுள்ள பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்ற முறைகளை வகுப்பதே இல்லை. அந்தப்படி வகுத்தால் அரசியலில் பிழைப்பவர்களுக்கு பிழைப்பு போய்விடும். ஏனென்றால் நமது நாட்டில் யோக்கியமான பிழைப்புகள் மறைந்து விட்டதினால் அநேகருக்கு அரசியல் வயிற்றுப் பிழைப்பாய் போய்விட்டது. அதிலும் தேசத்தைக் காட்டிக் கொடுத்தும் தேசமக்களின் சுயமரியாதையை விற்றும் பிழைக்க வேண்டிய நிலையில் அரசியல் பிழைப்பு அமைக்கப்பட்டுவிட்டது. ஆதலால் இப் போதைய அரசியல் இயக்கங்களாலும் இப்போதைய அரசியல் பிழைப்புக் காரர்களாலும் ஏற்படும் அரசியல் சீர்திருத்தத்தால் இந்திய நாடு ஒரு நாளும் முன்னேற்றமடைய முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

போதிய பலனளித்தாலும் பலனளிக்காவிட்டாலும் சமூக சீர்திருத்தமே இப்போது வேண்டற்பாலது. சமூக சீர்திருத்தம் இல்லாத காரணமே இந்திய மக்கள் பல மதங்களாகப் பிரியவும் அவற்றுள் உயர்வு தாழ்வு, உள் சண்டைகள் ஏற்படவும், பல ஜாதிப்பிரிவுகள் உண்டாகவும், அவற்றுள் உயர்வு தாழ்வுச் சண்டைகள் ஏற்படவும், இதன் பலனால் மக்கள் நிரந்தரமாய் ஒற்றுமைப்பட மார்க்கமில்லாமல் வேற்றுமைப்பட்டு பிரிந்து நிற்கவுமான நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதை யாரும் மறைக்க முடியாது. இவற்றை உணர்ந்தே அனேக பெரியோர்கள் சமூக சீர்திருத்தத்திலேயே உழைத்து வந்திருக்கிறார்கள். தற்காலம் நமது சமூக நிலையின் பலன்தான் அரசியல் கொடுமைகளேயல்லாமல் வேறல்ல. அரசியல் சீர்தி ருத்தம் வந்த பிறகு சமூக சீர்திருத்தம் ஏற்பட்டு விடும் என்று சொல்பவர்கள் எல்லாம் முதல் நெம்பர் அயோக்கியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏதாவது ஒன்று இரண்டு யோக்கியர்கள் என்போர்களும் அதில் கலந்திருக்கின்றார்கள் என்று யாரா வது சொல்ல வருவார்களானால் அப்படி கலந்திருப்பவர்கள் அயோக்கியர் களாயில்லாவிட்டாலும் முட்டாள்களாகவாவது கண்டிப்பாய் இருந்து தான் ஆகவேண்டும் என்று உறுதி கூறுவோம்.

சுவாமி விவேகானந்தருடைய வாக்கைப் பாருங்கள். ஸ்ரீ மான் காந்தியின் முந்திய வாக்குகளைப் பாருங்கள். அப்படிப் பார்ப்பீர்களானால் இந்திய நாட்டின் நன்மையைப்பற்றி இவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாய் விளங்கும்.

எனவே இதுசமயம் நமது நாட்டிற்கு வந்துள்ள ராயல் கமிஷனை சமூக சீர்திருத்தத்திற்காகவே நாம் உபயோகித்துக் கொள்ள வேண்டும். பகிஷ்காரமானாலும், வரவேற்பானாலும், சமூக சீர்திருத்தத்திற்கும் சுய மரியாதைக்குமே நடத்த வேண்டும். எம்மை சர். ஜான் சைமன் கூப்பிட்டு உமக்கு அரசப் பிரதிநிதி பட்டம் வேண்டுமா? சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண்டுமா? என்று கேட்டால் சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண்டும் என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு கவர்னர் பதவியும் சட்ட மெம்பர் பதவியும் மந்திரி பதவியும் கிடைத்தும் இந்தப்பதவி பெற்றவர்களாலாவது ஜனப்பிரதிநிதிகள் சபைகளிலாவது நம்மை சூத்திரன் என்று அழைக்கும் தன்மை மாறவில்லை என்பதை உத்தேசித்துத்தான். பறையர் என்று இழிவாக பேசப்படும் குலத்தில் உதித்தவர் என்று சொல்லப் படும் ஸ்ரீமான் எம்.சி. ராஜாவுக்கு இந்திய சட்ட சபையில் உட்காரும் யோக் கியதை கிடைத்தும் தெருவில் நடக்கும் உரிமையும் சுவாமியைப் பார்த்து கும் பிடும் உரிமையும் கிடைக்கவில்லை, குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமையும் கிடைக்கவில்லை.

இனி எந்த அரசியல் பதவியும் பட்டமும் அதிகாரமும் கிடைத்தால் நாம் சூத்திரனாகாமல் மனிதனாயிருக்கக் கூடும். ஸ்ரீ எம்.சி. ராஜா குளத்தில் தண்ணீர் குடிக்கக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். ‘சுயராஜ்யம் கிடைத்தால் எல்லாம் சரியாய் போய்விடும்’ என்கின்ற பித்தலாட்டக்காரர்களை நம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. அதென்னவென்றால் இந்தியா சுயராஜ்யமடைந்திருந்த காலத்தில்தான் ராமராஜியத்தில் தான் மனு அதர்ம சாஸ்திரம் உண்டானது. அது ஆட்சியிலும் இருந்தது. நமக்கு சூத்திரப்பட்ட மும் சண்டாளப் பட்டமும் கிடைத்து. தெருவில் நடக்க உரிமை கேட்டவர் களை கழுவில் ஏற்றினது வேதத்தையும் நீதியையும் படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், பார்த்தால் கண்ணை குத்துவதுமான சட்டம் அமுலிலிருந்து வந்தது. இப்போது இந்திய அரசர்கள் ஆளும் ராஜ்யங்கள் அதாவது மைசூர் திருவாங்கூர் கொச்சி முதலிய தேசங்களில் தான் மனு அதர்மம் தாண்டவமாடுகின்றது. ஆதலால் நமக்கு வேண்டியது. சமூக முன்னேற்றம், சுயமரியாதை. இதை அடையாமல் ராயல் கமிஷன் மாத்திரமல்ல மற்றும் நரகத்தில் இருப்பது என்பதையும் உப யோகித்து கொள்ள வேண்டியது மக்கள் கடமை. எனவே சுயநலக்காரர்கள் வார்த்தையையும் புரட்டர்கள் வார்த்தையையும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 26.02.1928)

Pin It