நான் கொஞ்ச காலமாக மறைந்திருந்தேன். இனி அடிக்கடி தோன்றுவேன். அன்பர்கள் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசுகிறபோது முழுதும் உண்மையாயிருக்காது என்று சந்தேகப்படுகிற காலத்தில் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி சொல்வதுண்டு. அது எப்பொழுது ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது என்கிற விபரம் அநேகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன். தெரியாதென்று நினைப்பதால் அதைப் பற்றி நான் கண்டுபிடித்த முடிவை சொல்லுகிறேன்.
“ஐந்துக்கிரண்டு பழுதில்லை” யென்பதானது ஐந்து விஷயம் சொன்னால் அதில் இரண்டாவது பொருத்தமாயிருக்கும். அப்படி இருந்தாலே போதும் என்கிற கருத்துக்கொண்டே இப்பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது என்று பார்ப்போமானால் ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த காலத்தில் அப்புரட்டுகளை யாராவது கண்டுபிடித்து கேழ்க்க ஆரம்பித்தால் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்” அதாவது முன் சொன்னது போல் ஐந்தில் இரண்டு விஷயங்கள் நிஜமாயிருந்தாலே போதுமென்று அதை நம்ப வேண்டியதுதான் என்று சொல்லி ஏமாற்றுவதற்கு உபயோகப்படுத்தினார்கள். அந்தப் பழமொழியின் ஆதாரத்தைக் கொண்டுதான் ஜனங்கள் இப்பொழுதும் சாஸ்திரம், புராணம், ஜாதகம், ஆரூடம், சகுனம், சாந்தி, ஓமம், யாகம், சாமியாடி வேண்டுதலை அல்லது பிரார்த்தனை, அருள்வாக்கு என்பவை போன்ற மூட கொள்கைகளெல்லாம் நாட்டில் பரவலாயின. ஏனெனில் இவைகளில் எவ்வளவு பொய்யாய் போய் விட்டாலும் அதை நம்பிக் கெட்ட மூடர்கள் பார்ப்பனர்களை சமாதானம் கேழ்க்க ஆரம்பித்தால், அதனால் பிழைக்கும் அயோக்கியக் கூட்டத்தார் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டுமெயொழிய ஒவ்வொன்றையும் பரிசோதிப்பது நாஸ்திகத் தன்மையாகி விடும்” கடவுளிடத்தில் நம்பிக்கையற்றதன்மையாகிவிடும் என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள்.
ஆனால் அவற்றுள் ஐந்து என்ற எண்ணிக்கையும் இரண்டு என்கிற எண்ணிக்கையும் எப்படி குறிப்பாய் வந்தது, வேறு எண்களை சொல்லக் கூடாதா என்று சிலர் கேட்கக் கூடும். இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவது அனாவஸ்யமாகும். ஏனெனில் ஏதாவது இரண்டு எண்களைச் சொல்லித் தானாக வேண்டும். அப்படி சொல்லும் போது இந்த இரண்டு எண்களை மட்டும் சொல்லக்கூடாது என்பதற்கு யாதொரு நிபந்தனையும் இல்லை. ஆனாலும் இந்த இரண்டு எண்களுக்கு குறிப்பான சமாதானம் இல்லாமல் போகவுமில்லை. அதைச் சொல்லுகிறேன் கவனமாய் கேளுங்கள். ஆனால் அதை நம்பியே தீர வேண்டுமென்று நான் உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. உங்களுக்கு சரியென்று தோன்றினால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேறு சமாதானம் கிடைக்கும் வரை இதை அனாமத்தில் வைத்திருங்கள்.
அதாவது பார்ப்பன பாஷையில் ஒரு தோத்திர ஸ்லோகமுண்டு. என்னவென்றால் “அகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி, ஸ்மிருதா, பஞ்சகன்யாஸ்மரே நித்தயம் மாஹபாதக் நாசனம்.” இதன் கருத்து அகல்யை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து கன்னிகைகளை தினம் நினைத்தால் மஹாபாதகமெல்லாம் நாசமாய்விடும் என்பதே. இதில் ஏற்பட்ட விவகாரத்திற்காகத்தான் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி உண்டாக்கப்பட்டது. விவகாரத்தின் தன்மையாவது:-
கோபமில்லாமல் பகுத்தறிவோடு கேட்க வேண்டும். ஏனென்றால் கோபம் வந்தால் பார்ப்பான் ஏமாற்றி விடுவான். கோபமில்லாவிட்டால்தான் அதிலிருக்கும் ரகசியம் விளங்கும். நான் கிளப்பப் போகும் விவாதம் இந்த ஸ்லோகத்தை எந்தப் பார்ப்பான் எழுதினானோ அந்தப் பார்ப்பான் எழுதி வைத்த சங்கதியைத்தான் சொல்லப் போகிறேன். ஆதலால் நான் என் உத்தேசப்படி சொல்லப் போவதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள். இதில் கண்டிருப்பது வாஸ்தவமா இல்லையா என்று ஒவ்வொரு பார்ப்பானையும் கேளுங்கள். வாஸ்தவமல்ல என்று சொன்னால் என்னைக் கேளுங்கள். முதலாவது அந்த ஸ்லோகத்தில் மேல்கண்ட ஐந்து பெண்களையும் கன்னிகைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கன்னிகை என்றால் கலவி அறியாதவள். அதாவது புருஷர்கள் சாவகாசம் தொடங்காதவள், கல்யாணமில்லாதவள் என்பது பொருள். ஆகையால் அந்த ஸ்லோகம் முன்னுக்குப் பின் முரணானது என்று சொல்லுவேன்.
ஒரு சமயம் பார்ப்பனர்கள் இதற்கு இந்த ஸ்லோகத்தில் பெண்களை குறிப்பிட்டு நினைக்கும்படி சொன்னதின் கருத்து கன்னித் தன்மையை உத்தேசித்தல்ல. அவர்களுடைய கற்புத்தன்மையைப் பற்றி என்று சமாதானமாக சொல்ல வருவார்களானால் அதையும் பற்றி சற்று யோசிப்போம்.
இந்த ஐந்து பெண்களையும் நான் 1.தாரை 2. அகலியை, 3.துரோபதை 4.சீதை 5. மண்டோதரி என்கிற வரிசையில் எடுத்துக் கொள்ளுகிறேன்.
முதலாவது தாரை. தாரை என்பவள் தேவகுருவாகிய பிரகஸ்பதியினுடைய பெண்சாதி. இந்தம்மாளைப் பற்றிய விஷயம் அறிவதற்கு கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு காதம் காதமாய் ஊர்ப் பயணம் போக வேண்டியதில்லை. இன்றைக்கும் தெருதெருவாய் தாரையும் சந்திரனும் படுத்து உருளுவதும் நிர்வாணமாய் நின்று கொண்டு சந்திரனுக்கு எண்ணை தேய்ப்பதுமான சத்காலட்சேபத்தை தினம் தினம் பார்த்து வருகிறோம். தாரையம்மன் புருஷனே சங்கதி தெரிந்து இரண்டு பேருக்கும் சாபமிட்டதும், இவர்கள் இரண்டு பேருக்குமாக பிறந்த குழந்தை புதன் என்பவன் இருப்பதுவும் மேல்படி பார்ப்பனர்கள் சாஸ்திரங்களிலேயே இருக்கிறது.
ஆகவே, குருவின் யோக்கியதை, குரு பத்தினியின் யோக்கியதை, சிஷ்யனின் யோக்கியதை, ஆஸ்ரமத்தின் யோக்கியதை, ஆரிய நாகரீகத்தின் யோக்கியதை ஆகிய இவ்வளவுக்கும் தாரையம்மாள் உதாரணமாக விளங்குகிறாள். இதையெல்லாம்விட கற்பின் லக்ஷணத்திற்கும் இது ஓர் அரிய இலக்கியமாய் விளங்குகின்றது.
இரண்டாவதான அகலியை அம்மாள் விஷயம். அகல்யை அம்மாள் என்பவள் கௌதம முனிவர் என்கிற ஒரு இருஷியின் பெண்டாட்டி. தெய்வராஜனான இந்திரன் இந்த அம்மாள் மேல் ஆசைப்பட்டு மாறுவேஷம் பூண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும் பிறகு ஒருவருக்கொருவர் இன்னார் என்று தெரிந்து கொண்டு இரண்டு பேரும் சுகித்ததாகவும் ரிஷி இந்த விஷயம் தெரிந்து இருவரையும் தண்டித்ததாகவும் அத்தண்டனையில் இந்திரனுக்கு சரீரமெல்லாம் பெண் குறியாகவும், அகலிகையை கல்லாகவும் ஆய் விட்டதாகவும் பார்ப்பன சாஸ்திரங்கள் என்பவைகளே சொல்லுகின்றன. அதுவும் தெருவில் போகின்ற சாஸ்திரங்கள் சொல்லவில்லை. ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுவதாகிய இராமாயணம், பாரதம் முதலியவைகளில்தான் இந்த உண்மைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. இதனால் தேவர்களின் அரசனின் யோக்கியதையும், ரிஷிபத்தினிகளின் யோக்கியதையும் விளங்குகின்றது.
மூன்றாவது, துரௌபதையம்மாள் சங்கதி. இந்த அம்மாள் முதலில் ஒரு புருஷனை மாத்திரம் கட்டிக்கொண்டு பிறகு மாமியார் இஷ்டப்படி மற்றும் நால்வருக்கும் பெண்டாட்டியாக இருந்து வந்திருக்கிறாள். ஐந்து பேரிருந்தும் ஆசை தீராமல் இன்னொரு புருஷனையும் மனதில் நினைத்து நினைத்து வருந்தியிருக்கின்றாள் என்பதை தானே ஒப்புக் கொண்டதல்லாமல் உலகத்தில் பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் ஆண் மக்களே இருக்கக் கூடாது என்று தீர்ப்புங் கூறி விட்டாள். இதனால் அக்காலக் கற்புக்கு இலக்ஷணம் புருஷனும் மாமியாரும் யாரிடம் போகும்படி சொன்னாலும் போய்த்தான் ஆக வேண்டும் என்பதும், அதுவும் கற்பில் சேர்ந்ததுதான் என்பதும் பிறகு தன்னிஷ்டப்படி யாரை ஆசைப்பட்டாலும் அதுவும் கற்புடன் சேர்ந்தது தான் என்பதும் அக்கால வழக்கத்தில் இருந்ததாய் விளங்குகின்றது. ஆகவே, ஐந்து கன்னிகைகளில் மூன்றுபேர் சங்கதி இப்படியிருக்கின்றதே என்று கேட்கப்படும் கேள்விகளுக்குத்தான் பார்ப்பனர்கள் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று சொல்ல அதிலிருந்து இந்தப் பழமொழி ஏற்பட்டது.
இந்த இரண்டில் ஒன்றும் குற்றமில்லையா என்று பார்த்தால் அதிலும் ஒன்றை கழிக்க வேண்டியதாகத்தான் இருக்கின்றது அடியோடு கழிக்காவிட்டாலும் சந்தேகத்திலாவது வைத்துத் தீர வேண்டியதாகத் தானிருக்கின்றது.
நாலாவதான சீதையம்மாள் சங்கதி பார்த்தால் முன் சொன்ன கதைகளின் படிக்கு அவ்வளவு இல்லாவிட்டாலும் உத்தம ஸ்திரீ என்றோ முழுதும் பரிசுத்தமானவளென்றோ கற்புக்கரசி என்றோ சொல்வதற்கில்லை. குண விசேஷத்தைப் பற்றியோவென்றால் மாய மானைத் துரத்திக்கொண்டு ராமன் போன காலத்தில் வெகுநேரம் வரை திரும்பி வராதது கண்டு புருஷனைப் போய்ப் பார்த்து வரும்படி சீதை லக்ஷீமணனுக்குச் சொல்ல லக்ஷீமணன் போக வேண்டிய அவசியமில்லை ராமர் எப்படியும் திரும்பி வருவார் என்று சொன்னதற்கு அண்ணன் செத்தால் என்னைக் கைப்பற்றலாம் என்று பார்க்கின்றாயா என்று சொன்னதிலிருந்தே லட்சுமணனிடம் பழகிய சீதைக்கு போதிய அறிவும் உயர் குணமும் விஷயத்தை அறியும் சக்தியும் இல்லையென்கின்ற தத்துவமும் நன்றாய் விளங்குகின்றது.
தவிர சீதையிடம் வெகு காலம் நன்றாய்ப் பழகிய அவன் புருஷனாகிய ராமனும் பலதடவை சீதையின் கற்பில் சந்தேகப்பட்டிருக்கிறான். அதாவது ராவணனைக் கொன்றபின் முதல் முதல் சீதையை ஒரு தடவை சந்தேகப்பட்டபோது சீதையிடம் என்ன சொல்லுகிறான் என்றால் “ஏ சீதை! நான் உன்மேல் ஆசைப்பட்டு உன்னை மீட்டுக் கொண்டு போவதற்காக ராவணனிடம் யுத்தம் செய்யவில்லை. பின் என்னவென்று கேட்பாயானால் ஒருவன் பெண்சாதியை மற்றொருவன் அடித்துக் கொண்டுபோய் விட்டால் அவனைச் சும்மா விட்டு விடுவது வீரனுக்கு அழகாகுமா என்கின்ற ரோசத்தின் மேல்தான் சண்டைப் போட்டு அவனைக் கொன்றேன். மற்றபடி ஒரு துஷ்டன் வீட்டில் அதுவும் அவனுடைய அதிகாரத்திற்கும் பெலத்திற்கும் கட்டுப்பட்டு 10 மாதம் வசித்த தன் பெண்சாதியை சுயமரியாதையுள்ள எவனாவது மறுபடியும் சேர்த்துக் கொள்வானா? என்று சொன்னதோடல்லாமல் சகல வசத்திலும் அவனுடைய சுவாதீனத்திலிருந்த நீ அவனுக்கு வசப்படாமலிருந்திருக்க முடியுமா? ஆதலால் நீ எங்கே வேண்டுமானாலும் உன்னிஷ்டப்படி போகலாம். உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கோபத்தால் சொல்லவில்லை. நெடுநேரம் ஆலோசித்து செய்த முடிவு இது” என்று சொன்னான். (இந்த இடத்தில் ராமன் உலக அபவாதத்திற்குக் கட்டுப்பட்டு இப்படி சொல்லவில்லை. தானே சந்தேகப்பட்டு ஒருவித முடிவு செய்து கொண்டு சொல்லுகிறான் என்றுதான் அர்த்தம்) அதோடு 10 மாதம் எதிரி வீட்டில் வசித்த நீ என்பதால் இதுவரை உயிர் வைத்திருந்தாயே என்கின்ற கருத்தும் தொக்கியிருக்கின்றது.
இதற்கு சீதை சொல்லும் பதில் என்னவென்றால், “ஏ ராமா நீ சொல்லுவது உண்மை! அதற்கு நான் என்ன செய்யப்படும். நானோ ஒரு பெண், ஒண்டியாயும், அனாதையாயும் இருந்தவள். ராவணனோ ராக்ஷசன், அளவற்ற பலசாலி. என்னால் கூடியவரை தடுத்துப் பார்த்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போகவேண்டும் என்கின்ற ஆசை இருந்ததா? விதியை நோக வேண்டியதே தவிர என்னைக் குற்றஞ் சொல்லக்கூடாது. என் தேகம்தான் பிறருக்கு வயப்பட்டதே ஒழிய என் ஹிருதயம் அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் உன்னிடத்திலேயே இருக்கின்றது. சுதந்திரமற்ற நான் என்ன செய்ய முடியும். அனுமானை அனுப்பி நான் இருக்குமிடத் தையும் ஸ்திதியையும் அறிந்து வரச் சொன்னதின் மூலம் நான் லங்கையில் ராவணனுடைய வீட்டில் இருப்பதாக தெரிந்த உடனே என்னை ஏன் தள்ளி விடவில்லை” என்றுதான் சொன்னாள். (இது வால்மீகி ராமாயணம் யுத்தக் காண்டம், 117, 118 வது சர்க்கத்தில் காணப்படுவது) இந்த இடத்தில் ராமன் சீதையைப் பார்த்து “நீ கற்பழிந்து விட்டாய் என்று நான் தீர்மானித்து விட்டேன்” என்று வெளிப்படையாய் சொல்லி காட்டியதற்கு சீதை ஏன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று தைரியமாய் சொல்லியிருக்க கூடாது என்கின்ற கேள்விக்கு பதில் இல்லை. அதோடு என் சரீரம் அவன் வயப்பட்டுவிட்டது. ஆனால் அப்போதும் மனம் உன்னிடம்தான் இருந்தது. விதியை நோக வேண்டுமேயொழிய என்னை நோகக் கூடாது. ராவணன் வீட்டில் இருந்ததையும் என் ஸ்திதியையும் அனுமான் பார்த்து விட்டு வந்து சொல்லி இருப்பானே. அப்போதே ஏன் என்னை தள்ளிவிட்டதாக சொல்லி அனுப்பவில்லை என்பதாக வெல்லாம் சொல்லுவதினால் விஷயம் சந்தேகத் திற்காவது இடமுண்டாகின்றதா இல்லையா ? என்பதை யோசித்துப் பாருங் கள். ஒரு சமயம் இராவணன் மீது அதிகமான பழியை சுமத்த வால்மீகி வேண்டுமென்றே இப்படி எழுதி இருக்கக்கூடும் என்று சொல்வதானால் அது வேறு விஷயம். என்னவென்றால் அது ராவணன் சங்கதியைப் பற்றி பேசும் போது கவனிக்கவேண்டிய விஷயம்.
இந்த இடத்தில் கற்பைப் பற்றி பரீக்ஷிப்பதால் வால்மீகி வார்த்தையில் இருந்தும் சாத்தியத்தில் இருந்தும்தான் பேச வேண்டும்.
தவிர, மற்றொரு தடவை வண்ணான் வார்த்தையைக் கேட்டுக் கொண்டு கொஞ்சமும் கூட முன்பின் யோசிக்காமல் திடீரென்று லக்ஷ்மண னை விட்டு சீதையை நடுக்காட்டில் கொண்டுபோய் விட்டு வந்ததும் அங்கு சீதை தன் கற்பைப் பற்றி யார் என்ன சொல்லி விடப்போகிறார்களோ எனப் பயந்து “லக்ஷ்மணா இதோ பார் நான் இப்பொழுது கர்ப்பமாயிருக்கின்றேன்” என்று சொன்னதும் காட்டில் இரட்டைப் பிள்ளை பெற்றதாக ஒரு ராமாயணத்திலும், தர்ப்பை கிள்ளிப் போட்டு வால்மீகி ஒரு பிள்ளையை உண்டாக்கினார் என்று மற்றொரு ராமாயணத்திலும் சொல்லப்பட்டாலும் இந்த பிள்ளைகளை ராமன் ஒப்புக் கொள்ளாமல் வால்மீகி முதலிய எவ்வளவோ பெரிய தவ சிரேஷ்டர்கள் என்போர்கள் பிரமாணம் செய்தும் ஒப்புக் கொள்ளாமல் மறுபடியும் நெருப்பில் இறங்கும்படி சொன்னதும் அதற்கு சீதை கட்டுப்படாமல் உலக அபவாதத்தையோ அல்லது ராமனுடைய சந்தேகத் தையோ நிவர்த்தி செய்ய வேண்டாமா என்கின்ற கவலையில்லாமல் பூமியை பிளக்கச் செய்து பூமியில் இறங்கி மறைந்துவிட்டாள் என்றும் எழுதப் பட்டிருக்கின்றது. இன்னமும் என்னென்னவோ இருந்தாலும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு இதுவே போதும்.
எனவே சீதையின் விஷயமானது சந்தேகப்படுவதற்கில்லாமல் போகவில்லை என்பதோடு சீதையின் லக்ஷ்மித் தன்மையும், ராமனின் விஷ்ணுத்தன்மையும் எப்படிப்பட்டதென்று விளக்கவும் ஆரியர் பழக்க வழக்கங்களும் அக்காலத்திய ஆண் பெண்கள் வாழ்க்கை நிலையும் வெளி யாக்கவும் உதவுகின்றது.
கடைசியாக மீதி இருப்பது ஐந்தாவதான மண்டோதரி அம்மாள். இந்தம்மாள் விஷயத்தில் ஒரு தகராரையும் காணோம். கம்பராமாயணத்தில் புருஷன் பிரிந்தவுடன் செத்து விட்டான் என்கின்ற சங்கதி தெரிந்து அழுது உயிர் விட்டு விட்டதாகக் காணப்படுகின்றது. தவிரவும் செத்துப்போன ராவணனைப் பார்த்து அழும்போது சீதை குலத்திலாவது, ரூபத்திலாவது, குணத்திலாவது, சாமார்த்தியத்திலாவது என்னைவிட சிறந்தவளா என்று மாத்திரம் கேட்டிருக்கின்றாள். இது சீதையின் குணத்தை 10 மாதம் நேரிலிருந்து பார்த்தவள் கேட்டிருப்பதால் இதில் மண்டோதரி பேரில் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால் சீதையின் குணம்தான் வெளியாக்கப்பட்டதாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலால் மண்டோதரியின்பால் மாத்திரம் குற்றம் சொல்ல இட மில்லை. கற்புள்ள பெண் என்றே சொல்லலாம். ஆனால் இது திராவிட நாகரீகத்திற்கும் திராவிடச் சிறப்புக்கும் இலக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பஞ்ச கன்னிகைகளின் யோக்கியதையைப் பார்க்கின்ற போதும், கற்பு இலக்கணங்களைப் பார்க்கின்றபோதும், குரு, அரசன், ரிஷி, கடவுள் என்கின்றதைப் பார்க்கும்போதும் நன்றாய் கவனித்தால் இதன் ஆபாசங்கள் விளங்குவதோடு ஐந்துக்கு இரண்டாவது சுத்தமாய் தேர்கின்றதா என்பது வெளியாகும்.
முதலாவது விஷயம், குரு பத்தினியின் சங்கதியையும் சிஷ்யனின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று. இரண்டாவது விஷயம், தேவர்களுக் கெல்லாம் அரசனாயிருப்பவன் யோக்கியதையையும் ரிஷிபத்தினியின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று. இந்த இரண்டு விஷயமும் புருஷர்களால் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்பதையாவது காட்டிற்று. மூன்றாவது விஷயமோ புருஷனும் ஒப்புக் கொண்டான், மாமியும் ஒப்புக் கொண்டாள். சகோதரர்களும் ஒப்புக் கொண்டார்கள். உலகமும் ஒப்புக் கொண்டது என்பதை காட்டிற்று. நாலாவது விஷயம் அவதாரங்கள் என்பதின் யோக்கிய தையையும் வெளியாக்கிற்று.
மிஞ்சியது இராக்ஷதர்கள் என்றும் இராக்ஷச ஸ்திரிகள் என்றும், ஆரியர்கள் எப்பேர்ப்பட்டவர்களை சொல்லுகின்றார்கள், சொல்லி வந்திருக்கின்றார்கள் என்பதையும் ஒரு திராவிடப் பெண்ணின் கற்பின் நிழலுக்குள் ஆரியர்கள் எப்படி வந்து கலந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும் வெளி யாக்கிற்று. இந்தப் பழமொழி ஒன்றா உலகத்தை ஏமாற்றிச் செய்திருக்க வேண்டும். அல்லது இது அவர்களின் பழக்கவழக்கமாய் இருக்க வேண்டும். ஆகவே ஐந்துக்கு இரண்டு கூட அவர்கள் சொற்களில் உண்மை இல்லை என்பதும் ஏதாவது உண்மையிருந்தால் அதுவும் நம்முடைய விஷயங்களில் தான் என்பதும் இந்த விஷயத்தினால் வெளிப்படுத்துகின்றேன்.
இப்பொழுது எப்படி அவர்கள் அக்கிரமங்களை மறைத்துக் கொண்டும், பெருமையாய் பிரசாரம் செய்துகொண்டும், நம்முடைய யோக்கியமான காரியங்களைக் குற்றம் சொல்லிக்கொண்டும், அதற்கு நம்மவர்களையே கூலிக்கமர்த்திக் கொண்டும் வேலை செய்து வருகிறார்களோ இதுபோல்தான் இந்தப் பார்ப்பனர்கள் என்னும் ஆரியர்கள் முன்காலத்திலும் செய்து வந்திருக்கிறார்கள் என்பதோடு நம்முடைய பாமர ஜனங்கள் இவர்களை அப்போதும் இப்போதும் நம்பி ஏமாந்து வருகிறார்கள் என்பதும் “ ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்னும் வியாசத்தால் வெளியாக்கப்பட்டது.
(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது - குடி அரசு - கட்டுரை - 11.12.1927)