சகோதரர்களே!

சில தினங்களுக்கு முன் இந்த இடத்தில் நடந்த மகாநாட்டில் பலர் என்னை வாயில் வந்தபடி திட்டியதாகக் கேள்விப்பட்டேன். அதைச் சகிக்காத சில பிராமணரல்லாதார் என்னை இங்கு வந்து உண்மை விஷயங்களைப் பற்றி பேசவேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் இன்று நாங்கள் வந்திருக்கிறோம். முன்னால் வந்தவர்கள் நடந்து கொண்டது போல் நாங்கள் இங்கு யாரையும் திட்டுவதற்கு வரவில்லை; அந்த எண்ணமுமில்லை. ஸ்ரீமான் தண்டபாணிப் பிள்ளையவர்கள் தமது பிரசங்கத்தில் நமது நாட்டிற்கு பிராமணர்களால் ஏற்பட்டிருக்கும் கொடுமையைக் குறிப்பிட்டார். அவர் எடுத்துக்காட்டிய வித்தியாசங்களைத் திருத்த வேண்டுமென்கிற ஆசையினாலேயே பிராமணர்களால் நமது சமூகத்திற்கு நேர்ந்த ஆபத்துகளைச் சொன்னார். மற்றவர்களெல்லாம் தன்னை நல்லவன் என்று சொல்ல வேண்டுமென்கிற சுயநலத்தோடு அவர் பேசவில்லை. எடுத்துக்காட்டிய குற்றங்கள் நீங்க வும், வகுப்புப் பிணக்குகள் ஒழியவுமே அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

வகுப்புப் பிணக்கு

தற்காலத்தில் வகுப்புப் பிணக்குகள் இல்லையென்று மறைத்து வைத்துப் பேசுவதில் பலனில்லை. நம் திரேகத்தில் ஒரு புண் உண்டானால் அதை மறைத்துக் கட்டிவைத்துக்கொண்டிருந்தால் அது திரேகம் பூராவையும் கெடுத்துவிடும். அதை அறுத்து ஆற்றிவிட்டால் அது உடனே ஆறிவரும். அது போல குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டி மாற்றித்தானாக வேண்டும். வடநாட்டில் இந்து முஸ்லீம் வகுப்புச் சண்டைகள் அதிகமாக ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம் மூண்டிருக்கிறது; பம்பாயிலும் புகைந்து கொண்டிருக்கிறது; சீக்கிரம் நம் மாகாணத்திற்கும் வந்து விடுமோவென சந்தேகமாயிருக்கிறது. வீரர்களான மகமதலி முதலிய பெரிய தேச பக்தர்கள் கூட இப்பொழுது இருக்கும் நிலைமையைப் பார்த்து தேசத்தைவிட இஸ்லாம் பெரியது என்று சொல்லி விட்டனர். 7 கோடி முஸ்லீம்கள் 24 கோடி இந்துக்களிடம் அடிமையாக முடியாதென்று அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். காரணமென்ன? அவர்கள் வீரர்களல்லவா? கிச்சிலு பெரிய தேச பக்தர், பஞ்சாபில் அவரை கவர்மெண்டார் ரகசியமாய்க் கொண்டு போனதினால்தான் அவ்வளவு ஜனங்கள் உயிரையும் விட்டனர். ஒத்துழையாமையே அவரால்தான் அங்கு உண்டானதென்று சொல்லலாம். அத்தகையவரும் தங்கள் வகுப்பு நலனே பிரதானமென்று சொல்லுகிறார். நாளுக்கு நாள் காங்கிரஸை விட்டு எல்லா மகமதிய நண்பர்களும் விலகி நிற்கின்றனர்.

வகுப்பை மறந்தவர் எவருளர்?

இப்போது தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கமிட்டியில் வகுப்பை மறந்த ஏதாவதொரு மதிப்புள்ள பிராமணரல்லாதார் இருக்கிறார்களா என்று பாருங்கள். ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரிருப்பதாக நீங்கள் சொல்லுகிறீர்கள். அவரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்று சொல்ல வில்லை; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிறார். ஸ்ரீமான் டி.எ.இராமலிங்கம் செட்டியாரிருக்கிறார் என்று சொல்லுவீர்கள். அவரையும் நேரில் போய்க் கேட்டோம். அவர் “நான் வெகு காலத்திற்கு முன்னேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று அதற்குரிய இயக்கத்தையும் ஆரம்பித்திருக்கிறேன்; நீங்களெல்லாம் இப்போது வந்தவர்கள்” என்று எங்களிடம் சொன்னார். ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர் களும் காங்கிரஸிலிருந்து விலக ஆரம்பமாய் விட்டது. ஸ்ரீமான் டாக்டர் நாயுடு அவர்களும் முதலியாரவர்களின் அபிப்பிராயத்தை ஒப்புக் கொள் வதாக “தமிழ்நாடு” தலையங்கம் எழுதிவிட்டது. ஸ்ரீமான் முதலியார் பெயரை வைத்துக்கொண்டு தான் சுயராஜ்யக் கட்சி தமிழ்நாட்டில் நடந்து வந்தது. அவரும் இப்போது உண்மை அறிந்து விலகப் போகிறார். இனி சுயராஜ்யக் கட்சி தமிழ்நாட்டிலும் சாக வேண்டியதுதான். ஆனால், அவரை விலைக்கு வாங்க பிரயத்தனம் செய்கிறார்கள். வட இந்தியாவில் பம்பாய் வரை சுய ராஜ்யக் கட்சி செத்துவிட்டதென்றே சொல்லலாம். வட நாட்டில் இந்து முஸ்லீம் கலவரம்; தென்னாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் கலவரம். இந்த நிலைமையில் வகுப்புப் பிணக்கு இல்லை என்று மறைத்துவைப்பதில் என்ன பிரயோஜனம்.

தற்கால காங்கிரஸ் உத்தியோகத்திற்கு மனுபோடும் தபாற்பெட்டி தியாக உணர்ச்சி நிறைந்திருந்த காங்கிரஸ் போய்விட்டது. 35 வருஷத்திய பழய உத்தியோக காங்கிரஸ் இப்போது தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஆகையால்தான் தற்கால காங்கிரஸ் துலைந்து ஒத்துழையாமைக் காங்கிரஸ் உண்டாக வேண்டுமென்று சொல்லுகிறேன். மகாத்மா காந்தி காங்கிரஸ் மாறியதால்தான் மகாத்மா நம்மை விட்டுப்போய் மூலையில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டார். இப்போதைய காங்கிரஸ் உத்தியோகத்திற்கு மனு போடும் தபால் பெட்டி. மகாத்மா காந்தியடிகள்தான் ஒத்துழையாமைத் தத்துவத்தை காங்கிரஸில் புகுத்தினார். அது சமயம் காங்கிரஸினிடத்தில் ஜனங்களுக்கும் நம்பிக்கையிருந்தது, ஒத்துழையாத் திட்டம் வந்ததினால் அநேகம் சுயநலக்காரர்களுக்கும் உத்தியோக வேட்டைக்காரார்களுக்கும் உயர்ந்த ஜாதி என்று சொல்லுபவர்களுக்கும் காங்கிரஸில் இடமில்லாமல் போயிற்று. ஆதலால் அவர்கள் இப்போது பழைய உத்தியோக காங்கிரஸைக் கொண்டு வந்து விட்டார்கள்.

நான் வகுப்பு உரிமை கேட்கக் காரணம்

காங்கிரஸிலும் முஸ்லீம்லீக் சபை ஏற்பட்டு அவர்களுக்கென தனிப் பிரதிநிதித்துவமிருக்கிறது. அதற்குக் காரணம் முஸ்லீம்களின் வகுப்பு நலத்தை நாடுவதேயாகும். அது போல் பிராமணரல்லாதாருக்கும் காங்கி ரஸில் தனிப்பங்கு வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். நமது உரிமை நமக்கு வந்துவிடவேண்டும். சென்னை மாகாணச் சங்கம் நமது உரிமை வீதத்தைக் கவனிப்பதற்காகவே ஏற்பட்டது. நாளைக்கு சுயராஜ்யம் வந்தா லும் நமது நிலைமை என்ன? வெள்ளைக்கார அடிமை நீங்கி பிராமண ரின் அடிமை ஆவதா? என்பதுதான் எனது கேள்வி. மகாத்மாவின் ஒத்துழையாத் திட்டம் நாட்டில் அமலுக்கு வந்திருக்குமானால் நான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்டிருக்க மாட்டேன். மகாத்மாவின் நிர்மாணத் திட்டம் நிறைவேறினால் சண்டைக்கு வழியில்லாமற் போகும். இப்போது மகாத்மாவின் திட்டங்கள் மாறிப் போகவே, எப்படி ஒரு வகுப்பார் ஆதிக்கம் பெறுவது - உத்தியோகம் சம்பாதிக்கிறதென்கிற நிலைமை வந்து விட்டது. ஆதலால் சண்டை ஏற்பட வேண்டியிருக்கிறது.

பதவி ஆசை யாருக்கில்லை?

கஷ்டப்பட்ட காலத்தில் கஷ்டத்திற்குப் பங்கெடுத்துக் கொள்வாரில்லை; லாபத்திற்கு மட்டிலும் பங்குத் தகறார் வந்துவிட்டது. உத்தியோக ஆசையில்லாத தலைவர்கள் இப்போது காங்கிரஸில் இல்லை. ஸ்ரீமான்கள் டி.எ.இராமலிங்கம் செட்டியாரும், ஆர். கே. ஷண்முகம் செட்டியாரும் காங்கிரஸில் இருக்கிறார்களே, அவர்களும் உத்தியோக ஆசைக்காரர்களா? என்று கேட்கிறீர்கள். ஆம்! அவர்களும் உத்தியோகத்திற்கு இரகசியமாய் உள்ளுக்குள் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் கண்ட்றாக்டு பேசி ஏற்பாடு செய்து கொண்டுதான் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்து இருக்கின்றனர். சும்மாயிருக்கவில்லை; இன்றைக்கும் அவர்கள் ஹிருதயத்தில் வகுப்புநலன் துடித்துக் கொண்டுதானிருக்கும். என்ன செய்வார்கள் பாவம்! எப்படியிருந்தால் இது சமயம் தங்கள் காரியம் ஆகும் என்பது தெரிந்துதான் சமயம் போல் நடக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பழைய காங்கிரஸை உண்டாக்கப் பார்க்கின்றனர். காரணமென்ன? பழைய காங்கிரஸ் ஏற்படுத்தியபோதே அதன் மூல மந்திரம் உத்தியோகம் பெறுவதுதான்.

சீர்திருத்தத்தாலுண்டான லாபம்

உத்தியோக காங்கிரஸின் பலனால் நமது நாட்டிற்கு சீர்திருத்தம் இரண்டு தடவை சர்க்காரால் கொடுக்கப்பட்டது. முதல் சீர்திருத்தம் வந்ததும் இந்து முஸ்லீம் கலகம் ஏற்பட்டது. சம்பளங்களை உயர்த்தியதால் வரியதிகமாய்ச் செய்யப்பட்டது. 2- வது சீர்திருத்தமும் வந்து நமக்கு என்ன கிடைத்தது? பிராமணர் பிராமணரல்லாதார் கக்ஷியை உண்டாக்கிற்று. மீண்டும் வரி உயர்ந்தது. இந்த சீர்திருத்தங்கள் காங்கிரஸில் போட்ட சத்தத்தால் ஏற்பட்டது. உத்தியோக காங்கிரஸ் இல்லாதிருந்தால் நாட்டிற்கு இத்தனை கெடுதல் ஏற்பட்டிருக்காது. உத்தியோக காங்கிரஸ் இல்லாத போது 50,60 கோடி ரூபாய்தான் நாம் வரி கொடுத்து வந்தோம். உத்தியோக காங்கிரஸ் பெற்ற சீர்திருத்தத்தின் பலனாய் இப்போது 150 கோடி கொடுக்க வேண்டியதாகி விட்டது. காங்கிரஸ் இல்லாத போது 24 கோடி ரூபாயில் வைத்திருந்த ராணுவச் செலவு, உத்தியோக காங்கிரஸில் சீர்திருத்தம் வேண்டுமெனப் படித்தவர்கள் சத்தம் போட்டதால் இன்றைக்கு 70 கோடி ரூபாய் ராணுவச் செலவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்தனையும் ஏழைகள் பணந்தான் 1000-க்கு 5 பேர்தான் பணக்காரர்களாயிருப்பார்கள். அவர்கள் வரி கொடுப்பதைப் பற்றிக் கவலையில்லை. தேசத்தில் 1000-க்கு 900 பேர் 10 ரூபாய்க்கு கீழ்ப்பட்ட வரி கொடுப்போராயிருக்கிறார்கள். அவர்கள் வரி கொடுப்பது தான் சர்க்கார் வரும்படி. இரண்டாவது சீர்திருத்தத்தால் வரி உயர்ந்தது. ராணுவச் செலவு அதிகமாயிற்று; சம்பளங்கள் உயர்ந்தது; 3 பைசா கார்டு அரையணா வாயிற்று; உத்தியோகச் சண்டைகள் மலிந்தன; ஒவ்வொரு ஜாதியாருக்கும் எனக்கு - உனக்கு என்ற சண்டைகள் மிகுந்தன; இந்த உத்தியோகங்களும் நியமனங்களும் எலக்ஷன்களும் இல்லையானால் சண்டையே இல்லை. இதற்கு முன் ஒரு கவர்னர், 2 நிர்வாக சபை மெம்பர் ஆக மூவர் ஒரு மாகாணத்தை ஆண்டு வந்தார்கள். சுமார் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நமது மாகாணக் கவர்ன்மெண்டு நடந்து வந்தது. உத்தியோக காங்கிரஸின் பலனாக 3 மந்திரி, 4 நிர்வாக சபை மெம்பர் ஆக 7 பேர் மிகுந்து விட்டார்கள். ஆள் ஒன்றுக்கு 5500 ரூ. வீதம் சம்பளத்தில் நமது மாகாணம் நிர்வகிக்கப்பட வேண்டியதாகிவிட்டது. இந்த சம்பளம் ஏழைகள் தலையில் கை வைத்து அவர்களிடம் வசூல் செய்யப்படுகிறது. இத்தனைக் கெடுதலும் படித்த பிராமண வகுப்பாரால் வந்தது. ஆகையால் தான் மகாத்மா இந்தக் குறைகளை மாற்ற வேண்டுமென்று சொன்னார்.

எல்லாம் ஏமாற்றமே

இப்போது உங்களிடம் ஓட்டுக் கேட்பவர்கள், “அவன் சட்டசபைக்குப் போனான் ஒன்றும் செய்யவில்லை; இவன் போனான் ஒன்றும் செய்ய வில்லை; நான் போகிறேன்; பண்ணிப் போடுகிறேன்” என்று உங்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர். வேளாளப் பிரபுக்கள் ஏமாற்றமடையக் கூடாது. அவர்கள் சொல்வது பொய். அங்கு யார் போனாலும் உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. அதில் தங்களுக்கு உத்தியோகம் தேடிக்கொள்ளத்தான் முடியும். அதற்கு நீங்கள்தான் அதிக வரி கொடுக்க வேண்டி வரும். சட்டசபையில் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி வெளியில் வந்தவர்கள் மறுபடி எதற்காகப் போக வேண்டும்?

சுயராஜ்யமென்றால் என்ன?

நமது மகாத்மா காந்தியடிகள் தமது ‘சுயராஜ்ய’த்திற்கு இன்னும் அர்த்தம் சொல்லவில்லை. ராஜப் பிரதிநிதி கேட்டபோது கூட அவர் சொல்ல வில்லை. சுயராஜ்யம் கிடைத்தால் அதை அடைய யோக்கியதை வேண்டுமென்றுதான் நிர்மாணத் திட்டத்தையே ‘சுயராஜ்யம்’ என்று சொன்னார். அதை விட்டுவிட்டு உத்தியோகம் அடைவதை சுயராஜ்யம் என்று உங்களை பிராமணர்கள் ஏமாற்றுகிறார்கள். நாம் உண்மையை உணர வேண்டும்; உண் மையை எடுத்துச் சொல்ல வேண்டும்; உண்மையை எடுத்துச் சொல்லுவதில் என்ன வந்தாலும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். நம் பயித்தியக் காரத்தனம் நீங்கவேண்டும். இப்போது நாளுக்கு நாள் “மகாத்மா காந்தி யென்பவர் ஒருவர் இருந்தார்” என்று சொல்லும் ஸ்திதிக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். இப்போது நமது யோக்கியதை என்ன என்பதுதான் நமது கவலை. நாம் இத்தனை கஷ்டப்பட்ட ஒத்துழையாமைக் காங்கிரஸின் பலனை சுயநலக்காரர்கள் உபயோகப்படுத்திக்கொள்ள விடுவதா என்பதுதான் எனது கவலை.

வித்தியாசம் ஒழிய வேண்டும்

மறுபடியும் ஏதாவது ஒத்துழையாமை இயக்கத்திற்குப் புத்துயிரளிக்க வழியுண்டா என்பதுதான் இனி யோசிக்க வேண்டிய வேலை. பெருமைக்கு ஆசைவேண்டாம். பெருமை என்றால், பணத்தாலும், சதையாலும், பலத்தா லும் உண்டாகக் கூடியதல்ல. மகாத்மாவை நாம் எதற்காக மதிக்கிறோம்? அவருடைய உத்தமமான கொள்கைக்காகவே “இந்த ராஜாங்க முறை சரியல்ல, இதை தகர்த்து விடவேண்டு”மென்று நாம் சொல்லும்போது “நமது தற்கால காங்கிரஸ் முறை சரியல்ல, அதை ஒழித்து ஒத்துழையாமைக் காங்கிரஸை மீண்டும் உண்டாக்க வேண்டு” மென்று ஏன் நாம் சொல்லக் கூடாது? இத்தனை பலமுள்ள கவர்ன்மெண்டு முறையை ஒழிக்கும் சக்தி நமக்கிருக்குமானால் தற்கால உத்தியோக காங்கிரஸ் முறையை நாம் ஏன் ஒழித்து விட முடியாது? நாமும் மனிதரென்று சொல்லிக் கொள்ளுகிறோமே தவிர, உண்மையில் அதற்கு அர்த்தமில்லை. உத்தியோகக் காங்கிரஸால் நமது பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்திற்கு ஏற்படுகிற தடைகள் பூராவும் நீக்கப்படவேண்டும்; மனிதனுக்கு மனிதன் வித்தியாசமிருக்கக் கூடாது; சம உரிமை வேண்டும் என்கிற காங்கிரஸை ஏற்படுத்த வேண்டும். நமக்குள் வித்தியாசமில்லையென்று மூடி வைப்பதனால் என்ன நன்மை ஏற்படும்? இப்பொழுதிருக்கும் நிலைமையில் பிராமணராயிருந்தாலும் யாராயிருந்தாலும் இந்த வித்தியாசங்களை ஒழிக்க முதலில் பாடுபட வேண்டும். நாம் இந்த வித்தியாசங்களை மறைத்து வைத்தாலும் நம் சந்ததியார்கள் காலத்தில் கலவரம் வந்தே தீரும். அவர்கள் காலத்திலாவது இந்த வித்தியாசம் ஒழிந்தே தான் தீர வேண்டும். விடுதலை வேண்டுமானால் முதலில் இந்த வித்தியா சங்களை ஒழிக்க வேண்டியது முதல் வேலையாகும். 100- க்கு 97 பேர் ‘சூத்திரர்’, ‘தாசி மக்கள்’, ‘அடிமைகள்’ என்ற வித்தியாசம் இன்னும் ஒரு வகுப்பாரிடம் இருந்து கொண்டிருக்கிறது. இவைகள் ஒழிய வேண்டாமா? ஏன் இவைகளை ஒழிக்கக் கூடாது?

உயர்வு தாழ்வு நிலைக்குமா?

உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது? ஒரு தாழ்ந்த ஜாதியானுடம்பில் இருப்பதும் ரத்தந்தான், நமது நண்பர் தாலூகா போர்டு தலைவர் ஸ்ரீமான் ராஜுக் கவுண்டரவர்கள் உடம்பிலிருப்பதும் ரத்தந்தான், ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் உடம்பிலிருப்பதும் ரத்தந் தான். இம்மூன்று ரத்தத்திற்கும் என்ன வித்தியாசம்? இன்றைக்கு பெரிய ஜாதியாரென்று தாழ்ந்த ஜாதியாரை அவமதிக்கிறார்கள்? அதே ‘பஞ்சமன்’ கிறிஸ்து மதத்தில் சேர்ந்து கொஞ்சம் படித்து ‘டானியல்’ என்று பெயர் வைத்துக் கொண்டு ஒரு ரிவினியூž இன்ஸ்பெக்டராக வந்தால் பெரிய ஜாதி மணியக்கார் குனிந்து கும்பிட்டுவிட்டுக் கூப்பிட்ட விடத்திற்கெல்லாம் கட்டைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு பின்னால் ஓடுவார். வைதீகப் பிராமணன் ஒருவன் ரிவினியூ இன்ஸ்பெக்டராக வந்தால் ஒரு பஞ்சமன் கிறிஸ்து மதத்தில் சேர்ந்து வேறு பெயர் கொண்டு டிப்டி கலெக்டராக வந்து விட்டால் சாஸ்திரியான இன்ஸ்பெக்டர் கும்பிட்டுக் கூப்பிட்ட இடமெல்லாம் பின்னால் ஓடுவார். இந்த வித்தியாசங்கள் அப்பொழுது எங்கே போய் விடுகிறதென்று தான் நான் கேட்கிறேன். இன்றைக்கு நாம் இதே நிலையில் இருந்துவிடலாம் என்றால் அது நிலைக்குமா? உதாரணமாக, ஒரு சூதாடி இன்னொருவனிடம் இருக்கும் பணத்தை சூதாடிக் கெலித்தி விட்டால் தோத்தவன் விடுவானா? மீண்டும் சூதாடிக் கெலிக்கத்தான் கூப்பிடுவான். மரியாதையாய்க் கெலித்தவன் சூதாடாமல் கெலித்த பணத்தைக் கொண்டு ஓட்டம் பிடிக்கப் பார்த்தால் அவனை உதைத்தாவது, கொலை செய்தாவது அந்தப் பணத்தைப் பிடிங்கிக் கொள்ள எண்ணுவான். அதுபோல் இன்றைக்கு ஒரு கூட்டத்தார் உயர்ந்த ஜாதியாராகி விட்டால் மற்றவர்கள் நாளைக்குப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? ஒருவரையொருவர் உதைத்தாவது சமத்துவம் தேட எண்ணமுண்டாகும்.

ஜஸ்டிஸ் கட்சியில்லாவிட்டால். . . . . பிராமணரல்லாதார் கட்சியை சில சுயநலக்காரர்களும், பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் போன விடங்களிலெல்லாம் எழுத்தினாலும் சொல்லினாலும் தூற்றிவருகின்றனர். இன்றைக்கு பிராமணரல் லாதார் கட்சி இல்லாவிட்டால் நம் பிராமணரல்லாதார் நிலை எப்படியிருந்தி ருக்கும்? நமது மகமது உஸ்மான் அவர்களும் சிவஞானம் பிள்ளையவர் களும் இந்த உயர்ந்த ஸ்தானத்திலிருக்க முடியுமா? நமது வீரய்யன் சட்டசபைக்குப் போயிருக்க முடியுமா? இதை நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் இந்த இடத்தில் வந்து பேச எனக்கு வழியேற்பட்டிருக்குமா? ஸ்ரீமான் ராஜுக் கவுண்டரும் பட்டக்காரரும் பிரசிடெண்டாக முடியுமா? இவை களையும் யோசித்துப் பாருங்கள். ஆதலால் பிராமணரல்லாதார் கட்சியில்லா விட்டால் பிராமணரல்லாதார் பாடு இன்னும் ஆபத்தாய் போயிருக்கும்.

தீண்டாமை வளர்ந்த விதம்

உயர்வு தாழ்வு வித்தியாசங்கள் பிராமணரிடத்தில் மாத்திரம் இல்லை. பிராமணரல்லாதாரிடத்திலும் இந்த வித்தியாசம் இருந்துதானிருக்கிறது. நாம் பிராமணர்களை மட்டும் ஏன் சொல்லுகிறோமென்று நீங்கள் கேட்கலாம். அவர்கள்தான் வழி காட்ட வேண்டும். முடிச்சுப் போட்டவன் அவிழ்த்தால் சீக்கிரம் அவிழ்க்கலாம். பிராமணர் பார்த்து விமோஜனம் செய்வதானால் சீக்கிரம் ஒழிந்து விடும். காரணம், இவர்களைப் பார்த்துத்தான் மற்ற ஜாதியார் காப்பியடித்தார்கள். எங்கள் ஊரில் தண்ணீர் குழாயை பிராமணப் பெண்கள் கால் குடம் தண்ணீர் கொண்டுவந்து குழாயைக் கழுவித் தண்ணீர் எடுப்பதைப் பார்த்த பிராமணரல்லாத பெண்கள் அரைக்குடம் தண்ணீர் விட்டு குழாயைக் கழுவுகிறார்கள். இதைப் பார்த்த மகமதியப் பெண்கள் தாங்களும் முக்கால் குடம் தண்ணீர் ஊற்றிக் கழுவ ஆரம்பித்துவிட்டார்கள். நாம் பார்த்து வித்தியாசங்களை ஒழித்தால் ஏன் ஒழியாது? கல்லைச் சாமியாக்கும் நமது மந்திரங்கள் ஏன் தாழ்ந்தவர்களை உயர்ந்தவர்களாக்க முடியாது? தாழ்ந்தவர் களை உயர்ந்தவர்களாக்க முடியாத மந்திரம், கல்லை எப்படி சுவாமியாக்கும் என்பதுதான் ஆச்சரியமாயிருக்கிறது. காசியிலிருக்கும் சுவாமியை எல்லோரும் கட்டித் தழுவி கும்பிடலாம். மதுரையிலிருக்கிற சுவாமி மாத்திரம் நாடார் கோவிலுக்குள் வந்தால் ஓடிவிடுமாம். தனது பக்தர்கள் கோவிலுக்குள் வந்தால் ஓடிப்போகும் படியான சுவாமிக்கு நம்மைக் காப்பாற்றும் சக்தி எப்படி வரும்? அப்படி மனிதரைக் கண்டு ஓடும் சுவாமியைக் கும்பிட்டாலென்ன? திருப்பிப்போட்டு வேஷ்டி துவைத்தாலென்ன? நாம் பார்த்து சுவாமியையும் பயித்தியகாரத்தனமாக்கி விடுகிறோம். கடவுளுக்கு வித்தியாசமான மனிதர் களில்லை யென்பதை நீங்கள் உணர வேண்டும்.

சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்?

ஜமீன்தாரர்களுக்கும் பணக்காரர்களுக்கும் சுயராஜ்யம் வேண்டியதில்லை. ஏழைகளுக்குத்தான் சுயராஜ்யம் வேண்டும். சில கவுண்டர்கள் பணக்காரர்களாயிருக்கலாம், நமது பெரும்பான்மையான வேளாள மக்கள் நிலைமை என்ன? ஒரு போலீஸ்காரன் ‘சுமையைத் தூக்கு’ என்றால் உடனே தூக்க வேண்டும். தூக்காமல் கொஞ்சம் ஆக்ஷபித்தால், போலீஸ்காரன் பட்டையைக் கழட்டி ஓங்கினால் ‘எடுப்பதற்குள் என்னையா அவசரம்’ என்றுதான் பதில் சொல்லுகிறார்கள். நம் நாட்டில் இன்றைக்கு விவசாயத்தில் சம்பாதிப்பவர்களெல்லாம் வேளாளர்களேயாகும். ஆனால் அவர்கள் சம்பாதித்து அதை மற்றவர் அநுபவிக்கச் செய்துவிடுகிறார்கள். வேளாள மக்கள் சம்பாதிப்பது பூராவும் வக்கீல் வீட்டுக்கும், கோர்ட்டுக்கும் போய் விடுகிறது. அவர்களில்லாவிட்டால் வியாபாரமேது? இத்தனை வக்கீல்க ளேது? ஆகையால் சுயராஜ்யம் அவ்வித ஏழைகளுக்குத்தான் வேண்டும் என்பது மகாத்மாவின் நோக்கமாகும்.ஒரு சி.பி. ராமஸ்வாமி ஐயருக்கும், ஒரு சிவஞானம் பிள்ளைக்கும் ஆயிரக்கணக்கான சம்பளம் கிடைத்தால் ஏழை களுக்கு என்ன பலன் உண்டு. ஏழை மக்களுடைய ஆக்ஷமத்திற்குரிய சுயராஜ்யம்தான் நமக்கு வேண்டும். ஏழைகளுக்காக உயிரைக் கொடுக்கும் தியாகிகளே தேசத்திற்குத் தேவை. நாம் யாரையும் சுலபமாக நம்பி விடுகிறோம். அம்மாதிரி நம்பி இனி ஏமாற முடியாது. சி.பி. ராமசாமி ஐயர் ஸ்தானத் தில், வீரய்யனிருந்திருந்தால் கல்பாத்தி உத்திரவுக்கு ராமசாமி அய்யர் அர்த்தம் செய்தது போல் செய்திருப்பாரா? என்பதை எல்லோரும் கவனிக்க வேண் டும். இதுவரை நான் சொல்லி வந்ததை யாரும் வித்தியாசமாக நினைக்காம லிருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். எனக்கு வகுப்புத் துவேஷத்தை உண்டாக்க வேண்டுமென்கிற எண்ணமில்லை. வெள்ளம் வருமுன் அணை போட வேண்டுமென்பதுதான் என்னுடைய நோக்கமாகும்.

கதர்

ஏழைகளுக்கு சுயராஜ்யம் வேண்டுமென்றுதான் மகாத்மா காந்தியடிகள் தமது சுயராஜ்யத் திட்டத்தில் ராட்டினத்தையும் கதரையும் பிரதானமாக வைத்தார். ஏழைகளின் பசிக் கொடுமை தீரவேண்டுமென்பதுதான் மகாத்மாவின் முக்கிய நோக்கம். நம் நாட்டில் வீட்டுத் தொழில்கள் மறைந்து போனதால் ஏராளமான ஜனங்கள் கஞ்சிக்கு வாடுகின்றனர்; மலைகளுக்கு ஓடிப் பிழைக்க வழி பார்க்கின்றனர். நாம் கதர் கட்டவும், நூல் நூற்கவும் ஆரம் பித்தால் ஏழைகள் பசி ஆறும். வீட்டில் தொழிலில்லாததினால் கிராமத்துப் பெண்கள் புல்லையும் தட்டையும் எடுத்துக்கொண்டு டவுன்களில் போய் கற்பிழந்து விட சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது. ராட்டினத்தை நாம் விர்த்தி செய்தால் கற்பும் கெடாது; கஞ்சிக்கும் வழியுண்டு; புண்ணியமும் உண்டு. நம் நாட்டுப்பொருள் அந்நியத் துணியால் 60 கோடி போகிறது.அதை நிறுத்தலாம். ஏழை மக்களுக்கு கஞ்சி வார்த்த பலனை அடையலாம். இத்தனை அநுகூலம் கதராடைக் கட்டுவதால் உண்டாகும். நாம் கதர் கட்டி ஏழைகளைக் காப்பாற் றும் தர்மம் மேலா, பாயாசத்திற்கு பாதாமிப்பருப்பு இல்லையென்பவர்களுக்கு சமாராதனை செய்வது மேலா என்பதை ஆராய்ந்து பாருங்கள். கதர் கொஞ்சம் விலை அதிகமென்று எண்ணக்கூடாது. ஒரு நாள் காப்பி குடிப்பதை நிறுத்தினால் ஒரு கொத்து வேஷ்டி நஷ்டத்தை சரிக் கட்டலாம். ஒரு நாளைக்கு நாடகத்துக்குப் போகாதிருந்தால் ஒரு கொத்து வேஷ்டியே வாங்கி விடலாம். ஒரு நாளைக்கு வக்கீல் வீட்டிற்குப் போகாமலிருந்தால் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருஷத்திற்கு வேண்டிய கதர் துணி வாங்கி விடலாம். ஆகையால் எல்லோரும் கதர் கட்டவேண்டுமென்று கேட்டுக்கொண்டும், இதுவரை நான் சொல்லி வந்த விஷயங்கள் பூராவும் தற்கால நிலைமையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பொருத்ததாகையால் உண்மையை உணர்ந்து உங்கள் புத்திக்கு சரி என்று தோன்றியபடி நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு: கோபிச் செட்டிபாளையம் வேளாள விடுதி கட்டிடத்தில் 13.6.1926 இல் நடைபெற்ற மாநாட்டில் சொற்பொழிவு .

(குடி அரசு - சொற்பொழிவு - 27.06.1926)

Pin It