தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும், சுயமரியாதை இயக்கம் என்னும் சமரசமும் சன்மார்க்கமுங் கொண்ட இயக்கமும் தமிழ்நாட்டில் எவ்வளவோ பெரிய கிளர்ச்சியையும், புத்துணர்ச்சியும் உண்டாக்கி இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை முக்கியமாய்ச் செய்ய வேண்டிய காரியங்களில் முக்கியமானதான துறைகளில் இன்னமும் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
மேற்கண்ட இரண்டு இயக்கங்களும் வெற்றி பெற வேண்டுமானால், அவற்றின் கொள்கைகளில் பெரும்பான்மையானவைகள் அரசாங்க சட்டத்தின் மூலமும், அரசாங்க நடுநிலைமை மூலமும், சில அரசாங்க உதவியின் மூலமுமே வெற்றி பெற வேண்டியிருக்கின்றதென்பது யாவரும் அறிந்ததாகும். அரசாங்க சட்டங்களில் முக்கியமானவைகள் பல இந்திய சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதும், இந்திய அரசாங்க நிர்வாக சபையின் ஆதரவு பெற வேண்டியிருப்பதும் யாரும் அறியாததல்ல.
அப்படியிருக்க தென் இந்தியாவில் சிறப்பாக தமிழ்நாட்டின் சார்பாக இந்தியா சட்டசபைக்குள்ள பிரதிநிதிகள் 7 பேர்களில் 6 பேர்கள் நமது சமுதாயத்திற்கும், சமரசத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் பரம்பரை விரோதிகளான பார்ப்பனர்களே - சிறப்பாக ஐயங்கார் பார்ப்பனர்களே, நமது பிரதிநிதிகளாக இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டு நமது முற்போக்கிற்கு முட்டுக் கட்டைகளாக அங்கு (இந்திய சட்டசபையில்) உட்கார்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அதாவது, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களுக்கென்று திரு.எம்.எஸ்.சேஷையங்காரும், திருச்சி, தஞ்சை ஜில்லாக்களுக்கு என்று திரு.ஏ.இரங்கசாமி ஐயங்காரும், செங்கல்பட்டு தென் ஆற்காடு ஜில்லாக்களுக்கு என்று திரு.எம்.கே. ஆச்சாரியாரும், சென்னைக்கு என்று திரு.எஸ்.சீனிவாசய்யங்காரும், சித்தூர் வகையரா ஜில்லாக்களுக்கு என்று திரு.துரைசாமி ஐயங்காரும், தென்கன்னடம் மலையாளம் ஜில்லாக்களுக்கு என்று திரு.கே.வி. இரங்கசாமி ஐயங்காரும் ஆக ஆறு பேர்கள் ஐயங்கார்களாக அமர்ந்து கொண்டார்கள்.
கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு ஆகிய ஒரு தொகுதிக்கு மாத்திரம் கோயமுத்தூர் திரு.ஆர். கே. ஷண்முகம் அவர்கள் ஒருவர் மாத்திரம் இருந்து வருகின்றார்.
இதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் ஐயங்கார்களின் ஆதிக்கமும், அவர்களின் காங்கிரஸ் புரட்டும், அவர்களது கூலிகளின் தேசீயப் புரட்டும் என்று சொல்லி விடலாமானாலும் பார்ப்பனரல்லாதார் தலைவர்கள் என்பவர்களின் மீதும் குற்றம் சொல்லாமலிருக்க முடியவில்லை.
என்னவெனில், பார்ப்பனரல்லாத தலைவர்களுக்கு பெரிதும் சென்னை சட்டசபையின் மீது ஆவல் இருக்கின்றதேயல்லாமல், இந்திய சட்டசபையைப் பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலை உண்டாவதில்லை.
ஏனெனில், சென்னை சட்டசபைக்குப் போனால் மந்திரி ஆகலாம், மந்திரி ஆக முடியாதவர்கள் மந்திரிகளுக்கு வால் பிடித்துக் கொண்டோ அல்லது பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு மந்திரிகளை கவிழ்த்து விடுவதாய் மிரட்டிக் கொண்டோ, ஜில்லா, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி ஆகியவைகளின் ஆதிக்கங்களை கைப்பற்றவும், உத்தியோகங்கள் சம்பாதிக்கவும், இன்னும் வெளிப்படையாய்ச் சொல்லுவதென்றால் பல வழிகளில் சிலர் பணம் சம்பாதிக்கவும் ஆன காரியங்களில் சித்தி பெறக் கூடும் என்கின்ற ஆசையும், இந்திய சட்டசபைக்குப் போவதால் பிரயாணப்படியில் ஏதோ இரண்டு பிச்சைக்காசு மீதி ஆவதைத் தவிர வேறு பலன் உண்டாகாது என்கின்ற அலட்சியப் புத்தியும் முக்கிய காரணமாகும்.
ஆனால், பார்ப்பனர்கள் தங்களுக்குத் தமிழ்நாட்டில் செல்வாக்கில்லை என்பதும், சட்டசபை ஸ்தானம் கிடைக்காதென்பதும் தீர்மானமாகத் தெரிந்தவுடன் இதை விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார் அலட்சியமாய்க் கருதும் இந்தியா சட்டசபையில் ஸ்தானத்திற்கு நின்று வெற்றி பெற்று பார்ப்பன ஆதிக்கத்திற்கு வேண்டிய காரியங்களை நோகாமல் சாதித்துக் கொண்டு வருகின்றார்கள். அதோடு இந்திய சபைக்கு வெறும் பார்ப்பனர்களாகவே தமிழ்நாட்டுக்கும் ஆந்திர நாட்டுக்கும் பிரதிநிதிகளாக ஏற்பட்டு விட்டதாலும், திருவாளர்கள் நேரு, மாளவியா, கேல்கார், கோஸ்வாமி முதலிய பார்ப்பனர்களே பம்பாய், அலகாபாத், வங்காளம் முதலிய மாகாணத் தலைவர்களாகவும் ஏற்பட்டு அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அம்மாகாணங்களின் பிரதிநிதிகளாய் இந்தியா சட்டசபையில் உட்கார்ந்து கொண்டிருப்பதாலும் இந்திய சட்டசபை பார்ப்பனக் கோட்டை என்றும், அதனாலேயே பெரிய பெரிய இந்திய உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாகவும் பரம்பரை பாத்தியமாகவும் அனுபவிக்க வசதியாகவும் இருந்து வருகின்றது. இதைப் பற்றி பல தடவைகளில் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.
இப்படிக்கெல்லாம் இருந்தும் இப்போது அதாவது சமீபத்தில் வரப்போகும் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு இத்தனை ஐயங்கார் பார்ப்பனர்கள் இருப்பது போதாமல் இன்னமும் ஒரு ஐயங்கார் - அதுவும் வருணாசிரம ஐயங்கார் - மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் மதுபானம் அதிகமாகிவிடும். ஆதலால் மதுவிலக்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று சொல்லும் ஐயங்கார் ஆயிரக்கணக்கானத் தென்னை மரங்களின் கள்ளினால் பல ஆயிர ரூபாய் சம்பாதிக்கும் ஐயங்கார் - ஒத்துழையாமையின் போது பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தாம் மாத்திரம் காங்கிரசை விட்டு ஓடிப் போய் காங்கிரசுக்கு விரோதமாய் பிரசாரமும் செய்து காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாய் சட்டசபைக்கும் போய் உட்கார்ந்து கொண்டு இருந்த ஐயங்கார்- சென்ற தேர்தலில் காங்கிரசின் பேரால் நின்று வெற்றி பெற்று காங்கிரசுக்கு விரோதமாய் மந்திரி சபைகளை ஏற்படுத்தி அதற்கு ஆதரவளித்துவிட்டு ‘இது சரிதானா’ என்று கேட்டவர்களுக்கு ‘ஜஸ்டிஸ் கட்சி’யை அழிப்பதற்காக மந்திரி சபையை ஆதரித்தேன் என்று சொன்ன ஐயங்கார் - மற்றும் சென்னை சட்டசபையில் இருந்த 9 வருஷ காலமாக பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நேர் விரோதமாயிருந்ததுடன் பார்ப்பனரல்லாதார் மந்திரிகளைக் கவிழ்க்கவே வெளிப்படையாயும், இரகசியமாயும் சூழ்ச்சிகளும் வேலைகளும் செய்து வந்த ஐயங்கார் இன்னும் எத்தனையோ வழிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு இடையூறு செய்து வரும் ஐயங்காரான திருவாளர் கோவை. சி.வி.வெங்கட்டரமண ஐயங்கார் அவர்கள் இந்திய சட்டசபைக்கு ஒரு அபேட்சகராக நிற்கப் போவதாகத் தீர்மானித்து ஆகாயத்திற்கும், பூமிக்குமாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பனகாலரசருக்குப் பின் தலைவராகக் கருதப்படும் ராஜா. சர். அண்ணாமலைச் செட்டியாரவர்கள் உதவி இருப்பதாகவும் - பார்ப்பனரல்லாதார்களுக்குள் சிறந்த அறிவாளியும் இயக்கப் பிரமுகர்களில் முதன்மையானவருமான திரு.ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் ஆதரிப்பதாகவும் மற்றும் கோவை பிரமுகரான திரு.ராவ்பகதூர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்கள் ஆதரிப்பதாகவும் சுயமரியாதை இயக்கத்தின் பிரதான பிரமுகரான திரு.ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் ஆதரிப்பதாகவும் பிரஸ்தாபத்தை கிளப்பிவிட்டு ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் மயக்கி வருவதும், அதற்கு ஏற்றாற்போல் பல பார்ப்பனரல்லாத கனவான்களின் கையொப்பமும் பெற்றிருப்பதாகச் சொல்லிக் கொள்ளுவதுமேயாகும்.
திரு.ராஜா சர் அண்ணாமலையாரின் பெயரை திரு. அய்யங்கார் சொல்லிக் கொள்வதில் பொதுஜனங்கள் நம்பி ஏமாந்துபோகும் படியான ஒரு சந்தர்ப்பம் திரு.அய்யங்கார் ஏற்படுத்தி கொண்டது மிகவும் மதிக்கத்தகுந்த தந்திரமேயாகும். அதென்னவென்றால் ராஜா சர் அண்ணாமலையாரின் உருவச் சிலை சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு கமிட்டியில் திரு.சி.வி. வெங்கட்டரமண ஐயங்கார் அவர்கள் தந்திரமாக தம்மை ஒரு முக்கிய புருஷராக ஆக்கிக் கொண்டதால் பொது ஜனங்கள் ராஜா சர். அவர்களின் உருவச் சிலை கமிட்டிக்கு திரு.ஐயங்கார் காரியதரிசியாக யிருப்பதால் திரு.ராஜா சர். அவர்கள் திரு. ஐயங்காருக்கு உதவி செய்தாலும் செய்யக்கூடும் என்று சகஜமாக நினைப்பதற்கு இடமேற்படுவதுதான். ஆனால் நமது ராஜா சர் அவர்கள் இதைப் போல் ஆயிரத்தெட்டு ஐயங்கார்களின் யோக்கியதைகளை அறிந்தவர். ஆகையால் இந்தப் பெயரைக் கொண்டு யாரும் அவரை சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாதென்றே சொல்லுவோம், தவிர கோயமுத்தூர் பிரமுகர்கள் திரு ஐயங்காருக்கு ஆதரவளிப்பதாய்ச் சொல்லிக் கொள்வதிலும் உண்மை இருக்கலாமோ என்னமோ என்பதாக சிலர் சந்தேகப்படவும் இடமிருக்கின்றது.
என்னவெனில், கோவைப் பிரமுகர்கள் திருவாளர்கள் சி.எஸ். ரத்தின சபாபதி முதலியார், ஆர்.கே.ஷண்முகம், டி.ஏ.இராமலிங்கஞ் செட்டியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், பட்டக்கார எஜமானர் ஆகியவர்கள் எப்படியாவது கோயமுத்தூர் ஜில்லாவைப் பொறுத்தவரை ஐயங்காரின் தொல்லை ஒழிந்தால் போதும்! அவர் வேறு எந்தத் தொகுதியிலாவது நின்று கொள்வதின் மூலம் தங்களுக்கு உபத்திரவமில்லாமல் இருப்பதானால் சரி என்று நினைத்து திரு.ஐயங்காருக்கு உதவி செய்வதாக ஜாடை காட்டி இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அந்த ஜாடைகள் திரு. ஐயங்காரை கோயமுத்தூர் ஜில்லாவை விட்டு வெளியாக்கத்தான் உதவுமே ஒழிய உண்மையிலேயே அக்கனவான்களுடைய ஆதரவு பெற முடியுமா என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும். திரு.ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள செய்திகளில் காணப்படுவதென்ன வென்றால் திரு.வெங்கட்டரமண ஐயங்கார் காங்கிரஸ் அபேக்ஷகராக நிற்கவில்லை என்றும் காங்கிரஸ் திரு. ஐயங்காரை ஏற்றுக் கொள்ள போகின்றதா? என்பது தெரியவில்லை என்றும் ஆதலால் தாம் சி.வெங்கிட்டரமண ஐயங்காருக்கு உதவி செய்ய முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.
அது போலவே திரு.இரத்தினசபாபதி முதலியாரும் ஜஸ்டிஸ் கட்சி திரு.வெங்கட்டரமண ஐயங்காரை ஆதரிப்பதானால் மாத்திரம்தான் திரு. ஐயங்காருக்கு உதவி செய்ய முடியுமென்றும் இல்லாவிட்டால் முடியாது என்றும் தெரிவித்து விட்டார். (இது “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடத் தடையில்லை” என்பது போன்ற உதவி)
திரு.ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் திரு வெங்கட்ட ரமண ஐயங்கார் அவர்களின் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு உதவி செய்ய முன் வருவார்களானால் ஒன்று திரு.இராமசாமி முதலியார் இராமசாமி ஐயங்காராக மாறி பூணூல் போட்டுக் கொள்ள வேண்டும். அல்லது திரு.வெங்கட்டரமண ஐயங்கார் பூணூலை அறுத்துவிட்டு வெங்கட்டரமண முதலியார் ஆக வேண்டும். இவ்விரண்டும் இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டதாகச் சொல்லப்படுமானால் இரண்டு பேருக்கும் நடுவில் ஏதாவது இரகசியம் இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் இந்தக் காரியம் ஆவதல்ல என்றே உறுதி கூறுவோம்.
நிற்க, திரு. ஐயங்கார் நிற்கும் தொகுதியைப் பற்றி சற்று யோசித்தால் திரு.ஐயங்கார் அபேக்ஷகராக நிற்பதாக வெளிப்படுத்தியிருக்கும் தொகுதி சென்னை மாகாண இந்திய வர்த்தகர்கள் தொகுதியாகும். இத்தொகுதிக்கு ரூ.350க்கும் மேல்பட்டு வருமானவரி செலுத்துபவர்கள் ஓட்டர்களாக பதிவு செய்யப் படுவார்கள், இத்தொகுதிக்கு சுமார் 2000 ஓட்டர்கள் உண்டு. இதில் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சுமார் 500 அல்லது 600 பேர்களாவார்கள். மற்றபடி, மீதி உள்ளவர்கள் வியாபாரிகளும், லேவாதேவிக்காரர்களும் ஆவார்கள். இந்த தொகுதிக்கு ஒரு பிரபலமானவரும் பெருத்த வியாபாரியும் வியாபார அனுபவமும் வியாபார சம்பந்தமான விஷயங்களில் ஆராய்ச்சி அறிவும் உள்ளவர்களும் நிற்க வேண்டியது நியாயமும் அவசியமுமாகும்.
அப்படியிருக்க திரு.வெங்கட்டரமண ஐயங்காருக்கு அத்தொகுதியில் என்ன வேலை என்பது நமக்கு விளங்கவில்லை. “இரும்பு அடிக்கும் களத்தில் ஈக்கு என்ன வேலை” என்பது போல் வியாபாரத் தொகுதியில் வருணாச்சிரமப் பார்ப்பனருக்கு என்ன வேலை? பிராமணன் வியாபாரம் செய்வதும், இந்தியன் கப்பலேறுவதும் பாவம், சண்டாளத்துவம், பிராமணீயத்திற்கு விரோதம் என்று வேதமும், மனுதருமமும், வருணாசிரமும் சொல்லுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே திரு.காந்தியும். திரு. லஜபதியும் சண்டாளர்களாகக் கருதப்பட்டு கோவிலுக்குள் விடப்படவில்லை.
எனவே வியாபாரத் தொகுதிக்கு நிற்கும் அபேட்சகருக்கு வெளிநாட்டுக்குப் போய் வந்த அனுபவமும், வெளிநாட்டு வியாபார இரகசியமும், வெளிநாட்டு நாணய மாறுதல்களின் தத்துவ நிபுணத்துவமும், வியாபாரத்தில் அபார பரிச்சயமும் வேண்டியதாகும். அதற்காகவே இந்த ஸ்தானம் ஒதுக்கப்பட்டதாகும். அப்படியிருக்க விவசாயிகளின் ஸ்தானங்களாகிய பொது ஸ்தானங்களையும் பார்ப்பனர்களே அதாவது ஐயங்கார் பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொண்டதோடல்லாமல் வியாபார ஸ்தானங்களையும் ஐயங்காரே கைப்பற்றுவதென்றால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் முட்டாள் தனத்திற்கு இனியும் ஒரு புதிய உதாரணம் தேடப் புறப்பட்டு விட்டாற்போல இருக்கின்றதே தவிர இதற்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
நிற்க, திரு.வெங்கட்டரமண ஐயங்கார் இப்போது யாருக்கு எதிராக நிற்கின்றார் என்று பார்ப்போமானால் அதுவும் ஒரு பெரிய அதிசயமாகவே தான் கருதக் கூடியதாகும். அதாவது “மர்ச்செண்ட் பிரின்ஸ்” என்று சொல்லத்தக்கவரான இந்தியவர்த்தக முடிசூடா மன்னரும் தென்னிந்திய வர்த்தக சங்கத் தலைவரும் கோடீஸ்வரரும், வருஷம் 75000 ரூபாய் வருமானவரி செலுத்துபவரும் மேல்நாடுகளில் லண்டன் முதலிய இடங்களில் வர்த்தகக் கிளை உடையவரும் இங்கிலாந்து, ஜர்மனி, ஜப்பான், அமெரிக்கா முதலிய இடங்களுக்கு வர்த்தக சுற்றுப்பிரயாணம் செய்தவரும், நாணய மாற்று விஷயத்தில் அனுபவ ஞானமுள்ள நிபுணரும் தென் இந்தியாவின் முக்கிய பட்டணங்களிளெல்லாம் வர்த்தகக் கிளை உள்ள வருமான ஜனாப் எம்.ஜமால் முகம்மது சாயபு அவர்களுக்கு எதிரிடையாகவும் போட்டியாகவும் நிற்கின்றார் என்றால் திரு. ஐயங்கார் அவர்களின் வர்த்தக அபிமானம் எவ்வளவு என்பதற்கு வேறு சாட்சியம் வேண்டியதில்லை.
தவிர, ஐயங்காரின் வியாபார அனுபவம் எவ்வளவு என்று பார்ப்போமானால் கோயமுத்தூரில் மால்மில் என்பதாக ஒரு நெசவு மில் ஏற்படுத்தி அதைத் தாமே நடத்துவதாக அதற்கு ஏராளமாக பங்கும் வசூல் செய்து மில் நடத்தத் தெரியாமல் நஷ்டமடைந்து பிறகு தம்மால் முடியாமல் ஒரு வெள்ளைக்கார கம்பெனியாரிடம் நிர்வாகத்தை ஒப்புவித்து மில்லுக்கும் பங்குக்காரர்களுக்கும் மத்தியில் வெள்ளைக்கார கம்பெனிக்கு ஒரு லாபமும் தமக்கு ஒரு லாபமும் ஏற்பாடு செய்து கொண்டு பங்குக்காரர்கள் தக்கபடி லாபமடைய முடியாமல் கஷ்டப்பட்டு வரச் செய்யத்தக்க வியாபார அறிவுள்ளவராவார்.
மற்றபடி, ஐயங்கார் ஏன் காங்கிரசின் பேரால் நிற்கவில்லை? என்று பார்ப்போமானால் சில சமயத்தில் இந்திய சட்டசபையில் காங்கிரசுக் கட்சி சமுதாயச் சீர்திருத்தங்களில் தலையிட்டுவிட்டால் அதற்கு எதிரிடையாக வேலை செய்வதற்கென்றே தம் சொந்த பொறுப்பில் நிற்க வேண்டியிருக்கின்றதாகும். ஜனாப் ஜமால் மகம்மது மேல் கண்டபடி பெரிய வியாபாரி, பிரபு, வியாபார அனுபவமும், தர்மசிந்தையும் உள்ளவர் என்பதோடு மல்லாமல் ‘சுதேசமித்திரன்’ என்னும் பார்ப்பனமித்திரன் பத்திரிகை லிமிடெட்டில் ஒரு டைரக்டராக இருந்தும் திரு. வெங்கிட்ட ரமணய்யங்கார் அவர்கள் அப்பத்திரிகைக்குள்ள ஓட்டர் பாத்தியதையை கொண்டு நிற்பதற்கு அப்பத்திரிகை நிர்வாகஸ்தர்கள் சிபார்சு செய்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
சென்னை மாகாண வியாபாரத் தொகுதிக்கு ஜனாப் ஜமால் முகமது அவர்கள் நிற்பது தெரிந்தும் அவருடைய தகுதியை அறிந்தும் அவரை ஒரு டைரெக்டராகக் கொண்டிருக்கும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை திரு சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்காரை அத்தொகுதிக்கு அனுமதித்திருப்பதையும் அவரையே விளம்பரப் படுத்துவதையும் பார்த்த பிறகு, மித்திரனின் வர்த்தக அனுதாபமும் பொது நலத்தன்மையும் எவ்வளவு என்பதற்கு அளவு தேட வேறு எங்கும் போக வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.
எனவே, சென்னை மாகாணத்தில் உள்ள பெரியோர்கள், சிறப்பாக பார்ப்பனரல்லாத வியாபார ஓட்டர்கள் தங்கள் கடமையையும் வியாபார அபிவிருத்தியையும் பார்ப்பனரல்லாத மக்களின் சமத்துவத்தையும், சுயமரியாதையையும் உத்தேசித்து இந்திய சட்டசபைக்கு இனிமேலாவது ஒரு பார்ப்பனரை அதுவும் ஒரு வருணாசிரம அய்யங்காரை அனுப்பாமல் இருக்கச் செய்ய வேண்டுமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஒரு சமயம் அய்யங்கார் எப்படியாவது சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றாலும் பெறலாம். அல்லது அவரது சூழ்ச்சி சொல்லுபடியாகாமல் உட்கார்ந்தாலும் உட்காரலாம். ஆனால் உண்மைப் பார்ப்பனரல்லாதார் இவ்விஷயத்தில் கண்டிப்பாய் அவரவர்கள் கடமையைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 21.04.1929)