‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்பது தமிழ் அரசியலின் ஒரு பகடை வாசகமாகிக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் தொடங்கிவிடும் தமிழ் மீட்பு போர்ப் பரணி. பழந்தமிழர் பெருமையாற்றும்படை...எல்லாம்... அதன் ஒரு பகுதியாகவே இன்று உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு ஆகிவிடுமோ எனும் அச்சம் இத்தனைக் கோலாகலத்திற்கும் இடையே நமக்கு ஏற்படுகிறது. அரசு இயந்திரம், செம்மொழி, மாநாட்டிற்கானள் ஏற்பாடுகள்... நிகழ்ச்சி அமைப்பு... என முடுக்கிவிடப்பட்டு தமிழக செம்மொழித் தலைநகராகக் கோவையைச் செதுக்கி வார்த்து... மண்சாலையில் தனது கட்டைமாட்டு வண்டியில் உப்பு விற்கும் தமிழனை வாய் பிளக்க வைத்திருக்கிறது.

கோடானு கோடியைக் கொட்டி வார்த்த மரகதப் பதுமையாய்த் ‘தமிழ்’ மின்னுகிறாள், பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் முடிவில் மீண்டும் ‘அன்றாட வாழ்க்கை’ எனும் வறுமையும் தரித்திரமும் நிறைந்த ஒரு உலகம், அவர்களுக்காகக் காத்திருப்பதை நினைத்தால் வியர்க்கிறது. இன்றைய தமிழ் மக்களின் தரித்திர வாழ்வை மூடிமறைக்க அன்றைய தமிழனின் பெருமை பேசிடவே இந்த வேலை எனச் சொல்லி நம்மாலும் ஒதுங்கி விட முடியவில்லை. தமிழ் மொழியின் உடனடித் தேவைகளில் ஒன்றிரண்டையாவது இந்த மாநாடு தீர்த்திருக்க வேண்டும். புதிய அரசுத் துறைகளை ஏற்படுத்தத் தேவை இல்லை. தமிழ் வளர்ச்சித்துறையின் செயல்பாடுகளை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். இணைய பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் எதுவுமே செய்யாத ஒரு நிலையைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்களே... அதனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தமிழ் கணினி எழுத்து வடிவத்தைப் Font, keyboard Driver (Unicode) பற்றிய சர்ச்சைக்காவது முற்றுப்புள்ளி வைக்கலாமே. உலக இலக்கியங்களை, தத்துவசாரங்களைத் தமிழுக்குக் கொண்டுவர ‘மொழிபெயர்ப்பு’ எனும், கிட்டத்தட்ட சவமாகிக் கிடக்கும் ஒரு துறையைக் கட்டி எழுப்பலாம்.

இப்படி எவ்வளவு வேலைகள் பாக்கி இருக்கின்றன. செம்மொழித்தமிழை உலக அளவில் கொண்டு செல்ல மாநாடுகள் மட்டுமல்ல... நிதானமான, ஆனால் கடுமையான உழைப்பும் ஆழமான திட்டமிடலும்... அவற்றை அமல்படுத்தும் தீர்மானமான அமைப்புகளும்.. திடமான ஒத்துழைப்புமே இன்றையத் தேவையாகும். இல்லையேல் இந்த மாநாடும் பல்வேறு ஆளுங்கட்சித் திருவிழாக்களில் ஒன்றாகிக் கரைந்து போகாமல் இருக்க அரசு யோசிக்கும் என்று நம்புவோம். மாநாடு (மேற்கண்டமுறையில்) வெற்றி பெற வாழ்த்துவோம்.

Pin It