(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, 1946 ஜனவரி, 22, பக்கங்கள் 106-108.)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): தலைவர் அவர்களே, இன்று காலையில் ஒத்திவைப்புத் தீர்மானம் அனுமதிக்கப்பட்டபோது, தொழிலாளர் நலத்துறையும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டு தனது நிலையை விளக்க வேண்டிய தேவை ஏற்படாதென்று கருதினேன். ஆனால், விவாதத்தின்போது பேசிய இரண்டு உறுப்பினர்கள் தொழிலாளர் நலத்துறையைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதைக் கவனித்தேன் பூசல் நெடுங்காலமாகவே நிலவி வந்துள்ளது என்ற போதிலும், இதில் தலையிட்டுத் தான் ஆற்ற வேண்டிய பணியைத் தொழிலாளர் நலத்துறை ஆற்றத் தவறிவிட்டது என்பதே அவர்களது குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலத்துறைக்குப் பெருமளவில் பொறுப்பு உண்டு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தொழிலாளர் வர்க்கம் உரிமைகளை அடைவதற்கு உதவும் பொருட்டாகவே நிறுவப்பட்ட தொழிலாளர் நலத்துறை அதன் கடமையிலிருந்து தவறியிருப்பின், உறுதியாக அது கண்டனத்திற்குரியதேயாகும். ஆனால் தீர்மானத்தின் மீது பேசும்போது தொழிலாளர் நலத்துறையின் பொறுப்பு பற்றிக் குறிப்பிட முனைந்த மதிப்பிற்குரிய நண்பர் சர்தார் மங்கள் சிங், தொழிலாளர் நல அமைச்சர் என்ன தூங்கிக் கொண்டிருக்கிறாரா? இல்லை வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறாரா? என்று பழித்துப் பேசுமுன்னர், இவ்விகாரம் தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை என்னென்ன செய்துள்ளது என்பதைச் சற்றும் அறிந்து கொள்ளாமல் பேசிவிட்டார் என்பது மிக வருத்தமளிக்கிறது. எனவே, இவ்விவகாரம் தொடர்பான மெய்த்தகவல்களை அவையின் முன்வைப்பது தேவை என்று கருதுகிறேன்.

            ambedkar 381ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதம் ஒன்றைச் சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவர் 1945, அக்டோபர் 5இல் அனுப்பிய போது தான் ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்துக்கும் ரயில்வே வாரியத்துக்குமிடையே நிலவும் பூசல்கள் குறித்து, முதன் முதலாக தொழிலாளர் நலத்துறைக்குத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து 1945 அக்டோபர் 10ஆம் நாள் வந்த இரண்டாவது கடிதத்தில், தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பூசல்களை விசாரிக்க நடுவர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று, தொழிலாளர் நலத்துறைக்கு வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. அப்படியோரு நடுவர் எவரையும் நியமிக்குமுன், பூசலிடும் இருதரப்பாரையும் முறைப்படி நேரடியாகச் சந்திகக வைத்து, இருசாரார்க்குமிடையே நிலவும் பூசல் குறித்த முக்கியமான கூறுகள் பற்றிய கலந்துரையாடல் மூலம் ஒருசாரார் கோரிக்கைகளை மறுசாரார், ஒருவருக்கொருவர் புரிந்து, விட்டுக் கொடுக்கும் முறையில் வேறுபாடுகளைக் குறைத்துக் கொள்ள வழிவகை செய்யத் தூண்டுவதே, தொழிலாளர் நலத்துறையின் தலையாய கடமையாகுமென்று உறுதியாக நம்பினேன். இக்கடைமையைத் தொழிலாளர் நலத்துறை உடனடியாக மேற்கொண்டு ரயில்வேத் தொழிலாளர் கூட்டமைப்பும், ரயில்வே வாரியமும் உடனடியாகச் சந்தித்து அவற்றுக்கிடையே நிலவும் மாறுபாடுகளை குறைத்துக் கொள்ள வழிவகுத்தது என்பதை மிக மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள முனைகிறேன். ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்துக்கும், ரயில்வே வாரியத்துக்கும் இடையே நிலவும் பூசல்களைப் பற்றி இருசாராரும் கூடிப் பேசினர் என்பதை ரயில்வே வாரியத்தின் அறிக்கையிலிருந்து மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அறிவீர்கள். இக்கூட்டம் டிசம்பர் 5ஆம் நாள் நடைபெற்று அறிக்கையும் அன்றே வெளியிடப்பட்டது. டிசம்பர் 5இலிருந்து இன்றுவரை நீண்ட கால இடைவெளியோ தாமதமோ ஆகிவிட்டதாகக் கூறிவிட முடியாது; தொழிலாளர் நலத்துறை இவ்விவகாரத்தில் தான் ஆற்ற வேண்டிய கடமையில் புறக்கணிப்போ, தாமதமோ ஏதும் செய்துவிட்டதாகவும் கூறமுடியாது.

            ஒரேயொரு முக்கிய செய்தியையும் அவையின் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன். பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டதென எவரும் கூறமுடியாது; இதுகுறித்த தகவல் திரு.குருசாமிக்கு தெரிந்திருக்குமென்று கருதுகிறேன். ரயில்வே துறையும், ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனமும் மேற்கொண்டு பேச்சு வார்த்தைகளை நடத்தும் பொருட்டு, ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் துணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்று உடன்பாடு செய்து கொண்டு, இத்துணைக்குழுவும், ரயில்வே துறையும் 1946, ஜனவரி இறுதிக்குள் கூடிப் பேச வேண்டுமென்றும் முடிவு செய்துள்ளனர். 1946 ஜனவரித் திங்கள் இன்னும் முடிந்து விடவில்லை. பேச்சுவார்த்தை நடத்த இன்னமும் காலம் உள்ளது…

            ஶ்ரீபிரகாசா: மாத இறுதி நெருங்கிவிட்டது.

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மெய்தான்! ஆனால் அது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத கருத்து.

            திவான் சமன்லால் (மேற்கு பஞ்சாப் – முகமதியரல்லாதார் சார்பாளர்): ஒரு நிமிடம் குறுக்கிட்டு நண்பரிடம் கேள்வியொன்று எழுப்ப விரும்புகிறேன். நடுவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தள்ளுபடி செய்துவிட்டதென்பது மெய்தானா?

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதைப் பற்றித்தான் குறிப்பிட முனைந்தேன். பேச்சுவார்த்தைகள் வாயிலாய் இருதரப்பும் மனமொத்த ஒப்பந்தத்திற்கு வரும் முயற்சிகள் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டாலன்றி, நடுவர் எவரையும் நியமிக்கும் கருத்து அரசுக்குக் கிடையாது. எனது நண்பருக்குச் சுட்டிக் காட்ட விரும்புவதென்னவென்றால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அவ்வாய்ப்பு இன்னும் மறைந்து விடவில்லை என்பதே. ரயில்வேத் துறையை எப்போது சந்திக்கப் போகிறார்கள் என்ற சரியான தேதியை அவர்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்திடமே தற்போது உள்ளது…

            திவான் சமன் லால்: எனதருமை நண்பரை மீண்டும் கேட்க விரும்புகிறேன். ஆட்குறைப்புத் திட்டத்தினால் எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்ற தகவலை ரயில்வேத் தொழிலாளர் கூட்டமைப்புக்குத் தெரிவிக்க அரசு மறுத்துவிட்டது என்பது உண்மையா? அடுத்து, நடுவர் ஒருவரை அரசு நியமிக்க மறுத்து விட்டது என்பதும், ஆட்குறைப்புத் திட்டம் மேலும் தொடரும் என்பதும் உண்மையா? ஏற்கெனவே 10,000 பேர் வேலையிழந்துள்ளனர் எனக் கருதுகிறேன். இதைப் பற்றி அரசு ஏதும் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்கிறது எனும் நிலையில், மேலும் பேச்சு வார்த்தைகள் நடத்தலாம் என்பதில் பொருளுண்டா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: விவாதத்தில் நான் குறுக்கிட்டுப் பேசியபோது, நடுவர் நியமனம் பற்றித் தெளிவுறுத்தவே எழுந்தேன் என்பதை மதிப்பிற்குரிய நண்பர் மறந்து விட்டார். அதற்குமேல், ஆட்குறைப்பு நடக்குமா? நடந்தால் எத்தனை பேர் வேலையிழப்பார்கள், வேலையிழக்கும் தொழிலாளர்களின் வருங்காலம் பற்றி அரசு என்ன செய்யவுள்ளது? என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம், எனது உரைக்குப் பின் மாண்புமிகு ரயில்வேத் துறை அமைச்சர் விடையிறுப்பார். தொழிலாளர் நலத்துறையின் வரம்புக்குள் வரும் பொறுப்புகளை மட்டுமே என்னால் நிறைவேற்ற முடியும் என்பதை முன்னரே தெரிவித்துள்ளே. ஒப்பந்தங்கள் வாயிலாகப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வழிகள் அனைத்தும் அடைப்பட்டுவிட்டன என்ற அறுதியான நிலை தோன்றினாலன்றித் தொழிலாளர் நலத்துறை தலையிட்டு நடுவர் ஒருவரை நியமிக்கும் நடைமுறைக்கு இடமேதும் இல்லை என்னும் சட்ட நிலையை நான் வலியுறுத்த முயன்றேன். விவாதத்தில் நான் குறுக்கிட்டதன் நோக்கம், தொழிலாளர் நலத்துறை தக்க தருணத்தில் தலையிட்டுத் தன் கடமையைச் செய்யவில்லை என்ற எனதருமை நண்பரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் தருவதற்காகவே; எனவே, நண்பர் தாமாகவே முன்வந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்” என்ற நையாண்டியைத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என நம்புகிறேன்; ஏனெனில், அது சற்றும் உண்மையன்று.

            அடுத்து, இந்தச் சிக்கலின் மற்றொரு பக்கத்தையும் குறித்துத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது, இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் 81ஆம் பிரிவின் கீழ் நடுவர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டென்பது உண்மையா எனக் காண்போம். நாம் இயற்றுவது அவசரச் சட்டம் எனும் வகைக்குள் வருவதாயினும் கூட, சட்டத்தின் பிரிவு 81இன் கீழ் பெற்றுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தும் சூழ்நிலையிலும், சட்டவியல் கோட்பாடுகளை முழுமையாகக் கைவிட்டுச் செயல்பட முடியாது எனல், நடுவர் தீர்ப்பாயத்திற்கும் பொருந்தும். பூசல் என ஒன்று இருந்தால்தான் நடுவர் தீர்ப்பு என்ற பேச்சே எழமுடியும். நான் முன்னர் தெளிவுறுத்தியவாறு சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் உடன்படிக்கை காணும் நிலையை இன்றும் மீறவில்லையென்பதால், இத்தருணத்தில் பூசல் எதுவும் கிடையாது.

இரண்டாவதாக, ஒரு சிக்கல் நடுவர் தீர்ப்புக்கு விடப்பட வேண்டுமெனில், வேலையின் சட்ட திட்டங்கள் குறித்து பூசல் எழுவதாயிருக்க வேண்டும்; வேலை நேரம், ஊதியம் போன்ற விவகாரங்களை எடுத்துக்காட்டாய்க் குறிப்பிடலாம். ரயில்வேத் துறைக்கும், ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்துக்குமிடையே எது குறித்துப் பூசல் நிலவுகிறது எனக் கூற முடியுமா? ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனம் இப்போதைய விவகாரங்களை நடத்திச் செல்ல வேண்டிய முறையில் நடத்திச் செல்லவில்லையென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தற்போதைய நடைமுறைகளினால் தங்களுக்குத் தீங்கையே வரவழைத்துக் கொண்டுள்ளனர். இந்தக் கட்டத்தில் நான் எழுப்ப முனையும் கேள்வி இதுவே. ரயில்வேத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு எதுபற்றியி கோரிக்கையை முன்னிறுத்திப் போராடுகிறது? வேலை நேரத்தைப் பற்றியா? இல்லை, ஊதியத்தைப் பற்றியா? கோரிக்கை இவ்விரண்டில் எதையும் சார்ந்தனவல்ல என்பதை நான் உறுதியாய்க் கூறமுடியும். வேலை நேரம் குறித்தும், ஊதியம் குறித்தும் ரயில்வேத் தொழிலாளர்கள் சம்மேளனம் பற்பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள என்பது உண்மையே. ஆனால் பூசலின் அடிப்படைக் கோரிக்கைகளுக்கும், கூடுதல் கோரிக்கைகளுக்கும் இடையே நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

சம்மேளனம் நிறைவேற்றியுள்ள பல்வேறு தீர்மானங்களையும் கூர்ந்து நோக்கினால், ரயில்வேத் தொழிலாளர்களில் ஒருவரைக் கூட வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதே அவர்களின் முதன்மையான (ஒரே) கோரிக்கை என்பது தெளிவாகும். வேலைநேரம், ஊதியம் போன்ற கோரிக்கை கூடுதலாக மேலோட்டமாகவே சேர்க்கப்பட்டுள்ளன; அவை கருத்து வேறுபாடு தோற்றுவிக்கும் சிக்கல்களுமல்ல. நான் கூறுவதன் சுருக்கக் கருத்து என்னவென்றால், ரயில்வேத் துறைக்கும், தொழிலாளர் சம்மேளனத்துக்கும் இடையில் எழுந்துள்ள பூசல் ஆட்குறைப்பு பற்றியதொன்றே; அதாவது, எவ்வளவு பேர் வேலையில் நீடிப்பார்கள்? எவ்வளவு பேர் வேலையிழப்பார்கள்? என்பதே. இது தொடர்பான இரண்டொரு சூழ்நிலைகளையும் சுட்டவிரும்புகிறேன். முதலாவதாக, நான் முன்னர் குறிப்பிட்ட 1945, டிசம்பர் 5ம் நாள் கடிதத்தில் (பதினான்கு) பதினைந்து கோரிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றுள், அடிப்படையான கோரிக்கைகள் யாவையென விவாதிக்க தொழிலாளர் நலத்துறையும், ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் திரு.கிரியும் பங்குபெறும் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 15 தீர்மானங்கள் மொத்தமிருப்பினும் அவற்றுள் மூன்று மட்டுமே தொழிலாளர் நலத்துறையின் ஆய்வுக்கு வைக்கப்பட்டன. எஞ்சியவற்றை முக்கியமல்லவென்று தொழிலாளர் சம்மேளனம் வாளா விட்டுவிட்டது.

மீண்டும் தொழிலாளர் சம்மேளனத்துக்கும் ரயில்வேத் துறைக்குமிடையே முறையான பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டபோது, அம்மூன்று கோரிக்கைகளும் கூடப் பின்தள்ளப்பட்டு, ஆட்குறைப்புப் பிரச்சினையொன்றே முன்வைக்கப்பட்டது. சம்மேளனத் தலைவர் மற்றும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட பலரும் எனது மதிப்புக்குரியவர்களே; எனினும், ஒருதுறையின் பணிகளுக்கு எத்தனை பணியாளர்கள் தேவையென்பது எப்படிப்பட்ட சட்டப்பூர்வப் பூசலாக முடியுமென எனக்கு விளங்கவில்லை. ரயில்வேத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ரயில்வே வாரியத்தோடு சட்டப்பூர்வப் பூசலாக எந்தக் கோரிக்கை எழுகிறது என்பதைத் தெளிவுறுத்துவாரெனில், பூசலில் தலையிட்டு, நடுவர் ஒருவரை நியமிக்கத் தொழிலாளர் நலத்துறை காத்துக் கொண்டிருக்கிறது என்று தெளிவாக அறிவிக்கிறேன். எனவே, இங்கு எழுப்பப்பட்டுள்ள கண்டனத் தீர்மானம் தேவையற்றதென்றே கருதுகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It