தீண்டப்படாதோரின் இந்தக் கோரிக்கைகள் எழுப்பும் இத்தகைய விஷயங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் ஏன் இடம் பெறவேண்டும் என்று வினவலாம். உலகின் வேறு எங்கும் அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்கியவர்கள் இத்தகைய விஷயங்களை எதிர்ப்பட்டதில்லை. இது ஒரு முக்கியமான கேள்வி. இத்தகைய பிரச்சினைகளை எழுப்புபவர்கள், இவை அரசியலமைப்புச் சட்ட முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுபவர்கள் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தாக வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இந்தக் கேள்விக்கான விடை தெள்ளத்தெளிவானது. இந்திய சமுதாயத்தின் இயல்புதான் அரசியலமைப்புச் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய விஷயத்தை முன்னணிக்குக் கொண்டு வருகிறது. இந்துக்களின் சாதி அமைப்பு முறையும், சமயமும்தான் இதற்கு முழு முதல் காரணம். இந்துக்களின் சாதி மற்றும் சமய அமைப்பு முறைகள் ஏற்படுத்தும் சமூக, அரசியல் விளைவுகளை அயல்நாட்டினருக்கு விளக்குவதற்கு இது போதுமானதாக இல்லாதிருக்கலாம்.
ஆனால் அதேசமயம் இந்த ஆய்வுக்கட்டுரையை குறுகிய வட்டத்துக்குள் சாதிஅமைப்பு முறை அரசியலைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிப்பது சாத்தியமல்ல என்பதையும் இங்கு கருத்திற் கொள்ள வேண்டும். இந்த விஷயம் குறித்த எனது முழு ஆய்வை சாதி ஒழிப்புப் பற்றி சில காலத்திற்கு முன்னர் நான் எழுதியுள்ள நூலில் படிக்கலாம். இந்துக்களின் சாதி அமைப்பு முறையும், சமயமும் எத்தகைய சமூக. பொருளாதார விளைவுகளை உண்டுபண்ணுகின்றன என்பது குறித்த போதிய விவரங்களை அந்த நூல் வழங்கும் என்று நம்புகிறேன். இந்த ஆய்வுக்கட்டுரையில் பின் வரும் சில பொதுவான கருத்துகளைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, சமூகக் கட்டமைப்பை எப்போதும் மனதிற் கொள்ளவேண்டும். அரசியல் கட்டமைப்பு சமூக்கட்டமைப்புடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். சமூக சக்திகளின் செயல்பாடு சமூகத் துறையுடன் நின்றுவிடுவதில்லை. அவை அரசியல் துறைக்கும் வியாபித்துச் செயல்படுகின்றன.
இது தீண்டப்படாதவர்களின் கருத்தோட்டமாகும். இது சர்ச்சைக்கு இடமற்றது என்பது திண்ணம். இந்துக்கள் இந்த வாதத்தையும், அதன் வலிமையையும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இந்து சமுதாயக் கட்டமைப்பு ஐரோப்பிய சமுதாயக் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டது என்பதை மறுக்கின்றனர். இந்துக்களின் சாதி அமைப்பு முறைக்கும், மேற்கத்திய சமுதாயத்தின் வர்க்க அமைப்பு முறைக்கும் வேறுபாடு ஏதுமில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது தவறான வாதம் என்பது கண்கூடு. சாதி அமைப்பு முறையையும், வர்க்க அமைப்பு முறையையும் பற்றி அவர்களுக்குள்ள அறியாமையையே இது புலப்படுத்துகிறது.
சாதி அமைப்புமுறை தனிமைப்படுத்தும் இயல்பை தன்னுள் கொண்டது; ஒரு சாதியை இன்னொரு சாதியிலிருந்து தனிமைப்படுத்துவதை இது ஒரு நற்கூறாகக் கருதுகிறது. வர்க்க அமைப்பு முறையிலும் தனிமைப்படுத்தல் இருக்கவே செய்கிறது; ஆனால் தனிமைப்படுத்தலை அது நற்பண்பாகக் கருதுவதில்லை; மேலும் சமூகக் கூட்டுறவை அது தடுப்பதும் இல்லை. வர்க்க அமைப்புமுறை குழுக்களைத் தோற்றுவிக்கிறது என்பது உண்மையே. ஆனால் அவை சாதிக் குழுக்களைப் போன்றவை அல்ல. வர்க்க அமைப்பு முறையில் குழுக்கள் சமூக ரீதியற்றவையே ஆகும்; ஆனால் சாதி அமைப்புமுறையிலோ சாதிகள் அவற்றின் பரஸ்பர உறவுகளில் நிச்சயமாகவும், திட்டவட்டமாகவும் சமூக- விரோதமானவை.
இந்தப் பகுத்தாய்வு உண்மையாக இருக்குமாயின் இந்து சமுதாயத்தின் சமூக்க்கட்டமைப்பு வேறுபட்டது என்பதும், இதனால் அரசியல் கட்டமைப்பும் வேறுபட்டதாகவே இருக்க வேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். பொதுவாகக் கூறுவதானால் தீண்டப்படாதோர் வலியுறுத்துவதெல்லாம் குறிக்கோள்களுக்கும் அவற்றை எய்தும் வழிகளுக்கும் இடையே முறையான ஒப்புமைத் தொடர்பு இருக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால் குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும் அவற்றை அடைவதற்கான வழிகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. குறிக்கோள்கள் ஒன்றாக இருப்பினும், அவற்றை அடைவதற்கான மார்க்கங்கள் காலத்துக்கும் சூழ்நிலைமைகளுக்கும் ஏற்ப மாறுபடக் கூடும். தங்கள் குறிக்கோளில் உறுதியோடிருப்பவர்கள் இந்த உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்; தாங்கள் கருதிக் கொண்டிருக்கிற குறிக்கோள்கள் வீணாகிவிடக்கூடாது என்று விரும்புபவர்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ள முன்வர வேண்டும்.
இது சம்பந்தமாக மற்றொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் ஏற்கனவே கூறியது போன்று சமுதாயத்தின் சாதி அடிப்படைதான் தனது அரசியல் கட்டமைப்பு வேறுபட்டதாக, தனது சமூகக் கட்டமைப்பு வேறுபட்டதாக, தனது சமூகக் கட்டமைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. இந்த உன்மையை ஒப்புக் கொள்ளுபவர்கள் பலர் இருக்கிறார்கள்; ஆனால் இந்து சமுதாயத்திலிருந்து சாதியை ஒழித்துக்கட்டுவிட முடியும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இதனை நான் மறுக்கிறேன். இத்தகைய கருத்தை முன்வைப்பவர்கள் சாதி என்பது ஒரு மன்றம் போன்றோ, நகரசபை போன்றோ அல்லது ஒரு மாவட்டக் கவுன்சில் போன்றோ ஓர் அமைப்பு என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறாகும். சாதி என்பது சமயச் சார்புடையது.
அதனை ஓர் அமைப்பாக்கலாம்; ஆனால் அது இணைந்துள்ள அமைப்பைப் போன்று இருக்காது. சமயம் என்பது ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையிலும் ஊடிப் பரவி நிற்கும் ஒரு சக்தி அல்லது ஓர் ஆற்றல் கூறு; அது அவனது குண்ப்பண்பை வார்த்து உருவாக்குகிறது; அவனுடைய செயல்களையும் எதிர்ச்செயல்களையும் தீர்மானிகிறது; அவனுடைய விருப்பு, வெறுப்புகளை நிர்ணயிக்கிறது. இந்த விருப்புகளும், வெறுப்புகளும், செயல்களும், எதிர்ச் செயல்களும் களைந்தெறிந்து விடக்கூடிய அமைப்புகள் அல்ல. அவை கட்டுப்பாட்டின் மூலமோ அல்லது எதிர்ப்பின் மூலமோ சமாளிக்கப்பட வேண்டிய சக்திகள், செல்வாக்குகள், சமூகச் சக்திகள். அரசியலை நச்சுப்படுத்தாதபடி தடுக்க வேண்டுமானால், ஒரு சிலர் செல்வாக்குப் பெறுவதையும் மிகப் பலர் தாழ்த்தப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்; தப்பெண்ணங்களுக்கு, தீங்குகளுக்கு கேடுகளுக்கு ‘லகான்’ போடக்கூடிய, சமூக சக்திகளைத் தலை விரித்துத் தாண்டவமாட அனுமதித்தால் அவை விளைவிக்கும் அநீதிகளுக்கு அணைபோடக்கூடிய ஏற்பாடுகளை அந்த அரசியல் கட்டமைப்புப் பெற்றிருப்பது அவசியம்.
இந்து சமுதாயத்தின் தனித்தன்மை வாய்ந்த சமூகக் கட்டமைப்புக்கு ஏன் ஒரு தனித்தன்மையான அரசியல் கட்டமைப்பு தேவைப்படுகிறது என்பதையும், இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குபவர்கள் ஏனைய நாடுகளில் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்குத் தொல்லை கொடுக்காத பிரச்சினைகளிலிருந்து ஏன் தப்ப முடியாது என்பதையும் இதுவரை பொதுப்படையான முறையில் எடுத்துரைத்தேன். இனி அடுத்து இந்திய அரசியல் அமைப்பில் வகுப்புவாரித் திட்டம் இடம்பெறுவது ஏன் அவசியம், பணித்துறைகளில் தீண்டப்படாதவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள இடங்களை ஏன் ஒதுக்க வேண்டும் என்ற பிரச்சினையை இப்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன்.
இந்தக் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை என்பது தெள்ளத்தெளிவு. தீண்டப்படாதோரை இந்துக்களிடமிருந்து பிரிப்பது அவசியமல்ல, நிலவும் வேறுபாடுகள் சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்ற மறுக்கமுடியாத உண்மையிலிருந்து இது எழுகிறது. மாறாக இது அடிப்படையான பகைமை உணர்வு மற்றும் வெறுப்பு உணர்வு சம்பந்தப்பட்டதாகும். இந்தப்பகைமை உணர்வுக்கும் வெறுப்பு உணர்வுக்கும் சான்று ஏதும் தேவையில்லை. இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான உள்ளார்ந்த பகைமை உணர்வுக்கு தீண்டாமையே போதுமான சான்றாக அமைந்துள்ளது. இத்த்கைய பகைமை உணர்வு இருந்துவரும்போது, பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரமும், விடுதலையும் பெற்றதும் இந்துக்கள் தங்களுக்கு நியாயம் வழங்குவார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைக்கும்படி தீண்டப்படாதோரைக் கேட்பது சாத்தியமல்ல.
ஓர் இந்துவை நான் நம்பமாட்டேன் என்று ஒரு தீண்டப்படாதவன் கூறுவது சரியல்ல என்று யார் கூறமுடியும்? ஓர் ஐரோப்பியனைப் போலவே ஓர் இந்துவும் அவனுக்கு அந்நியமானவன்; இதில் மோசமான விஷயம் என்னவென்றால் ஐரோப்பிய அந்நியன் நடுநிலையானவனாக இருக்கிறான், ஆனால் அதேசமயம் ஓர் இந்துவோ மிகவும் வெட்கக்கேடான முறையில் தனது சொந்த வர்க்கத்திடம் ஒருசார்புடையவனாகவும், தீண்டப்படாதவர்களிடம் பகைமை உணர்வு கொண்டவனாகவும் இருக்கிறான். ஒரு வேறுபட்ட வருண இனத்தைச் சேர்ந்தவர்களாக அல்லாவிட்டாலும் தீண்டப்படாதவர்களை சமுதாயத்தின் ஒரு வேறுபட்ட, வெறுக்கத்தக்கப் பிரிவினராக காலம் காலமாக, வழிவழியாக இழிவுப்படுத்தி வந்திருக்கின்றனர், புறக்கணித்து வந்திருக்கின்றனர்; அடியோடு கைவிட்டு வந்திருக்கின்றனர் என்பதில் எள்ளளவும் ஐயம் இருக்க முடியாது.
இந்துக்கள் தங்கள் சொந்த நடத்தையின் மூலம் தங்களுடைய சொந்த முற்சார்பான எண்ணங்களில் அமிழ்ந்துபோய், தீண்டப்படாதவர்களின் ஆர்வ விருப்பங்களை ஒருபோதும் மதிப்பதில்லை; அவர்களுடன் எத்தகைய தொடர்புகளும் கொள்வதில்லை; இந்துக்களின் நலன்கள் தீண்டப்படாதவர்களின் நலன்களுக்கு மாறுபட்டவையாக இருக்கின்றன.
இவ்வாறிருக்கும்போது தீண்டப்படாதோர் தங்களது எதிர்காலத்தை, கதிப்போக்கை இத்தகையோரிடம் ஒப்படைக்க வேண்டுமா? இந்துக்கள் உண்மையில் தீண்டப்படாதவர்களின் நோக்கங்களையும், நலன்களையும் எதிர்க்கின்றனர்; தீண்டப்படாதோர் மத்தியில் செயல்பட்டுவரும் ஜீவசக்திகளிடம் அவர்கள் அனுதாபம் காட்டுவதில்லை; ஆர்வ விருப்பங்களையும் அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை; அவர்களுடைய அபிலாஷைகளுக்கு எதிராக இருக்கின்றனர்; அவர்கள் தீண்டப்படாதவர்களுக்கு நிச்சயமாக நியாயம் வழங்க மாட்டார்கள்; அவர்களிடம் பல வகைகளிலும் பாரபட்சமுடன் நடந்துகொள்வார்கள், சமயத்தின் ஆதாரபலம் அவர்களுக்கு இருப்பதால் தீண்டப்படாதவர்களிடம் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ள அவர்கள் சிறிதும் தயங்கவோ மாட்டார்கள்; அதற்காக வெட்கித் தலைகுனியவும் மாட்டார்கள்.
இந்துப் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைக்கு எதிராக அரசியல் சட்டத்திலேயே தீண்டப்படாதவர்களின் அரசியல் உரிமைகள் உத்தரவாதம் செய்யப்படுவதுதான் இத்தகைய மக்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான வழியாகும். தீண்டப்படாதவர்கள் கோரும் இந்தப் பாதுகாப்பை மிகையான கோரிக்கை என்று எவரேனும் கூற முடியுமா?
(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 9)