ambedkar 460

1.பொது

 1) தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற சொல்லை தீண்டத்தகாதவர்களுக்கு மட்டுமே பிரயோகம் செய்ய நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன். தீண்டாமையில் உள்ளூரப் பொதிந்திருக்கும் சமூகப் பாரபட்சத்தினால் ஏற்படும் அல்லல்களைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளைப் பெற்றிராத அனைவரையும், எனவே, தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காகத் தீண்டத்தகாதவர்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்று கருதப்படும் அனைவரையும் தீண்டத்தகாதவர்களிடமிருந்து விலக்கி விட நானே முடிவு செய்தேன். தீண்டத்தகாத ஜாதிகள் என்னென்ன என்று நிர்ணயம் செய்வதற்காக, கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 மற்றும் 8-ஆவது சோதனைகளைப் பயன்படுத்துவதையும் நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு வழிகளில் அதைத் கடைப்பிடிக்க முயலுவதையும், அல்லது அதற்கு வெவ்வேறு வகையான பொருள் விளக்கங்களைக் கூற முற்படுவதையும் நான் காண்பதால், இந்த விஷயத்தில் எனது கருத்தை விளக்கி உரைப்பது அவசியம் என்று உணருகிறேன்.

2) முதலாவதாக, தீண்டத்தகாத ஜாதிகளை நிர்ணயம் செய்வதற்கு, எத்தகைய சோதனைகள் கடைபிடிக்கப்பட்டாலும், அவை இந்தியா பூராவிலும் ஒரே மாதிரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று சில வட்டாரத்தினர் வலியுறுத்துகிறார்கள். இத்தகைய விஷயத்தில், ஒரே மாதிரியான சோதனையை அல்லது சோதனைகளை இந்தியா பூராவிலும் கடைப்பிடிப்பது அவ்வளவு பொருத்தமாக இராது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தியா ஓரினத் தன்மை கொண்ட ஒரு தேசமல்ல. இது ஒரு கண்டம். பல்வேறு மாகாணங்களிலும் மிக அதிக வித்தியாயசமான நிலைமைகளைக் காண்கிறோம். இன அல்லது மொழிப் பிணைப்பு இல்லை. இணைப்புத் தொடர்புகள் இல்லாதிருந்ததால், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வழிகளில் வளர்ச்சியுற்றன; ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தன்மையான பழக்க வழக்கங்களும், சமூக வாழ்க்கை முறைகளும் அமைந்தன. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா பூராவிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக்கான நடைமுறை ஒரே மாதிரியாக இருப்பது உண்மையில் வியக்கத்தக்கதாகும்.

உதாரணமாக, இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டுள்ளது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பது, தொட்டால் தீட்டு ஏற்படும் என்று கருதப்படுவது என்பவை கூட, எல்லா மாநிலங்களிலும் - எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான கடினப் பாங்குடன் இல்லாவிட்டாலும் கூட - கடைப்பிடிக்கப்படுவதைக் காண்கிறோம். தீண்டாமை என்பது ஒரு சமூக நடத்தை. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப, ஒவ்வொரு தனி நபருக்கேற்ப நிலைமை மாறியிருக்கும். அதனால், தீண்டத்தகாத ஜாதிகளை நிர்ணயம் செய்வதற்கு முற்றிலும் ஒரே மாதிரியான சோதனையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது இந்தப் பிரச்சினையுடன் சிறுபிள்ளைத்தனமாய் விளையாடுவதாகும். சட்டப்படி அமைந்த கமிஷன் இத்தகைய விவாதப் போக்கை எதிர்பார்த்தது; எனவே, இதைப் பற்றி நன்கு பரிசீலித்த பின்னர், அதை நிராகரித்து விட்டது. தீண்டாமையை நிர்ணயிப்பதற்குப் பல்வேறுபட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டை அது அங்கீகரித்தது.

இரண்டாம் தொகுதியின் 67-ஆம் பக்கத்தில் காணப்படும் அதன் பரிந்துரைகள் இவ்வாறு கூறுகின்றன: “புதிய பிரதிநிதித்துவ முறை பற்றிய பிரதான கோட்பாடுகள் நிச்சயிக்கப்பட்ட பின்னர், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் செயல்படுத்துவதற்காகப் புதிய தேர்தல் விதிகளை வகுக்கும் பணியை (முன்னாள் வாக்குரிமைக் கமிட்டி போன்ற) விசேஷ நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பது மிகவும் அவசியமாயிருக்கும். ஒவ்வொரு மாகாணத்திலும் (சில சமயங்களில் அதே மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளிலும்) இருக்கக்கூடிய ‘தாழ்த்தப்பட்ட மக்கள்’ பற்றிய பொருள் விளக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டியதும், அவ்விதம் விவரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டியதும் அந்த விசேஷ நிறுவனத்தின் கடமைகளில் ஒன்றாகும்.”

இந்தியா பூராவிலும் தீண்டாமை பற்றி ஒரே விதமான சோதனைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பயனற்றது என்றும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். தீண்டாமை பற்றிய சோதனைகளில் இருக்கும் வேறுபாடுகள் தீண்டத்தகாதவர்களின் நிலைமைகளில் இருக்கும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றன என்று கருதுவது அடிப்படைத் தவறாகும். மனப் போக்கைச் சரியாக ஆராய்ந்து பார்த்தால், தொட்டால் தீட்டு ஏற்பட்டு விடும் என்ற கருத்து அல்லது பொதுக் கிணற்றைப் பயன்படுத்த மறுப்பு ஆகியவற்றில் எதை நாம் சோதனையின் அடிப்படையாகக் கொண்டாலும், இரண்டுக்கும் ஆதாரமாக இருக்கும் எண்ணம் ஒரே மாதிரியானது தான், ஒன்றே தான் என்பதைக் காணலாம். தூய்மைக் கேடு, அருவருப்பு, பகைமை, இகழ்ச்சி என்ற அதே உள்ளுணர்வின் வெளிப்பாடே இவை இரண்டும். தீண்டத்தகாதவரை ஒரு ஹிந்து ஏன் தொட மறுக்கிறார்? ஒரு தீண்டத்தகாதவர் கோவிலுக்குள் நுழைவதையோ, அல்லது கிராமத்திலுள்ள பொதுக் கிணற்றைப் பயன்படுத்துவதையோ ஏன் ஒரு ஹிந்து அனுமதிப்பதில்லை? ஒரு தீண்டத்தகாதவர் சத்திரத்தில் தங்குவதற்கு ஏன் ஒரு ஹிந்து ஒப்புக் கொள்வதில்லை? இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விடை ஒரே மாதிரியானதுதான்.

தீண்டத்தகாதவர் மிகவும் அசுத்தமானவர். சமூக ரீதியில் கலந்து பழகுவதற்குத் தகுதியற்றவர் என்பதை அந்த விடை, இன்னொன்றையும் பார்ப்போம். ஒரு தீண்டத்தகாதவர் நடத்தும் மதச் சடங்குகளில் ஒரு பிராமணப் புரோகிதர் ஏன் கலந்து கொள்வதில்லை? தீண்டத்தகாதவருக்குச் சவரம் செய்ய ஏன் நாவிதர் மறுக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கும் அதே பதில் தான். அவ்வாறு செய்வது கெளரவக் குறைச்சல் என்பதுதான் அது. சமூக இகழ்ச்சிக்கு உட்பட்டு அல்லல்படும் மக்கள் பிரிவினரை வரையறுப்பது தான் நமது நோக்கமென்றால், எந்தச் சோதனையை நாம் கடைப்பிடிக்கிறோம் என்பது அவ்வளவு முக்கியமல்ல, நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளது போல, இந்த ஒவ்வொரு சோதனையும், தீண்டத்தக்கவர்கள் தீண்டத்தகாதவர்களின் பால் காட்டும் அதே சமூகப் போக்கைத்தான் குறிப்பிடுகின்றன.  

3. இரண்டாவதாக, தீண்டத்தகாத ஜாதிகளை நிர்ணயம் செய்வதற்காக, “தொட்டால் தீட்டு ஏற்படும்” என்ற சோதனையை அதன் நேருண்மையான நடைமுறை அர்த்தத்தில் தான் பிரயோகிக்க வேண்டும், அதன் கருத்தியலான பொருளில் அல்ல என்ற கண்ணோட்டமும் முன் வைக்கப்படுகிறது. நேருண்மையான நடை முறை அர்த்தத்தில், ஒருவரைத் தொட்டால் தீட்டு ஏற்படும், எனவே அவர் விலக்கப்பட வேண்டும் அல்லது விலக்க முடியா விட்டால் அந்தத் தீட்டை குளிப்பதன் மூலம் போக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதப்படும் நபர் மட்டுமே தீண்டத்தகாதவர் என்று கொள்ளப்படுகிறது. கருத்தியலான அர்த்தத்தில், தொட்டால் தீட்டு ஏற்படும் என்று பொதுவாகக் கருதப்படும் ஜாதியைச் சேர்ந்த ஒரு நபர் தீண்டத்தகாதவராகக் கொள்ளப்படுகிறார். ஸ்தல நிலைமைகளின் காரணமாக இத்தகைய நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முடியாமல் இருக்கலாம்; அல்லது தொட்டுவிட்டால் தீட்டைப் போக்கிக் கொள்ளும் சடங்கைச் செயது கொள்ளும் அவசியம் இல்லாது இருக்கலாம். நேருண்மையான அர்த்தத்தில் இந்தச் சோதனையைப் பிரயோகிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் இத்தகைய முடிவுக்கு வருகிறார்கள்; அதாவது, தீண்டத்தகாதவர்களை வேறு ஜாதியினர் தொடுவதை விலக்கு முடியாத அளவுக்கு அல்லது தொட்டாலும் தீட்டைப் போக்க சுத்தம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ள இடங்களில் தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படும் ஜாதியினரை, தீண்டத்தகாதவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இந்தக் கண்ணோட்டத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது; ஏனெனில் இது தவறான எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு சந்தர்ப்பங்களின் காரணமாக, நேருண்மையான அர்த்தத்தில், ஒரு நபர் தீண்டத்தகாதவராகக் கருதப்படாமலிருக்கலாம். எனினும், இத்தகைய நிர்ப்பந்தமான சூழ்நிலைமைகளுக்கு வெளியே, அவர் தீண்டத்தகாத ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அசுத்தமான நபர் என்றுதான் கருதப்படுகிறார். இந்த விஷயத்தை, பீஹார் மற்றும் ஒரிசாவின் சென்சஸ் கண்காணிப்பாளர் தம்முடைய 1921-ஆம் வருட சென்சஸ் அறிக்கையில் நன்கு தெளிவுபடுத்தியிருக்கிறார். அவ்வறிக்கையின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

ஜாதி விதிகளைத் தளர்த்துவதைப் பற்றிப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறுகிறார்: ”மேல் ஜாதியினர் அல்லது மேல் நிலைமைக்குச் செல்ல அவாக் கொண்டிருக்கும் அதிகம் கல்வியறிவு பெற்ற ஜாதியினர் ஆகியோரிடையே மட்டும் நாம் காணும் இத்தகைய சம்பவங்கள் ஜாதி அமைப்பு தகர்ந்து விழுவதை முன்னதாகவே எடுத்துக்காட்டும் அறிகுறிகள் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது; மாறாக, அவற்றை நாம் நவீன நிலைமைகளுக்குச் சரி செய்து கொள்ளும் போக்கு என்றுதான் கருத வேண்டும். அதைப் போலவே, நேரடியாகத் தொடுவது அல்லது உணவு அல்லது குடிநீரைத் தொடுவது சம்பந்தமான விதிகளில் ஏற்பட்டிருக்கும் திருத்தங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்…. ஜாம்ஷெட்பூர் போன்ற இடங்களில், நவீன நிலைமைகளில் வேலைகள் நடக்கின்றன. இங்கே அண்டையில் இருப்பவரின் ஜாதி என்னவென்று கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், தொழிற்சாலையில் எல்லா ஜாதியினரும் இனத்தவரும் அருகருகே இருந்து பணியாற்றுகின்றனர். ஆனால், நூறாண்டுகளுக்கு முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறை விதிகளை, இன்றைய நவீன வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அசாத்தியமானதாய் இருப்பதால், சுத்தமானது, அசுத்தமானது, தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர் என்பதற்கிடையேயுள்ள வேறுபாடுகள் தற்சமயம் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. ஒரு மேல் ஜாதி ஹிந்து. ஒரு 'தீண்டத்தகாதவரை' அதே இருக்கையில் அமருவதற்கோ அதே ஹீக்காவில் புகை பிடிப்பதற்கோ அல்லது தன்னை, தனது இருக்கையை, தனது. உணவு அல்லது குடிநீரைத் தொடுவதற்கோ அனுமதிக்க மாட்டார்.”

இந்த அறிக்கை உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால், நேருண்மையில் மற்றும் கருத்தியலில் தீண்டாமைக்கு இடையே உள்ள வித்தியாசம் இறுதியாகப் பார்க்குமிடத்து எத்தகைய மாறுபாட்டையும் உண்டாக்கவில்லை. ஏனெனில், நேருண்மையான அர்த்தத்தில் அது தொடர்ந்து நீடிக்கிறது என்பதை மேலே தரப்பட்ட அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. அதனால்தான், தீண்டாமைக்கான சோதனையைக் கருத்தியலான அர்த்தத்தில் பிரயோகிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். 

4. மூன்றாவதாக, தீண்டாமை வெகுதுரிதமாக மறைந்து வருகிறது என்ற கருத்து எங்கும் பரப்பப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்க நான் விரும்புகிறேன்; பிரசாரத்திலிருந்து எதார்த்த உண்மைகளைப் பாகுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிராமணரும், பிராமணரல்லாதாரும், தீண்டத்தக்கவர்களும், தீண்டத்தகாதவர்களும் சில சமயங்களில் ஒன்றாகக் கலந்து இருப்பதைக் காட்டும் உதாரணங்களிலிருந்து ஜாதி அமைப்பும், தீண்டாமை அமைப்பும் உண்மையில் ஹிந்து சமுதாயத்தின் இரும்புச் சட்டமாக விளங்குகின்றன என்பதை நம் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று கருதுகிறேன். இந்த பேதங்களைச் சுலபமாகக் கிள்ளி எறிந்து விட முடியாது. ஏனெனில், அவை விவேகமான பொருளாதார அல்லது இன அடிப்படைகளைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, தீண்டாமையானது மத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், நன்னம்பிக்கை கொண்ட சீர்திருத்தவாதிகள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும், எதிர்காலத்திலும் பல ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

தீண்டாமைக்குப் பக்கபலமாக மதத்தின் நடைமுறை ஆதரவு இருப்பதால்தான், தீண்டாமை அமைப்பை உடைத்தெறிவது மிகவும் கஷ்டமாக உள்ளது. ஒரு சாதாரண ஹிந்து, தனது மத நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகத் தான் தீண்டாமையைக் கருதுகிறார். அதனால்தான், தீணடத்தகாதவர்களின்பால் மனிதத் தன்மையற்ற போக்கை அவர் கடைப்பிடித்த போதிலும், ஏதோ தனது மத நம்பிக்கைகளை நிறைவேற்றுவது போலத் தான் அவர் கருதுகிறாரே தவிர, வேண்டுமென்ற குரூரத்தனமாகத் தான் நடந்து கொள்வதாக அவர் நினைப்பதில்லை. மத நம்பிக்கைகளைப் பின்பற்றிவரும் ஒரு சாதாரண ஹிந்து, தீண்டாமை விதிகளைத் தன்னால் கடைப்பிடிக்க முடியாதபோது, அவற்றைச் சற்றே தளர்த்திக் கொள்கிறார். அவற்றை எப்போதும் கைவிட்டு விடுவதில்லை. தீண்டாமையைக் கைவிட்டு விடுவதென்றால், அவரும் ஏனைய பெரும்பாலான ஹிந்துக்களும் புரிந்து கொண்டுள்ளபடி, அடிப்படையான ஹிந்துமதக் கோட்பாடுகளை முற்ற முழுக்கத் துறந்து விடுவதற்கொப்பாகும். மதத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், எல்லா மத சம்பிரதாயங்களையும் போலவே தீண்டாமையும் பிடிவாதமாக நிலைத்திருக்கும்.

இந்திய மண்ணிலிருந்து தீண்டாமையை ஒழிப்பதற்காக, பல மகாத்மாக்கள் ஏற்கனவே அரும்பாடுபட்டுள்ளனர் என்பதை இந்திய வரலாற்றில் காண்கிறோம். புத்தர், ராமானுஜர், மற்றும் நவீனகால வைணவ மகான்கள் இவர்களில் அடங்குவர். இத்தகைய தாக்குதல்களையெல்லாம் சமாளித்துத் தாக்குப்பிடித்த இந்த அமைப்புமுறை தகர்ந்து விழுந்து விடும் என்று கருதுவது துணிச்சலானது, அபாயகரமானது. தீண்டாமையைக் கடைப்பிடிப்பது ஒரு மத சம்பிரதாயமாகவும், அதைக் கடைப்பிடிக்காதது பாவச் செயல் என்றும் ஒரு ஹிந்து கருதுகிறார். எனவே, இந்தக் கருத்து நிலைத்து நீடித்திருக்கும் வரையிலும், தீண்டாமையும் நீடித்து வரும் என்பதை எனது அபிப்பிராயம்.

 தீண்டாமை அமைப்பின் பொருள் விளக்கங்கள் மற்றும் பண்புகள் சம்பந்தமான பொதுவான கேள்விகளுக்கு என்னுடைய கருத்தை வெளியிட்ட பின்னர், மூன்று மாநிலங்களிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கட் தொகைப் பிரச்சினையைப் பற்றி (இதில் ஒருமித்த அபிப்பிராயம் இல்லை) என்னுடைய சில கருத்துக்களை வெளியிட விரும்புகிறேன்.

 2. ஐக்கிய மாகாணங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்புக்கள்

 5. ஐக்கிய மாநிலத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புக்களின் மக்கட் தொகையில் பொறுத்தமட்டில், கமிட்டியிடம் ஐந்து வித்தியாசமான மதிப்பீடுகள் தரப்பட்டுள்ளன:

 1) ஐக்கிய மாநிலங்களின் மாகாண வாக்குரிமைக் கமிட்டி யின் மதிப்பீடு.

 2) திரு. பிளன்ட் தனது குறிப்பில் அளித்திருக்கும் மதிப்பீடு.

 3) சென்சஸ் கமிஷனர் கொடுத்திருக்கும் மதிப்பீடு.

 4) ஐக்கிய மாகாண அரசாங்கம் அளித்திருக்கும் இரண்டு  மதிப்பீடுகள்.

 இந்த மதிப்பீடுகளைப் பற்றி என்னுடைய கருத்துக்களை இங்கே வெளியிடுகிறேன்:

 6) திரு. பிளன்ட்டின் குறிப்பு மிகவும் அதிகாரபூர்வமாக உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். 1911-ல் ஐக்கிய மாநிலங்களில் சென்சஸ் கண்காணிப்பாளர் என்ற முறையில் அவருக்குக் கிடைத்த உண்மை விவரங்களை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. திரு. பிளன்ட் அவருடைய முதல் முன் வரைவில், ஐக்கிய மாநிலங்களிலிருந்த தீண்டத்தகாத ஜாதிகளைப் பற்றி எழுதிய விவரங்கள் சரியாக உள்ளனவா என்று ஆராய்வதற்காக, ஐக்கிய மாகாண அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, அதிகாரபூர்வமற்ற ஹிந்துக்களைச் கொண்ட கமிட்டியின் அபிப்பிராயமும் இதற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. எனினும், கீழ்க்காணும் விவரங்களில், திரு. பிளன்ட் கூறிய கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.

 அ) முதலாவது விஷயம்: கீழ்க்காணும் ஒரே சமுதாயங்களை, இரண்டு பிரிவுளாக அதாவது தீண்டத்தக்கவர் மற்றும்  தீண்டத்தகாதவர் என்ற இரண்டு பிரிவுகளாக அவர்  பிரித்திருக்கிறார். 

  தீண்டத் தக்கவர் தீண்டத் தகாதவர்
போக்சா குழு 30,000 19,028
கோரி குழு 1,54,867 7,75,839
சமார் குழு 20,00,000 41,87,770

இரண்டாவது விஷயம்: 1,10,032 பேரைக் கொண்ட  அக் குழுவை அவர் தீண்டத்தக்கவர்களாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக்குழு பாசி சமுதாயத்தின் ஒரு பகுதியாகும். பாசி சமுதாயம் தீண்டத்தகாத சமுதாயம் என்பதில் எத்துணை ஐயமில்லை.

திரு.பிளன்ட் கடைபிடித்த முறை எதார்த்த உண்மைகளுக்கு ஏற்ப இல்லை என்பதே என்னுடைய வாதம். ஹிந்து சமூக வாழ்க்கையில் அடிப்படைத் தத்துவத்தாலும் அது மெய்ப்பிக்கப்படவில்லை. கோரி குழு, சமார் குழுவின் ஒரு பகுதியேயாகும். எனவே, அது முற்றிலும் தீண்டத் தகாதவர்களைக் கொண்டதாகும். 1911-ல் ஐக்கிய மாநிலங்களின் சென்சஸ் கண்காணிப்பாளராகப் பணியாற்றியபோது, திரு. பிளன்ட் அவர்களே சமர்ப்பித்த அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். 1911-ஆம் வருட சென்சஸ் அறிக்கையின் 347-ஆவது பாராவில், அவர் எழுதிய குறிப்புக்களை நான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறேன்; அவர் அதில் சமார்களுக்கும் கோரிகளுக்கமிடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றி விவாதித்துள்ளார். அதே அறிக்கையில் அவர் கீழ்க்காணும் கருத்துக்களையும் வெளியிட்டிருக்கிறார்:

 ”சமார்களுக்கும் கோரிகளுக்குமிடையேயுள்ள உறவு ஏற் கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. கோரக்பூரில் அந்த உறவு  மேலும் நெருக்கமாய் இருப்பது போலத் தோன்றுகிறது.  அங்கே கோரி சமார்களைத்தவிர, வெறும் கோரிகள் இல்லை யென்று கூறப்படுகிறது. எனினும், கோரி சமார், தம் பெயரிலிருந்து சமார் என்பதை நீக்கிவிட்டு, வெறும் கோரி என்றே  அழைத்துக் கொள்கிறார்; அல்லது தமது பெயரில் சிறிது  மாற்றம் செய்து கொய்ரி என்று வைத்துக் கொள்கிறார். கோரக்பூர் மாவட்டத்தில், தன்னுடைய கைகளிலிருந்து தண் ணீர் வாங்கிக் குடிக்கும்படி தந்திர மோசடி செய்தாரென்று  ஒரு கலாசி, அவருடன் வேலை செய்யும் ஏனைய ஹிந்து சக  ஊழியர்களால் மிக மோசமாக அடித்து நொறுக்கப்பட்டார்.”

அக் குழுவைப் பொறுத்த மட்டில், “ முக்கியமான பாசி குலத்திலிருந்து இந்த ஜாதிகளை அனைத்தும் தோன்றியிருப்பது போலத் தோன்றுகின்றன” என்று திரு.பிளன்ட்டே ஒப்புக் கொள்கிறார். பாசிகுலம் தீண்டத்தகாத ஜாதியைச் சேர்ந்தது என்று அவர் நிர்ணயித்திருக்கிறார். இப்போது சமார் குழுவை எடுத்துக் கொள்வோம். தீண்டத்தகாதவர்கள் என்ற பிரிவிலிருந்து 20 லட்சம் சமார்களை நீக்கி விட்டதற்கான காரணங்களை, தம்முடைய குறிப்பின் 17-ஆம் பக்கத்தில் திரு. பிளன்ட் விவரித்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “குதிரைச் சேணம் செய்பவர், செருப்புத் தைப்பவர், குதிரை நலம் பேணுபவர் போன்ற சுத்தமான தொழில்களில் பல சமார்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். காண்பூரிலும், இதர இடங்களிலும் தோல் வியாபாரம் விரிவடைந்திருப்பதால், பல சமார்கள் பணக்காரர்கள் ஆகியுள்ளனர். இதனால், கிராமத்திலுள்ள தங்கள் சகோதர்களை விட இவர்கள் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற முனைகிறார்கள் இத்தகைய சமார்கள் பொதுவாகத் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுகின்றனர். பலர் தம்முடைய ஜாதிப் பெயர்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, கோரில், அஹர் வார், ஜாதிய, துசிய என்றும் விசேஷமாக ஜெய்ஸ்வார் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.”

திரு.பிளன்ட் செய்ததைப் போல, சுத்தமான தொழில்களில் ஈடுபட்டிருக்கக்கூடிய அல்லது பணக்காரர்கள் ஆகிவிட்ட சமார்களை தீண்டத்தகாதவர்கள் பிரிவிலிருந்து விலக்கிவிடுவது முற்றிலும் தவறான கண்ணோட்டம் என்பது என்னுடைய அபிப்பிராயம். ஒரு தனிநபருடைய சமூக அந்தஸ்து, அவருடைய சொந்த சமுதாயத்தின் அந்தஸ்துடனேயே உயர்கிறது அல்லது தாழ்கிறது என்பதுதான் தீண்டாமை அமைப்பின் குணாதிசயங்களில் ஒன்றாகும். ஒரு தீண்டத்தகாதவர் எப்போதும் தீண்டத்தகாதவராகவே இருப்பார் என்பதுதான் ஹிந்து சமூகவாழ்க்கையின் நியதி. இது அதனுடைய அடிப்படையான அம்சம். ஒரு தனிநபருடைய சமூக அந்தஸ்து, அவர் அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் ஏற்ப மாறுபடாமல், அவருடைய சொந்தத் தகுதி மற்றும் தகுதியின்மைக்கு ஏற்பவே மாறுபடக்கூடிய வர்க்க அமைப்பிலிருந்து இது வேறுபடுத்திக் காட்டுகிறது. ஹிந்து சமூகவாழ்க்கையின் இந்த அடிப்படையான முக்கிய கோட்பாட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், தீண்டத்தகாத ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட சிலர், தீண்டத்தக்கவர்களாகக் கருதப்படலாம் என்று திரு. பிளன்ட் மேற்கொண்ட கருத்தை விலக்கித் தள்ளி விட வேண்டும்.

இது உண்மையிலேயே முன்னுக்குப்பின் முரணானது; எதார்த்த உண்மைகளுக்குப் பொருத்தமாகவும் இல்லை. திரு.பிளன்ட் குறிப்பிட்ட சமார் ஜாதிப் பிரிவினர் தீண்டத்தக்கவர்களாக நடத்தப்படுகிறார்கள் அல்லது கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் பொதுக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கலாம் என்பதெல்லாம் உண்மையல்ல, அதற்கு மாறாக, தாங்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்துப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்கள் தமக்குத்தாமே புதிய பெயர்களை அளித்துக் கொண்டார்கள் என்று திரு.பிளன்ட்டின் அறிக்கையே கூறுகிறது. ஐக்கிய மாநிலங்களுக்கான 1911-ஆம் வருட சென்சஸ் அறிக்கையில், இதைப் பற்றிய உதாரணங்களை திரு. பிளன்ட்டே அளிக்கிறார். அறிக்கையின் முதல் தொகுதியிலிருந்து கீழ்வரும் பகுதியை மேற்கோள் காட்டுகிறேன்:

       “ ஒரு ஜெய்ஸ்வார் சமார், தான் சமார் என்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்வதில்லை; தன்னுடைய ஜாதி ஜெய்ஸ்வார் மட்டுமே என்றும், ராஜ்புத் உள்பட பல்வேறு ஜாதிகளின் ஓர் உபஜாதி என்றும் அவர் கூறுகிறார். ஆக்ரா  மாவட்டத்தில் துண்ட்லா என்ற இடத்தில் குதிரை நலம்     பேணும் ஒருவர் என்னை ஏமாற்ற முயன்றார். அங்கே ஏராளமான எண்ணிக்கையில் ஜெய்ஸ்வார்கள் வசித்து வந்தார்கள். விசாரித்தபோது, அவர்கள் அனைவரும் பட்டாளத்தில் இருந்த குதிரை நலம் பேணும் சமார்களின் வாரிசுகள் என்றும், அவர்கள் அங்கே குடியமர்ந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.”

என்னுடைய வாதம் ஒப்புக் கொள்ளப்பட்டால், தீண்டத்தக்கவர்கள் என்று திரு.பிளன்ட் குறிப்பிட்டிருக்கும் தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை, தீண்டத்தகாதவர்களின் மொத்த எண்ணிக்கையுடன் சேர்த்துக் கொண்டால், ஐக்கிய மாநிலங்களில் தீண்டத்தகாதவர்கள் என்று திரு.பிளன்ட் கொடுத்திருக்கும் எண்ணிக்கை 1,14,76,214 ஆக இருக்கும்.

(தொடரும்)

(இந்திய வாக்குரிமைக் கமிட்டியின் அறிக்கை, தொகுதி 1, இரண்டாம் பதிப்பு, பக்கங்கள் 202 - 11. வட்டமேஜை மாநாட்டின் வாக்குரிமை உப கமிட்டியின் பரிந்துரைகளின் பேரில், 1931 டிசம்பரில் இந்திய வாக்குரிமைக் கமிட்டி அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் உள்பட கமிட்டியில் 18 உறுப்பினர்கள் இருந்தார்கள். நாடாளுமன்றத்துக்கான உதவி இந்திய மந்திரி லோதியன் பிரபு இந்தக் கமிட்டியின் தலைவராக இருந்தார்.)

1932 மே முதல் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டது.

Pin It