"பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட்.
 
"உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்பினரை அவர்கள் வெறுக்கிறார்கள்; தமக்குக் கீழே இருப்பவர்களை அவர்கள் அவமதிக்கிறார்கள்.
 
ஒவ்வொரு சாதியும் பிற சாதியினரை இழிவு படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கியுள்ள பழமொழிகளின் மூலம் சாதி உணர்வு வெளிப்படுகிறது. மேல் சாதியினருக்கு இழிவான மூலத்தை கற்பிக்கும் நூல்களை எழுதிய கீழ் சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். "சாகியாத்திரி காண்டம்' இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும். அது, இந்து புராண புனித இலக்கிய வகையைச் சார்ந்தது. எனினும் வழக்கமான புராணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாணியில் அது இயற்றப்பட்டுள்ளது. பல்வேறு சாதிகளின் மூலவர்களைப் பற்றி அது விளக்குகிறது. பார்ப்பனர்களுக்கு அசிங்கமான மூலத்தையும், பிற சாதியினருக்கு விழுமிய மூலத்தையும் அது கற்பிக்கிறது.
 
இந்து சமூக அமைப்பு சமத்துவத்தை ஏற்கிறதா? இல்லை. "பிறப்பால் அனைவரும் சமம்' என்றாலும் இக்கோட்பாடு இந்த சமூக அமைப்பிற்குப் புறம்பானதாக உள்ளது. இக்கொள்கை தவறானது என்பது அதன் ஆன்மிக அடிப்படையும் ஆகும். உலகத்தை உருவாக்கிய பிரஜாபதியின்  குழந்தைகளே அனைவரும் என்றாலும், அனைவரும் சமமானவர்கள் அல்லர். பிரஜாபதியின் வெவ்வேறு பாகங்களிலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். பார்ப்பனர்கள் வாயிலிருந்தும், சத்திரியர் தோளிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதத்திலிருந்தும் படைக்கப்பட்டுள்ளனர். 
 
படைப்புக் கடவுளின் வெவ்வேறு உறுப்புகளிலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டிருப்பதால், மனிதர்கள் சமமாகப் படைக்கப்படவில்லை. இக்கோட்பாட்டிற்கு உயிரியல் அடிப்படை இருக்கிறதா என்பது பற்றியும் இந்து சமூகம் கவலைப்படவில்லை. இது உண்மை இல்லையென்றால் குணத்திலும் இயற்கைத் திறன்களிலும் மனிதர்கள் வேறுபடுகின்றனர் என்பது, அவ்வளவுக்கவ்வளவு சரிதான். மாற்றாக, இது உண்மை என்றால், மனிதர் குணத்திலும் இயற்கைத்திறனிலும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்றால், அக்கொள்கைக்கு கேடு உண்டாகும். 
 
கோட்பாட்டின் உண்மை பற்றியும் இந்து சமூகம் அக்கறை கொள்ளவில்லை. அதனை அறக் கோட்பாடாகக் காணும் அக்கறையும் அதற்கு இல்லை. குணாம்சத்திலும் திறமைகளிலும் எவ்வளவு வேறுபட்டாலும் மனிதன் என்ற வகையில் அனைத்து மனிதர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை ஏற்க இந்து சமூக அமைப்பு மறுக்கிறது; மனிதர்களுக்குள்ள ஆற்றல் குறைவோ, மிகுதியோ அவரவர் திறமைகளை முற்றிலும் வளர்த்து பயன்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவது சமூகத் திட்டமாக இருக்க வேண்டும் என்னும் கருத்தையும் அது மறுக்கிறது. நிறுவனங்களில், வாழ்க்கை முறையில், சூழ்நிலைகள் சமத்துவத்தை அனுமதிப்பதில்லை; சமத்துவ உணர்வுக்கு அது எதிரானது.
 
சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் இந்து சமூகம் அமைந்திருக்கவில்லை. வேறு எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அது அமைந்திருக்கிறது? இக்கேள்விக்கு ஒரே ஒரு பதிலைத்தான் கூற முடியும். அந்த அடிப்படைகளை உணர்ந்திட இயலுமாயினும், அவற்றின் தன்மை இந்து சமூகத்தில் ஏற்படுத்திய விளைவு பற்றி அய்யம் இருக்க முடியாது. இந்து சமூக அமைப்பு மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் முதலாவதும் முதன்மையானதும் வரிசைப் படுத்தப்பட்ட சமமின்மையே!
 
– தொடரும்
 
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 10)
Pin It