இரோம் சர்மிளா "காந்தி தேச'த்திற்கு எதிராக காந்தியின் ஆயுதத்தையே வலுவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு போராளி. இந்திய அரசின் அடக்குமுறைச் சட்டமான "ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958' நீக்கப்பட வேண்டும் என்று கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் நடத்தும் மணிப்பூர் பெண். அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, இன்று வரை குழாய் வழியாக வலிந்து உணவு செலுத்தப்பட்ட நிலையிலும் தன் மன உறுதியை இழக்காது துணிவுடன் நிற்கும் களப்போராளி!

Sharmila
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மணிப்பூர் இம்பால் நகரில் உள்ள இந்திய ராணுவத்தின் அசாம் படையணியின் தலைமையகம் முன்பு, 12 மணிப்பூர் பெண்கள் ஆடையின்றி போராட்டம் நடத்தியதை யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. அசாம் படையணியின் ராணுவ வீரர்கள் மணிப்பூரைச் சேர்ந்த மனோரமா எனும் பெண்ணை, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததை எதிர்த்து "மணிப்பூர் தாய்கள்' அமைப்பினைச் சேர்ந்த 12 பெண்கள் தங்கள் உடலில் சிறு ஆடையும் இன்றி "இந்திய ராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்' என்ற பதாகைகளை ஏந்தியபடி இம்பால் தெருக்களில் நின்று போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டம் உலகெங்கிலும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவரை மணிப்பூர் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கும் தன்னுரிமைக்கானப் போராட்டங்கள் குறித்தும், அதனை அடக்க நடக்கும் அரச பயங்கரவாதங்கள் குறித்தும் உலகின் கவனத்தை அப்போராட்டம் ஈர்த்தது. மணிப்பூர் பெண்களின் மன உறுதியையும் துணிவையும் அப்போராட்டம் வெளிப்படுத்தியது. அத்தகைய மன உறுதியும் துணிவும் தெளிவும் மிக்க மணிப்பூர் பெண்களில் ஒருவர்தான் இரோம் சர்மிளா. ஒரு கவிஞராகவும் செய்தியாளராகவும் அறியப்பட்ட இவர் இன்று செய்திகளை, வரலாற்றை உருவாக்குபவராக வாழ்ந்து வருகிறார்.

"ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958'அய் இந்திய அரசு அமைதியற்ற பகுதியாக கருதும் எங்கும் நடைமுறைப்படுத்த தகுந்தது. அச்சட்டம், ராணுவத்தின் எந்தப் பொறுப்பில் இருப்பவருக்கும் அல்லது ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த ஒரு இணைப்புக் குழுவுக்கும் எவரையும் கேள்வியின்றி சுடவோ, கைது செய்யவோ, தேடவோ அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், சட்ட ரீதியான மாற்றுக்கான வாய்ப்பு இதில் ஏறத்தாழ கிடையாது. 1980 முதல் மணிப்பூர் இச்சட்டத்தின் பிடியில்தான் உள்ளது.

2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று, மணிப்பூரில் உள்ள மாலோம் எனும் இடத்திற்கு அருகில் அசாம் படையணியின் ஒரு குழுவை, எழுச்சியாளர்கள் படை, குண்டு வீசி அழித்தது. இது ராணுவத்தினரின் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. பொது மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையோ, அதனைத் தொடர்ந்த கொடூரமான தேடல் வேட்டையோ மணிப்பூர் மக்களுக்குப் புதியது அல்ல. இதைப் போன்ற பல கொடுமையான நிகழ்வுகளை மணிப்பூர் மக்கள் அன்றாடம் சந்திக்கின்றனர். ஆனால், சர்மிளாவை போராடத் தூண்டியதில் இந்நிகழ்வே பெரும் பங்கு வகித்தது. ஆயுதப் படையின் அத்துமீறல்களைத் தடுக்க எந்த வழியும் இல்லை என்கிறார் சர்மிளா. அன்று முதல் சர்மிளா தனது மன உறுதியை ஆயுதமாகக் கொண்டு, தனது உடலையே போர்க்களமாக மாற்றிக் கொண்டார்.

அவர் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கிய சில நாட்களிலேயே, தற்கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பிணையை மறுத்த அவர், தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். அது முதல் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு மூக்கின் வழியாக வலிந்து உணவு செலுத்தப்படுகிறது. அவ்வப்போது நீதிமன்றங்கள் அவரை விடுதலை செய்தபோதும், வெளியே வந்து தனது பட்டினிப் போராட்டத்தை அவர் தொடருவதால் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுகிறார். அய்ந்து ஆண்டுகளாக உணவு உட்கொள்ளாததால், அவரது உடல்நிலை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தனது வயதான தாயை இந்த காலகட்டத்தில் அவர் சந்திக்கவேயில்லை. “நான் மனதளவில் மிகவும் மென்மையானவள். என் மகளைப் பார்த்தால் நான் அழுதுவிடுவேன். அதன் மூலம் அவளுடைய மன உறுதியைக் குலைக்க நான் தயாராக இல்லை. அதனால் அவளது போராட்டம் வெற்றி பெற்ற பிறகே அவளை சந்திப்பேன்'' என்கிறார் அவரது தாய்.

"பெயரிடப்படாதது' : மணிப்பூர் பெண்களும் போராட்டங்களும் 3 விவரணைகள் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் குறும்படக் குழுவினர், சர்மிளாவை நேர்காணல் செய்து வெளியிட்டிருக்கின்றனர். அதில் தனது நோக்கம் நிறைவேறும் வரை தனது போராட்டமும் தொடரும் என திட்டவட்டமாகக் கூறுகிறார் சர்மிளா. அந்நேர்காணலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :

ஏன் இந்தப் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினீர்கள்?

என்னுடைய தாய் நாட்டிற்காக. "ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958'அய் நீக்கும் வரை நான் எனது போராட்டத்தைக் கைவிட மாட்டேன்.

இந்தப் போராட்டத்தை நடத்தத் தூண்டிய நிகழ்வைப் பற்றி ஏதேனும் கூற இயலுமா?

நான் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள மாலோம் சென்றிருந்தேன். சில நாட்களில் நடக்கவிருந்த ஓர் அமைதிப் பேரணி குறித்து திட்டமிட நடைபெற்ற கூட்டம் அது. நாளிதழ்களில் வெளிவந்த இறந்தவர்களின் படங்களைப் பார்த்து அதிர்ந்து போனேன். மரணத்தின் பிடியில் நிறுத்தும் இப்போராட்டத்தை மேற்கொள்ளும் துணிவை அந்நிகழ்வுதான் எனக்கு அளித்தது. ஏனெனில், ஒன்றுமறியாத மக்களுக்கு எதிராக ஆயுதப் படையினரின் அத்துமீறல்களைத் தடுக்க வேறு வழி எதுவும் இல்லை. ஓர் அமைதிப் பேரணி எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நான் கருதினேன். இந்தச் சூழலை மாற்ற நான் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், ஏன் இந்த வழிமுறை? ஏன் சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

இந்த ஒரு வழிமுறைதான் எனக்கு இருந்தது. ஏனெனில், பட்டினிப் போராட்டம் மன உறுதியை அடிப்படையாகக் கொண்டது.

இந்தப் போராட்டம் உங்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், உங்கள் உடல்நிலை?

அது ஒரு பொருட்டல்ல. நாம் அனைவரும் அழியக்கூடியவர்கள் தாம்.

உங்கள் உடல் மீது திணிக்கப்படும் இத்தகைய தண்டனை தான் சிறந்த வழி என்று உறுதியாக நம்புகிறீர்களா?

இது திணிப்பு அல்ல. இது தண்டனையும் அல்ல. இது என்னுடைய இன்றியமையாத கடமை என நினைக்கிறேன்.

Tribes
தங்கள் குடும்பம் உங்கள் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

எனது தாய் எனது முடிவு குறித்த அனைத்தையும் அறிவார். அவர் கல்வியறிவு இல்லாதவர் என்றபோதும், மிகவும் எளிமையானவர் என்றபோதும், எனது கடமைமையை நிறைவேற்ற அனுமதிப்பதற்கான துணிவு மிக்கவர்.

தங்கள் தாயை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள்?

ஏறத்தாழ அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு. எங்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது. அதாவது நான் எனது நோக்கத்தை நிறைவேற்றிய பிறகுதான் அவர் என்னை சந்திப்பார்.

இருவருக்கும் அது மிகவும் கடினமாக இருக்குமே...

அவ்வளவு கடினம் அல்ல (சற்று அமைதி). ஏனெனில், அதை எப்படி விவரிப்பேன். நாம் அனைவரும் இங்கு ஏதேனும் ஒரு செயலைப் புரியவே வருகிறோம். அதோடு தனியாகவே வருகிறோம்.

சரி. ஏன் நீங்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள்? ஏதேனும் குறிப்பான காரணம் உண்டா?

அது எனது விருப்பம் அல்ல. ஆனால், அரசு இந்தப் போராட்டம் சட்டத்திற்குப் புறம்பானது என்று சொல்கிறது.

ஆனால், அரசு உங்கள் பட்டினிப் போராட்டம் ஒரு தற்கொலை முயற்சி என்றும், அது ஒரு குற்றம் என்றும் சொல்கிறதே?

அவர்கள் அப்படி நினைத்தாலும் நான் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை. அப்படி நான் தற்கொலை செய்து கொள்ளக்கூடியவளாக இருந்தால், நீங்களும் நானும் இவ்வாறு உரையாட முடியுமா? எனது பட்டினிப் போராட்டம் ஒரு வழிமுறை. எனக்கு வேறு எந்த வழிமுறையும் இல்லை.

எவ்வளவு காலத்திற்கு இதைத் தொடர தயாராக இருக்கிறீர்கள்?

எனக்கு நம்பிக்கை இருந்தபோதும், காலம் தெரியவில்லை. எனது நிலைப்பாடு உண்மையைச் சார்ந்தது. இறுதியில் உண்மை வெற்றிபெறும் என்று நம்புகிறேன். கடவுள் எனக்கு துணிவைத் தருகிறார். அதனால் இந்த செயற்கை வழிமுறைகளின் மூலமாகவும் நான் உயிருடன் இருக்கிறேன்.

மருத்துவமனையில் பொழுதை எப்படி கழிக்கிறீர்கள்?

பெரும்பாலான நேரம் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறேன். அது எனது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சூழல்களே எது இயற்கை என்பதை நிர்ணயிக்கின்றன. (தனது மூக்கில் சொருகப்பட்டிருக்கும் குழாயைக் காட்டி) இது செயற்கையானது என்றபோதும் எனக்கு இயற்கையானதாகி விட்டது.

எதை மிகவும் இழந்ததாக நினைக்கிறீர்கள்?

மக்களை...! நான் இங்கு (மருத்துவமனையில்) கைதியாக இருக்கிறேன். அனுமதியின்றி என்னை யாரும் சந்திக்க முடியாது. மக்களைப் பிரிந்து இருப்பதை நான் மிகவும் வேதனையாகக் கருதுகிறேன்.

உங்களுடைய மேலான விருப்பம்...?

எனது விருப்பம்? பகுத்தறிவுள்ள மனிதர்களாக எங்கள் வாழ்வை நாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை வேண்டும்.

ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நீக்கப்படும் என்று நினைக்கிறீர்களா? தாங்கள் எதற்காகப் போராடுகிறீர்களோ அது தங்களுக்கு கிடைக்குமா?

எனது பணி கடுமையானது என்பதை உணர்கிறேன். ஆனால் நான் அதை மேற்கொள்ளத்தான் வேண்டும். நான் பொறுமையாக இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியான ஒருநாள் வந்தே தீரும். அதுவரை நான் உயிரோடு இருந்தால், அதுவரை பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்.

‘தெகல்கா' ஏட்டில் வெளிவந்த பேட்டியின்
தமிழாக்கமும், குறிப்பும் : பூங்குழலி
Pin It