universeஒரு மொழியின் வளர்ச்சி என்பது அதன் பயன்பாட்டைப் பொறுத்தே அமையும் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. 17ஆம் நூற்றாண்டு வரை இரண்டாம் நிலையிலிருந்த ஆங்கிலம்-கிரேக்க லத்தீன் மொழிச் செல்வாக்கை உதறிவிட்டு, வளரத் தொடங்கியதை ஆங்கில மொழி வரலாறு அறிந்தோர் உணர்வர். ஆங்கிலத்தின் பல்துறைப் பயன்பாடும், பல நாடுகளில் அதன் பரவலும் அதன் வளர்ச்சிக்குத் துணை நின்றன. தமிழ் மன்னர்களும் கங்கை கொண்டு, கடாரம் கொண்டு இமயத்தை வென்றனர் என்றாலும் தமிழை அங்கு பரப்பவில்லை. சென்றனர்; வென்றனர்; திரும்பினர். பிற மண்ணில் தமிழ் வளராவிட்டாலும் கூட, தமிழ் மண்ணிலாவது தமிழுக்கு உரிய ஊக்கமும் ஆக்கமும் தொடர்ந்து தரப்படவில்லை. இருப்பினும் தமிழ் தனது திறமையை, வலிமையைத் தன்னைப் பயன்படுத்திய துறைகளில் மெய்ப்பித்து வந்துள்ளது.

பண்டைய சமுதாயம் நிலவுடைமைச் சமுதாயமாகும். இந்தப் பின்னணியில் உள்ளுறை உவமமாகக் கல்லணை, மாமல்லபுரம், தஞ்சைப் பெருவுடையார் கோயில் பொறியியல் தொழில் நுட்பச் சான்றுகள், சித்த மருத்துவத்தில் தேவையான நூல்கள், வானியல், கணிதவியல் பற்றிய கருத்துக்கள், நூல்கள் இப்படிப் பல துறைகளிலும் தமிழ் தனது முத்திரையை ஐரோப்பியர் வருகைக்கு முன்பே பதித்துள்ளது. ஆனால் இவைகளுக்கு எல்லாம் தக்க பதிவுகள் இல்லை.

ஐரோப்பியர் வருகைக்குப் பின் நவீன அறிவியல் துறை மிகவும் விரைந்து இவ்வுலகில் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் தமிழகமும் ஒத்து உயரவேண்டுமானால் நம் மொழியில் அறிவியல் நுட்பக் கருத்துகளைப் பயின்று வருதல் வேண்டும். அதற்கேற்ப முயற்சிகளும் பயிற்சிகளும் நடைபெறுதல் வேண்டும். இக்கருத்தினை ஒட்டி அறிவியல் தமிழ் வளர்ச்சி அவ்வாறு நடைபெற்றுள்ளதா? நடைபெற்றனவெனில் எந்த அளவு அவை பயன் தந்துள்ளன? அதில் முடக்கம் இருப்பின் அதற்குத் தீர்வு என்ன என்று விடை காணுதல் நல்லது.

காரணங்கள்

அறிவியல் தமிழ் வளர்ச்சி குறித்த வரலாறு மெல்ல நடைபோட்டு வந்துள்ளது. இதற்குக் காரணங்கள், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் தங்கள் தவயோகத்தின் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்காக உருவாக்கப்பட்டது எனினும், பின்னர் குருகுலக் கல்வியாக்கப்பட்டு பாரம்பரியமாக போதிக்கப்பட்டது. மருத்துவச் செய்திகளும் ஒளிவு மறைவாகச் செய்யுள் வடிவத்தில் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

சங்க காலத்திற்குப் பிறகு தமிழர்களைத் தமிழன் ஆட்சி செய்யவில்லை. தொடர்ந்து பிற மொழியினரே ஆட்சி செலுத்தினர். தமிழர் ஆட்சியின் போதும் தமிழ் வளர்க்கப்படவில்லை. களப்பிரர் பாலி மொழியையும், வடமொழியையும் போற்றினர். பல்லவர் பிராகிருதத்தையும், வடமொழியையும் ஆதரித்தனர். நாயக்கர் காலத்தில் வடமொழி தலைமை பெற்றது. பின்னர் சுமார் 200 ஆண்டு ஆங்கில ஆட்சி நிலவியது. இதனால் சாதாரணத் தமிழ் மக்களால் தமிழில் அறிவியலை வளர்க்க இயலவில்லை.

இக்காலக் கட்டங்களில் எழுதப்பட்ட வடமொழி, சமயச் சார்புடைய மொழியாக மக்களிடம் அழுத்தம் கொண்டிருந்ததால் அறிவியல் அறிவு பெற்றவர்களாக விளங்கி வந்தவர்கள் பெரும்பான்மையினர் தமிழை விட வடமொழி அறிவை நிரம்பப் பெற்றவராக விளங்கினர். மேலும் புதிய கலைச் சொல்லாக்கத்துக்குத் தமிழினும் வடமொழியே ஏற்றது என்ற எண்ணமும் ஏற்பட்டிருந்தது. இக்கருத்தைப் பாரதி தன் கட்டுரையில் கூறும்போது ஒன்று அக்கால மொழி வழக்கு, இரண்டு கல்லாதவரை அடிமைப்படுத்துவதே கல்வியால் பெரும் பயன் என்றும் பெரும்பான்மைத் தமிழருக்குப் புரியாத மொழியில் சொல்வது உயர்வு என்றும் கருதப்பட்ட நிலை என்று கூறுகிறார்.

ஆங்கில மருத்துவக் கண்டுபிடிப்புகளால் நோய்களுக்கான காரணம், நுண்ணுயிர், வைரசு என்று அறிந்த நிலையில் சென்னையில் காலரா தோன்றிய போது இதைத் தடுக்க தமிழில் துண்டறிக்கை முதன்முதலில் சென்னை கிறிஸ்துவ சமயத்தினர் அச்சகத்தில் வெளியிடப்பட்டது. இச்சமயத்தில் தான் நோய்களுக்கான காரணம் சமயத்திலிருந்து பிரித்துச் சொல்லப்பட்டது. மேலும் மருத்துவம் ஜனநாயகப் படுத்தப்பட்டு மேலை நாட்டு மருத்துவம் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இக்காலகட்டத்தில் தமிழ் மருத்துவம் அதிகக் கலைச்சொற்களைக் கொடையளிக்க முடியாத நிலையிலேயே மறைமுகப் பணியில் (பரிபாஷை) இருந்தது.

இச்சமயம் இந்தியத் துணைக் கண்டத்தில் அறிவு மொழியாக வடமொழி இருந்ததால் கலைச் சொற்களும் வடமொழியாக அமைந்திருந்தது. ஆகவே மருத்துவத்தைப் பரப்ப வந்த தமிழ் இதழ்களின் பெயர்கள் கூட வடமொழியாகவே இருந்தன. (எ.கா) ஆரோக்கிய போதினி (1908) வைத்திய போதினி (1910) ஆரோக்கிய தீபிகை (1929).

யாழ்ப்பாணத்தில் தமிழ் மருத்துவம்

ஐரோப்பியர் வருகையோடு புதிய அறிவியல் தொழில் நுட்பம் தமிழகத்திலும் தமிழர் குடியேறிய நாடுகளிலும் கால் கொள்ளத் தொடங்கிற்று. அந்த அறிவியலைத் தமிழர்க்குத் தெரிவிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். 1832இல் இரேனியஸ் பாதிரியார் பூகோள சாஸ்திரம் என்ற நூலை வெளியிட்டார். 1860களில் இவ்வகையில் டாக்டர் சாமுவேல் ஃபிஷ் கிறீன் மருத்துவத்தை தமிழில் கற்பித்து 11 நூல்களுடன் கலைச்சொல் அகராதிகளையும் வெளியிட்டார். மேலும், அன்றைய நிலையில் புதிதான விஞ்ஞானத் துறையில் நின்று பணிபுரிந்து தமிழில் மருத்துவ அறிவியலை அறிமுகப்படுத்தி அத்துறையை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். அது தமிழுக்கு அன்று புதியதோர் துறை. அத்துடன் நில்லாது 33 மாணவர்கட்குத் தமிழ் வழியில் மேலை மருத்துவத்தைக் கற்பித்து மருத்துவராக்கினார். அதன்பிறகு அவர் இலங்கையிலிருந்து தன் பணியை விட்டு அமெரிக்காவிற்குச் செல்லாதிருப்பின் அவர் கொள்கைப்படி, மருத்துவக்கல்லூரியில் தமிழ் வழியில் மேலை மருத்துவத்தைத் தொடர்ந்து கற்பித்திருப்பார்.

இக்காலத்தில் தமிழகத்தில் சென்னை மருத்துவத் துறையில் பணியாற்றிய ம.ஜகநாத நாயுடு 1866ஆம் ஆண்டு “சாரீர வினா விடை” எனும் நூலையும் பிறகு “சுகபரி பாலன தினசரியை” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். அதன் பின்னர் 1901இல் எஸ்.எஸ்.முனுசாமி முதலியாரால் தேக தத்துவ சாஸ்திரம், 1908இல் ரங்கூனிலிருந்து சாமுவேல் என்பவரால் மானிட மர்ம சாஸ்திரம் அல்லது சிசு உற்பத்தி சிந்தாமணி என்னும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1911இல் பி.எஸ்.பிள்ளையால் தமிழ் மெட்டீரியாமெடிகா வெளியிடப்பட்டுள்ளது. 1924இல் ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் என்ற நூலும், 1927இல் வேங்கடராமஐயர் எழுதிய பிள்ளையுள்ளம் என்ற நூலும் வெளி வந்தன. 1933இல் உடலுறுதி எனும் நூல் சுவாமி சுத்தானந்த பாரதியால் இயற்றப்பட்டது. அதன்பிறகு 1941இல் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனால் வீட்டு வைத்தியம் எனும் நூல் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் ஒரு சில நூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும் 1967இலிருந்து தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை காந்தி நினைவு நிதி, சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், தென் மொழிகள் புத்தக டிரெஸ்டு, வானதி பதிப்பகம், பூம்புகார் பதிப்பகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை பல மருத்துவ நூல்களை வெளியிட்டு வந்துள்ளன.

வேதனை

இவற்றையெல்லாம் கூட்டிப் பார்த்தால் 150 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக மேலை மருத்துவப் புத்தகங்கள் 100 கூடக் கிடையாது. இவற்றிற்கான காரணங்கள் என்ன என்று ஆய்வு செய்ததில் மேற்சொன்ன செய்திகளைத் தவிரச் சில வெளிப்பாடுகள் மிகவும் வியப்பானவையாகவும் வேதனை தருவனவாகவும் உள்ளன.

1955 வரை தமிழகத்தில் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை. சென்னை மாகாணமாக இருந்த பொழுதும் வட்டார மொழிகளில் ஆட்சி நடைபெறவில்லை. மேலும் அரசாங்க வேலைகளைத் தமிழில் நடத்த நினைத்த அன்றைய அரசே சோதனையாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடிதப் போக்குவரத்தைத் தமிழில் ஏனோதானோ என நடத்தியது. அதை விரிவுபடுத்தத் தேவையில்லை என்றும் தீர்மானித்தது. 1955ஆம் ஆண்டுக்கு முன்னரே, சட்டமன்ற உறுப்பினர் கெஜபதி நாயக்கர் பிரேரணை மூலம் கடிதப் போக்குவரத்தில் முதலாவது தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வந்ததை அன்றைய ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில் தமிழை வளர்க்கத் தடைகள் எழுந்தன.

1930க்குப் பிறகு தான் தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வித் திட்டம் வகுக்கப் பட்டது. இக்காலக் கட்டத்தில் வெளிவந்த கலைச்சொல் பட்டியலில் தரப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலாவை வடமொழி அல்லது ஆங்கில ஒலி பெயர்ப்புகளாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இக்காலகட்டத்தில் தமிழைத் தூக்கிப் பிடிக்க உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இதை நிச்சயப்படுத்தும் விதமாக முதல் பட்டமளிப்பு விழாவில் நிறுவனர், துணைவேந்தர் இருவரும் இப்பல்கலைக்கழகம் தமிழ் அபிவிருத்திக்கு ஏற்பட்ட நிலையம் என்று சொன்னார்கள். மேலும் இப்பல்கலைக்கழகம் தமிழ்ப் பயிற்றுமொழி கல்லூரிகளில் வரப்போகிறது என்ற காலத்தில் கல்லூரிக் கல்வி மட்டத்தில் இடைநிலை வகுப்புகளுக்கு அறிவியல் பாடநூல்களை வெளியிட்டது. அவைகள் நவீன அசேதன இராசாயனம் (Modern in Organie Chemistry) 2 பகுதிகள், பௌதீக நூல் 2 பகுதிகள் (1941) ஆகும். இந்நிலையில் கல்லூரி மட்டத்தில் தாய்மொழிப் பயிற்சி புகுத்தப்படாமையால் இதற்குப் பிறகு இப்பல்கலைக்கழகம் அறிவியல் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்கலாம் என்று தமிழக அரசு 1959இல் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை 1937இல் பள்ளிகளில் பயிற்சி மொழி போன்று திட்டவட்டமானதாக இல்லை. கலைத்துறைப் பாடங்களை விரும்பினால் தமிழில் நடத்தலாம், ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை இருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதனால் சில சலுகைகள் தரப்படும் என்று கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1959 முதல் தமிழகக் கல்லூரிகளில் கலைத்துறைப் பாடங்கள் தமிழில்தான் பயிற்றுவிக்கப்படும் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தால் இன்று அறிவியலும் அந்த நிலையை எட்டியிருக்கும்.

கல்லூரிகளில் பாடநூல்கள் இல்லை என்ற நிலையைக் களைய 1959இல் கல்லூரித் தமிழ்க் கல்விக் குழு ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் 1962இல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 416 கலை பாடத்திற்கான நூல்களையும், 418 அறிவியல் நூல்களையும் வெளியிட்டது.

1969 சூன் தமிழ்ப் பயிற்று மொழியை மிகுவிக்கும் வகையில் தமிழக அரசுக் கல்லூரிகளில் சில பாடங்களைத் தமிழ்வழியில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது தமிழ்த் திணிப்பு எனப்பட்டது. 1970இல் இவ்வாணையைச் சிண்டிகேட் காங்கிரஸ்காரர்களும், ஏ.லெஷ்மணசாமி முதலியார் போன்றவர்களும் எதிர்த்தனர்.

இதைக் காரணம் காட்டியே தமிழகத்தில் ஆங்கிலம் சார்பாக ஓர் இயக்கம் உருவெடுத்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் டாக்டர் ஏ.எல்.முதலியார், டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் உட்பட பலர் ஆங்கிலப் பாதுகாப்பு மாநாடு நடத்தினர்.

இதன் காரணமாகப் பயிற்றுமொழி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த, காலகட்டத்தில் கல்வி மாநில அரசிடமிருந்து பொதுப் பட்டியலுக்கு மாறியது.

இந்த மாற்றம் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்தது. இதன்பிறகு தமிழ் நாட்டில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் கேந்திர வித்யாலயா பள்ளிகள் நூற்றுக் கணக்கில் தோன்றி ஆங்கில வழிக் கல்விக்கு மேலும் வழி கோலின. இந்நிலையில் 1962இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் 1975 ஆம் ஆண்டுக்குப் பின் அறிவியல் நூல்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது. இதனால் தமிழில் எழுதிய பல அறிவியல் நூல்கள் தட்டச்சு வடிவிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது போலவே 1983ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் தமிழ்துறை என்ற ஒரு புதிய துறை புதிதாக உருவாக்கப்பட்டு 15 மருத்துவ நூல்களையும் 14 பொறியியல் நூல்களையும் வெளியிடத் திட்டமிடப்பட்டு எழுதி வாங்கித் தயார் நிலையில் உள்ளன. இதில் பல நூல்கள் இன்னும் அச்சேறாமலேயே இருக்கின்றன.

இந்திய சோவியத் கூட்டு ஏற்பாடுகளின் படி அறிவியல் நூல்களைத் தமிழில் பரிமாறிக் கொள்ள 1954ஆம் ஆண்டு என்.சி.பி.எச். நிறுவனத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் ‘அனைவருக்கும் அறிவியல்’ என்ற நிலைப்பாட்டுடன் மீர், முன்னேற்ற பதிப்பகங்கள் மூலம் பல மருத்துவ நூல்கள் ரஷ்ய மொழியிலிருந்து தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. அதன்படி டாக்டர் அ.கதிரேசனால் 5 மருத்துவப் புத்தகங்கள் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டன. இதைத் தவிர ஏ.எஸ்.மூர்த்தியின் “இதயத்தை வலுவாக்கும் (1918) பாக்கிய சுந்தரத்தின் “நான் தந்தையைப் போல் இருக்கிறேன்” என்பதைப் போன்ற பல அறிவியல் நூல்கள் குறைந்த விலையில் வெளி வந்து திசையெங்கும் விற்கப்பட்டன. ஆனால் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னால் தன் வெளியீட்டை இப்பதிப்பகங்கள் நிறுத்திக் கொண்டன.

இலங்கையில் தமிழ் ஆர்வம்

தமிழ் மக்களிடையே மேல்நாட்டு மருத்துவம் பரவ எண்ணியவர் ஓர் அமெரிக்கப் பாதிரியான டாக்டர் கிறீன். இவர் இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற எடுத்த காலம் அன்னியர் ஆட்சியில் அடிமையாக வாழ்ந்த காலம். தமிழினை அறியாத இவர் தமிழைப் படித்துக் கலைச் சொல்லாக்க முறைகளைத் திட்டமிட்டு வகுத்துப் புத்தகம் எழுதி அல்லது எழுத வைத்துச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே முப்பத்து மூன்று மாணவர்களுக்குத் தமிழில் மருத்துவம் கற்பித்துள்ளார்.

டாக்டர் கிறீன் அந்நாளிலேயே மாணவர்கள் மேல்நாட்டு மருத்துவக் கல்வியைத் தமிழில் படித்தால் பயனுண்டா எனச் சற்றுச் சலனமடைந்தார்கள். “எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறி, தமிழில் கற்பது பற்றி சலனமடைந்துள்ளனர். அரசு சேவையில் ஈடுபட்டுச் சம்பளம் பெறும் வாய்ப்புக் குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள், உண்மை. ஆனால் வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலைபெறச் செய்தலே என் எதிர்கால நோக்கமாகும். எனவே பத்து நாட்கள் ஓய்வு கொடுத்து வைத்தியக் கல்வியைத் தொடர்வார்களா அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா? எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். இக்கூற்று இன்றைக்கும் நம் அனைவராலும் எண்ணிப் பார்க்கத் தக்கவொன்று.

இவர் எழுதிய நூல்களை அச்சிடுவதற்கு அரசு நிதியுதவி கோரிய பொழுது இலங்கை தேசாதிபதி. ‘அமெரிக்க மிசன் நடைமுறையில் கொண்டிருக்கும் ஆங்கிலம் தவிர்க்குங் கொள்கை பேராபத்தானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்’ எனப் பதில் எழுதி உதவி அளிப்பதற்கு மறுத்த பிறகும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளும் ஆறு மாணவர்களைப் பயிற்றுவிப்பேன். ஆம் கடவுள் எமக்கு ஆயுட் காலந்தரின் காலப்போக்கில் இம்மாகாணத்தை மேனாட்டு வைத்தியங்கள் கற்ற சுதேசிகளால் நிரப்பி விடுவேன்’. என்று மார்தட்டிப் புத்தகங்களை அமெரிக்க இலங்கை மிசன், தென்னிந்தியக் கிறித்துவப் பாடசாலை புத்தக சங்கம் ஆகியன புத்தகம் வாங்கி உதவியதன் வாயிலாக வெற்றி கண்டுள்ளார். இன்றைய நிலையில் ஜப்பான், இஸ்ரேல் போன்ற வளர்ந்த நாடுகள் தற்போது நமக்கு இக்கருத்து வழியே தான் வழிகாட்டுகின்றன.

மொழியைப் புதிய சூழலுக்குப் பயன்படுத்தும் போது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு அவ்வப்போது தீர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே வரும். இது நமக்கு மட்டுமல்ல எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். மலேசியாவிலுள்ள ‘திவான் பாஷா புஸ்தக்’ மலாய் மொழியில் கலை அறிவியல் மருத்துவம் பொறியியல் ஆகிய பாடங்களைப் பல்கலைக் கழக நிலை வரை பாட நூல்களை எழுதி மௌனப் புரட்சி செய்து வருகிறது.

இதே போல் இலங்கை அரசாங்க மொழித் திணைக்களம் பல்கலைக்கழக நிலை வரை ஏராளமான ஆங்கில நூற்களை மொழிபெயர்த்து வெற்றி பெற்றுள்ளது. இதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் ஜெர்மனியில் எல்லா மருத்துவ நூல்களும் ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்டு, ஜெர்மானிய மொழியிலேயே மருத்துவம் கற்பிக்கப்படுகிறது.

அறிவியல் தமிழ் ஆமை நடை போடுவதை முயல் ஓட்டமாக்குவதற்கு எதிர்காலத் தேவை என்ன?

தமிழ் வளர்ச்சிக்கு உழைக்கும் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். பல நாட்டுக் கூட்டமைப்பு ஒருமைப்பாட்டுக் குழுவின் மூலம் கலைச் சொற்கள் உருவாக்கப்படவேண்டும். இதனால் தமிழக வெளியீடு சிங்கை, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் படித்துப் பயன்பெற வாய்ப்பு உண்டு. உயிரியற் கலைச் சொற்கள், வேதியியல் சொற்களுக்கு அனைத்துலக ஒருமைப்பாடு கண்டுள்ளதை எடுத்தாள வேண்டும். அறிவியலாளர் எழுதி மொழி அறிஞர், தமிழறிஞர் கூட்டுடன் சொல் பயன்பாடு, மொழி அமைப்பு ஆகியன பிழைபடாமல் நூல் வெளி வரவேண்டும்.

பிற மொழிச் சொற்களை ஏற்க வேண்டிய இடத்தில் ஏற்க வேண்டும். அரசால் புதிய தமிழ் இலக்கணம் எழுதக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அறிவியல் கல்விக்கு ஏற்றவாறு சொல்லாக்கம், சொல்லமைப்புகளை எளிய, இனிய முறையில் பயன்பாட்டுத் தமிழ் இலக்கணத்தை உருவாக்க வேண்டும். 31 மொழிகளில் 65 நாடுகளில் 250 கலைச்சொல்லாக்கக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. இதன் உதவியை நாடவேண்டும். கலைச்சொற்களைத் திரட்டி எல்லா நாட்டுக்குமான பொதுமை காண வேண்டும்.

மற்ற மொழிச் சொற்களுக்கு நிகரான சொற்கள் எளிதில் கிடைக்கப் புதிய அகராதிகள் அவசியம். இது தவிர ஒரு மேற்கோள் அகராதித் திட்டமும் வட்டாரச் சொல் அகராதியும் இன்றியமையாதது, இன்று வரை ஒரு தரப்படுத்தப்பட்ட மருத்துவச் சொல்லுக்கான அகராதி பல்கலைக்கழகங்களின் மூலம் வெளிவராதது வருந்தத்தக்கதே. புதிய கண்டுபிடிப்புகள், கருவிகள் பல நாடுகளில் உருவாக்கம் பெறும் பொழுது அப்போதே இங்குப் புழக்கத்தில் தமிழ்ச்சொல் வர வழி செய்தல் வேண்டும்.

மொழிபெயர்ப்பு மையம்

அறிவியல் பாடநூல் முதற்பதிப்புக்கும் அதன் அடுத்த பதிப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் புத்தகத்தில் காட்ட வேண்டும். இதற்கு ஒரு மொழிபெயர்ப்பு மையம் தேவை. இயந்திர மொழிபெயர்ப்பு வசதி இருப்பின் கால மிச்சம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவ்வசதியற்ற நிலையில் அல்லது இயந்திர மொழிபெயர்ப்பு உதவா நிலையில் தேவைக்குரிய மொழிபெயர்ப்பின் மூலம் நூல் ஆசிரியருக்கு அல்லது கட்டுரை ஆசிரியருக்கு உரிய தேவையான கட்டுரைகளை மட்டும் மொழி பெயர்த்துக் கொடுத்தல் வேண்டும். அல்லது தேவைக்குத் தகுந்தபடி ஜெர்மன், ரஷ்யன், பிரஞ்சு முதலிய பிற மொழிகளைக் கற்றுக் கொடுத்து இவர்களாகவே மொழிபெயர்ப்பு செய்து கொள்ளச் செய்தல் வேண்டும். இதில் இடர்ப்பாடு நேரும் என்ற நிலையில் ஒரு பொது மையத்தில் பல மொழி அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் இயங்கச் செய்தல் வேண்டும்.

இவ்வகைத் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆரம்ப காலங்களில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவரை பல்வேறு தமிழ்க் களஞ்சிய அகராதிகள் துறை சார்ந்தனவாகவும் பொது அறிவியலிலும் வெளி வந்துள்ளன. இவற்றுள் சமீபத்தில் வெளிவந்துள்ள “ஆனந்த விகடன்” குழுமத்தால் பல்துறை அறிஞர்களின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ள “பிரிட்டானிகா தகவல் களஞ்சிய அகராதி” மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், சுற்றுச்சூழல் அறிவியல் சிறப்புத் தகுதிக்கான திறன் மையம் பல்கலைக்கழக மான்யக் குழுவின் உதவியுடன் வெளியிட்டுள்ள “சுற்றுச் சூழல் களஞ்சிய அகராதி” ஆகியன சிறப்பாக உள்ளன. சுற்றுச்சூழல் களஞ்சிய அகராதி போன்று ஏனைய துறைசார்ந்த அறிவியல் களஞ்சிய அகராதிகளை எதிர்காலத்தில் வெளிக்கொணரலாம். இதற்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

விடுதலைக்குப் பின்னர் அறிவியல் தமிழ் நூல்கள், கட்டுரைகள் பொருளடைவை இராம.சுந்தரம் அவர்கள் 1980 வரை தொகுத்துள்ளார். இப்பணி 2021 வரை நிறைவு செய்ய வேண்டிய பணியாகும். 1980க்குப் பிறகும் பல அறிவியல் நூல்களும், கட்டுரைகளும் களஞ்சியங்களும் வெளியிடப்பட் டுள்ளன. இவற்றின் நூல், கட்டுரை, பொருளடைவுகள் உருவாக்கப்பட வேண்டும். அதோடு நில்லாமல் இந்நூல்கள் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு கலைச்சொல், துறைச் சொற்றொடர், வாக்கிய அமைப்பு, நடைச் செப்பம், நூலின் கருப்பொருள் ஆகியவை திறனாய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். திறனாய்வின்றி எத்துறையிலும் தரத்தை எதிர்பார்ப்பது சரியான முறையோ, நடைமுறையோ ஆகாது. இப்பணியை ஆர்வலரும், அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்களும், அறிவியல் தமிழ்த்துறை- யினரும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டும். தொடர்ந்து சீரான தமிழ் வளர்ச்சிக்குத் திட்டவட்டமான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். புதுமையாக்கத்தாலும் அறிவியல் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டாலும் மொழியில் ஏற்பட்டுவரும் பல மாற்றங்களை நெறிமுறைப்படுத்த வேண்டியது இன்றைய இன்றியமையாத தேவை. இதற்கு மொழியிய ல் அறிஞர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ‘மொழித் திட்டக்குழு’ (Language Planning Commission) அமைக்கப்பட வேண்டும். இத்திட்டக்குழு வகுக்கும் மொழிக் கொள்கையின் அடிப்படையில் எதிர்காலச் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

இம்மொழித் திட்டக் குழுவின் உட்பிரிவாக, “அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் தரப்படுத்தல் குழுவும்” (Commission for standardization of scientific and technical terminology) அமைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது. இம்மொழித் திட்டக் குழுவிற்கு உறுதுணையாகத் தமிழ் வளர்ச்சித்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றம் போன்றவற்றின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதும் தேவையான ஒன்று. ஏனெனில் எதிர்காலத் தமிழ் மொழி வளர்ச்சி இலக்கியம் சார்ந்ததாக மட்டும் இல்லாது அறிவியல் தமிழ் சார்ந்ததாகவும் உள்ளது.

இவையனைத்தையும் விட மிக முக்கியமானது ஒன்று உண்டு. 100 மொழிகளைப் பேசி எழுதி வந்த இந்தோனிஷியா, சுதந்திரம் பெற்றவுடன் மக்களவைச் சட்டத்தின் மூலம் “பாஷா இந்தோனிஷியாவே” பயிற்சிமொழிக்குரிய இந்தச் சட்டத்தை இனிவரும் எந்த அரசும் மாற்றக் கூடாது என்ற நிலையில், அங்கு அம்மொழி கோலோச்சி வருகிறது. தமிழகத்தில் தந்தைப் பெரியாரின் எழுத்து மாற்றம், லை, வை, னை யாக மாறியது சட்டத்தினால் தான். ஆக அறவியல் நூல்கள் எழுதத் தமிழறிவு, ஆர்வம், முயற்சி, உழைப்பு, பொறுமை தேவை என்பதை விட இனிமேல் அறிவியலுக்கான பாடமொழி தமிழ் என்ற ஒரு சட்டமே இன்று தேவையானது. இதில் இரண்டாவது எண்ணம் என்பது கூடாது. தேவை அதிகமாகும் போது பொருள் உற்பத்தியும் பெருகும் என்பது சித்தாந்தம், தேவையானால் மொழிப் பயிற்சிக்கு ஆங்கிலத்தைத் துணையாகக் கொள்ளலாம்.

டாக்டர் சு.நரேந்திரன்