அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்புக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பது அண்மையில் இந்தியத் தலைமை நீதிமன்றம் அளித்திருக்கும் ஆணை. இந்தியா முழுவதிலும் ஆண்டொன்றுக்கு 52,175 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கிறார்கள் என்பதனால் இது அந்த மாணவர்களைப் பொறுத்த பிரச்சினை என்று கருதிவிட முடியாது. நாடு, மக்கள், அரசமைப்பு, கூட்டாட்சித் தத்துவம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் / சிக்கல்கள் இதில் அடக்கம்.

ஏன் அகில இந்தியத் தேர்வு? இதுவரை இருந்து வருவதைப் போல மாநில அளவில் தேர்வு நடந்து வருவதில் ஏன் குறுக்கீடு செய்ய வேண்டும்? குறுக்கீட்டுக்கான அவசியம் என்ன? அவசரம் என்ன? மே முதல் நாளில் முதல் கட்டத்தேர்வு போதுமான அவகாசம் இல்லாமலே ஏன் நடத்தி முடிக்கப்பட்டது?

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், காஷ்மீர் முதலான மாநிலங்கள் எதிர்த்துள்ளன. வழக்கும் தாக்கல் செய்துள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம் மட்டும் நுழைவுத் தேர்வை தாமே நடத்திக் கொள்ள இந்திய உச்சநீதிமன்றமே அனுமதித்துள்ளது.

2007 முதல் நடைபெற்று வரும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை பற்றிய தனிச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நடைமுறையில் உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சலுகை தமிழ்நாட்டுக்கு ஏன் தரப்படவில்லை? இத்தகைய மாறுபட்ட நடைமுறைகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு எது காரணம்?

“கல்வி” மாநில மக்கள் பற்றியது. அதில் தேவையான அக்கறையை மாநில அரசுகள் தாம் காட்ட முடியும், செயல்பட முடியும். எனவே கல்வி மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக மாநிலப்பட்டியலில் (ஷிtணீtமீ றீவீst) வைக்கப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அது மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்குமான பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது. அதிலிருந்து தொடங்கிய தொல்லைகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கின்றன.

இந்திய மக்கள் தொகைக்கும், மருத்துவர் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள இடைவெளி ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே காணக்கூடியது. மருத்துவர் எண்ணிக்கையைக் கூட்டி மக்கள் நலம் மேம்பாடு அடைய மருத்துவ வசதிகளைப் போதிய அளவில் அளித்திடும் வழிவகையைக் காணாமல் வேறு வகைகளில் கவனம் செலுத்துவது மக்கள் நல அரசுக்கு மாண்பு சேர்ப்பதாக அமையாது.

இதில் தாக்கீடு பிறப்பித்திருப்பது நீதித்துறை என்பதால் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் சூழல்! நம் நாட்டு உயர்நிலை நீதி மன்றங்கள், நீதிபதிகள் பற்றிப் பெரியார் கூறியிருக்கும் சொற்கள் நம் கவனத்திற்கு வருகின்றன. “இருப்பவை சட்டக் கோர்ட்டுகளே தவிர நியாயக் கோர்ட்டுகள் அல்ல” என்றார் பெரியார்.

இன்றைய நிலையோ? மக்கள் பிரதிநிதிகள் ஆய்ந்து, விவாதித்து நிறைவேற்றும் சட்டங்கள் தவிர, நீதிபதிகள் என்போர் இயற்றித்தரும் சட்டங்களே ஆளும் தகுதி பெற்றவை என்ற நிலை! நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் நிலை! உலகில் எங்கும் இல்லாத “நீதிபரிபாலன” முறை! மாற்றுச் சட்டம் கொண்டு வந்தாலும் அதனைச் செல்லாது என அறிவிக்கும் நிலை.

10-15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வைகைக் கரையில் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த வழக்குரைஞர்கள் கூடித் தீர்மானம் போட்டது நினைவிருக்காலாம். பழைய மனு நூல் அடிப்படையில் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட வேண்டும் என்று தீர்மானம்! இந்தியாவில் மாநிலங்கள் ((States)) தேவையில்லை. ஒரே ஆட்சி மத்திய ஆட்சி மட்டுமே என்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கையே! அதனைச் செயல்படுத்தத்தானோ, அகில இந்திய முறை? அகில இந்திய மருத்துவத்துறை ஆக்கப்பட வேண்டும் எனும் கருத்து ஆள்வோர் மனங்களில் உள்ளது.

அதற்கான முன்னோட்டமோ அகில இந்திய நுழைவுத் தேர்வு? எது நோக்கமாக இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டிய ஒரு தீமை! பல மாநிலங்களில் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. சில மாநிலங்கள் மவுனமாக உள்ளன. அகில இந்தியத் தேர்வு இந்தியில் எழுதலாம் என்பதால் “மார்க் கொள்ளை” நடத்தி வெற்றி பெறலாம் என்பதால் மவுனமோ? இருக்கலாம்.

மத்திய பிரதேசத்திற்கு ஒரு வழி! தமிழ்நாட்டுக்கு வேறு வழி, அகில இந்திய வழி என்றால் சம நீதி இல்லையே! ஆழ் கிணற்றில் அமிழ்ந்து கிடைக்கும் ஆமையாக இல்லாமல், கண நேரமே ஆனாலும் நெருப்போடு மோதும் மின் மினிப் பூச்சிகளாகத் தமிழர் மாறினால்தான் இருக்கும் சிலவற்றையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும்!

1920-இல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி. 1925 வரையிலும் மருத்துவத்துறை வெள்ளையர் வசமே! 1926இ-ல் “இந்தியர்” கைக்கு வந்ததால் சமஸ்கிருதம் நீக்கப்பட்டு நம் ஆள்கள் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். டாக்டர் என்றால் ரங்காச்சாரி என்று இருந்த நிலை மாற்றப்பட்டு டாக்டர் குருசாமி முதலியார்கள் வந்தனர். அத்தகு சீர்மிகு நிலைக்குக் காரணம் 1921 முதல் நீதிக்கட்சி தந்த இட ஒதுக்கீடு முறை.

தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் 2672 மாணவர்கள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகின்றனர். 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அகில இந்திய நுழைவுத் தேர்வு என்றால் இட ஒதுக்கீடு முறை என்னாவது! பழையபடியே, ரங்காச்சாரிகள் தானா? குருசாமி முதலியார்கள் வர முடியாதே! எப்பேர்ப்பட்ட சமூக அநீதி!

மத்தியப் பிரதேசம் மட்டும் தனி வழி செல்லலாம். தமிழ்நாடு தனி வழி செல்ல அனுமதிக்க முடியாது என்று கோர்ட் சொல்கிறது என்றால் அண்ணா சொன்னார் “கந்தசாமியும் கலெக்டர்! கார்த்திகேயனும் கலெக்டர்! கந்தசாமி பில் கலெக்டர். கார்த்திகேயன் ஜில்லா கலெக்டர்” என்று.

மத்தியப் பிரதேசம் “கார்த்திகேயனா” தமிழ்நாடு “கந்தசாமி” யா?

பிறகென்ன இந்திய யூனியன்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரு நாடு என்பது எப்படி நிதர்சனம்? இன்னும் பல வினாக்கள் விடை தேட வேண்டிய வினாக்கள்!

வினாக்குறி ஆபத்தானது!