5 கதாநாயகிகளுடன் நடிக்கிறார், ஆட்டோகிராஃப் 2ஆம் பாகம் என்றெல்லாம் கேள்விப்பட்டு, தொடர்ந்து சருக்கிக்கொண்டே இருக்கும் சேரன் ஆட்டோகிராஃப் போன்றே ஒரு படத்தில் நடிக்கிறார் போல என்று நினைத்திருந்தேன். படத்தின் இயக்குனர் ஜெகன்நாத் சேரனிடம் உதவி இயக்குனராய் இருந்தவர். இதற்கு முன் இரண்டுப் படங்கள் எடுத்திருக்கிறார். ஒன்று, படு பாடாவதியான 'புதிய கீதை', இன்னொன்று கொஞ்சம் சுமாரான 'கோடம்பாக்கம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சேரன் வாய்கொழுப்படங்காமல் பத்திரிக்கையாளர்களை ஆபாசமாகத் திட்டியது நாம் அறிந்ததே. இவைகளினால் இந்தப் படத்தின் மீது எந்த எதிர்ப்பார்ப்பும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழாமல் பத்திரிக்கைகள் பார்த்துக்கொண்டன.

ஊருக்கெல்லாம் திருமண அழைப்பிதழ் அச்சடித்து விற்கும் சேரனைத் திருமணம் செய்துகொள்ள எந்த பெண்ணும் சம்மதிப்பதில்லை. காரணம், சேரன் சிறு வயதில் சில மாதங்கள் மனநல சிகிச்சை பெற்றவர். இந்த உண்மையை திருமணத்திற்குப் பார்க்கும் பெண்களிடம் மறைக்காமல் அவர் சொல்ல, யாரும் திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். இப்படியாக தொடர்ந்து பெண் தேடும் படலம் தான் படம். இதற்கிடையில் மூன்று காதல் கதைகள்.

சேரனுக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடக்கிறது, அந்த பெண் திருமணத்திற்கு முன் காதலனுடன் ஓடிப்போகிறார். அந்தப் பெண் ஏன் அப்படி செய்தாள் என்ற அவர் தரப்பு நியாயம் படத்தின் பிற்பாதியில் வருகிறது. திருமணம் நின்றுபோனதால் நிலைகுலைந்து போயிருக்கும் சேரனை, தன் கதையைச் சொல்லி மீட்டெடுக்கிறார் நடு ரோட்டில் அவருக்கு அறிமுகமாகும் கண்பார்வையற்ற பசுபதி.

விருமாண்டி, வெயில், ஈ வரிசையில் பசுபதியை சரியாய் பயன்படுத்திக் கொண்ட படம் இது. ‘குசேலன்’ பாதிப்பிலிருந்து பசுபதியை இந்தப் படம் காப்பாற்றும் என்று நம்பலாம். பசுபதிக்கு, வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக, ‘நெடுமாறன்’ என்ற நல்ல தமிழ் பேசும் கதாபாத்திரம். கணீரென்ற வசன உச்சரிப்பும், கம்பீரமான உடல்மொழியும் கொண்டு, கண்பார்வை இல்லையென்றாலும் தன்னம்பிக்கை நிறைந்தவர் என்ற கதாபாத்திரத்தின் தன்மையை சரியாய் வெளிப்படுத்தியிருக்கிறார். நெடுமாறனின் ரசிகையாக ‘தமிழிசை’ என்ற கதாபாத்திரத்தில் கஜாலா. தமிழிசைக்கும் நெடுமாறனுக்கும் முதலில் சின்ன மோதல், பின் காதல், திருமணம், குழந்தை என்று நெடுமாறனின் கதையே ஓர் அழகான குறும்படம்.

Cheran in 'Raman thediay seethai' நெடுமாறனிடம் இருந்து தன்னம்பிக்கை பெற்று மீண்டும் பெண்தேடும் படலத்தைத் தொடர்கிறார் சேரன். படத்தின் இரண்டாம் பாதி முழுக்க நாகர்கோவிலில் நடக்கிறது. சேரன் மூன்று வருடங்களுக்கு முன் முதலில் திருமணத்திற்கு பெண் பார்த்ததும் நாகர்கோவிலில்தான். திரும்ப நாகர்கோயிலுக்கு வேறொரு பெண்ணை பார்க்கப் போகிறார். அங்கே ஆட்டோ டிரைவர் நிதின் சத்யாவின் அறிமுகம். மூன்று வருடத்திற்கு முன்னால் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்ன முதல் பெண்ணையும், திருமணத்திற்கு முன் ஓடிப்போன பெண்ணையும் நாகர்கோவிலில் சந்திக்கிறார். அங்கே அவருக்குப் பெண்கிடைத்ததா என்பதுதான் மீதிக் கதை.

படத்தின் முன்பாதியில் பசுபதியும், பின்பாதியில் நிதினும் படத்திற்கு வலு சேர்கிறார்கள். கொஞ்சம் சீரியசாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தை நிதின் கலகலப்பாக்கியிருக்கிறார்.

சேரன் முதுகை காட்டி குலுங்கிக் குலுங்கி எங்கேயும் அழவில்லை, 'என்னடா ஆச்சு' என்று கதாநாயகிகளுடன் கொஞ்சவில்லை, பக்கம் பக்கமாக செண்டிமெண்ட் டயலாக் எதுவும் பேசவில்லை. உண்மையில் சேரன் முந்தையப் படங்களைவிட நடிப்பில் நிறைய தேறியிருக்கிறார். அதிர்ந்து பேசாத, தவிப்பும் ஏக்கமும் நிறைந்த அதேசமயம் வாழ்கையை பாசிட்டிவாகப் பார்க்கிற ஒரு கதாபாத்திரம். சேரன் நிறைவாகவே செய்திருக்கிறார்.

இருந்தாலும் ‘ஏற்கனவே பிடிக்கலைனு சொன்ன பொன்னுகிட்ட திரும்ப ப்ரப்போஸ் பன்னுறது மேனர்ஸ் இல்ல’ போன்ற மொக்கையான டயலாக்கை எந்த உணர்ச்சியும் இல்லாமல் சேரன் பேசும்போது திரையரங்கே ‘தாங்கலைடா சாமி’ என்று அலறுகிறது.

கண்தெரியாத பசுபதியின் காதல் மனைவியாக கண்ணிற்கு அழகான கஜாலா, திருட்டுப் பயல் நிதினை திட்டித் திட்டி திருத்தும் - நாஞ்சில் தமிழ்ப் பேசும் கல்லூரி மாணவி கார்த்திகா, முதலில் சேரனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு பிறகு அவரது குணம் பிடித்துப்போய் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் வித்யா ராமன், திருமணத்தன்று காதலனுடன் ஓடிப்போய் பின் வறுமையில் வாடும் ரம்யா - இப்படி கதையின் நாயகிகள்.

கதையின் முடிவு கிட்டதட்ட தெரிந்தபிறகு, தேவையில்லாமல் படத்தை இழுத்து பார்வையாளனின் பொறுமையை சோதிக்கிறது நவ்யா நாயரின் கதாபாத்திரம். அவர் சம்பத்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டால்கூட படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஒரு வேளை ஏற்கனவே ஆட்டோகிராஃபில் நான்கு கதாநாயகிகளுடன் நடித்துவிட்டதால், எண்ணிக்கையை ஐந்தாக்குவதற்காக சேர்த்திருப்பார்களோ?

பிரமாண்டம், கவர்ச்சி என்று எதையும் நம்பாமல், கதையை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குனர். நடிகர்களையும் கதையின் பாத்திரங்களாக மட்டுமே உலவவிட்டிருக்கிறார். சேரனை சாலை விபத்திலிருந்து காப்பாற்றும் கண்பார்வையற்ற பசுபதியின் அறிமுகக் காட்சி, காதலியின் ரிப்பனை கையில் கட்டிக்கொண்டும் ஆட்டோவில் மாட்டிக்கொண்டும் அலையும் நிதின், நெடுமாறனைப் போலவே கையைக் குவித்து ‘வாழ்த்துக்கள்’ என்று சொல்லும் அவரது சிறுபெண் என்று படம் நெடுகிலும் சின்னச்சின்ன கவிதை போன்ற காட்சிகளில் இயக்குனர் தெரிகிறார். இனி ஜெகநாத்திடம் இதுபோன்ற நல்ல கதையுள்ள படங்களை எதிர்பார்க்கலாமா?

சரி, பல பெண்களால் நிராகரிக்கப்பட்டும் தொடர்ந்து சீதையைத் தேடும் ராமனின் கதையை சினிமாவில் சொல்லியாகிவிட்டது. பல ஆண்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்ற பின்னும் காப்பி தட்டோடு காத்திருக்கும் எண்ணற்ற பெண்களின் கதையை எப்போது சொல்லப் போகிறோம்?

Pin It