90s kids என்றோர் இனமுண்டு. அதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அதற்குச் சற்று முன் வாழ்ந்த இன்னோர் இனமுண்டு. அதற்கு ‘90s teens’ என்று பெயர் வைக்கலாம். கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸ், காரண காரியத் தொடர்பின்றி ஒரு பெரிய கல்லை மலைமேல் ஏற்றிச் செல்வதைப் போல பழைய நினைவுகள் எனும் தாங்க முடியாத பெரும் பாரத்தைச் சுமந்து திரிபவர்கள்தான் இந்த 90s teens. மாற்றம் ஒன்றே மாறாதது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்; எல்லாக் காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் கண்முன்னால் சகிக்க முடியாத வேகத்தில் நிகழும் மாற்றத்தைக் கண்டு உலர்ந்து போயிருக்கும் ஒரு தலைமுறை என்று இவர்களைச் சொல்லலாம்.இருபதாம் நூற்றாண்டு மாற்றங்களின் நூற்றாண்டு என்பார்கள். பல புரட்சிகள், மக்களாட்சியின் பரவல், சுதந்திரப் போராட்டங்கள், அறிவியல் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் போன்றவற்றால் மக்களின் வாழ்வியல் பெரிதும் மாறிப்போனது இருபதாம் நூற்றாண்டில்தான். இருபது, முப்பது ஆண்டுகளில் மெல்ல நிகழும் மாற்றங்கள் எல்லாம் 90களின் இறுதியில் திடீரென்று வேகமெடுத்தது. சட்டென்று மாறிய வானிலையைப் போல வெறும் பத்தாண்டுகளில் உலகம் மட்டுமின்றி, ஊராட்சி, நகராட்சிகளும் ஒட்டுமொத்தமாக மாறிப் போயின.
புதிய பொருளாதாரக் கொள்கைகள், உற்பத்தி முறை, நுகர்வியத்தின் வேகம், இன்டர்நெட், செல்போன், போன்ற பல காரணங்களால் தாங்கள் வாழ்ந்த பால்ய காலம் தங்கள் கண்ணெதிரிலேயே மறைவதைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற தலைமுறைதான் 90s generation. ஒரே வாழ்க்கையில் இரண்டு முரண்பட்ட துருவநிலைகளைக் காலம் இவர்களுக்குத் தரிசிக்கத் தந்திருக்கிறது. பால்ய வயதில் பக்கத்து வீட்டு ஜன்னலில் தொங்கிக் கொண்டு ‘ஒளியும் ஒலியும்’ பார்த்த இவர்கள்தான் நாற்பதுகளில் நரைத்த தலையுடன் சோசியல் மீடியாக்களில் புகுந்து விளையாடுகிறவர்கள். கூட்டுக்குடும்பத்தின் பழமையான உன்னதங்களில் புளகாங்கிதம் அடைந்து அதன் சிதறல்களில் மனம் சிதைந்து ரகசியமாகக் கண்ணீர் விடுபவர்கள். அப்படி வாழ்ந்தவர்களின் கதையாகவே மெய்யழகன் திரைப்படம் தோன்றுகிறது.
பழைய நினைவுகள் தரும் சுகமான வலிகளைச் சொல்லும் nostalgic காட்சிகளும் பாடல்களும் (‘பசுமை நிறைந்த நினைவுகளே’, ‘அந்த நாள் ஞாபகம்’, ‘துள்ளித் திரிந்ததொரு காலம்’, ‘ஏதோ ஒரு பாட்டு’) தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்திருக்கின்றன. அப்படியான nostalgic உணர்வுகளையே மையச்சரடாகக் கொண்டு வெளிவந்து வெற்றி பெற்ற முதல் படமாக தங்கர்பச்சானின் ‘அழகி’யைச் சொல்லலாம். அதைத் தொடர்ந்து நிறைய படங்கள் வெளிவந்தன. அதில் ‘ஆட்டோகிராப்’, ‘96’ போன்ற படங்கள் பெரிய வெற்றியை அடைந்தன. இவையெல்லாமே காதல் நினைவுகளைக் கச்சாப் பொருளாகக் கொண்டு வெளிவந்தவை.
மெய்யழகன் அப்படியான 90களின் வாழ்க்கையை nostalgic சினிமாவாக திரையில் வடிக்கிறது என்றாலும் இதில் காதல் இல்லை. பழைய நினைவுகளைக் காட்சிகளாக்கும் மேற்சொன்ன படங்களில் எல்லாமே ஈரம் கசிந்த விழிகளுடன் நினைவுச் சுமைகளைச் சுமந்து திரிபவர்களாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்களின் nostalgia சினிமாவில் வந்ததாகவே தெரியவில்லை. மெய்யழகன் படத்திலும் அருள்மொழி (அரவிந்த் சாமி) மற்றும் மெய்யழகன் (கார்த்தி) இருவரும் பழைய நினைவுகளைப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்; சிரிக்கிறார்கள்; சிலிர்க்கிறார்கள்; அழுகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி, இதில் வரும் ஆண்கள் எல்லாருமே (ராஜ்கிரண் கூட) ஏதோவொரு தருணத்தில் அல்லது பல தருணங்களில் கடந்த காலத்தை நினைத்து பொசுக் பொசுக்கென்று கண்ணீர் விட்டு அழுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் யாரும் அப்படி இல்லை. சொல்லப்போனால் இந்தப் படத்தில் பெண்களே இல்லை. மெய்யழகன் ஆண்களின் கதை. திகட்டத் திகட்ட வாழ்ந்த ஆண்களின் கதை. தலை நிறைய கனக்கும் நினைவுச் சுமைகளை இறக்கி வைக்கத் தெரியாமல் அல்லது விரும்பாமல் தூக்கித் திரியும் ஆண்களின் கதை.
பழைய நினைவுகளைக் கிளரும் ஒரு நாவலைப் போலத் திரைப்படத்தின் காட்சிப் படிமங்களை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார். தி.ஜானகிராமன் நாவல்களில் தென்படும் அழகியல் அல்லது அற்புத நவிற்சிவாதத் தன்மையை இந்தப் படத்தில் காணமுடிகிறது. இது இயக்குநர் விரும்பி வரித்துக் கொண்டதாக இருக்கலாம். தி.ஜா.வின் நாவல்களில் ஒரு வித classic அல்லது divinityஐ உணரமுடியும். இந்தப் படத்திலும் தஞ்சாவூர் எனும் கதைக் களம், கோயில் கோபுரம், நாதஸ்வர ஓசை, காவிரியாறு போன்றவற்றின் வழியாக அந்த classic feel அல்லது divine feel படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. அத்துடன் உறவுகளின் உன்னதங்களை இணைக்கும் போது நிகழும் அழகியலைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது மெய்யழகன்.
முதலில் சொன்ன மாதிரி 90s teensதான் உறவுகளின் நெருக்கத்திலும் அரவணைப்பிலும் வாழ்ந்த கடைசி தலைமுறை. 2k தலைமுறையினருக்கு உறவுகள் அத்தனை முக்கியமில்லை. அதற்காக அவர்கள் உறவுகளை வெறுக்கிறவர்களும் இல்லை. அவர்களுடைய வாழ்வியல் எல்லைக்குள் உறவுகளுக்கான இடம் குறைவு. அது அவர்கள் திட்டமிட்டதல்ல; காலம் அவர்களுக்குத் தந்தது அவ்வளவுதான். அவர்களில் பலருக்கும் உறவுப் பெயர்களே சரிவர தெரியாது. சித்தி, பெரியம்மா, அத்தை மூவருமே அவர்களுக்கு auntyதான். அத்தான், மைத்துனன், ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி எல்லாருமே cousinதான். இது ஒரு விதமான centralization process. இதையெல்லாம் தடுக்க முடியாது என்பதை உணர்ந்த நாற்பது+ காரர்கள் கனத்த மனதுடன் கடந்து சென்று விடுகிறார்கள். உணராதவர்கள் அருள்மொழி, மெய்யழகனைப் போல அழுதுகொண்டிருக்கிறார்கள். ஒரு கையில் 90களையும் இன்னொரு கையில் 2kகளையும் விடாமல் பிடித்துக் கொண்டு இருபக்கமும் இழுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அருள்மொழியின் குடும்பத்தார் தஞ்சாவூரில் பூர்வீக வீட்டைக் காலி செய்யும் காட்சியில் அம்மிக்கல்லைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.
சில இடங்களில் 90களில் வெளிவந்த படங்களின் சாயலையும் சில இடங்களின் 60களில் வெளிவந்த படங்களின் சாயலையும் மெய்யழகன் கொண்டிருக்கிறது. ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘முத்துக்கு முத்தாக’ மற்றும் சில விக்ரமன் படங்களின் சற்று மாறுபட்ட version என்று கூட இந்தப் படத்தைச் சொல்லலாம். இதைப் பார்க்கும் போது சமீபத்தில் வந்த ‘குரங்கு பெடல்’ எனும் படமும் நினைவுக்கு வந்தது. 90களிலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்களிடம் ஏராளமான சைக்கிள் கதைகள் புதைந்திருக்கும். மெய்யழகனில் பதியப்பட்டிருக்கும் அந்த ‘ராலே’ சைக்கிள் கதை நிஜமாகவே ஓர் அழகியல் அற்புதம். மெய்யழகன் அந்த சைக்கிளின் spare parts எதையும் மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதாகச் சொல்கிறார். அவருடைய வீடும், வீட்டின் கதவும் கூட அப்படித்தான் பழமை மாறாமல் இருக்கிறது. டாஸ்மாக்கில் வாங்கிய ‘கூலிங்’ பியரைக் கூட மண் குடுவையில்தான் குடிக்கிறார். பழைய நினைவுகளின் புதைமணலில் சிக்கிக்கொண்டிருப்பதில் சுகம் காண்கிறார். அருள் மொழியுடன் இணைந்து பழைய பாடல்களை (இந்த மான் உந்தன், கோடைகாலக் காற்றே) அடி பிறழாமல் பாடுகிறார். பாம்புடனும் அயிரை மீன்களுடனும் பேசுகிறார். அழிந்து வரும் அரிய வகை உயிரினமாகத் தெரிகிறார்.
இந்தப் படத்தில் காட்சிப்படும் நினைவுக் கசிவுகளில் ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல..’ என்பதான தொனி இல்லாதது பெரிய ஆறுதல். அதுதான் 2k தலைமுறையையும் இந்தப் படத்துடன் ஓரளவுக்கு இணைக்கிறது. படத்தின் ஆதார சுருதியுடன் ஒட்டாமல், அதற்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாமல் இருப்பது அந்த ஜல்லிக்கட்டு காட்சிகள்தான்.
- கணேஷ் சுப்ரமணி