sir movieஒரு வரியில் அடங்கி விடும் தன் இருத்தலைக் கூட சொல்லாத மெல்லிய காதல் கதை.

ஒன்றரை மணி நேர சினிமா... உயர்தரமான அப்பார்ட்மெண்ட் பத்தாவது மாடி பால்கனியில் நின்று மும்பை சிட்டியை வேடிக்கை பார்க்க வைக்கிறது.

அதே நேரம் ஒரு குக்கிராமத்தில் ஒரு குடிசை வீட்டினுள் வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட பேரழகி ஒருத்தியையும் உணர வைக்கிறது.

ரத்னா... மும்பையில் ஒரு பெரும் பணக்கார வீட்டில்... வீட்டு வேலைக்காரியாக இருக்கிறாள். அந்த வீட்டு முதலாளி அஸ்வின். அந்த பிளாட்டில் அவன் மட்டும் தான்.

மணப்பெண்… திருமண நாள் அன்று ஓடி விட.... திருமணம் நின்று... செய்வதறியாது... சோர்ந்து வீட்டுக்கு வரும் அஸ்வினை இந்த ஸ்டேட்டஸ் உலகம்
தனிமைக்குள் தள்ளுவதாகத்தான்... படமே ஆரம்பிக்கிறது.

வலி சூழ்ந்த வாழ்வின் பிடி கேள்விக்குறியாக இருக்க... அவன் யாரிடமும் பெரிதாக எதுவும் பேசுவதில்லை.

பொருளற்ற ஜடமாய் வேலைக்குப் போவதும் திரும்புவதும்... அவன் ஒரு சோர்ந்து போன இயந்திரமாக இருக்கிறான். வெறுமை சூழ் உலகு அவனையுடையது.

அவனுக்கு பணிவிடை செய்து கொண்டு... சொன்னதை செய்து கொடுத்து... மிக கண்ணியமாக நடந்து கொள்ளும் ரத்னா... அந்த வீட்டின் எல்லாமுமாக இருக்கிறாள்.

அவனுக்கு எந்த நேரம் எது தேவை... என்று அவளுக்குத்தான் தெரியும். சார் ஐ தாண்டி ஒரு வார்த்தை வராது. எல்லாவற்றையும் கேட்டு தான் செய்வாள்.

தலை தாழ்ந்தே இருக்கும். அவனும் அவளை வேலைக்காரி மாதிரி பார்க்க மாட்டான். தேவைக்குப் பேசுவான்.

மற்றபடி... அந்த வீட்டில் அவள் வேலைக்காரி அறையில். அவன் அவன் அறையில். அங்கே அமைதி மட்டுமே எப்போதும் சூழ்ந்து அந்த உயர் கட்டட வனத்தில்.... மும்பை விளக்குகள் பளிச்சிட வேடிக்கை கண்டு கொண்டிருக்கும்.
குடித்து விட்டு ஹாலில் -சோபாவில் அப்படியே தூங்கி விட்டால்... மெல்ல வந்து போர்வையை போர்த்தி விட்டு லைட்டை அணைத்து விட்டு செல்லும் நட்புள்ளம் கொண்டவள்.

நேர்மையான அதே நேரம் தன் வேலை குறித்து தன் இடம் எது என்று தெரிந்து நடந்து கொள்ளும் அவள்... வீட்டு சுமையை அந்த சின்ன உடலில்... சுமக்கும் கிராமத்து மனுஷி. தைரியம் மட்டுமே அவளின் சொத்து.

சிரித்தால் நொடியில் அழகாகி விடும் ரத்னா... எப்போதாவது தான் படக்கென சிரிப்பாள். அதுவும் சிரிப்பதற்கு முன் அவள் மூளையில் சிரிக்கலாமா வேண்டாமா என்று யோசனை ஓடும். பேரிருள் சூழ்ந்த இடமெல்லாம் ரத்னா சிரித்தால்... பெரு வெளிச்சம் படக்கெனப் பூத்து விடும்.

தன் சம்பாத்தியத்தில் தான் தங்கையைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.

"திருமணமாகி நான்கே மாதத்தில் ஏற்கனவே இருந்த நோயினால் கணவன் மறித்து விட.... ஊரே என்னை விதவையாக்கி பார்க்க... மனம் வெறுத்து... அங்கிருக்க பிடிக்காமல் மும்பைக்கு வேலை தேடி வந்து இதோ உங்களிடம் வேலையும் செய்துக் கொண்டிருக்கிறேன்... "என்று தன் கதையை... திருமணம் நின்று போனதையே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சாரைக் காண சகியாமல்... சொல்லி... "வாழ்க்கை இப்டியே முடிஞ்சிறாது சார்... இன்னும் இருக்கு" என்று தேற்றும் நம்பிக்கையில் அவள் மீது அவன் கவனம் குவிகிறது.

ஊருக்கு செல்லும் போது பேருந்திலேயே... தான் அணிந்திருக்கும் வளையலை எடுத்து பைக்குள் வைத்துக் கொள்வதும்... திரும்பவும் மும்பைக்கு பேருந்து ஏறியதும் மீண்டும் வளையல்களை எடுத்து கையில் மாட்டிக் கொள்வதும்... அவளின் தோற்றத்தையே... முக பாவனை உள்பட ஒரு கிராமத்து விதவைக்கும் ஒரு நகரத்து வேலைக்காரிக்குமான அளவில் தன்னை சரி சமமாக பிரித்துக் கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்ளும் ரத்னா ஒரு சுமை தாங்கி.

ஒரு கட்டத்தில் சாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு... டெய்லரிங் கற்றுக் கொள்ளும்' தன் சிறுவயது ஆசையை செயல்படுத்துகிறாள்.

அவளுள் ஒரு ஆடை வடிவமைப்பாளி இருக்கிறாள். அதை அவள் கண்டுணர்கிறாள். அவனும் அதை புரிந்து கொண்டு அவளுக்காக பேஷன் டிசைனிங் சம்பந்தமான புத்தகம் வாங்கி வந்து தருகிறான்.

இன்னொரு சமயத்தில் டைலரிங் மெஷின் கூட பரிசளிக்கிறான். அவள் அதை கூர்ந்து பார்த்து.. கண்கள் திரண்டு கலங்க... இயலாமையின் பிடியில் நின்று... அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து அழுத்தமாய் "தேங்க் யூ சார்" என்கிறாள். அதில் அத்தனை நன்றி இருக்கிறது. கூட பெண்மை கொண்ட பேரன்பும்.

அவளுள் இருக்கும் வேலைக்காரி தனக்கு வேலை கொடுத்த அஸ்வினின் அம்மாவுக்குத் துரோகம் செய்து விடக் கூடாது என்று உள்ளே ததும்புகிறாள்.

ஆனாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து… புரிந்து கொண்டு அந்த பிளாட்டில் இரு வேறு வாழ்வை வாழும் அவர்கள்… அவர்களுக்கே தெரியாமல் பணக்காரனையும் வேலைக்காரியையும் இணைக்கும் ஒரு காதல் பாலத்தை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு வேலைக்காரிகளின் உலகம் முற்றிலும் வேறானது. அதற்கு... வீட்டுக்குள் ஒரு முகம். வெளியே தன் சக மனிதர்களை கண்டு விட்டால் வேறு முகம். தாங்கள் இந்த வீட்டின் அடிமை என்பதை அவர்களின் உடல் மொழியும் முக பாவனையும் எப்போதும் சுமந்துக் கொண்டேயிருக்கிறது.

ட்ரிங்க்ஸ் பார்ட்டி நடக்கையில்.. சைட் டிஷ் தட்டை ஒவ்வொருவருக்கும் முன்பாகவும் நீட்டிக் கொண்டே நின்று பார்த்து (என்னவோ பூமி சுழற்சியையே நிறுத்தி விடுவது போன்ற ஒரு புடுங்கித்தனமான உடல்மொழி கொண்ட பேச்சும் அரட்டையுமான பணக்காரப் பாவனைகளோடு ) அவர்கள் எடுக்க... அல்லது எடுக்காமல் விட… நேரம் விட்டு அங்கிருந்து நகர்ந்து இன்னொருவரிடம் நின்று... அந்த பார்ட்டி முடியும் வரை ஒரு பெரும் சுமை அவர்கள் கண்களில் இருப்பதை இந்த ரத்னா மிக நுட்பமாகக் காட்டினாள்.

ஓடி சென்று அணைத்து தூக்கிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அஸ்வினுக்கு கூட..

ரத்னா எப்போதும் குனிந்த தலையோடு... சின்ன உடலில் புடவையை சுற்றிக் கொண்டு ஒரு பொறுப்பான வீட்டு வேலைக்காரி.

வெளியே நின்று பக்கத்து வீட்டு வேலைக்காரியுடன் பேசிக் கொண்டிருந்தால் கூட sir வீட்டுக்குள் வரும் போது ஓடோடி வந்து நாய் குட்டியை போல பின்னாலயே வருவதும்.. அதுவே அவனுக்கு அவள் மீது ஈடுபாடு கொள்ள நேர்வதுமான காலத்தின் கணக்கில் காதல் இடம் பொருள் எல்லாம் வழக்கம் போல பார்க்கவில்லை.

சாமி ஊர்வலத்தில் மற்ற பெண்களோடு சேர்ந்து வீதியில் குதித்து ஆடுவதும்... வியர்க்க விறுவிறுக்க... எதுவோ விடுதலை கிடைத்தது போல உடலெல்லாம் சந்தோசம் மலர... ஆடி களைக்க... சற்று முன் வந்து விட்ட சார் அதை பார்த்து விட... அய்யயோ என்று வெட்கத்தோடு ஓடி வந்து அவன் அருகே நின்று மூச்சு வாங்கி... வெட்கப்பட்டுக் கொண்டே தடுமாற... வீடு நுழைந்து கதவடைத்த மறுகணம்.. .அவன் அவள் கையை நம்பிக்கையோடு பற்ற... எதிர்ப்பு தெரிவிக்காமல் அவன் கைகளுக்குள் அடங்கி போகிறாள்.

இதழ்கள் நான்கும் இசையற்று சேர... நெருங்கும் உடல்களில்... உடல் கூற்றின் நெருப்பு பரவ... பட்டென்று டெலிபோன் அடிக்கிறது. சுயம் வந்து விலகி சென்று அவளறையில் தனித்தமர்கிறாள். அவளெங்கும் விசும்பல்.

"எனக்கு யாரை பத்தியும் கவலை இல்லை. நீ போதும்" என்கிறான். "எனக்கு எல்லார் பத்தியும் கவலை இருக்கு சார்" என்கிறாள்.

"சார்னு கூப்பிடாத. அஸ்வின்- னு கூப்டு" என்கிறான்.

"சார் இரவுச் சாப்பாடு எடுத்து வைக்கவா" என்று சடுதியில் வேலைக்காரியாய் மாறி வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.

அஸ்வின் மனம் உடைந்து செய்வதறியாது பால்கனியில் நின்று ஸ்டேட்டஸ் நிரம்பிய வெற்றுலகை வெறிக்கிறான்.

அந்த வேலைக்காரிக்குள் இருக்கும் தேவதையை... அவள் செய்கைகளில்... அவள் உடை அணியும் நேர்த்தியில்... அவள் சமைக்கும் பாங்கில்... அவள் பரிமாறும் இயல்பில்... ஒரு படி மேலேயே அவளை நாம் உணர்கிறோம்.

ஒரு பின் ஊசியைக் கூட நான் சார் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டது கிடையாது என்று தங்கையிடம் பேசும் போது அவரையே எடுத்துக் கொண்ட குற்ற உணர்ச்சிப் பொங்க தடுமாறுவது... வேலைக்காரிக்கும் காதல் வரும் தானே என்று நம்மை ஆதங்கப்பட வைக்கிறது.

அவளுள் இருக்கும் சிறுமியை மும்பை சாலைகளில் பயணிக்கையில் காண்கிறோம். அவளுள் இருக்கும் இயலாமையை அவள் தனித்து சமையலறையில் அமர்ந்து சாப்பிடுகையில் உணர்கிறோம்.

ஒரு வீட்டுக்குள் நடக்கும் மிக மெல்லிய பூனை பாதங்களாய் அவர்களின் இடைவெளி இருந்துக் கொண்டே இருக்கிறது.

அவள் இல்லாத போது அவளறைக்குள் சென்று அமைதியாய் நின்று… ஆழமாய் தன்னையே உணர்வது... சொல்லொணா காதலின் நிமித்தம் அஸ்வின் பேரமைதியைப் போர்த்திக் கொண்டே இருப்பது... எல்லாம் புரிந்தும் புரியாத மொழியில்... அவள் சமையலை மட்டுமே செய்வது... ஏதோ பேச வந்து விட்டு ஒரு லெமன் ஜூஸ் கிடைக்குமா என்று அவன் கேட்பது... என அவர்களுக்குள் ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது. அவர்களை அவர்களே ஆட்டுவிக்கும் பொம்மலாட்டம் அது.

கிராமத்துக்கு... தங்கை திருமணத்துக்கு மூன்று நாள் விடுமுறையில் வந்திருக்கும் ரத்னாவுக்குப் போன் செய்து விட்டு... எதுவும் பேசாமல் இருக்கும் அஸ்வின்... பதிலுக்கு ரத்னாவும் அமைதியில் உறைந்து... போனை காதிலேயே வைத்திருக்கும் இடம்... இரு மனங்களின் கூர்ந்த அவதானிப்பு.

பேரழகிகள் வீட்டு வேலைக்காரியாகவும் இருப்பார்கள் என்று உணர வைத்த முகம் ரத்னாவுடையது.

ஒரு கிராமத்து ஏழைப் பெண்ணின் அழுத்தத்தை அத்தனை இலகுவாக நாம் உள் வாங்கி விட முடியாது. பொம்மை அணிந்திருக்கும் ஆடையைக் கவனித்துக் கொண்டே மறந்து அந்த துணிக்கடைக்குள் சென்று கடைக்காரியால் அவமான படுத்தப்படுவது... இந்த யதார்த்த உலகின் முகத்திலறையும் உண்மை.

பக்கத்து வீட்டு வேலைக்காரியுடனான நட்பு... அந்த பெண்ணின் துக்கம் பகிரும் இடம்... அவள் செய்யும் உதவி... என்று வேலைக்காரிகள் உலகம் வெறுங்காலில் தொடுவானம் ஏறிக் கொண்டே இருக்கிறது.

அவர்களின் உலகத்தில்... கணீர் மொழி இருப்பதே இல்லை. எப்போதும் ரகசிய பேச்சுக்கள் தான்.

ஒரு தனித்த வெளியில் ஆதரவற்ற ஒரு ஜோடி பாதங்கள்... தன் சாரின் பாதங்களை கவனித்துக் கொண்டே பின் செல்வதை... படம் நெடுகிலும் காண்கிறோம்.

வரும் டெலிபோனை எடுத்து முதலாளியின் மனநிலையைப் புரிந்துக் கொண்டு அவன் இருக்கும் போதே 'அவர் இல்லை... வெளிய போயிருக்கார்" என்று அவளாகவே சொல்லும் பக்குவம் அலாதியானது.

'நீ செய்தது சரி தான்' என்பது போல மெல்லப் புன்னகைக்கும் அவனுக்கு அவளை விட்டால் அவன் வெற்றுலகில் வேறு யார் அவனை அப்படியே புரிந்துக் கொள்ள முடியும்.

வீட்டை விட்டு வெளியேறிய.. .சில நாட்களுக்கு பின்... பேஷன் டிசைனர் வேலை கிடைத்த விஷயத்தைச் சொல்ல ஓடோடி வருகிறாள் ரத்னா.

சாரின் வீடு பூட்டி இருக்கிறது. கண்கள் விசும்ப மனம் அழுது தவிக்க...நெக்குருக நீள் வெளிச்சம் அந்த பால்கனியில் சரிந்து கொண்டேயிருக்கிறது.

காதலின் கனத்தை ஒரு தோள் ஒரு போதும் சுமக்க முடியாது. அதற்கு இன்னொரு தோள் தேவை. பெரு மௌனம் அங்கே சுழல... பிறகு நான் நினைத்தது தான் அங்கு நடந்தது.

நீங்கள் நினைத்ததும் அதுவாகத்தான் இருக்கும்.

- கவிஜி

Pin It