musician soundaryan"பொட்டு வெச்ச பொண்ணே நீ கேளம்மா
நீ எட்டு வெச்சா இமயமல ஏதம்மா..." இப்படி ஒரு வரி....

"வாழ நினைச்சா வாழ்க்கை இருக்கு பாரம்மா
வானம் கூட பொம்பளைக்கு கீழம்மா.." இப்டி ஒரு வரி...

பாட்டு இப்படி தான் ஆரம்பிக்கும்.

"அடி ஆ...த்தி...
வாடையில...பட்டமரம்...
கோடையில கொழுந்து விடாதா...
அடி போ...டி...
முள்ளுக்குள்ள போட்ட வித
முட்டி முட்டி மொளச்சி விடாதா..."

எழுதியது வைரமுத்து. பாடியது ஜேசுதாஸ். இசை... வழக்கம் போல இளையராஜா என்று தான் நினைத்தேன். ஆனால்... பாட்டுக்கு கீழே இருந்த பெயர் அவர் இல்லை என்றது. மனதுக்குள் சுடர் நெளியும் பரபரப்பு பாட்டு முழுவதிலும்.

அதிகாலையில் தூரத்தில் கேட்கும் தனித்த விசும்பலின் வார்த்தை வடிவம். இசைக்கத் தெரிந்ததால் இசைத்தவன் தப்பித்துக் கண்டான். ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறி விடும் இசைக்குள் தான் எத்தனை ஆதுர்யம். எத்தனை முறைக் கேட்டிருப்பேன் என்று தெரியாது. ஆனால் அத்தனை முறையும் பாட்டு இருந்தது. நான் இல்லை. துயரத்தின் உச்சியில்... ரசனை மிஞ்சும். ரசிகனின் தனிமைக்கு துயரமே தஞ்சம்.

அதே படத்தில்... இது இன்னொரு பாட்டு. போட்டு தாக்கியது. யாருமற்ற ஒருவனின் தேகமற்ற கானம். ஒவ்வொரு வரியும் பிறையற்ற வானம் போல... தவித்திருந்தது. தூங்க விடாமல் செய்தது மட்டுமல்ல. தாங்கொணா தவிப்பை இதயத்தில் இறக்கிக் கொண்டே இருந்தது.

"கடவுளும் நீயும் ஒரு தாய் பிள்ளை... இருவரும் தனி மரம்தானே...
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை... அதனால் ஓரினம்தானே...
நதி என்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு
ஐப்பசி வந்தால் அடை மழை காலம்
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்...

தனிமனிதன் ஒருவனுக்கு கால தரிசனம் மேற்சொன்ன வரிகளில் வாய்த்திருக்கிறது. அவன் மெல்லிய கண்களில் வன்மம் சுமக்கிறான். மனதை எங்கோ இறக்கி வைக்க விண்மீன் கொய்கிறது கண்ணீர் துளிகளின் தன் நிற இசை. வேதாந்தமற்ற பொழுதெல்லாம் முணுமுணுக்கலாம். முகமற்ற ஒருவனுக்கு அகம் முழுதும் அதிர்வு தான். அதுவெல்லாம் இசையாகி... திசை ஒன்றை காட்டுகையில்.. அவனோடு சேர்ந்து நமக்குள்ளும் துயர குயில்கள்.

"அன்புள்ள மகனே... அழுதது போதும்
புன்னகை சிந்து... இது பூக்களின் மாதம்"

இந்த வரிக்காகவே ஒரு முறை ஓவென அழுது விடத் தோன்றுகிறது. இறங்கி ஏறும் மெட்டில்... கட்டற்ற உணர்ச்சி. உயிர் உருகும் அயர்ச்சி.

"மத்தாளம் கொட்டுதடி மனசு... புது மல்லிகைப்பூ மணக்குற வயசு... காட்டுப்பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு..." இப்படி.... "சிந்து நதி பூ" என்ற படத்தில் எல்லா பாட்டுமே ஒவ்வொரு ராகத்தில்.. அடித்துத் தூள் கிளப்பியது.

"சம்பா நாத்து... சாரக் காத்து... மச்சான் சல்லுனுதான் வீசுதிங்க அங்கம் பூரா..."

இப்படி ஒரு பாட்டு. பாட்டிலேயே கிராமத்து வாசம் வீசும். பச்சை பசுமைக்குள்... கிணற்று நீரில்.. கிளர்ச்சியூட்டும் அழகிகள்... என்று இப்போதும் கண்கள் சூழும்.. கவர்ச்சி வாடை அது. கிராமியப் பாடலைப் போல ஒரு வகை ஈர்ப்பு. மண்ணின் இசை மனதை அள்ளும் விசையை மெட்டில் வட்டமிடும்... தமிழ் ஸ்வரங்களில் காணலாம். எப்போது கேட்டாலும்.... தேன் வந்துப் பாய தெற்கில் இருந்து கிளம்பும் பச்சை பசேலென துறு துறுக்கும் காற்றின் இசை. எச்சிலற்ற நாக்கை மேல் அன்னத்தில் தட்டி எழுப்பும் ஓசைக்குள் அத்தனை சுவாரஸ்யம் இருக்கும்.

"தெருவெல்லாம் கோலமிட்டு
திரியேத்தி குத்து விளக்கு வெச்சு
உறங்கமா கண்ணு முழிச்சிருப்பேன்
உனக்காக மச்சான் காத்திருப்பேன்..."

உள்ளிருக்கும் சோகமெல்லாம் நொடியில் பறந்து... ஊர்குருவியின் குதூகலத்தில் ஒரு கிணத்து மேடு வரைந்து காத்திருக்க வைத்து விட்டு வரப்போரம் ஆன்மா நடக்க ஆரம்பிக்கும்.

"கா...தல் கடிதம் வரைந்தேன்... உனக்கு... வந்ததா... வந்ததா... வசந்தம் வந்ததா..." இப்டி ஒரு பாட்டு... இன்னொரு முறை காதலிக்கத் தூண்டி விடும் பாடல். இசையின் நேர்த்தியில் அந்த வறண்ட காடு தேன் சிந்தும் காடாகும். இன்னும் காதலிக்கும் எல்லாருக்கும் வசந்த காலமாகவே அந்த பாடல் இருக்கிறது.

அப்போதெல்லாம் எத்தனையோ காதலுக்கு கடிதம் அந்த பாடல் தான். அண்ணன்மார்கள் அக்காக்களுக்கு பாடலை எழுதிக் கொடுப்பார்கள் அல்லது டேப் கேசட்டில் பதிவு செய்து கொடுத்து காதலை தெரிவிப்பார்கள். நிஜமாகவே அது வசந்த காலம் தான்.

இப்படி "சேரன் பாண்டியன்" படத்தில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட். வழக்கம் போல நாம் வேறொருவரை நினைப்போம். ஆனால் அவர் இல்லை. பெயர் வேறொன்று இருந்தது.

"எட்டு மடிப்பு சேலை... இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை..." என்றொரு பாடல்.. "முதல் சீதனம்" படத்தில். இப்போதும் உருக்கி விடும் வலி நிறைந்த காதல் பாடல்.

அதே பாடலில்.. இடையே வரும்... சில வரிகள்... நெஞ்சைப் பதம் பார்க்கும்.. சந்தத்தில்.. பந்தம் ஏற்றும்.

"சிந்தை கெட்டு போனது
செத்தும் உடல் நோகுது

ஆத்தாடி மனுசனுக்கு
ஆகாது பொண்ணு வழக்கு

ஏத்தாத குத்து விளக்கு
சுட்டாக்கா யார் பொறுப்பு
சுட்டாக்கா யார் பொறுப்பு... "

இரவும் நிலவும்... வழியும் வழியும். உறவும் உயிரும் வலியும் வழியும். சூனியத்தில் எரியும் சிறு விளக்கின் அசைவை ஆழ்மனதில் தகிக்க செய்யும் இசை.

"காலைப்பனி நேரத்திலே வந்த கன்னி பொண்ணு
உன் கன்னத்துல தந்திடவா நான் ஒண்ணே ஒன்னு..." இப்படி ஒரு பாட்டு..

"மல்லிகை பூவு வாசம் மணக்குது...
மச்சான் மனசு சுண்டி இழுக்குது..."

இப்படி ஒரு பாட்டு.. "புத்தம் புது பயணம்" என்ற படத்தில்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் பார்த்த படம். இசைப் பற்றி கொஞ்சம் தெரிந்தாலும்.. இசைத்தவர் பற்றியெல்லாம் ஒன்றும் அறியாத காலம். ஆனால் பிற்காலத்தில் மீண்டும் அந்த படம் பார்க்க நேரிடுகையில்... 'அட தேவா இல்ல. அப்புறம் யாரு....?' என்று தேட வைத்த... அதுவும் தேனிசை தான்.

யார் இந்த பாட்டுகளுக்கு சொந்தக்காரர் என்று தேடினால்... 50 வயதுக்கு மேல் உள்ள தோற்றத்தில் ஒருவர் வந்து புன்னகைத்து நிற்கிறார். ஆழமாய் தேட கூகிள் கூட உதவவில்லை. கூகிள் கூட சரியாக அடையாளம் காட்டாத கலைஞன். நன்றாக வந்திருக்க வேண்டிய இசைஞன். தேவ இசைக்கு சொந்தக்காரர்.

சினிமாவில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்று யாரும் சொல்ல இயலாது. அது தான்... இவருக்கும் என்று நினைத்துக் கொள்கிறேன். சிற்றோடைக்குள் இயல்பாகக் கால் பதித்து நடந்துப் பார்க்கும் குமரிக்கு மனம் நெகிழ்வது போல... ஒரு சில் வசீகரம் ஒவ்வொரு பாடலிலும். கொஞ்சமே பாடல்கள் தான் நமக்கு கிடைக்கிறது. ஆனாலும்... கொஞ்சும் குறுகுறுப்பு இசையில் பூத்திருக்கிறது.

முடிந்தளவு ஆரம்ப கட்டத்தில் இயக்குனர் K.S. ரவிக்குமார் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தந்திருக்கிறார். ஆனாலும்... எதுவோ கைக் கொடுக்கவில்லை. சினிமாவுக்கான நெளிவு சுழிவுகள் தெரியவில்லையா... இசை ஜாம்பவான்களின் அன்றைய கெடுபிடியா... அல்லது இவரின் ஆட்டிட்யூடா... என்னவென்று சொல்ல முடியவில்லை.

ஆனால் இவரின் ஒவ்வொரு பாடலிலும் நம்மை உணரும் ஜீவன் இருந்ததை காலம் கூடக் கூட உணர முடிகிறது. இனி இவர்க்கு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்க வேண்டுமோ அது பற்றியெல்லாம் யோசிக்கும் இடத்திலும் இந்த கட்டுரை இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு அற்புதமான இசைக் கலைஞனுக்கு செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.

காலம் தவற விட்ட இந்த இசைக் கலைஞனை மீண்டும் உங்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்.

நல்ல இசை எங்கிருப்பினும்... நல்ல மனம் அதை நாடும். அந்த இசைஞன் பெயர்... "சௌந்தர்யன்".

- கவிஜி