நான் ஒன்றாவது படிக்கையில் பார்த்த படம் "தாயம் ஒன்னு" அதிலேயே பிடித்து விட்டது. என்னவோ ஓர் ஈர்ப்பு. அன்றிலிருந்து இன்று வரை நான் அர்ஜுன் விசிறியாக இருக்கிறேன். உடல் மொழியில் எப்போதும் திமிறிக் கொண்டிருக்கும் ஆண்மை ஒரு வகை நம்பிக்கையின் குறியீடு. ஒரு குழந்தையைக் காப்பாற்ற ஐந்து பெண் (ஒவ்வொருவரும் ஒரு துறையில் நிபுணர்கள்) களை சேர்த்துக் கொண்டு எதிரிகளோடு போராடும் கதை. விறுவிறு திரைக்கதை. கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பு.....நடனம்.....சண்டை.....இயக்கம்.....திரைக்கதை.....வசனம்......தயாரிப்பு என்று எல்லாத் துறையிலும் திறமையான சினிமா அறிவு கொண்ட ஒரு படைப்பாளியாகத்தான் காண்கிறேன்.

arjun"தம்பி ஏண்டா அழுகற....ன்னு கேட்டதுக்கு இது எனக்குத் தேவையா.....?" என்று படம் முழுக்க டைமிங்கில், கவுண்டமணி பேசப் பேச, பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு நடித்திருக்கும் "வேஷம்" படத்தில் இருந்து... பல படங்களில் இவர்களின் கூட்டணி சக்கை போடு போட்டிருக்கிறது. "கிரி"யில் வடிவேலுடன் அடித்த கூத்தெல்லாம் தனி.

ஒரு கட்டத்தில் படமே இல்லை என்ற நிலையில் தானாகவே எழுதி இயக்கி ஹிட் அடித்த படம் தான் "சேவகன்".

"ஒரு நாட்டோட ஏர்முனை போர் முனை பேனா முனை மூணும் சரியா இருந்தாத் தான் அந்த நாடு நல்லா இருக்கும்"னு ஒரு வசனம் வரும். எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வசனம் அது.

அதே படத்தில் இறுதி சண்டைக் காட்சியில் தரையில் இருந்து எம்பி குறுக்கு வெட்டாக காற்றில் படுத்து இரண்டு கால்களையும் மடக்கி, பின்னால் இருப்பவரை உதைக்கும் அதே நிறத்தில் முன்னால் இருப்பவரை கையால் குத்த வேண்டும். நின்று எம்பி காற்றில் படுத்து கால்களையும் கைகளையும் ஒரே நேரத்தில் இயக்கி ஒருவரை உதைத்தும் ஒருவரை குத்தியும் பின் கீழே விழ வேண்டும். அற்புதமாக செய்திருப்பார் . நிஜமாகவே சண்டை தெரிந்த நடிகர். அவரே ஒரு முறை தன்னைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னது...

"இந்த பையன் அழகா இருக்கான்னு யாரும் வாய்ப்பு தரல... இவன் நல்லா சண்டை போடறான்னு தான். ஆக அது தான் என் பலம். அதை தக்க வெச்சுக்க நான் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டி இருக்கு."

உடற்பயிற்சியை விடாமல் செய்யும் பழக்கமே இந்த வயதிலும் அவர் இளமையாக வைத்திருக்கிறது. நீங்க குடி இருக்கும் உங்க உடம்பை நீங்க தான் பத்திரமா பாத்துக்கணும்னு சொல்வார். உடலுக்காக நாம் ஒதுக்கும் நேரம் தான் நமக்காக நாம் வாழும் நேரம் என்று ஒரு பேட்டியில் சொன்னது அர்த்தம் பொதிந்தது.

சும்மா "ஆக்சன் கிங்" ஆக முடியுமா...!..

இவர் படங்களில் எப்போதுமே பாடல்கள் ஹிட் அடித்து விடும். கொஞ்சம் ரசனையான மனிதனாகவே காதல் காட்சிகளில் தெரிவார்.

"நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா....." " ஹே மீனலோட்சணி.... மீனலோட்சணி..." "அர்ஜுனரே அர்ஜுனரே ஆசை உள்ள அர்ஜுனரே...." இந்த மாதிரி நிறைய பாடல்களின் வழியே எதார்த்தத்தின் கதவுகள் மூடி கனவுகளின் ஜன்னல்களைத் திறக்கும் திரைக்குச் சொந்தக்காரர்.

சில்க் ஸ்மிதாவின் கடைசிப் படம் இவரோடு தான். (ஷலோமா சலோம்... ஹே ஷலோமா சலோம் பாடல்)

அதன் பிறகு "ஜென்டில்மேன்". ஷங்கர் என்ற ஒரு இயக்குனருக்கு கொடுத்த வாய்ப்பு. படம் முழுக்க பகலில் வெள்ளை வேட்டி சட்டையில் நல்லவனாகவும், இரவில் காரணத்தோடு கூடிய கொள்ளைக்காரனாகவும் அசத்தியிருக்கும் அர்ஜுனுக்கு அளவெடுத்து தைத்த கதாபாத்திரம் அது. இந்தப் படத்திலும் கவுண்டமணியோடு தான் கதை நகரும். இறுதிக் காட்சியில் பேசும் வசனமெல்லாம் இன்றும் இந்த சமூகத்துக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. கன்னடம் கலந்த தமிழாக இருப்பினும்... அது ஒரு புது வடிவத்தில் அழகாகவே ஒலிக்கும். சுய சிந்தனை அறிவு கொண்ட ஒரு மனிதன். பெரிதாக தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாத ஒரு ஹீரோ.

அதன் பிறகு மீண்டும் சொந்த இயக்கத்தில் ஜெய்ஹிந்த். எப்போதுமே நாட்டுப் பற்று கொண்ட படம்.....போலீஸ் அதிகாரி வேஷம்....என்றாலே இவர் தான் நினைவுக்கு வருவார் என்பதை பாஸிட்டிவாகவே கருதுகிறேன்.

மீண்டும்,ஷங்கரோடு......முதல்வன். அதன் தாக்கத்தை நாடறியும். ரகுவரனோடு கேட்ட கேள்விகள் எல்லாம் இந்த சமூகத்தின் ஒப்பனையற்ற முழக்கங்கள்.

ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவின் புதுப் புது முயற்சிகளில் எப்படியாவது தன்னை இணைத்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார். "மங்காத்தா"வில் வில்லனாக வந்து அஜித்தோடு செய்ததெல்லாம் அதகளம். மணிரத்னத்தின் "கடல்" படத்தில் வில்லனாக வந்து பெஸ்ட் வில்லன் அவார்டு வாங்கிச் சென்றதெல்லாம்... எங்கே தூக்கிப் போட்டாலும் விஷயம் உள்ள விதை முளைத்தே தீரும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது. இப்போது கடைசியாக வந்த "இரும்புத்திரை"யில் ஒயிட் டெவிலாக வந்து மிரட்டியதெல்லாம்....சினிமா வாழ்வின் உச்சம் பெற்ற நிலை. திருடனுக்கு தேள் கொட்டினா பொத்திகிட்டு இருக்கனுங்கிறதுக்கு குறியீடே அந்தப் பாத்திரம் தான். முடிந்தளவு எல்லா பாத்திர படைப்புகளிலும் இந்த சமூகத்துக்கு எதையாவது செய்யும் நோக்கில் பார்த்துக் கொள்கிறார்.

'குருதிப்புன'லில் கமலோடு சேர்ந்து இருட்டு உலகில்.... தன்னை கொடுத்து ரகசியத்தைக் காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாய் வாழ்ந்ததை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. அடிபட்டு உதைபட்டு முகம் வீங்கி.... இயலாமையில்........சாவின் விளிம்பில் அமர்ந்திருக்கும் போது கூட சாவது தான் வீரனின் செயல்.....என்பதாக செத்துப் போகும் அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் அர்ஜுனைக் கொண்டாடலாம்.

"காக்கி சட்டை போட்ட மச்சான்......" என்று யூனிஃபார்மோடு போட்ட ஆட்டங்களை எல்லாம்... நட்சத்திரங்களில் ஜொலிக்க விட்டிருக்கிறது... இவரின் சினிமா வாழ்வு.

"படிக்கறதுக்கு எதுக்கு காசு குடுக்கணும்னு மாணவர்கள் கேள்வி கேக்கணும்"னு 'ஜெண்டில்மேன்' படத்தில் பேசிய வசனம் இப்போதும் கேட்கிறது.... மாணவர்களே... உங்கள் காதில் கேட்கிறதா...?

ஆக்சன் இல்லாமல் அடுத்த தலைமுறை இல்லை....! ஆக்சன் இல்லாமல் அர்ஜுனுக்கு அடுத்த படமும் இல்லை...!

- கவிஜி

Pin It