ஐந்து உலகத் தமிழ் மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்திய டோக்யோ பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் நோபுரு கரஷிமா, அவருடைய 70 பாட்டனார்களின் பெயர்களைச் சொல்லுகிறார்; ஜப்பானில் ஒவ்வொரு குடும்பமும், சராசரியாக 40 தலைமுறை முன்னோர்களின் பெயர்களைச் சொல்கிறார்கள்; ஒரு ஜப்பானியர், 100 ஆண்டுகள் வேறு நாடுகளில் வசித்து விட்டு, ஜப்பானுக்குத் திரும்பி வந்து அவருடைய பெயரைச் சொன்னால் போதும்; அவருடைய குடும்ப ஆவணங்களை அரசே தரும் என்ற செய்தியை நான், நோபுரு கரஷிமாவின் பேட்டியில் படித்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்து  ஆங்கில நாளிதழில் வெளியாகி இருந்தது.  அந்த அடிப்படையில், நான் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். தமிழகத்தில் எத்தனை தலைமுறைகளைக் கண்டு அறியலாம் என ஆய்வு செய்தேன்.

2007 ஆம் ஆண்டு, ‘கலைமகள் தீபாவளி மலர் இதழின் 149 ஆம் பக்கத்தில், ‘ஆயிரம் வயசு’ என்ற தலைப்பில், ‘கொடிவழி’ என்றால் என்ன? என்பது பற்றிய என்னுடைய அந்தக் கட்டுரை வெளியாகி இருந்தது. அந்தக் கட்டுரை, இதே கீற்று இணையத்தில், 'கொடிவழி' என்ற தலைப்பில் இடம் பெற்று உள்ளது. படித்துப் பாருங்கள்.

அதில், உங்கள் தாத்தா பெயர் என்ன? உங்களுடைய எத்தனை பாட்டனாருடைய பெயர்கள் உங்களுக்குத் தெரியும்? என்ற கேள்வியை எழுப்பி இருந்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் முதல் காட்சியில், இயக்குநர், நடிகர் சசிகுமார், கேள்வியை தன்னுடைய தந்தை, தங்கையைப் பார்த்து, இதே கேள்வியைக் கேட்கிறார்.

ஒருவேளை, ‘நாடோடிகள்’ பட இயக்குநர் அந்தக் கட்டுரையைப் படித்து இருக்கலாம்; அல்லது அவருக்கே அந்த எண்ணம் தோன்றி இருக்கலாம். எது எப்படியோ, நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி போய்ச் சேர்ந்து இருக்கின்றது.

அதேபோல, நானாகச் சிந்தித்து எழுதிய சில வரிகள், சில கருத்துகள், பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ஏதோ ஒரு புத்தகத்தில் வேறு வடிவத்தில் வந்து இருப்பதையும் நான் பார்த்து இருக்கிறேன்.

ஒன்று போலச் சிந்திக்கின்ற ஒரு சமூகத்தில், ஒருவருக்குத் தோன்றுகின்ற எண்ணங்கள் மற்றவருக்குத் தோன்றாதா என்ன? ஆனால் தமிழ்த் திரைத்துறையில் இந்தக் கேள்வி பொருந்தாது என்றே படுகிறது. வெளிநாட்டுப் படங்கள், ஆங்கிலப் புதினங்கள், தமிழ்ப் புதினங்கள் என தமிழக இயக்குனர்கள் சுடுவதற்கு கணக்கு வழக்கில்லை. ஒவ்வொரு படம் வெளிவந்தபின்பும், இது எந்த மொழிப் படத்திலிருந்து சுடப்பட்டது என்பது குறித்து இணையதளங்களில் வெளியாகும் தகவல்களைப் பார்த்தால் தலைசுற்றுகிறது. படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பில்கூட, அயல்மொழிப் படங்களின் போஸ்டர்களை அப்படியே சுட்டு வெளியிடுவது நடக்கிறது. அந்தளவிற்கு, தமிழின் முன்னணி வியாபார இயக்குனர்களிடம் கற்பனை வறட்சி தாண்டவமாடுகிறது.

ஒரு திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்போது, 'அந்தக் கதை என்னுடையது. என் கதையைத் திருடி படம் எடுத்து விட்டார்கள்’ என்று எழுத்தாளர்களோ, உதவி இயக்குனர்களோ முறையிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்ற கனவுகளோடு வருகின்ற ஒருவர், திரைப்பட உலகில் பலரையும் சந்தித்து, தன்னுடைய கதையை, தான் கற்பனை செய்து வைத்து இருக்கின்ற காட்சிகளைச் சொல்லுவார். பல திரைப்படங்களுக்கான கதை விவாதத்திலும் கலந்து கொண்டு இருப்பார். அதில் ஒருவர், இவர் சொன்ன கருத்துகளைக் கேட்டு இருப்பார். வேறு ஒரு இடத்தில் போய் அதைச் சொல்லுவார். அந்த இயக்குநர் அதை காட்சியாக்கி விடுவார் அல்லது இவரது கதையே சற்று மாற்றி, தன்னுடைய கதை என்று திரைப்படமாக்கி விடுவார்கள்.

இதைத் தவிர்ப்பதற்கு என்ன வழி?

திரைப்படத் தயாரிப்பில் உதவியாளராக இருக்கின்ற அருண்குமார் என்பவர் அண்மையில் என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் என்னுடைய நூல்களை விரும்பிப் படிப்பவர்.

‘நீங்கள் ஒரு கதையாக எழுதித் தாருங்கள். அதை, திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து விடுகிறேன். அங்கே அவர்கள், உங்கள் கதையை ஒரு உறையில் போட்டு மூடி, ஒட்டி, பாதுகாப்பாக பெட்டகத்தில் வைத்து விடுவார்கள். பின்னாளில் உங்களுக்குத் தோன்றும்போது, அதை ஒரு படமாக எடுக்கலாம்’ என்றார்.

இதுதான் ஒரு தீர்வு.

எனவே, இளம் இயக்குநர்களே, கதை சொல்லிகளே, உங்கள் கதையை எழுதி, உறையில் போட்டு மூடி, திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து விடுங்கள். அடுத்து, அந்தக் காட்சிகளை எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் நீங்கள் துணிந்து கூறலாம். அதை அவர்கள் படமாக்க முடியாது. அப்படிப் படமாக்கினால், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் உங்கள் உதவிக்கு வரும். நீங்கள் பதிவு செய்து வைத்து இருக்கின்ற கதையை எடுத்துப் பார்ப்பார்கள். அதை வைத்துக் கொண்டு நீங்கள் உரிமை கொண்டாடலாம். நீதிமன்றத்திலும் இதை ஆவணமாகத் தாக்கல் செய்யலாம்.

புத்தகங்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. பதிப்பாளருக்குப் பத்திரம் எழுதிக் கொடுக்காத வரையிலும்,  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எழுத்தாளருக்குத்தான் உரிமை உண்டு. ஆனால், அதுவும் 60 ஆண்டுகளுக்குத்தான். ஆனால், அரசாங்கம் நாட்டு உடைமை ஆக்கிவிட்டால், யாருடைய படைப்பையும், யாரும் எடுத்து அச்சிடலாம். அப்படித்தான், பாரதியின் பாடல்களை இன்றைக்கு எத்தனையோ பதிப்பகங்கள் எடுத்து அச்சிட்டு வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.

தாமஸ் ஆல்வா எடிசன், சிறியதும், பெரியதுமாக, சுமார் 1300 கண்டுபிடிப்புகளுக்கு, அமெரிக்காவில்  காப்பு உரிமை பெற்று இருக்கின்றார். வழிவழியாக அது அவரது பரம்பரைக்குப் போய்ச் சேரும். பல நூற்றாண்டுகளாகவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற காப்பு உரிமை பதிவுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்தியாவில் காப்பு உரிமை என்றால் என்னவென்றே இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதனால்தான், வேப்ப மரத்தின் பயன்பாடுகளுக்கு, இப்போது அமெரிக்காக்காரன் உரிமை கொண்டாடுகிறான்.

எனவே, தமிழர்களே, உங்களுடைய எழுத்துக்கு, உங்களுடைய கண்டுபிடிப்புகளுக்கு, காப்பு உரிமையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

- அருணகிரி

Pin It