இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மூன்றாம் மாநில மாநாடு இம்முறை குற்றாலத்திற்கு உரியதாகிவிட்டது. குற்றாலம் என்றாலே நம் ஒவ்வொருவருக்கும் தனி இதயத்துடிப்பு உண்டாகிவிடும். ஒரு பரவச மனநிலை பெரிய காலூன்றி நிற்கும். ஆனால் இலக்கியவாதிகள் கூடவே தம் சமூகப் பொறுப்புணர்வையும் சுமந்து சென்றாகவேண்டும். அதேசமயம் மாநாடு என்பதால் கூடிக்கலையும் ஒரு சந்திப்பு உற்சவம் மட்டும்தான் என்றாகிவிடக்கூடாது.
இஸ்லாம் பல சூழ்நிலைகளில் இன்று ஒரு சவாலாக எழுந்துநிற்கிறது. அது சர்வதேசிய அளவில் பகிரங்கமான விவாதத்தளத்திற்கு வந்திருக்கிறது. அதனை அச்”றுத்தும் பூதமாகத் தொடர்ந்து சித்திரித்து வருவதில் ஊடகங்கள் மேலைய நாடுகளின் நிழலாக செயல்பட்டு வருகின்றன! உலக அமைதியையும் சமாதான சகவாழ்வையும் உளப்பூர்வமாக விரும்பும் முஸ்லிம்களின் சர்வதேசியக் கடமைகள் ஒரு தாளமுடியாத சுமையாக ஒவ்வொருவரின் முதுகிலும் ஏறிநிற்கின்றன. அவற்றைச் சுமந்துகொண்டு நடக்க முடியவில்லை; ஆனால் நடந்துதான் தீரவேண்டும்! இதற்கிடையில் முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே சரியான இஸ்லாத்தைக் கண்டெடுக்கும் போட்டி ஒரு புறம்! அடுத்ததாக இஸ்லாமிய வாழ்வியலின் தாத்பரியங்களை பல்வேறு கோணங்களிலும் படைக்கும் படைப்பாளிகள் மறுபுறம்! எது பழுது, எது பாம்பு என்று கண்டறிவதில் உண்டாகும் தயக்கங்கள், காலவிரயங்களும் தவிர்க்க முடியாதபடி முஸ்லிம்களைச் சூழ்ந்து மருட்டுவதும் தொடர்கிறது.
இந்நிலையில் குற்றாலத்திற்கு செல்வதில் உற்சாக மனநிலையுடனேயே சென்றோம். அதற்கான முக்கியக் காரணம் இம்முறை இஸ்லாமிய இலக்கியக் கழகம் தன் விவாதப் பொருள்களை விரிவாக்கிக் கொண்டிருந்ததே! அது தன் மூன்றுநாள் நிகழ்ச்சி நிரலில் இரண்டு நாள்களைப் படைப்பிலக்கியப் பயிலரங்கிற்கு என்று ஒதுக்கிவைத்தது. இஸ்லாமியச் சமூகத்திற்கு வெளியேயிருந்தும் காத்திரமான சில படைப்பாளிகளை அழைத்துவந்து பயிலரங்கில் பங்குபெறச் செய்தது. பிரபஞ்சன், ச.தமிழ்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்தப் பயிலரங்கைப் பெருமதிப்புடையதாக்கினர். அவரவர் பாணியில் இருந்து இலக்கியம் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் பல பார்வைகளை முன்வைத்தனர்.
செதுக்கப்பட்ட சதுரப்பெட்டிக்குள், பத்திரமாகப் பாதுகாத்துப் பூட்டி வைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய இலக்கியக் கோட்பாட்டின் மீது ஒரு புதிய வெளிச்சம் பரவியது. அவற்றைச் சூழவிருந்த இரும்புவிலங்குகள் மழையை மண்கட்டியைப் போல பொதுமிப்போய் உதிர்ந்து போகும் நிலைக்கு வந்துவிட்டன.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய இலக்கிய அமைப்புகள் பல உள்ளன. அவை நடத்தும் மாநாடுகள், கருத்தரங்குகள், கவியரங்கங்கள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன! பேசப்பட்ட படைப்புகளே மீண்டும் பேசப்படுவதும், வாசிக்கப்பட்ட கவிதைகளே மீண்டும் வாசிக்கப்படுவதுமாய் இருந்தன! இஸ்லாமியச் சமயநெறியும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையும் பிணைந்த பண்டைய இலக்கியக் கருவூலங்களே எப்போது இஸ்லாமிய அமைப்புகளின் பாடுபொருள்களாக இருந்துவந்திருக்கின்றன. புதிய கற்பனைகள், புதிய உத்திகள், புதிய கருக்கள் சார்ந்து எழுந்த நவீன இலக்கியங்கள் இஸ்லாமிய இலக்கிய அமைப்புகளின் ஒவ்வாமையாகி விட்டன. புதிய தலைமுறைக்கான வாசல்கள் பூட்டப்பட்டிருந்தன; பழைய கருத்துக்கள் வெளியேறும் வழிகளும் இல்லாதிருந்தன. இருட்டறையில் பரவிய நெடியையே சுவாசித்திருக்க வேண்டிய அவலம்! அதிலிருந்தும் வெளியேறி புதிய நடைமுறையை ஏற்றுக் கொண்டதால்தான் குற்றாலம் படைப்பிலக்கியப் பயிலரங்கை உற்சாகமாக வரவேற்று பங்கெடுக்கச் சென்றோம்! இஸ்லாமிய இலக்கியக் கழகம் தன் இதயத்தைச் சற்று அகலமாகத் திறந்தபோது, அதனைப் பயன்படுத்திப் பங்கேற்பது இதர படைப்பாளிகளின் கடமையாகவும் இருந்தது. இந்தத் தருணத்திற்காக நாங்கள் காத்திருந்@தாம்; பங்கேற்றோம்!
இன்று இஸ்லாமிய இதழ்கள் பல திசைகளிலிருந்தும் வருகின்றன. முன்பு இஸ்லாமிய இதழ்களில் பங்கேற்ற படைப்பாளிகள் பலர் இருந்தனர். பலர் காலமாகிவிட்டார்கள்; இருப்பவர்களோ எழுதுவதில்லை. அதே சமயத்தில் இஸ்லாமிய இதழ்களில் அல்லாமல், பொதுத் தளத்தில் இருந்து எழுதும் ஏராளமான முஸ்லிம் எழுத்தாளர்கள் வந்துவிட்டனர். முஸ்லிம்களின் வாழ்வியல் பற்றிப் பலப்பல கதை, கவிதை, நாவல்கள் என ஒரு வெள்ளமே போய்க்கொண்டு இருக்கின்றது. எழுதப்பட்டதும் அநேகம், எழுதப்படாததும் அநேகம்! தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் இந்த வெள்ளம் பாய்ந்துகொண்டே இருக்கும்! இஸ்லாமிய இலக்கிய அமைப்புகள் எத்தனை காலத்திற்கு இந்த வெள்ளத்தின்மீது பரிசல் ஒட்டாமல் கரையிலேயே நின்று கொண்டிருக்க முடியும்? இதனைக் காலத்தே முன்னுணர்ந்து, இனியும் தாமதித்தால் இஸ்லாமியப் பதிவுகளை நிலைநிறுத்த முடியாது என்று தன் சிறகுகளை விரித்துக் கொண்டது இஸ்லாமிய இலக்கியக் கழகம்! இதனை குற்றாலப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள் உணர்ந்தார்கள். இப்போதைய நிலையில் இதனை ஓர் அசைவு என்று சொல்வதைவிட ஒரு பாய்ச்சல் என்று வர்ணிக்கலாம்.
எடுத்தவுடனேயே பதினாறு அடி பாய்ச்சல் சாத்தியமாகவில்லை. அதனை @தாப்பில் முகம்மது மீரான் சுட்டிக் காட்டாமலும் போகவில்லை. இஸ்லாமியச் சமூகத்தின் மீது எப்படி மாற்றுச் சமுதாயம் சார்ந்தும் சாராமலும் இருக்கின்ற படைப்பாளிகள் பரிவும் மரியாதையும் கொண்டிருக்கிறார்களோ, அதுபோலவே இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த படைப்பாளிகளுக்கும் அவை உண்டு. இதில் எவர்க்கும் சந்தேகங்கள் வேண்டாம். ஆனால் படைப்பு மனநிலை உக்கிரமானது; ஒருவகை பித்தேறி நிற்பது; அதன் வெளிப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படுவதே நல்லது; சிறப்பு! புறக்கணிப்பு தேவையில்லாதது.
இந்தியாவில் தலித்துகளுக்கு நிகரான வாழ்க்கைச் சூழலின் “ஏறத்தாழ” நிலையில்தான் இன்று முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். “மதச்சார்பின்மை” அரச அதிகாரங்களும், மதச்சார்பு ஊடகங்களும் தலித்துகளை ஒடுக்குவதைப் போலவே முஸ்லிம்களையும் ஒடுக்குகின்றன. எனவே, இதைத் தலித்துகளால் முழுமையாகப் பதிவு செய்யமுடிகிறது தலித் இலக்கியங்களாக! தங்கள் வாழ்வின் ஒவ்வோர் அவலமும் இந்த அதிகாரபீடமும் வர்ணாஸ்ரமும் தந்த மானக்கேடான விஷயங்களே என்பதை உணர்ந்து எழுதுகிறார்கள். அதுவே அவர்களின் கை வாளாகவும் மாறுகின்றது. அவலங்களைச் சுட்டி எதிர்த்துப் போராடும் மனவலிமையைக் கொடுக்கின்றது. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்த வரம் அமையவில்லை.
அரசியல் பொருளாதாரச் சூழல்கள் நம்மைச் சூறையாடும்போது அது பற்றி நாம் எழுத முனையும்போது பலவிதமான மாயத்திரைகள் முஸ்லிம்களைப் போர்த்தி நிற்கின்றன. கற்பு, ஒழுக்கம், நன்னெறி என்பனவற்றை மீறிவிடலாகாது என்ற அச்சம் உண்டாகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய வாழ்க்கையை வாழ முடியாமல் போவதன் காரணத்தை அவருடைய அரசியல் பொருளாதாரச் சூழலிலிருந்தே கண்டறிய முடியும்! அதனைத் துல்லியப்படுத்தினால் தான் இஸ்லாமிய வாழ்வியலின் எதிரி யார் அல்லது எது என்பதை அடையாளம் காணமுடியும்! அதன் மூலமே நாம் நம்மைச் சூழ்ந்துள்ள எதிர்மறையான சூழல்களின் மீது போர் தொகுக்க முடியும்! அவ்வா@ற அமைதியும் சமாதனமும் அன்பும் நிலவும் உலகைப் படைக்கமுடியும்! அந்த நிலை உருவானால்தான் தம் வேதநூலுக்கு ஒப்பான வாழ்வை முஸ்லிம் சமுதாயச் வாழ்கிறதா என்பதைப் பரிசீலிக்க முடியும்! ஆகவே இன்குலாப், ரசூல், சல்மா போன்றவர்களின் குரல்கள் இங்கே ஒலித்தால் இன்னும் நல்லது.
ஆகவேதான் இஸ்லாமிய இலக்கியக் கழகம் மிகச் சரியான பாதையைத் தேர்ந்திருக்கிறது. என்று மகிழ்கிறோம். இது பயணம்தானே! ஒரே நடையில் ஒரே திசையில் எல்லா ஊர்களையும் ஒரே சமயத்தில் அடைந்துவிட முடியாது என்பதையும் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறோம்! புதிய நிர்வாகத்தின் நாளங்களுக்குள் நாமும் குருதி பாய்ச்”வோம்!
பயணம் தொடர்கிறது! தொட வேண்டிய எல்லைகளும் இருக்கவே செய்கின்றன என்ற புரிதலோடு!