the bucket listஉங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறி இருக்கின்றனவா....?

நான் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வியை இங்கும் பகிர விரும்புகிறேன்....நாம் அனைவருமே கடந்த காலத்தின் முக்கியமாக நமது பால்யங்களின் நினைவுகளை பொக்கிஷமாக சுமப்பவர்கள்தான்... அதற்கான காரணம் நாம் நம் அம்மா அப்பா, உண்மையான நண்பர்கள், உறவினர்கள் என்ற ஒரு வளையத்துக்குள் மிகப் பாதுகாப்பாக உணர்ந்தோம்.. ஆனால் வயது போக போக.. அது புகையைப் போல.. வாழ்வின் தீரா பக்கங்கள் நகர்ந்து

கொண்டே வந்து வெற்றிடம் நோக்கிய புள்ளியில் முதுமை என்ற கருப்பு வெள்ளையில் நிற்க வைத்து விடுவதில்.. பகிரவே முடியாத பகிர்ந்தாலும்

உணரமுடியாத தூரத்தில் ஆளற்ற தனிமைக்குள் நின்று விடுவதாக மனம் செய்யும் மாயம் அல்லது நிஜம் சொல்லும் உலகம் என்று

எப்படி வேண்டுமானாலும்... ஒன்றுக்குள் மாறிப் போவதில் மரணம் மிகப் பெரிய பயத்தை உண்டு பண்ணி விடுகிறது...விட்டது.......

தனியாக எப்படி மரணிப்பது என்ற கேள்வி எனக்குள்ளும் உண்டு.. எவர்க்குள்ளும் உண்டு...

ஒரு படம்... "தி பக்கட் லிஸ்ட்..." இயக்கம்...ராப் ரெயினர்...

பார்க்க பார்க்க.. கண்ணீர் மெல்ல சுரந்து கன்னம் தாண்டி.. கழுத்து கூசிடும் வரை மெய்ம் மறந்து விழித்தே கிடந்த மனதை அடக்கவே முடியவில்லை...

இரண்டு தாத்தாக்கள்.....புற்று நோயாளிகள்.... ஒருவர் பொருளாதார ரீதியாக சராசரி..ஒருவர் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கே சொந்தக்கார்...ஒரே அறையில் தங்கி இருக்கும் இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள்... நோய் சொல்லும் மந்திரம் அது.... ஒரு கட்டத்தில் மார்கன், தான் சாவதற்குள் சில ஆசைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று எழுதி கசக்கிப் போட்ட லிஸ்டை ஜாக் பார்க்கிறார்.....அந்த லிஸ்டில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி வைத்து விட வேண்டும் என்று யோசித்து அதை மார்கனிடமும் தெரிவிக்கிறார்.....சரித்திர பேராசிரியராக ஆக நினைத்து முடியாமல், ஒரு மெக்கானிக்காக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மார்கன் அவரின் வாழ்க்கை முழுக்க அவரின் இஷ்டப் படி இல்லவே இல்லை என்பதை உணர்ந்த ஒரு நொடியில் ....சம்மதிக்கிறார்..

மார்கனின் மனைவிக்கு விருப்பம் இல்லை.. இருந்தும் போகிறார்கள்... இதயம் திறந்து கொள்ளும் பயணம் அது.. திரும்பவும் ஒன்று நிரூபிக்கப்பட்டது..

பயணமே மிகச் சிறந்த ஆசான்.. அது கற்று தரும் அனுபவங்களின் வாயிலாக இந்த உலத்தின் மேல் கொண்ட பார்வையும் கனவும் வேறு உருவத்தில் நமக்கு கிடைகின்றன...

டாட்டூ குத்தி கொள்ள ஆசை... வேகமாக கார் ஓட்ட ஆசை..... தாஜ்மகால் பார்க்க ஆசை..ஸ்கை டைவிங் ஆசை... பிரமிட் பார்க்க ஆசை...எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன அதனதன் சுவாரஷ்யங்களோடு...  கண்ணீர் வரும் வரை சிரிக்க வேண்டும் என்று கூட ஒரு ஆசை இருக்கிறது..... நான் மிக வியந்த இடம் இது... இப்படியும் கூட ஆசையா..! ஆம்.. புத்தனின் நுண்ணிய ஆசைகள் போல.. ஆசைகள் தன் கிளைகளை பரப்பி விரவிக் கிடக்கின்றன....

ஆம் தோழர்களே... மனிதர்கள் ஆசைகளினாலே பிறந்தோம்.. ஆசைகளினாலே வாழ்ந்தோம்... . அதே ஆசைகளினாலேதான் சாகவும் செய்கிறோம்..

அது ஆளுக்கு ஆள்.. இடத்துக்கு இடம் மாறுபடும்... எனக்கு கூட ஓர் ஆசை உண்டு... இன்று நன் ஆகி விட்ட என் 5ம் வகுப்பு தோழி கிரேஸ் மேரியை

மீண்டும் ஒரு முறை சந்தித்து விட வேண்டும்..அவளோடு.. அமர்ந்து எங்கள் பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் ... இதில் என்ன முரண்பாடு என்றால் நாங்கள் படித்த அந்த 5 ஆண்டுகளில் ஒரு நாள் கூட நாங்கள் பேசிக் கொண்டது இல்லை.. வெறும் பார்வைகளும் புன்னகைகளும் மட்டும் தான்...ஒன்றாகவே விளையாடி.. கதை சொல்லி.. கதை கேட்டு... அருகருகே அமர்ந்து படம் பார்த்து... ஏன் ஒன்றாகவே தூங்கிய நாட்கள் கூட உண்டு... ஆனால் பேசிக் கொண்டது மட்டும் இல்லை... இப்போது யோசிக்கிறேன்.. எங்களுக்குள் அன்று இருந்த அன்பு... அது நட்பைத்தாண்டி கூட இருந்திருக்குமோ என்று இன்று யோசிக்கிறேன்... சாகும் முன் அவளைப் பார்த்து விட வேண்டும்.... இது என் தீரா ஆசை... இப்படி உங்கள் ஆசைகள் கூட... அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் அது உங்கள் உங்கள் வாழ்வில் உங்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய ஒரு பகுதியாக இருக்கும்.. அந்தப் பகுதியை உங்களுக்கே காட்டும் படம்தான் இது.....

ஜாக்கும் மார்கனும் நட்புக்குள் இணைந்தே கிடக்கிறார்கள்.. ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கிறார்கள்... ஜாக்கின் மகள் தொடர்பான உரையாடலில்

செயல் பாடுகளில்.. ஜாக் சண்டையிட்டுக் கொண்டு சென்று விடுகிறார்.. பின் அமைதி தவழும்... மார்கனும் அவரின் வீட்டுக்கு வந்து தன் மனைவியைக் காண்கிறார். அத்தனைக் காதல் கொண்ட தருணம் அது... அத்தனையும் காதல் கொண்ட தருணம் அது.....குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தும் மார்கனின் எதிர்மறையாக யாருமே இல்லாமல் ஒரு இயந்திரம் போல தனியாக இருக்கும் ஜாக் உணவு பார்சலை பிரிக்க கூட பொறுமை இல்லாமல்

அதை கசக்கி அடித்து குத்தும் இடத்தில முதுமையின் தனிமையை நன்கு உணர முடிந்தது....... அது மீண்டும் ஒரு குழந்தைப் பருவம் என்பதை... உணர்வுக்குள் வீசிக் கொண்டே இருக்கும் நினைவு காற்றின் சங்கமகாக உணர்ந்தே கடக்க வேண்டியுள்ளது, நிஜம் சொல்ல மிகவும் கஷ்டப் பட

வேண்டாம் என்பது போல...

"நான் என்ன சின்ன பையனா.. இல்ல.... இதுதான் முதல் தடவையா" என்று மார்கன் கேட்டு காத்திருக்க... ஒரு நினைவுக் கடலின் கொந்தளிப்பைப் போல அட்டகாசமாக ரஹ்மானின் இசையைப் போல... தடக் தடக் என்ற ஆழமான கொண்டாட்டத்தின் விளிம்பில் நின்ற பரவச அன்பவத்தை கொண்டு

வருவது போல.. மார்கனின் மனைவி அறைக்குள் நுழையும் போது... சரிந்து கிடக்கிறார் மார்கன்...

வாழ்க்கையின் முடிச்சுக்களை நாம் போடவும் முடிவதில்லை அவிழ்க்கவும் முடிவதில்லை.. அது அதுவாகவே போட்டும்

கொள்கிறது.. அவிழ்த்தும் கொள்கிறது.. அதைப் புரியத்தான் குறைந்த பட்சம் ஒரு 60 ஆண்டுகளாவது மனிதன் வாழ வேண்டியிருக்கிறது... வாழ்க்கை அதனதன் போக்கே.. தனி உடமை என்பது நம் கவிதை போல... நமக்கு மட்டுமே புரியும்... அவர்கள் சொல்வது போல....

நானும்கூட யோசிக்கிறேன்.... திரும்பி பார்க்கும் முன்னே 30 வருடங்கள் ஓடி விட்டன... பாதிக்கு பாதி.... மிச்சமே இல்லாத வாழ்கையில் பெயர் மட்டுமே ஞாபகப் படுத்துகின்றன என்னை.. உங்களுக்கும் இப்படித்தான் இருக்கும் என்றே நினைக்கறேன்.... அதை உணரச் செய்த இந்தப் படத்தின் ஒவ்வொரு முடிச்சிலும் நாமே ஒளிந்து கிடப்பதுதான் பரவச நிலை...நிதர்சன சுய யோசனை.... ஓடிக் களைத்த பொழுதில் ஒரு நாளாவது..இளைப்

பாருதலின் வசம்.. சின்ன சின்ன ஆசைகளின் கைப்பிடித்து நடப்பதை...உங்களுக்கு பிடித்த திரை விரித்துக் காணும் படத்தில், உங்களின் சாயலை நினைவு கூற சொல்லித்தரும் இப் படத்தின் திரை மனமெங்கும் வாழ்கையை வீசிக் கொண்டே இருக்கிறது.......

இமயமலையின் உச்சியில் இருவரும் அஸ்தியோடு, உலராத நினைவுகளோடு பொதிந்து கிடக்கும் காட்சியோடு படம் முடிகிறது....ஏதோ உணர்ந்த மனதோடு கண்கள் நிறைய நம் சின்ன சின்ன ஆசைகள் இன்னொருமொரு லிஸ்ட் தயாரிக்கிறது.... சீக்கிரம் வாழ்ந்து விட வேண்டும்... என்பதுதான் மரணம் நமக்கு தரும் அன்புக் கட்டளை...

இன்னும் ஒரு முறை பார்க்க வேண்டும்.. படத்தையும்........

- கவிஜி

Pin It