புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள முத்துக்காடு ஊராட்சியில் உள்ளது இறையூர்­ வேங்கைவயல். பட்டியல் வகுப்பு மக்கள் 32 குடும்பங்கள் வசிக்கின்ற ஒரு தெரு இறையூரின் வேங்கைவயல். அந்தப் பகுதியில் உள்ள 5 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு காரணமாக புதுக்கோடை அரசினர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் குழந்தைகள் அருந்திய நீரில் ஏதாவது கலந்திருக் கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் மேனிலை தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த போது 26.12.2022 அன்று நீரில் மனித மலம் கலக்கப் பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது.

அடுத்த நாளான 27.12.2022 அன்று மாவட்ட ஆட்சியர் இறையூருக்கு ஆய்வுக்குச் சென்ற போது, அந்த ஊர் அய்யனார் கோவிலுக்குள் பட்டியல் வகுப்பு மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் தேநீர் கடையில் இரட்டைக் குவளை பயன்படுத்தப்படுகிறது என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் பட்டியல் வகுப்பினருடன் அந்தக் கோவிலுக்குச் சென்ற போது தலித்துகள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத் துடன் பூசாரியின் மனைவி சாமி வந்ததுபோல் ஆடினார். அதனால் அப்பெண் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

முத்துக்காடு ஊராட்சியில் முத்துக்காடு, கீழ்முத்துக் காடு கோஞ்சம்பட்டி, புதுவயல், காவேரி நகர், இறையூர், வேங்கைவயல் என 7 பகுதிகள் உள்ளன. வேங்கை வயல் என்பது இறையூரில் உள்ள பட்டியல் சாதி மக்கள் 32 குடும்பங்கள் வசிக்கும் ஒரு தெரு. அந்த ஒரு தெருவுக்கு ஏன் தனி மேனிலைத் தண்ணீர்த் தொட்டி எனின் இறையூரில் அமைந்துள்ள மேனிலை நீர்த் தொட்டியிலிருந்து வேங்கைவயல் பகுதிக்கு தண்ணீர் வழங்குவதில்லை என பல ஆண்டுகளாக இருந்த சிக்கலைத் தீர்க்க விரும்பாத அரசு நிர்வாகம் 2017-இல் அங்கு 10,000 லிட்டர் கொள்ளளவு உள்ள மேனிலை நீர்த் தொட்டியை அமைத்துக் கொடுத்தது.vegaivayal atrocityமுத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவராக பத்மா என்பவர் உள்ளார். பத்மாவின் கணவர் முத்தய்யா இதற்கு முன் ஊராட்சித் தலைவராக இருந்தவர். முத்தய்யா மனைவியின் சார்பாக இப்போதும் ஊராட்சி மன்றத் தலைவர் போல் செயல்பட்டு வருகிறார். பெண்களுக்காக ஒதுக்கப்படும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் உள்ள பெண்களின் கணவன்களே தலைவர்களாகச் செயல்படும் போக்கே பெரும்பாலும் நிகழ்கிறது.

முத்துக்காடு ஊராட்சியில் ஊர்ப்பகுதி மக்களுக்கான குடிநீர் மேனிலைத் தொட்டிக்கும் வேங்கைவயலில் உள்ள தலித் மக்களுக்கான குடிநீர் மேனிலைத் தொட்டிக்கும் நீரேற்றும் மோட்டாரை இயக்குபவராக சண்முகம் என்பவர் இருந்து வந்தார். சண்முகத் திற்கும் வேங்கைவயல் தலித் மக்களுக்கும் இணக்கமான உறவு இருந்து வந்தது. கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலின் போது முத்தய்யா, சண்முகத்தை உடன் அழைத்துக் கொண்டு வேங்கைவயல் தலித் மக்களிடம் வாக்குக் கேட்டார். அப்போது சண்முகம், “உங்கள் குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு நான் பொறுப்பு” என்று தலித் மக்களிடம் உறுதியளித்தார்.

தேர்தல் முடிந்த பின் தலித் மக்களின் குறைகளை முத்தய்யா மதிக்காமல் சாதி ஆணவத்துடன் நடந்து கொண்டார். தலித்துகள் சார்பாக சண்முகம் முத்தய்யா விடம் வாதிட்டார். எனவே, முத்தய்யா சண்முகத்தை நீரேற்றும் பணியிலிருந்து நீக்கி விட்டார். பணிநீக்கம் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்குத்தான் உண்டு.

ஆகவே, சண்முகம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தன் பணிநீக்கம் குறித்து முறையிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிவுரையைக் கூட முத்தய்யா மதிக்கவில்லை. நேருக்கு நேர் நின்று தன்னை எதிர்க்கும் தலித்துகளுக்குப் பாடம் புகட்டவும் சண்முகத்தைப் பழிவாங்கவும் எண்ணங்கொண்டு முத்தய்யா தன் ஆட்களை ஏவி வேங்கைவயல் குடிநீர் மேனிலைத் தொட்டியில் மனித மலத்தைக் கலந்திருக்கலாம் என்று கள ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

இறையூர், வேங்கைவயல் வன்கொடுமை நிகழ்வின் விசாரணையை 14.1.2023 அன்று சிபிசிஅய்டி பிரிவுக்கு அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. விசாரணையை விரை வாக முடித்து, உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து விரைவில் தண்டனை அளிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கையும் ஆகும்,

அண்மைக் காலத்தில் பட்டியல் வகுப்பு மக்களுக்கு எதிரான இதுபோன்ற வன்கொடுமைச் செயல்கள் பெருகி வருகின்றது. இதற்கான காரணங்களில் ஒன்று, இதற்குமுன் ஆதிக்க சாதியினர் பட்டியல் வகுப்பு மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளை எதிர்க் காமல் இருந்தனர்; அல்லது கமுக்கமாக மறைக்கப்பட்டு விடும். இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் சமூக ஊடகங்கள் வளர்ச்சியின் தாக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்த்துச் செயல்பட தலைப்பட்டுள்ளனர் என்பது நல்ல மாற்றமே ஆகும்.

எந்த ஊரில் இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழ்ந்தாலும் தலித் இயக்கத்தினரோ, மனித உரிமை செயற்பாட்டாளர்களோ ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்திய பின்னரே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யும் போக்கு வழக்கமாக நிலவுகிறது. அதன்பின் தொடர் போராட்டங்கள் நடத்தினால் தான் விசாரணையே தொடங்கப்படுகிறது. நடக்கும் விசாரணையும் மிகவும் சுணக்கமாக காலம் இழுத்தடிக்கப்படும் நிலையே உள்ளது. விசாரணை என்பதும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராகப் போகாமல் பாதிப்புக்கு உள்ளானவர்களையும் இணைத்து இருதரப்பு மோதல் என்று இரண்டு பக்கத்தினரையும் விசாரிக்கிறோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை -விசாரணை என அடிக்கடி தொல்லைக்கு ஆளாக்குவதும் அச்சமூட்டி, அடக்கி சமாதானம் செய்யும் முயற்சிகளே நடக்கின்றன. குற்றமிழைத்தவர்கள் தண்டனைக்குள்ளாவதில் இருந்து பெரும்பாலும் தப்ப விடப்படுகின்றனர்.

தலித்துகள் குடிசைகள் - வீடுகள் கொளுத்தப்பட்டால் அவர்களே தங்கள் குடிசைகளைக் கொளுத்திக் கொண்டார்கள் என கதை புனைந்து பரப்பப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. அவர்கள் அருந்தும் நீர்த்தொட்டியில் கூட அவர்களே மலத்தைக் கலப்பார்களா? அப்படிச் செய்ய மனம் ஒப்புமா என்று கூட கதை கட்டுபவர்கள் கருதுவதில்லை என்பது வருந்தத்தக்க சாதிய மனநிலையாக உள்ளது.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கலவரங்கள் நிகழ்ந்தால் அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் தண்டத் தொகை விதிப்பது என்பது நடைமுறையில் இருந்தது. இப்போதும் அரசு நிர்வாகம் அந்த நடைமுறையை மேற்கொண்டால், சாதிப் பற்றின் காரணமாக உண்மை குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்ற உண்மை வெளியாகாமல் மூடி மறைக்கும் போக்கை - முட்டுக்கட்டையை அகற்ற முடியுமா என்பதைச் சோதனை செய்து பார்க்கலாம்.

சிபிசிஅய்டி போன்ற புலனாய்வு அமைப்புகள் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்தபின்,குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டி, நடந்த கொடுமையின் காரணங்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்ளூர் காவல் துறையினர் மற்றும்வருவாய்த் துறை அலுவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறையை அரசு மேற்கொண்டால் குற்றங்களை மூடி மறைக்கும் முயற்சிகள் குறைய வாய்ப்புள்ளது.

இறையூர்-வேங்கைவயல் வன்கொடுமை நிகழ்வுநடந்த உடனே மாநில/ஒன்றிய பட்டியல் வகுப்பினர் ஆணையமோ, மாநில/ஒன்றிய மனித உரிமைகள் ஆணையமோ புகார்கள் அவர்களுக்கு அளிக்காமலேஅங்கு வரத் தடை என்ன? செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகள் அடிப்படையில் உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய ஏன் மறுக்கின்றன என்பது ஒரு புதிராகவே உள்ளது.

1927-இல் மேதை அம்பேத்கர் மகத் நகர் பொதுக் குளத்தில் நீர் அருந்த நடத்திய நெடிய போராட்டம் முதல் இன்று வரை பொதுக் குடிநீர் நிலைகளைப் பட்டியல் வகுப்பு மக்கள் பயன்படுத்தும் உரிமைக்காகநூறாண்டு காலமாக போராடும் நிலை நீடிப்பது மனித குலத்திற்கே அவமானம் அல்லவா? பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாக நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் தமிழர்களுக்குத் தலைகுனிவு அல்லவா?

இவ்வளவு காலத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் அமர்ந்துள்ள ஒருவர் சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர் என்ற சொற்களை உச்சரிக்க மறுப்பதும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ­உயர் அதிகாரிகள் மாநில அரசு சொல்வதற்கு கீழ்ப்படியாதீர்கள்; ஒன்றிய அரசு சொல்வதையே செய்யுங்கள் என்று அறிவுரை கூறுவது சாதி ஆணவம் கொண்ட உயர் அதிகாரிகளை ஊக்கப்படுத்துவது ஆகாதா? என்ற வினாவும் எழுகிறது.

தமிழ்நாட்டரசு வேங்கைவயலில் குற்றமிழைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படவும் இதுபோன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

- சா.குப்பன்

Pin It