1. மக்கள் ஜனநாயகக் கட்சி பி.ஜே.பி கூட்டணி அமைச்சரவை ஜம்மு காஷ்மீரில் பதவியேற்ற ஒரே வாரத்திற்குள் நான்கு நாட்களுக்கு முன்பு குப்வாரா மாவட்டத்தில் ஹாண்டுவாரா நகரில் ராணுவம் நடத்தியிருக்கும் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
2. காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் சிலபேர் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் நடைபெற்றதாக கேள்விப்பட்ட மக்கள் ஹாண்டுவாரா நகர வீதிகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த தூப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ராணுவம் அத்துமீறி நடந்துகொண்டதே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என்றும், அவர்கள் மீது மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சட்டப்படி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மெ்பூபா பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை டெல்லியில் சந்தித்து முறையிட்டிருக்கிறார்.
3. பி.ஜே.பி. ஆதரவு பெற்ற சட்ட அமைச்சரும், துப்பாக்கி சூடு நடந்த ஹாண்டுவாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஷையத் லோன் “அவமானத்தால் நான் தலைகுனிந்து நிற்கிறேன்” என்று மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். நான்காவது நாளாக ஊரடங்கு உத்தரவு தலைநகர் _நகரிலும், குப்வாரா மாவட்டத்திலும் அமுலில் உள்ளது. கடையடைப்பு இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
4. 2011 ல் காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் பதவி வகித்த உமர்பரூக் அப்துல்லா ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ARMED FORCES SPECIAL POWERS ACT) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று குரல் கொடுத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 21 மாவட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு அமைதி திரும்பியிருக்கும் ஜம்மு, ஶ்ரீநகர், பட்காம் மற்றும் சாம்பா ஆகிய நான்கு மாவட்டங்களிலாவது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டுமென அன்றைய பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சோனிய காந்தியிடம் உமர் பரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.
5. கம்யூனிஸ்ட் கட்சிகள், காஷ்மீர் மாநில அன்றைய பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி உமர்பரூக் அப்துல்லாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. கூடவே கூடாது என்று பி.ஜே.பி. மட்டும் எகிறிக் குதித்தது.
6. அன்றைய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ராணுவ கூட்டுப்படை தளபதிகளும் ( ராணுவம், மத்திய ரிசர்வ் படை, எல்லையோர காவல்படை) முதல்வர் உமர் பரூக்கின் கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி “விளக்கெண்ணையில் வெண்டைக்காயை” தாளித்த கதையாக எந்த முடிவையும் சொல்லாமல் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருந்தார்கள்.
7. அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உமர் பரூக்கின் கோரிக்கை நியாயமானது என்றார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ராணுவ தளபதிகள் ஒத்துக்கொண்டால்தான் உமர் பரூக் அப்துல்லா கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்றார். மன்மோகன் சிங், ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை நீக்குவது சம்பந்தமாக இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவரிடம் மேலும் கலந்து பேசி ஒருமுடிவிற்கு வர கால அவகாசம் தேவையென்ற பொன்னான கருத்தைச் சொன்னார். அதாவது இவர் பிரதமராக இருக்கும்வரை இதில் எந்த உருப்படியான முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று அர்த்தம்.
8. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்ற கோரிக்கை உமர்பரூக்கின் கோரிக்கை மட்டுமல்ல. இந்த சட்டத்தை அடியோடு நீக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த சட்டம் அமுலிலிருக்கும் அசாம், மணிப்பூர் அருணாச்சல் பிரதேசம், மிசோரம், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் கடந்த பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
9. மணீப்பூர் வீராங்கனை இரோம் சார்மிளா இந்த சட்டத்தை நீக்கக்கோரி 2000ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதியிலிருந்து 15 ஆண்டுகளாக உண்ணவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
10. ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைப் பிரிவு இந்த சட்டத்தை கண்டித்திருக்கிறது. சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு (AMNASTY INTERNATIONAL) மற்றும் உலக செஞ்சிலுவைச் சங்கம் இந்தியா இந்த சட்டத்தை கைவிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
11. 1958 ம் வருடத்திய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கெதிராக ஜனநாயக அமைப்புகளும், மனித உரிமை பாதுகாப்பு போராளிகளும் கிளர்ந்தெழந்து இயக்கம் நடத்துவது ஏன் ?
12. இந்த சட்டம் அமுலில் இருக்கும் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்திற்கும். துணை ராணுவப் அடியிற்கண்ட சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன-
(1) சட்டத்தை மீறும் நபரை அல்லது சட்டத்தை மீறலாம் என்று சந்தேகப்படும் நபரை ராணுவம் சுட்டுக் கொல்லலாம்.
(2) யாரை வேண்டுமானாலும் நீதிமன்ற வாரண்ட் இல்லாமல் ராணுவம் கைது செய்யலாம், விசாரிக்கலாம்.
(3) நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த நேரத்திலும், யாருடையை வீட்டுக்குள்ளும் புகுந்து சோதனை செய்யலாம்.
(4) கலவரக்காரர்கள் அல்லது ஊடுருவல்காரர்கள் தங்கியிருப்பதாக சந்தேகப்படும் வீடுகளை, சொத்துகளை இடித்து தரைமட்டமாக்கி அழிக்கலாம்.
(5) ராணுவத்தினர் மேற்கொள்ளும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
15. “ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் - அடக்குமுறையின் வடிவம், அதிகார போதையில் ஆட்டம் போடுவோருக்கு பயன்படும் கருவி, ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களால் நஞ்சென வெறுக்கப்படுவது. ஆகையால் இந்த சட்டத்தை முற்றிலுமாக நீக்குவது இந்த நாட்டுக்கு நல்லது” என்று மத்திய அரசு 2004 ல் உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன்அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு அந்த அறிக்கையின் மீது எந்;த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் ஆட்சி அதை பத்திரமாக பரண்மேல் தூக்கியெறிந்துவிட்டது; இன்றைய பி.ஜே.பி.யின் நிலையும் அதுதான்.
16. இந்த சட்டத்திற்கெதிராக காஷ்மீர் மக்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக தெருவிலிறங்கிப் போராடுவதற்கு நியாயமான காரணங்களுண்டு. அங்கு ஒவ்வொரு ஏழு காஸ்மீரிகளுக்கு ஒரு ராணுவ வீரன் வீதம் ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
17. 1990 ல் இந்த சட்டம் காஷ்மீரில் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாளதுவரை விசாரணைக்கென்று ராணுவம் அழைத்துச் சென்ற 8000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களின் கதியென்ன, உயிரோடிருக்கிறார்களாக இல்லையா என்று கூட அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியாது. “காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் சங்கம்” என்றொரு அமைப்பு காஷ்மிரைத்தவிர உலகத்தில் வேறெங்காவது நாம் கேள்விப்பட்டதுண்டா?
18. 2008 ல் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு போராளிகளின் குழு ஒன்று காஷ்மீர் நிலவரங்களை கண்டறிய நேரில் சென்றது. அந்த குழுவில் சென்ற பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி சுகுமாரன் ராணுவத்தால் தரைமட்டம் ஆக்கப்பட்ட வீடுகளையும், ராணுவத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளையும நேரில் கண்டு வந்தார்கள். அ.மார்க்ஸ் அங்கு கண்டவற்றின் அடிப்படையிலும், மக்களிடம் பேட்டி கண்டு தெரிந்து கொண்ட விவரங்களின் அடிப்படையிலும் எழுதி வெளியிட்டிருக்கும் “காஷ்மீர் - என்னதான் நடக்குது அங்கே ?” புத்தகம் நமக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
19. மூன்று மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசனின் கீழ் இயங்கும் உளவுத்துறை காவலர்கள் பாரமுல்லா, பந்திப்பூர் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் அந்த ஊர் மக்களுக்கே தெரியாத 38 ரகசிய புதைகுழிகளைக் கண்டுபிடித்தார்கள்.. அங்கே புதைக்கப்பட்டிருந்த 2730 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. 517 உடல்களை மட்டும் உறவினர்கள் அடையாளாம் கண்டுபிடிக்க முடியவில்லை. 1692 உடல்களில் சித்ரவரை செய்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றன். ( 22.8.2011 இந்து நாளேடு)
20. நவீன அறிவியல் அதிசயமான மரபணு பரிசோதனை மூலம் அடையாளந் தெரியாத உடல்களின் பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட அனைவருமே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று ராணுவம் தைரியமாகக் கூறி வருகிறது. அதற்கான ஆதாரத்தை தெரிவிக்க மறுக்கிறது.
21. எல்லை தாண்டிவரும் ஊடுவருவல்காரர்களையும், தீவிரவாதிகளையும் அடக்கி ஒடுக்குகிறோம் என்ற பெயரில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சொத்துக்கள் சூறையாடுதல் என்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவத்தினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள “ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்” தொடரவேண்டும் என்றுதான் சொல்வார்கள்.
22. தீவிரவாதிகளை என்கவுண்ட்ரில் போலீசோ, ராணுவமோ போட்டுத் தள்ளினால் முன்பு ஒரு கொலைக்கு அரசு ரூ.10 லட்சம் சன்மானம் கொடுத்து வந்தது. இப்போது பரிசுத் தொகையை 25% உயர்த்தி ஒவ்வொரு என்கவுண்ட்டர் கொலைக்கும் 12 ½ லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படுகிறது.
23. என்கவுண்ட்டர் கொலைக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட 1998ம் ஆண்டிலிருந்து போலீசும், ராணுவமும் தீவிரவாதி என்று யரையும் உயிரோடு பிடிப்பதற்கு பதிலாக பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
24. பரிசுத்தொகை ஆசையால், பல அப்பாவி காஷ்மீரி இளைஞர்களும் “தீவிரவாதி” என்ற முத்திரை குத்தப்பட்டு போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்து வருகிறது என்று சிவில் சமூக மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். ( தி ஹிந்து 1.2.2016 ஆங்கில நாளேடு) புல்வாமா மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதத்தால் கவரப்பட்ட 34 இளைஞர்களை நல்வழிப்படுத்தி திருத்தியிருக்கிறார்கள். அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எந்த பரிசுமில்லை. ஜனநாயக ஆட்சிமுறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை விரைவில் விலக்கிக் கொள்வது அவசர அவசியமான நடவடிக்கையாகும்.
- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்