அருணாசலம் யாழ்ப்பாணம் மானிப்பாலைச் சேர்ந்த பொன்னம்பலம் முதலியார் - செல்லாச்சி வாழ்விணையாருக்கு மகனாக 14.09.1853 அன்று பிறந்தார்.

சர் முத்துக்குமாரசுவாமி இவரது தாய்மாமன். அருணாசலம் இராயல் அக்கடாமியில் கல்வி பயின்றார். இப்போது அது இராயல் கல்லூரியாக விளங்குகிறது. அங்கு பயிலும் போது இவர் இராணி புலமைப் பரிசைப் பெற்றார்.

Ponnambalam Arunachalamஆங்கிலச் சர்வகலாசாலை புலமைப் பரிசை 1870 ஆம் ஆண்டு பெற்று, இலண்டன் கேம்பிரிட்ஜிலுள்ள ‘கிறைஸ்ட்’ கல்லூரியில் உயர்தரக் கல்வி பெறச் சென்றார். தமது அறிவுத் திறமையால் ‘பவுண்டேஷன்’ புலமைப் பரிசைப் பெற்றார். புராதன இலக்கியங்களிலும், கணிதத்திலும் வல்லுநராகிப் பெரும்புகழ் ஈட்டினார். கிறைஸ்ட் கல்லூரி ஆவணங்களில் “சாமர்த்தியமுள்ள கணித சாஸ்திர நிபுணனும் புராதன இலக்கிய அறிஞனும்’ என அருணாசலத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடைய மாமன் சர் முத்துக்குமாரசுவாமி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும்படி இவரை வற்புறுத்தினார். வழக்கறிஞராவதே அருணாசலத்தின் விருப்பமாயிருந்தது. ஆனால் அவரது மாமன் வற்புறுத்தியதால் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இலங்கையில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நபர் அருணாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை திரும்பிய அருணாசலம் 1875 ஆம் ஆண்டு, கொழும்பிலுள்ள அரசாங்க மாகாண அதிபதி அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். சில காலம் கண்டிப் பகுதியில் காவல் நீதிமன்றத்தில் பணிபுரிந்தார். பின்பு இலங்கையின் பல பகுதிகளில் நீதிபதியாக பணிபுரிந்தார். மட்டக்களப்புப் பகுதியில் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்தார்.

அக்காலத்தில் சர் ஆதர் கோடன் இலங்கை அதிபராக இருந்தார். அருணாசலத்தின் திறமையை அறிந்து, தலைமை பதிவு அலுவலகத்தில் ஜெனரல் பதவியில் நியமித்தார். அருணாசலம் தலைமை பதிவு அலுவலகத்தில் நிலவிய ஊழல்களை ஒழித்தார். அலுவலக நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார்.

“அருணாசலம் பதவி ஏற்கும் பொழுது தலைமை பதிவு அலுவலகத்தில் பல ஊழல்கள் தாண்டவமாடின. உறுதிகள் பதவு செய்வதென்றால் நீண்ட கால தாமதமும் அலைக்கழிவும் ஏற்பட்டன. காணிப்பதிவு சம்பந்தமாகவோ கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாகவோ யாதொரு அட்டவணையும் வைத்திருக்கப்படவில்லை. நேர்மை என்பது அணுவளவேனும் புலப்படவில்லை. அருணாசலம் மிகுந்த ஆற்றலும் தளரா ஊக்கமும் கொண்டு அலுவலகத்தில் உள்ள கடமைகளைக்; கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். கடமைகளை முழுவதும் கற்றுக் கொண்டபின்பு, சீர்திருத்த வேலையை ஆரம்பித்தார். உறுதிகள் பதிவுதில் ஏற்பட்ட காலதாமதத்தை நீக்கினார். உத்தியோகப்பூர்மாக ஆற்றும் கடமைகட்கு தனியாக பணத்தை இலஞ்சமாகப் பெறுவதை ஒழித்தார். இன்ன இன்ன அலுவலுக்கு இன்ன இன்ன செலவு என வரையறுத்து அறிவித்தார். அலுவல்கள் செவ்வனே நடைபெற ஓர் புதிய முறையை ஏற்படுத்தினார்” என ‘டைம்ஸ் ஆப் சிலோன்’ எனும் இதழ் பாராட்டியது.

அருணாசலம் பிறப்பு, இறப்புப் பதிவில் ஓர் புதிய முறையை இலங்கையில் கையாண்டார். இந்த முறை கீழை நாடுகளுக்குப் புதிதாக இருந்தது. இலங்கையில் மரண விகிதம் அதிகரித்து வந்ததை 1895 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டினார். சுகாதார வசதிகள் குன்றிய சேரிகளினாலே நோய் பரவுகின்றதென்பதை விளக்கினார். சாக்கடை நீர் ஊருக்குள் தங்காது வெளியே அப்புறப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்றும் குடியிருப்பு வீடுகள் சுகாதார வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறினார்.

 “அருணாசலம் ஒரு புகழ்பெற்ற அறிஞர். புராதன ஆங்கில இலக்கியங்களிலும் கீழத்தேய இலக்கியங்களிலும் இவருக்கு மிகுந்த பாண்டித்தியம் உண்டு. ஆங்கிலப் பேச்சுவன்மையும் இலக்கிய ஆராய்ச்சியும் அவருடன் பிறந்தனவே எனலாம். இவர் இலக்கிய ஆராய்ச்சியாய் இருந்தாலும், சட்டப் பயிற்சியாய் இருந்தாலும், உத்தியோக அலுவலாய் இருந்தாலும் கண்ணும் கருத்துமாய் இருந்து மிக நுட்பமாகக் கடமையாற்றும் சாமர்த்தியம் வாய்ந்தவர்” என இலங்கை தலைமை நீதிபதி மொன்கிரியவ் புகழ்ந்துரைத்துள்ளார்.

‘இலங்கை சிவில் சட்டச் சுருக்கம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.  

“நாட்டை ஆளும் கலை இந்தியாவில் அற்றுப் போனது. இந்திய அரசாங்கம் எல்லைப் புறங்களில் உபயோகமின்றித் தொடுத்த போர்களில் பணத்தை இறைத்தது. இவ்வித வீண் செலவுகளின் பயனாகக் கடும்வரி விதித்தது. நிர்வாகம் அபரிமிதமான செலவை உண்டாக்கியதால், பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவதிப்படும் ஏழை மக்கட்கு கடின வேலையிலும் அனுதாபம் காட்டாது கொடுமை இழைக்கின்றது. அது மட்டுமோ, திலகர் போன்ற தேசபக்தர்களைக் கொடுமையாக நடத்துவதும், அரசாங்க அதிகாரிகளின் செயல்களைக் கண்டு மக்கள் நியாயமான முறையில் நேர்மையாகக் கூறும் அபிப்பிராயங்களைத் தடை செய்வதும் எதைக் குறிக்கின்றது? அரசாங்கம் தன்னால் கூடிய வரையில் முயன்று மக்கள் வைத்திருக்கும் இராஜவிசுவாசத்தை அழிக்கச் செய்யுமென்பதையே அது குறிக்கும். இதனால் நாளடைவில் பிரிட்டிஷ் ஆட்சி வீழ்ச்சியடையும்” என தமது நண்பர் காப்பென்டருக்கு 1898 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் தமது உள்ளக் குமுறலை தெரிவித்தார்.

அவரது பணியைப் பாராட்டி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் அவருக்கு ‘நைட்’ பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

சமூக மேம்பாட்டுப் பணிகளையும், தர்மஸ்தாபனங்களையும், தொழிற்சங்கங்களையும், நகரசபை அமைப்புகளையும் விரிவாக ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்காக 1913 ஆம் ஆண்டு அருணாசலம் அய்ரோப்பா நாட்டுக்குச் சென்றார்.

இலங்கைத் தேசாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட சாமேர்ஸ் பிரபுக்கு 15.07.1913 அன்று அருணாசலம் எழுதிய கடிதத்தில்,

“தலைவரியை நீக்குவதற்கு இலங்கையில் இப்பொழுது கிளர்ச்சி உண்டாகி வருகிறது. பௌத்தகுரு, அந்நிய நாட்டுத் தொழிலாளி என்பவர் தவிர, இலங்கையிலுள்ள சுய வல்லபம் படைத்த ஒவ்வொரு ஆணும், இன்று தலைவரி கொடுத்து வருகிறார்கள். இது நியாயமற்ற வரி என்று பல முறை எடுத்துரைத்துள்;ளேன். ஏனென்றால் செல்வர்கள் கொடுக்கும் இந்த வரியையே ஏழைகளும் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனை நீக்கப் பல ஆண்டுகளாக நான் முயற்சி எடுத்து வந்திருக்கிறேன். இலங்கையில் செல்வர்கட்கு ஒரு குறையுமில்லை. அவர்கள் ஆடம்பரப் பொருள்கட்கு மட்டுமே பணச் செலவு செய்கின்றனர்.

அருணாசலம் இலங்கை அரசாங்கத்திடம் உப்புத்தீர்வையை நீக்க வேண்டும் அல்லது ஓர் அளவிற்குக் குறைக்க வேண்டும். அரசாங்கமே உப்பு வர்த்தகத்தை இன்று ஓர் ஏகபோக வர்த்தமாகக் கொண்டுள்ளது. உப்புத் தீர்வையை நீக்கும் கொள்கை ஏழைகட்கு நன்மையைக் கொண்டு வருவதுமன்றி, விவசாயத்திற்கும் ஊக்கம் அளிக்கும். விவசாய உற்பத்திக்கு உப்பு பெரிதும் தேவைப்படும். ஆனால் இதன் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக, இதனை விவசாயிகள் எவரும் உபயோகிப்பதில்லை.

தேயிலை, ரப்பர் பயிரிடும் தோட்ட முதலாளிகள் அபரிமிதமான வருவாயைப் பெறுகின்றனர். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தேயிலை, ரப்பர் ஏற்றுமதி செய்யும் வர்த்தக் குழுவினர் அதிகமான இலாபத்தை ஈட்டுகின்றனர். இவர்கள் வருமான வரியோ, நில வரியோ செலுத்துவதில்லை. ஏழைக்குடியானவன் கொடுக்கும் தலைவரியையே செல்வம் படைத்த முதலாளிவர்க்கத்தினரும் கொடுக்கின்றனர். வரி சம்பந்தமான விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சபை இடையில் சிதைந்து போனதற்கு நியாயம் என்ன? முதலாளி வர்க்கத்தினர் பிரயோகித்த செல்வாக்கே சிதைவுறச் செய்தது எனலாம். அது மட்டுமல்லாமல் விசாரணையை பொறுப்பேற்ற சபையினரும் ஏழை மக்களின் பரிதாப நிலைமைகளை உணரவில்லை” என வலியுறுத்தினார்.

சுயாட்சி பெறும் நோக்கத்துடன் 1917 ஆம் ஆண்டு, மே மாதத்தில் இலங்கைச் சீர்திருத்தச் சங்கமொன்றை அருணாசலம் நிறுவினார். அச்சங்கத்தின் சார்பாக 1917 மற்றும் 1918 ஆம் ஆண்டுகளில் இரண்டு அரசியல் மாநாடுகளை நடத்தினார். 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘இலங்கையில் அரசியல் சீர்திருத்தம் ஏற்பட வேண்டியதற்குரிய காரணங்கள்’ என்ற ஒரு அறிக்கையைத் தயாரித்து இலங்கைச் சீர்திருத்தச் சங்கத்தினதும், இலங்கை தேசிய சங்கத்தினதும் கூட்டுக் கமிட்டியில் வெளியிட்;டார்.

 ‘இலங்கைத் தேசீய காங்கிரஸ்’ 11.12.1919 அன்று தோற்றுவிக்கப்பட்டது. அருணாசலம் இலங்கைத் தேசீய காங்கிரஸின் முதலாவது தலைவராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அருணாசலம் இலங்கையின் அரசியல் விடுதலைக்காகப் போராடவும், சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபட வேண்டுமெனவும் மக்களிடம் பரப்புரை செய்தார்.

கொழும்பில் வறியவர்களுக்கு வீடமைக்கவும், மக்களின் ஆரம்பக்கல்விக்கும், கூலியாட்களைத் தற்போதைய அடிமைத்தனத்தினின்று விடுவிக்கவும் அதிக பணிகள்; செய்ய வேண்டியிருக்கின்றன என்பதை உணர்ந்து பாடுபட்டார்.

ஒரு நாட்டின் இளைஞர்கள் தாம் எதிர்காலச் சந்ததிக்குப் பொறுப்பானவர்கள் என்பதை உணர்ந்த அருணாசலம், 19.11.1914 அன்று கொழும்புவில் இளைஞர்களைக் கூட்டி கீழ்க்கண்டவாறு உணர்ச்சித் ததும்ப அறிவித்தார்.

“மக்களின் தேவைகளை நாம் நன்கு அறிந்து, அறிவு, பொழுதுபோக்கு என்பவற்றை அவர்களுக்குக் கிடைக்கச் செய்து அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டும். அத்துடன் கற்றவர்கள், செல்வந்தர்கள், குறைந்த நிலைமையிலுள்ள சகோதரர்கள் ஆகியோரிடையே இனிய மனித உறவுகளை நிலவச் செய்தல் வேண்டும்.

இந்த வேலை மிக முக்கியமானதெனினும் மக்களின் கல்வி, மருத்துவ வசதி, பொருளாதாரச் சீர்திருத்தம், அவர்களின் வீட்டுத் திட்டங்களை மேம்பாடு செய்தல், அவர்களின் இல்லங்களுக்குச் சென்று நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் மூலம் துப்புரவாகவும் சிறப்பாகவும் வாழ அவர்களுக்குக் கற்பித்தல், மருத்துவ வசதிகளை அளித்தல். குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்தல், பயன்களைப் பெற்றுக் கொடுத்தல் என்பவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.”

                அருணாசலம் இரவு பாடசாலைகள் பலவற்றைத் தொடங்கினார். சேரிகள் தோறும் சென்று தொழிலாளரிடையே கல்வியைப் பரப்பினார். சுகாதாரம் குறித்து விரிவுரை நிகழ்த்தினார். சேரிச்சிறார்களின் நலனுக்காக விளையாட்டுச் சங்கங்களை நிறுவி செயற்படுத்தினார். கைத்தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டிட வழிவகை ஏற்படுத்தினார். கூட்டுறவு கடன் உதவிச் சங்கங்கள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைத்திட பாடுபட்டார்;.

                இலங்கையின் முதலாவது தொழிலாளர் சங்கம் அருணாசலத்தால் 25.06.1919 அன்று தோற்றுவிக்கப்பட்டது. இத்தொழிலாளர் சங்கத்தின் பெயர் ‘இலங்கை கைத்தொழிலாளர் சேமாபிவிருத்திச் சங்கம்’ என்பதாகும்.

                இலங்கையிலுள்ள தொழிலாள வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தல், மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் பற்றிய பிரச்சினைகளைக் கற்றறிதலை ஊக்குவித்தல் என்பவைகள் அத்தொழிலாளர் சங்கத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டது.

                அருணாசலம் 1920 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொழிலாளர் சங்க இயக்கத்தை மிகவும் விரிவடையச் செய்து, இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்தையும் தோற்றுவித்தார். இவரது முயற்சியால் தொழிலாளர் சட்டத்தில் இருந்த தொழிலாளரைத் தண்டிக்கும் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டன.

                இலங்கைக் கல்வி அதிபர் எஸ். எம். பரோஸ், அருணாசலத்திடம் கல்வி குறித்து அறிக்கை தயார் செய்து வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் 1900 ஆம் ஆண்டு ஜீலை 8 ஆம் தேதியன்று தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் அவர், கொழும்பில் வழங்கப்பட்டு வந்த ஆரம்பக்கல்வி முறையின் அடிப்படையான குறை ஆங்கிலத்தின் மூலம் கல்வி பயிற்றுவிக்கப்படுவதே என்று குறிப்பிட்டார். உண்மையில் அருணாசலம் தான் இலங்கையில் தாய்மொழிக் கல்வி இயக்கத்தின் தந்தையாவார்.

                “இங்கிலாந்திலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் ஆங்கிலத்தைத் தள்ளிவிட்டு, ஜெர்மானிய மொழியைப் போதனா மொழியாக்கினால் எவ்வாறிருக்கும் என யோசித்துப் பாருங்கள்! ஆங்கிலத்துக்கும் சிங்களத்துக்கும் (அல்லது தமிழுக்கும்) இருக்கும் ஒற்றுமையிலும் பார்க்க ஜெர்மானிய மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது. எனவே சிங்களச் சிறார்களும் தமிழ்ச் சிறார்களும் ஆங்கிலம் கற்பதைவிட ஆங்கிலச் சிறார் ஜெர்மானிய மொழியை இலகுவில் கற்க முடியும்” என்று கல்வி அதிபரிடம் வினா எழுப்பினார்.

                பொன்னம்பலம் அருணாசலம் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பிதா என போற்றப்பட்டார். அவரது முயற்சியினால் 1906 ஆம் ஆண்டு சனவரி மாதம் இலங்கைப் பல்கலைக் கழகச் சங்கம் தொடங்கப்பட்டது.

                பொன்னம்பலம் அருணாசலம் 1883 ஆம் ஆண்டு மானிப்பாயைச் சேர்ந்த சொர்ணம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

‘இலங்கைத் தமிழ் சபை’ என்னும் கலாச்சார அமைப்பை 1923 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

                இந்தியாவிலுள்ள புனித ஸ்தலங்களுக்கு 1923 ஆம் ஆண்டின் இறுதியில் யாத்திரை சென்றார். அப்போழுது தமிழகத்திலுள்ள மதுரையில் 09.01.1924 அன்று தமது எழுபத்தொன்றாவது வயதில் மறைந்தார்.

                இலங்கைச் சரித்திரச் சுருக்கம், எங்கள் அரசியல் தேவைகள், எங்கள் அரசியல் நிலைமைகள், ஞானாவாசிட்டம், முருக வாழிபாடு, சமயதத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்பும் முதலிய நூல்களை படைத்து அளித்துள்ளார்.

                பொன்னம்பலம் அருணாசலத்தின் தேச சேவையை போற்றும் வகையில் இலங்கைப் பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவப்பட்டு உள்ளது. 

- பி.தயாளன்

Pin It