trump 350அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கடந்த சனிக்கிழமை இந்தியப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். அதில் மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தான Hydroxychloroquine'ஐ அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும், எனவே Hydroxychloroquine மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடான இந்தியா; அதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

உடனே இந்திய ஊடகங்கள் சில "இந்தியாவிடம் மண்டியிட்ட அமெரிக்கா", "இந்தியாவின் தயவை நாடிய உலக நாடுகள்" என்றெல்லாம் தலைப்பிட்டு செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.

Hydroxychloroquine நன்கு அறியப்பட்ட மலேரியா எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றாகும். 1934 ஆம் ஆண்டு Hans Andersag மற்றும் அவரின் குழுவினரால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்தின் பேட்டன்ட் Bayer laboratories என்ற நிறுவனத்தின் கையில் உள்ளது. மனிதப் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த மருந்தின் மீதான தடை பின்னாளில் உலக சுகாதார மையத்தால் நீக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் போகும் சூழலில் இந்த மருந்தை "Compassionate use" ஆகப் பயன்படுத்தலாம் என டிரம்ப் அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து சந்தையில் இந்த மருந்தின் தேவை அதிகரித்தது.

கடந்த சனிக்கிழமை இந்திய அரசு இந்த மருந்தின் ஏற்றுமதியைத் தடை செய்தது. அதைத் தொடர்ந்துதான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டு பேசினார். இருந்தும் மோடி அரசு தடையை நீக்குவதில் சிறிது தயக்கம் காட்டியது.

சும்மா இருப்பாரா டிரம்ப்? "மருந்துகளைத் தரவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்." என எச்சரிக்க விடுக்க, உடனே நம் ஆல் இன் ஆல் அழகுராஜா மோடி தனது 56 இன்ச் மார்பை மடக்கி ஒடுக்கி மருந்தின் ஏற்றுமதித் தடையை நேற்று நீக்கினார். உடனே ஊடகங்கள் மீண்டும் கருணை உள்ளம் கொண்ட மோடி என கூவத் தொடங்கி விட்டன.... 

ஆனால் ஊடகங்கள் காட்டுவது போல இந்த மருந்தின் ஏகபோக உரிமை ‌இந்தியாவிடம் இல்லை.

Indian Drug Manufacturer's association-ன் நிர்வாகி அசோக் குமார் மதன் BBCக்கு அளித்துள்ள தகவலின் படி, "இந்த மருந்தை உருவாக்கத் தேவைப்படும் Active Pharmaceutical Ingredient (API)'ல் 70% சீனாவிடம் இருந்தே பெறப்படுகிறது".

அதாவது ஒரு மருந்தின் மூலப் பொருட்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. Active Pharmaceutical Ingredient (API)
2. Excipient

இதில் API என்பது தான் மிக முக்கியமானது. இதுவே நோயை எதிர்க்கக் கூடியது. Excipient மருந்தின் நிறம், அமைப்பு ஆகியவற்றை முடிவு செய்ய உதவுகின்றது. உதாரணமாக, சாம்பார் மருந்து என்றால் பருப்பு API, முருங்கைக்காய் Excipient.

ஆக நமது நாட்டு மக்களுக்கு மருந்து தயார் செய்யவே, நாம் சீனாவை நம்பி இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஊடகங்கள் ஒரு பொய் பிம்பத்தைக் கட்டி எழுப்ப முயல்வது ஏன்? எளிய மக்களை நடக்க வைத்துக் கொன்ற கோபத்தை முஸ்லீம்கள் மீது வெற்றிகரமாக மடைமாற்றச் செய்து விட்டு, மேலும் மக்களைச் சுரண்ட போலியான ஒரு தேசப்பற்றை உருவாக்கவா..?

ஆக மொத்தம்... பக்தாள் நமக்கு எதிரி என்று சொன்ன சீனாக்காரன் நமக்கு மருந்து கொடுத்து உதவுகிறான், நமக்கு நண்பன் என்று சொன்ன அமெரிக்காகாரன் அதை மிரட்டி வாங்கிச் செல்கிறான்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It