பழந்தமிழக நகர நாகரிகத்தின் பேரழிவு:

பேரரசுக்காலத்தில், கி.மு.50 முதல் கி.பி.150வரை பழந்தமிழ்ச் சமூகம் ஓரளவு சங்ககால நற்பண்புகளையும், உயர்ந்த சமூக மதிப்பீடுகளையும் கொண்டதாக இருந்தது. சுயசிந்தனையும், புதுமை செய்யும் திறனும், புத்துணர்வும் ஓரளவு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்தன. படைவலிமையும், உலகளாவிய வணிகமும், செல்வமும் தொடர்ந்து வளர்ந்து வந்தன. ஆனால் வீழ்ச்சிக்கான அறிகுறிகளும் உருவாகி வளரத் தொடங்கியிருந்தன. சங்கம் மருவிய காலத்தில் வேந்தன் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டு வானளாவிய அதிகாரங்களைக் கொண்டவன் ஆனான். அதனை கி.மு.75 அளவில் தோன்றிய ‘முத்தொள்ளாயிரம்’ நூல் வெளிப்படுத்துகிறது(1). பேரரசுக் கொள்கை, அரச குடும்பங்கள் இடையேயும் உயர் வர்க்கத்தாரிடமும் இருந்த மதச் சிந்தனைகள், இன்னபிற காரணிகள் ஆகியன கி.பி. 150க்குப் பிந்தைய தமிழ்ச் சமூகம் ஒரு புரையோடிப் போன சமூகமாக மாறுவதற்குக் காரணமாகின. சாதாரண மக்களின் நிலையில் மாற்றமில்லாத வாழ்க்கை இருந்ததோடு, அவர்களும் மூட நம்பிக்கைகளிலும், வெற்றுச் சடங்குகளிலும் ஆழ்ந்து போயிருந்தனர். வர்க்கவேறுபாடுகள் மிக அதிக அளவு அதிகரித்து, சகிக்க இயலாத நிலையை அடைந்ததோடு, கருத்து வேறுபாடுகள் மிகுந்து, நற்பண்புகளையும், உயர் மதிப்பீடுகளையும் இழந்து போன சமூகமாக, பழக்க வழக்கங்களும், சடங்குகளும், மரபுகளும் இறுகிப் போன சமூகமாக, சுயசிந்தனையோ, புத்துணர்வோ, புதுமை செய்யும் திறனோ இல்லாதுபோய், ஒரு புரையோடிப்போன சமூகமாக கி.பி. 150க்குப் பிந்தைய பழந்தமிழ்ச் சமூகம் ஆகிப் போயிருந்தது.

tamilnattu seppedugal 1இந்த நிலையில் கி.மு. 235 – 284 வரை உரோம் பேரரசில் ஏற்பட்ட நெருக்கடிகளால் தமிழக ஏற்றுமதி கி.பி.235 முதல் நின்றுபோய் பொருளாதாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டது(2). இந்தப் பேரிழப்பு பழந்தமிழ்ச் சமூகத்தை நிலைகுலையச் செய்தது. இந்தச் சூழ்நிலையில்தான் கி.பி. 250இல் இந்திய மத்தியப் பகுதிகளிலும், கர்நாடக ஆந்திரப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த அநாகரிக இனக்குழு மக்களான களப்பிரர்களின் படையெடுப்பு நடந்தது(3). இவர்களது படையெடுப்பால் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சிறப்போடும் புகழோடும் இருந்து வந்த பழம்பெரும் தமிழர் நாகரிகம், மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் பேரழிவுக்கும் உள்ளானது. அதில் இருந்து தமிழகம் மீளவே இல்லை.

இது போன்ற புரையோடிப் போன சமூகங்களின் மேல் நடக்கும் அநாகரிக இனக்குழு மக்களின் படையெடுப்பு, மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகிறது. இது போன்ற படையெடுப்புகளால், அந்த புரையோடிப் போயிருந்த, நாகரிக நகரச் சமூகங்கள் ஒரு பின் தங்கிய கிராமச் சமூகமாக, மிகவும் பிற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட சமூகமாக மாற்றப்படுகின்றன. அநாகரிக டோரியர்களின் படையெடுப்பால் கிரேக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து, “ஆப்ரிக்காவில் பயிரிட்டு வாழ்ந்த மக்களுக்கும் கிரேக்க மக்களுக்கும் வேறுபாடு இல்லாது போனது…. மைசீனியாவின் கடந்த காலம் முற்றிலுமாக மறக்கப் பட்டிருந்தது…. கிராமங்கள் ஒன்றுக் கொன்று துண்டிக்கப் பட்டிருந்தன….. மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். கைவினைத் தேர்ச்சி முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை…. வாழ்க்கை கடுமையானதாகவும், பஞ்சங்கள் மிகுந்ததாகவும் இருந்தது” என்று அதன் பிற்போக்கான நிலையைக் கூறுகிறார் கிரிசு ஆர்மன்(4). டோரியர் படையெடுப்பால், மைசீனிய நகரம் உட்பட அநேக நகரங்கள் சாம்பற் குவியலாகின, கிரீசின் வாழ்க்கை நிலைகுலைந்து போய்விட்டது, அந்நாகரிகத்தை இருள் சூழ்ந்து கொண்டது, மக்களின் வறுமை அதிகரித்தது, வாழ்க்கை நிலையற்றதாகியது, அதன் காரணமாக 300 வருடம் கிரேக்கம் இருளடர்ந்த காலமாக ஆகியது என்கிறார் சாமிநாத சர்மா(5). களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் இந்த நிலையில்தான் இருந்தது.

இது போன்ற நிலையிலிருந்து அச்சமூகம் மீண்டு வர ஒருசில நூற்றாண்டுகள் முதல் பல நூற்றாண்டுகள் வரை ஆகின்றன. ஆனால் புதிதாக மீண்டுவரும் சமூகம் முற்றிலும் ஒரு புதிய, மாறுபட்ட சமூகமாக, பழைய நினைவுகள் இல்லாத, பிற்போக்குச் சிந்தனைக்களைக் கொண்ட சமூகமாக ஆகி விடுகிறது. களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய அழிவுக்கும் சிதைவுக்கும் உள்ளான ஒரு சமூகமாக ஆகியது. பின் 150 ஆண்டுகள் கழித்து மீண்டெழுந்த தமிழ்ச் சமூகம் மதம், சமயம் சார்ந்த சமூகமாக, பிற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட ஒரு கிராமப்புறச் சமூகமாக மாறிப் போயிருந்தது. பழந்தமிழக நகர அரசுச் சமூகத்தில் இருந்த மிகவும் முற்போக்கான தத்துவார்த்த கலை அறிவியல் தொழில் நுட்பத்தையும் அவை சார்ந்த சிந்தனைகளையும், அந்த நகர அரசுச் சமூகம் குறித்த வரலாற்றையும், பண்பாட்டையும் அது முற்றிலுமாக இழந்துபோய், முற்றிலுமாக மறந்தும் போயிருந்தது. இன்று வரைகூட அவைகளைப் பற்றிய எந்தவித நினைவும் இல்லாத சமூகமாகவே தமிழ்ச் சமூகம் இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில கலை, இலக்கியம் சார்ந்த விடயங்கள் மட்டும் ஓரளவு பாதுகாக்கப்பட்டிருந்தன. இனக்குழு நிலையில் இருந்த அநாகரிக மக்களான களப்பிரர் படையெடுப்பு தமிழகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலான நகரங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுத் தரை மட்டமாக்கப்பட்டிருந்தன. நாடு முழுவதும் படையெடுப்பின் தொடக்க ஆண்டுகளில் மிகப்பெரிய வன்முறை நடந்தது. பண்டைய நாகரிகம் அடியோடு இல்லாது போனதோடு, கடந்த கால நாகரிகம் குறித்தச் சிந்தனையே இல்லாத அளவு அங்கு பேரழிவும் வன்முறையும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தேறியது.

ஆரியர்களின் சிந்துவெளி நாகரிகத்தின் மீதான தாக்குதல் குறித்து, “ஆரியர் தாக்குதல் நடத்திச் சென்ற பிறகு, அந்த இடங்கள் அளவுக்கு அதிகமாகவே சின்னாபின்னப் படுத்தப்பட்டன. அதன்பின்னர் மனித சமூகமும் வரலாறும் அங்கு மீண்டும் தோன்றக் கூடுமானால் அவை முற்றிலும் மாறுபட்ட நிலையில்தான் முடியும்” எனக்கூறுகிறார் டி.டி. கோசாம்பி(6). இந்த நிலைதான் களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகத்தின் நிலையாகவும் இருந்தது. இந்த களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட வைதீக சமண பௌத்த மதச் செல்வாக்குகளும், சமற்கிருதமயமாதலும் இணைந்து(7) பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அனைத்தையும் இல்லாது செய்ததோடு அந்த நகர நாகரிக காலம் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

சமற்கிருதமயமாக்கலும் பேரழிவும்:

பழந்தமிழக நகர நாகரிகம் பொருள்முதல்வாத அடிப்படையைக் கொண்டிருந்ததால் பண்டைய தமிழ் நூல்கள் அனைத்தும் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருந்தன. சமண பௌத்த வைதீக மதங்கள் அதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவை. அதன் காரணமாக தொடக்கத்தில் இந்த மத ஆதிக்கங்களின் காரணமாகவும், கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து உருவான சமற்கிருதமயமாக்களின் காரணமாகவும்(8). தமிழில் இருந்த பொருள் முதல்வாத மெய்யியல் நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டன. இதில் சமற்கிருதமயமாக்களின் பங்கு மிக முக்கியமானது. பழந்தமிழ் நூல்களில் பலவற்றை மொழி பெயர்த்துக்கொண்ட சமற்கிருதம் பழந்தமிழர்களின் பண்டைய நூல்கள் அனைத்தையும் அது பற்றிய சிந்தனை அனைத்தையும் தடயமே இல்லாமல் அழித்து ஒழிப்பதில் பெருவெற்றி பெற்றது. பண்டைய ஓலைச்சுவடிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதையும், ஆற்றில் விடுவதையும் சடங்குகளாக, புனித விடயங்களாக ஆக்கித் தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை இல்லாமலாக்கியது(9). ஆகவே 1.நகர அரசுகள் பேரரசுகளாகி சீர்கெட்டுப் புரையோடிப்போய், வலிமை இழந்ததும், 2.களப்பிரர்களின் படையெடுப்போடு கூடிய மிகப் பெரிய பேரழிவும், 3.சமண, பௌத்த, வைதீக மத ஆதிக்கமும், 4.சமற்கிருதமயமாக்கலும் ஆகிய இவைதான் 1000 ஆண்டு கால பழந்தமிழக நகரநாகரிகம் தடயமே இல்லாமல் அழிந்து போகக் காரணம்.

களப்பிரர் காலமும் வைதீகமும் (கி.பி.250-550):

வேள்விக்குடிச் செப்பேடு:

களப்பிரர் காலம் குறித்து அறிய வேள்விக்குடி செப்பேடும், பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் உதவுகின்றன. முதலில் வேள்விக்குடி செப்பேடு குறித்துப் பார்ப்போம். தனக்கு யாகங்களைச் செய்து கொடுத்த கொற்கைக்கிழான் கொற்றன் என்கிற பார்ப்பனனுக்கு கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி(10). வேள்விக்குடி என்கிற ஊரைத் தானமாகக் கொடுத்தான் எனவும், இதனை கி.பி. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தைக் கைப்பற்றிய களப்பிரர்கள் எடுத்துக் கொண்டனர் எனவும், கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையனிடம் கொற்கைக் கிழான் கொற்றனின் வழிவந்தவன் தனது முன்னோனுக்கு வழங்கப்பட்ட வேள்விக்குடி ஊரை மீட்டுக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டான் எனவும், அதனை ஏற்றுப் பராந்தகன் நெடுஞ்சடையன் வேள்விக்குடி ஊரை மீட்டுக் கொடுத்த செப்பேட்டுச் சாசனம்தான் இந்த வேள்விக்குடிச் செப்பேடு எனக் கருதப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய நிலதானம் சுமார் 600 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டு பின் சுமார் 400 ஆண்டுகள் கழித்துத் திருப்பித்தரப்படுவதாக இந்தச் செப்பேடு கூறுகிறது.

இந்த வேள்விக்குடிச் செப்பேடு குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார் முனைவர் தி.சு. நடராசன்(11). முதுகுடுமி காலத்தில்(கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு) இது போன்ற செப்பேடுகள் இருக்கவில்லை, நில தானங்கள் வழங்கப்படுவதில்லை. வேள்விக்குடி என்ற ஊர் இல்லை. அதில் உள்ள பெயர்களும் பொருத்தமாக இல்லை. முதுகுடுமி கொடுத்த சாசனம் குறித்தத் தகவல் எதுவுமில்லை. சங்க காலத்திலேயே பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டது என்ற பிரமையை உருவாக்குவது தான் இதன் நோக்கம் என்கிறார் அவர். தி.சு. நடராசன் அவர்களின் கருத்தில் உண்மையுள்ளது. கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டில் (நந்தர் - மௌரியர் காலம்) பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்குவது என்பது வட இந்தியாவில் கூட இருக்கவில்லை. எனவே இந்த வேள்விக்குடி செப்பேடு என்பது ஒரு வரலாற்றுப்புனைவு. கீழடி அகழாய்வுகளும் இன்ன பிறவும் அன்று சமயம் சார்ந்த எந்த விடயமும் இல்லை என்பதை உறுதி செய்த நிலையில் இந்த வேள்விக்குடி செப்பேடு கூறும் செய்திகளை ஏற்பது இயலாது. தொல்காப்பியர் குறிப்பிடும் 140 புறத்திணைகளில் ஒன்று ‘வேள்வி நிலை’ என்ற புறத்திணை. அது அரசன் ஆநிரைகளைப் பரிசாக வழங்கும் நிகழ்வு. அதற்கும் வேதமுறையிலான வேள்விச்சடங்குக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை(12). ஆகவே அன்று வேதமுறையிலான வேதச்சடங்கோ நிலதானம் வழங்குவதோ இருக்கவில்லை.

பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் பார்ப்பனியமும்:

1979க்கு முன்பாகக் களப்பிரர்களைப் பற்றி ஆய்வு செய்த பண்டாரத்தார், நீலகண்ட சாத்திரி, மயிலை சீனி.வேங்கடசாமி போன்ற பல வரலாற்று ஆய்வாளர்களின் காலத்திற்குப்பிறகே பூலாங்குறிச்சிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் கருத்துகளுக்கு வேள்விக்குடி செப்பேடு தான் அடிப்படையாக இருந்தது. ஆனால் வேள்விக்குடி செப்பேடு ஒரு வரலாற்றுப்புனைவு என்பதால், அவர்கள் களப்பிரர்கள் குறித்துக்கூறிய கூற்றுக்கள் பல ஏற்கத்தக்கன அல்ல. இனி நாம் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு குறித்து முனைவர் மா.பவானி கூறுவதைப் பார்ப்போம். பூலாங்குறிச்சியில் உள்ள குளத்தின் மலைச்சரிவில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முதலில் ஒரு ஓலையில் எழுதப்பட்டு, பிறகு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டின் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சேந்தன் கூற்றன் என்னும் களப்பிர அரசன் காலக் கல்வெட்டு. இதில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இந்த அரசனது ஆட்சியில் வேல்மருகன் கடலகபெரும் படைத் தலைவன் எங்குமான் என்பவன் இரண்டு கோவில்களையும், ஒரு சமணப்பள்ளியையும் கட்டுவித்து கோவிலில் வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்தான் என முதல் கல்வெட்டும், வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் பிரம்மதேயம், வேறு ஒரு ஊர் ஆகிய மூன்று ஊர்களும் மலைமேல் எடுக்கப்பட்ட கோவில்களுக்கு தரப்பட்ட தானம் என்பதை இரண்டாவது கல்வெட்டும் கூறுகிறது. இக்கல்வெட்டுகளில் பார்ப்பன நிலக்கிழார், பிரம்மதேயமுடையார், நாடு காப்பார், புறங்காப்பார் போன்ற பல பெயர்கள் வருகின்றன. இக்கல்வெட்டில் கூறப்படும் சில ஊர்கள் சோழநாட்டில் இருப்பதாலும், கல்வெட்டிலேயே பாண்டியநாடு கொங்கு நாடு போன்றன வருவதாலும் இந்த களப்பிர அரசன் சோழ, பாண்டிய, கொங்கு நாடுகளுக்கு அரசனாய் இருந்துள்ளான். பிரம்மதேயமுடையார், பிரம்மதேயம் ஆகிய சொற்கள் களப்பிரர் காலத்தில் பிரம்மதேயம் வழங்கப் பட்டதையும், அவை இருந்ததையும் உறுதி செய்கின்றன எனவும் இக்காலம் பிரம்மதேயங்கள் பெருகத்துவங்கிய காலம் எனவும் கூறுகிறார்(13).

பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள் களப்பிரர்கள் வைதீக நெறிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதோடு அவர்கள் பார்ப்பனர்களுக்குப் பிரம்மதேயம் எனப்படும் நிலதானங்களை வழங்கியவர்கள் என்பதையும் உறுதி செய்கின்றன. ஆகவே தமிழகத்தில் பல்லவர்களோடு, களப்பிரர்களும் முதலில் பிரம்மதேயங்களை வழங்கியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது(14). யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கணநூலில் களப்பிரர்கள் மூவேந்தர்களையும் சிறையில் இட்டனர் என்ற செய்தி உள்ளது(15). இந்நூலில் உள்ள பல பாடல்கள் மூலம் களப்பிரர்கள் மிகச்சிறந்த வைணவர்கள் என அறிய முடிகிறது(16). சோழநாட்டைத் தன் பெரும்படையால் கைப்பற்றி ஆட்சி செய்த கூற்றுவன் என்கிற களப்பிர அரசன் ஒரு சிறந்த சிவபக்தன் என கூற்றுவநாயனார் புராணம் கூறுகிறது(17).

களப்பிரர்கள் பாலி மற்றும் பிராகிருத மொழியை ஆதரித்தார்கள் என்பதற்கும் அம்மொழிகளில் பல நூல்கள் அக்காலத்தில் படைக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் உண்டு(18). கி.பி. 5ஆம் நூற்றாண்டில், சோழ நாட்டைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர் என்னும் பௌத்த அறிஞர் பாலி மொழியில் பல நூல்களைப் படைத்தார். களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில்தான் ‘வினய வினிச்சியம்’ என்னும் நூலை அவர் எழுதினார். தஞ்சை தருமபால ஆசாரியார் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவர். இவரும் பாலிமொழியில் பல உரை நூல்களை எழுதியுள்ளார். கி.பி. 470இல் வச்ரநந்தி என்பவர் மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்தின் பணிகள் குறித்துத் தெளிவான தரவுகள் இல்லை எனினும் சமணத்தை வளர்ப்பதற்காகவே இச்சங்கம் நிறுவப்பட்டது(19). பொதுவாக கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்துதான் களப்பிரர் குறித்தத் தரவுகள் கிடைக்கின்றன. அதற்கு முந்தையகாலத் தரவுகள் இல்லை என்பது களப்பிரரின் தொடக்க காலத்தில் நடந்த பேரழிவையும், அதன் விளைவாக பழந்தமிழ்ச் சமூகத்தின் நகர நாகரிகம் தடயமே இல்லாது போனதையும் உறுதிப்படுத்துகிறது. ஆகவே களப்பிரர் காலத்தில் சமண பௌத்த மதங்கள் மட்டுமல்ல வைதீகமும் ஆதரிக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயமும் வழங்கப்பட்டன.

தமிழ், சமற்கிருத மொழிகளின் நிலை:

களப்பிரர்களின் தொடக்க காலத்தில் பாலி பிராகிருத மொழிகள் செல்வாக்கு பெற்றவைகளாக இருந்தன, இறுதியில் சமற்கிருதம் பெரும் செல்வாக்கு பெற்றதாக ஆகியிருந்தது. ஆனால் அறிவியல்மொழி, வணிகமொழி, இலக்கிய மொழி போன்ற தகுதிகளை தமிழ்மொழி முழுமையாக இழந்து கொண்டிருந்தது. 1000 ஆண்டுகாலம் வளர்ச்சியடைந்த பழந்தமிழக நகர நாகரிகம், தடயமே இல்லாமல் அழிந்து போகும் அளவு மிகப்பெரிய பேரழிவு நடந்த காலம் களப்பிரர்களின் தொடக்ககாலம். பிந்தைய களப்பிரர்காலம் சமய ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலம். பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் அதன் அடிப்படைத் தரவுகளும் முழுமையாக அழிக்கப்பட்ட காலம். களப்பிரர் காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களும் முதலில் பாலி பிராகிருத மொழிகளை, பின் சமற்கிருத மொழியை வளர்த்தெடுத்தவர்களாகவும் பிரம்மதேயங்களை வழங்கியவர்கள் ஆகவும் இருந்துள்ளனர்(20). கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.பி. 250வரை 1000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அரசு மொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக, வணிக மொழியாக, வழிபாட்டு மொழியாக, வாழ்வியல் மொழியாக என அனைத்துமாகத் தமிழ் இருந்து வந்தது.

ஆனால் கி.பி.250க்குப்பின் முதலில் பாலி, பிராகிருதமும், பின் சமற்கிருதமும் தமிழகத்தில் செல்வாக்கு பெற்று, தமிழ்மொழி கீழ்மொழியாக ஆகியது. ஆக கி.பி. 250க்குப்பின் நடந்த அந்நியப் படையெடுப்புகளால், சமய ஆதிக்கம் மிகுந்து, சமற்கிருதமயமாக்கலுக்கு உள்ளாகி, 1000 ஆண்டுகால தமிழக நகர அரசுகளின் உயர்வளர்ச்சி பெற்ற, சமயச்சார்பற்ற அதன் நகர நாகரிகமும், பண்பாடும் கி.பி. 550க்குள் தடயமே இல்லாமல் அழிந்துபோனது. பின் உருவான இடைக்காலப் பிற்காலத் தமிழ் அரசுகளின் நாகரிகங்கள் கூட, சமய ஆதிக்கம் கொண்ட சமற்கிருதமயமாகப்பட்ட நாகரிகங்கள்தான். ஆனால் அவற்றில் தமிழ் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதனால்தான் கி.பி. 500க்குப் பின்னரும் தமிழ் வணிக மொழியாக, இலக்கிய மொழியாக கி.பி. 1400 வரை இருந்து வந்தது. அதன் பின் வந்த அந்நிய ஆட்சிகளால் தமிழ் அந்தத் தகுதிகளையும் இழந்து போனது(21).

திருமூலரும், காரைக்கால் அம்மையாரும்:

களப்பிரர் காலத்தில் பின் தங்கிய கிராமச் சமூகமாக மாறிப்போன தமிழ்ச்சமூகம் மதச்சிந்தனையில் ஆழ்ந்து போனது. அதன் காரணமாக கி.பி. 5ஆம் நூற்றாண்டில் திருமூலரும், காரைக்கால் அம்மையாரும் தோன்றினர். 3100 பாடல்களைக்கொண்ட திருமந்திரத்தை எழுதிய இடையனாகிய திருமூலர் அதில், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என அனைவரையும் ஒரே குலம் எனவும் அனைவருக்கும் ஒரே இறைவன் தான் எனவும் பேசுகிறார். இறைவன் தன்னை பாடுவதற்குத் தமிழ் மொழியைத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்பதை ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ எனக்கூறுகிறார். ‘அன்பே சிவம்’ ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனப் பாடுவதன் மூலம், அனைவரும் தான் பெற்ற இன்பத்தைப் பெற வேண்டும் எனவும் அன்பு தான் சிவம் எனவும் கூறுகிறார். ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பதன் மூலம் உடல் இல்லாமல் உயிர் இல்லை என்ற பொருள்முதல்வாதக் கருத்தையும் வெளிப்படுத்துகிறார். ‘திருமந்திரம் உண்மையில் தமிழ் மந்திரமாக உள்ளது. சகல தத்துவங்களையும் நன்கு அறிந்திருந்த ஒரு தமிழன் தந்த தனித்துவமான தத்துவப்பங்களிப்பாக உள்ளது’ என அருணன் திருமந்திரம் குறித்துக் கூறுகிறார்(22). பார்ப்பனர்களை தாக்கும் பாடல்களும் உள்ளன. ஒழுக்க நெறிகளைப்பாடும் திருமந்திரம் சாதிகள் குறித்து பேசாததன் மூலம் அன்று சாதிகள் இல்லை எனலாம்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பக்தி இயக்கத்திற்கும், தமிழிசைக்கும் முன்னோடியாக இருந்தவர். இவர் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சிவனின் சிறப்புகளைப் பாடியவர். இவரது பாடல்கள் பதினொராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்தி இலக்கியங்கள் இறையியலில் சமத்துவத்தைப் பாடின. தமிழை முன் நிறுத்தின. ஆரியச் சிந்தனைக்குச் சில விதங்களில் எதிரானதாக இருந்தன. இவரது பாடல்களிலும் சாதி பேதங்கள் இல்லை என்பதால் அன்று சாதியம் தமிழகத்தில் இருக்க வில்லை எனவும் தொழில் அடிப்படையிலான வகுப்புகள் மட்டுமே இருந்தன எனவும் கூறலாம். ஆனால் அதே சமயம் பண்டைய பொருள் முதல்வாதச்சிந்தனைகள் இல்லாது போய் கருத்துமுதல்வாத, மதச் சிந்தனைகள் தமிழகம் முழுவதும் பரவியிருந்தன என்பதை இப்பாடல்கள் உறுதிசெய்கின்றன. களப்பிரர் அரசுகள் பிராகிருதம், சமற்கிருதம் போன்ற மொழிகளுக்கு ஆதரவாக இருந்த போதிலும் மக்களிடத்தில் தமிழ் மொழி செல்வாக்கோடு இருந்தது என்பதையும் அரசுகளின் பார்ப்பனிய ஆதரவுச் சிந்தனைக்கு எதிர்ப்புகள் இருந்தன என்பதையும் இவர்கள் இருவரின் பாடல்கள் உறுதி செய்கின்றன.

பார்வை:

1. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் - 2016, பக்: 657-659.
2. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், 2018, பக்: 42.
3. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் - 2016, பக்: 854, 855.
4. கிரிசு ஆர்மன் (Chris Harman), உலக மக்களின் வரலாறு (A People’s History of the World, விடியல் பதிப்பகம், சூலை-2017, தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார், பக்: 119.
5. கிரீசு வாழ்ந்த வரலாறு, சாமிநாத சர்மா, 2003, பக்:27-29.
6. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 136,137.
7. கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2008., பக்: 183,189, 220
8. க.ப.அறவாணன், தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், தமிழ் கொட்டம், 2009. பக்: 86-89.
9. உ.. வெ. சாமிநாத ஐயர், என் சரித்திரம், மின்னூலாக்கம். பக்: 806, 812.
10. கணியன்பாலன், பழந்தமிழக வரலாறு, தமிழினிபதிப்பகம், சூலை - 2018. பக்:160-164.
11. தி.சு. நடராசன், தமிழகத்தில் வைதீக சமயம், NCBH, 2008, பக்: 128-132).
12. கணியன்பாலன், பழந்தமிழக வரலாறு, தமிழினிபதிப்பகம், சூலை – 2018, பக்:311-315.
13. ச. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள், மெய்யப்பன் பதிப்பு, 2002, பக்:161,162, 172,173, 233-235
14. இணையதளம், www.tamilvu.org › tdb › inscription › html › pulankuricci_inscriptions. முனைவர் மா. பவானி.
15. நடன காசிநாதன், களப்பிரர், தொல்பொருள் ஆய்வுத்துறை 1981, பக்: 7, 8. & பன்னீர் செல்வம், தமிழ்நாடும் களப்பிரர் ஆட்சியும், மாணிக்கம் கம்பெனி, பக்: 42,43.
16. யாப்பருங்கலக் காரிகை, அமிர்தசாகரர் பழைய உரை, பக்: 324-326).
17. நடன காசிநாதன் களப்பிரர், தொல்பொருள் ஆய்வுத்துறை, 1981. பக்: 16-19.
18. நடன காசிநாதன் களப்பிரர், தொல்பொருள் ஆய்வுத்துறை, 1981, பக்: 6,7 & பன்னீர் செல்வம், தமிழ்நாடும் களப்பிரர் ஆட்சியும், மாணிக்கம் கம்பெனி, பக்: 51
19. தேவ.பேரின்பன், தமிழர் தத்துவம், NCBH, 2006, பக்:97).
20. ச. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள், மெய்யப்பன் பதிப்பு, 2002, பக்:161,162, 172,173, 233-235.
21. க.ப.அறவாணன், தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், தமிழ் கொட்டம், 2009. பக்: 243,244,258 & ஆழி செந்தில்நாதன், தமிழ் இந்து பத்திரிக்கை, நாள்: 5.7.2016.
22. தமிழரின் தத்துவ மரபு, பகுதி ஒன்று, அருணன், வசந்தம் வெளியீட்டகம், சூலை – 2004, பக்:

- கணியன் பாலன்

Pin It