தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாகவும், தமிழரின் முன்னேற்றத்திற்கு அருந்தொண்டாற்றியவராகவும் திகழ்ந்தவர் மறைமலையடிகள். அவரது மகளான நீலாம்பிகை அம்மையார், தந்தையாரைப் போலவே தமிழ்மொழி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் முதலியவற்றிற்காகப் பெரும்பாடுபட்டார்.

neelambikai ammaiyaarமறைமலையடிகளாருக்கும் சவுந்திரவல்லி அம்மையாருக்கும் நாகப்பட்டினத்தில் மகளாக 06.08.1903 ஆம் ஆண்டு பிறந்தார். தன் மகளைத் தன்னைப்போலவே சிறந்த தமிழறிஞராக்கிட விருப்பம் கொண்டார். மறைமலையடிகள் நீலாம்பிகைக்கு தமிழ் கற்பிக்க விரும்பி நன்னூல், தண்டியலங்காரம், யாப்பெருங்கலக் காரிகை, நீதி நூற்கொத்து, வில்லிப்புத்துரார் பாரதம், சிலப்பதிகாரம், புறநானூறு, பெரியபுராணம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களைக் கற்பித்தார். நீலாம்பிகையும் ஆர்வமுடன் கற்றார். மேலும், தான் ஆராய்ந்து கண்ட அரும்பெரும் உண்மைகளையும், உலகியல் நிகழ்ச்சிகளையும் காலை, மாலைகளில் தன் மகளுக்கு கூறி, அவரது அறிவைப் பெருக்கிட உதவினார்.

நீலாம்பிகை, தமது தந்தையிடம் இசைப் பண்களைக் கற்று, தேவாரம், திருவாசகம், திருவருட்பா முதலிய பாடல்களைப் பாடும் திறம் பெற்றார். ஆங்கில மொழியையும் தமது மகளுக்குக் கற்பித்தார். டென்னிசன், வேர்ட்சுவர்த்து, சேக்ஸ்பியர் முதலிய கவிஞர்களின் நூல்களையும் கற்கச் செய்தார். பின்னாளில் மேனாட்டுப் பெண்மணிகளைப் பற்றிய மொழி பெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டார் நீலாம்பிகை அம்மையார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் வடமொழி செல்வாக்குடன் விளங்கியது. ஆங்கிலம் ஆட்சி மொழியாகக் கோலோச்சியது. தமிழில் வடமொழியும், ஆங்கிலமும் மிகுதியாகக் கலந்து எழுதப்பட்டும், பேசப்பட்டும் வந்தது. தனித்தமிழ் இயக்கம் 1916-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்படும்வரை, மறைமலையடிகளாரும் வடமொழிச் சொற்களையும் கலந்தே கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தமிழ் இயக்கம் கண்டபின், மறைமலையடிகள், தனித்தமிழில் எழுதுவதைத் தன் கொள்கையாக்கிக் கொண்டார். தான் முன்னரே படைத்த நூல்களில் இருந்த வடமொழி சொற்களையும் களைந்து அவ்விடங்களில் தூயத் தனித்தமிழ்ச் சொற்களை இட்டு நிரப்பிப் பதிப்பித்தார்.

ஒருநாள் மாலையில் தந்தையும், மகளும் தோட்டத்தில் உலாவியபோது மறைமலையடிகள் “வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெற்ற தாய்தனை மகமறந்தாலும், பிள்ளையைப் பெரும் தாய்மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்” எனும் பாடலை பாடினார். அப்போது நீலாம்பிகையிடம், இப்பாடலில் ”தேகம்” என்ற வடமொழிச் சொல்லினை நீக்கிவிட்டு, அவ்விடத்தில் ”யாக்கை” என்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் அவ்விடத்தில் பாடலின் ஓசை இன்பம் மிகவும் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால், தமிழ் தன் இனிமை குன்றுகிறது. மேலும், நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று, அப்பிறமொழிச் சொற்களுக்கு நிகராக வழங்கி வந்த நமது அருமைத் தமிழ்ச் சொற்கள் மறைந்துவிடுகின்றன. இவ்வாறு அயல்மொழிச் சொற்களை அதிகமாகத் தமிழில் கலப்பதால், தமிழ்ச் சொற்கள் மறைந்துவிடுகின்றன” எனக் கூறினார்.

அதைக்கேட்ட நீலாம்பிகை, “இனிமேல் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல், எழுதுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாமல் தொடர்ந்து செய்தல் வேண்டும்” என்று தந்தையாரிடம் ஆர்வமுடன் கூறினார். தமது பெயரான வேதாசலம் என்பதை, “மறைமலையடிகள்” எனவும், தாம் நடத்தி வந்த “ஞானசேகரம்” என்னும் இதழை “அறிவுக்கடல்” எனவும், “சமரச சன்மார்க்க நிலையம்” என்பதை “பொதுநிலைக் கழகம்” எனவும் மாற்றினார்.

நீலாம்பிகை அம்மையார், எழுதும் போதும், பேசும்போதும் “இவை தமிழ்ச் சொல்லா, அயல்மொழிச் சொல்லா”, எனத் தமது தந்தையாரிடம் விவாதித்து, சற்றும் வழுவாது தனித்தமிழில் எழுதியும், பேசியும் வந்தார். அதற்காகத் தமது தந்தையாரிடம் வடமொழி கற்றார்.

பிறமொழிக் கலப்பால் தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போனதையும், சிதைந்து போனதையும் கண்டு உள்ளம் வருந்தினார் நீலாம்பிகை அம்மையார். மேலும் தமிழ்மொழியைப் பாதுகாப்பதன் மூலமே தமிழினத்தையும், தமிழ்ச் சமுதாயத்தையும், தமிழ் நாட்டையும் காக்க முடியும் என்று அறிவித்தார். அவர், தமது படைப்புகளனைத்தையும் தனித்தமிழில் படைத்துக் காட்டினார். தமிழ்மொழி வளர்ந்தால் தான் தமிழ் நாடு, நாகரிகம், கலை, பண்பாடு, ஒற்றுமை, மேம்பட்டு சிறப்படையும் என்பதை தமது படைப்புகள் மூலம் தமிழுலகத்திற்கு உணர்த்தினார்.

நீலாம்பிகை அம்மையார், தமது பதினேழாவது வயதில், (1920-ஆம் ஆண்டு) ஆறாவது வகுப்பில் சேர்ந்து கல்வி பயின்றார். பல்லாவரத்தில் “வித்யோதயா” என்னும் மகளிர் கல்லூரியில், தமது பத்தொன்பதாவது வயதில் தமிழாசிரியரானார். பின்னர் சென்னை இராயபுரத்தில் ‘நார்த்விக் மகளிர் கல்லூரி’யில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

நீலாம்பிகை அம்மையார், திருவரங்கனாரிடம் காதல் கொண்டார். பத்து ஆண்டுகள் கழித்து, இருவரின் அன்பின் உறுதிகண்டு மனம் நெகிழ்ந்து, மறைமலையடிகளார் 02.09.1927-ஆம் நாள் அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

நீலாம்பிகை அம்மையார், தமிழ்ப்பணியும், சைவ சமயப் பணியும் செய்தார். தனித்தமிழ் பற்றிய சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வந்தார்.

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 13.12.1938-ஆம் நாள் கலந்து கொண்டு, “தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி?” -என்னும் தலைப்பில் தலைமையுரையாற்றினார். “சைவ மாதர் கழகம்” என்னும் பெண்கள் அமைப்பை 1942-ஆம் ஆண்டு தொடங்கி, அதன் செயலாளராக விளங்கிப் பல தொண்டுகள் புரிந்தார்.

“தனித்தமிழ்க் கட்டுரைகள்”, “வடசொற்றமிழ் அகரவரிசை”, “ஆராய்ந்தெடுத்த அறுநூறு”. “ பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்,” “தமிழ்நாடும் தமிழ் மொழியும் முன்னேறுவது எப்படி?” முதலிய நூல்களைத் தமிழுக்கு அளித்துள்ளார்.

மேலும், “ஐரோப்பிய அருண்மாதர் இருவர்” என்னும் நூலில் உலக வரலாற்றில் புகழ்பெற்ற பிளாரன்சு நைட்டிங்கேல், ஜோன் ஆப் ஆர்க் ஆகிய இரு பெண்மணிகளைப் பற்றி எழுதியுள்ளார். அந்நூலில், நம்நாட்டுப் பெண்களும் படித்து, பொதுநல உணர்வும், வீரமும், சமுதாயச் சிந்தனையும் பெற்று சிறந்து விளங்கிட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளார்.

“சிறைச்சாலையைச் சீர்திருத்திய எலிசபெத் பிரை” என்னும் நூலில், எலிசபெத் பிரை அம்மையார் அக்காலச் சிறைச் சட்டத்தின் கொடுமைகைளக் களையப் பாடுபட்டதையும், சிறைக் கோட்டங்களை அறக்கோட்டங்களாக்கியதையும் திறம்பட எடுத்துரைத்துள்ளார்.

“மேனாட்டுப் பெண்மணிகள்”- என்னும் நூலில் இங்கிலாந்தின் பேரரசியாகத் திகழ்ந்த விக்டோரியா, இத்தாலி நாட்டு விடுதலைக் கவிஞர் எலிசபெத் பாரெட் பிரௌனிங் அம்மையார், அடிமைகளின் விடுதலைக்காக எண்ணற்ற கட்டுரைகளை எழுதி சுதந்திர உணர்வை ஊட்டிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘ஆரியட் பீச்சர் ஃச்ட்டோ’அம்மையார், கல்விக்காக பாடுபட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஆரியட் மார்த்தினோ’ அம்மையார், முதலிய நால்வரைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

நீலாம்பிகை அம்மையாருக்கு தூண்டுகோலாக அமைந்தவர், “பெண்கள் புத்தகங்கள் எழுதி அவற்றின் வழியாக மற்றவர்களுக்கு அறிவு புகட்டலாம்” என்று உலகுக்கு அறிவித்து எழுதிக் குவித்த ஆரியட் மார்த்தினோ அம்மையார், காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் முதலியவர்களின் வரலாற்றை “முப்பெண்மணிகள் வரலாறு” என்னும் நூலின் மூலம் அளித்துள்ளார். மேலும், சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பன் ஆகிய மூவருடைய வரலாற்றை. “ பட்டினத்தார் பாராட்டிய மூவர்”- என்னும் தலைப்பில் 1934 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.

தனித்தமிழ் வளர்ச்சிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய நீலாம்பிகை அம்மையார், தமது முப்பெத்தெட்டாவது வயதில், 05.11.1945 ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டும், பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர் பாடுபட்டதும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It