தொண்டை நாட்டில், பொன் விளைந்த களத்தூருக்கு அருகில் உள்ள ஆலூர் என்னும் சிற்றூரில் தான் ‘அபிதான சிந்தாமணி’ என்னும் ஓர் அரிய நூலை படைத்தளித்த ஆ.சிங்காரவேலர் 1855 ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், சென்னை சென்று மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ராஜகோபாலப்பிள்ளையிடம் கல்விப் பயின்றார். தமிழில் தேர்ச்சி பெற்று, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ் மொழியில் உள்ள அரிய சொற்களுக்குப் பல நூல்களிலிருந்து தொகுத்த விளக்கங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பார்.
ஆரம்பத்தில் தமிழ் மொழியில் ‘திவாகரம்’, ‘பிங்கலம்’, ‘சூடாமணி’- முதலிய நிகண்டுகள் மூலமே சொற்களுக்குப் பொருள் கண்டு வந்தனர். இந்த நிகண்டுகள் செய்யுள் வடிவில் இருந்ததுடன், புரியும் வகையில் எளிமையாக இல்லை. பிற்காலத்தில் வீரமாமுனிவர் தொகுத்தளித்த ‘சதுரகராதி’ பழக்கத்திற்கு வந்தது. அதையொட்டி சீரமைக்கப்பட்ட தமிழ் அகராதிகள் பல வெளிவந்தன. இவற்றிலும் தேவையான விரிவான விளக்கங்கள் இல்லை என்ற குறைபாடு நிலவியது. இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து, சரியான அகராதி வெளிவந்தால் பலருக்கும் பயனுடையதாக அமையும் என்ற உயர்ந்த சிந்தனை ஆ.சிங்காரவேலரின் மனதில் தோன்றியது. அதன் விளைவே ‘அபிதான சிந்தாமணி’ என்னும் அகராதியை 1890 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருபதாண்டுகள் உழைத்து உருவாக்கித் தமிழுலகிற்கு அளித்தார்.
இவர் பல மைல் தூரம் பயணம் செய்து செய்திகளைச் சேகரித்தார். தேவப் பொருள் விளக்கம், புராணக் கதைகள், பலநாட்டுச் சமயங்கள், மருத்துவம், பூகோளம், இதிகாசங்கள், சோதிடம், விரதங்கள், நிமித்தம், சமய அடியார்கள், ஆழ்வார்களின் வரலாறு, சமய வரலாறுகள், மட வரலாறுகள், சேர, சோழ, பாண்டிய, சாளுக்கிய, மகத மன்னர்களின் வரலாறுகள் என பல அரிய செய்திகளை உள்ளடக்கித் தொகுத்துள்ளார்.
அகராதி அமைப்புடன் கலைக்களஞ்சியமாகவும் அந்நூல் விளங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அப்பெரு நூலை அச்சிட்டு வெளியிட போதுமான பொருளாதார வசதி இல்லாததால், நூலாக வெளியிடுவதே மிகப்பெரும் சவாலாக அமைந்து விட்டது.
தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள், செல்வந்தர்கள் முதலியவர்களை அணுகி தம் கைப்பிரதியைக் காட்டி நூலாக வெளியிட உதவி கோரினார். அனைவரும் தமிழ் மொழிக்கு இது போன்ற அகராதி தேவை என்று கூறினர். ஆனால் ஒருவரும் பொருளுதவி செய்து நூலை அச்சிட்டு வெளியிட முன் வரவில்லை. பெரிய மனிதர்கள் பலருக்கும் நூலை அச்சில் வெளியிட உதவி கேட்டுக் கடிதம் எழுதினார்; பயனில்லை.
வார இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட எண்ணி சில இதழாசிரியர்களை அணுகினார். ஆனால், ‘ஒரு நல்ல நாவல் எனில் தொடராக வெளியிடலாம், இதை வெளியிட இயலாது’ எனக் கைவிரித்தனர். இருப்பினும் தமது முயற்சியைக் கைவிடாமல் ஒரு வேண்டுகோள் அறிக்கை தயார் செய்து வெளியிட்டார்.
அவரது வேண்டுகோள் அறிக்கையினைக் கண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவரும் பாலவனத்தம் ஜமீன்தாருமான தமிழ் வளர்த்த பாண்டித்துரைத் தேவர், சென்னைக்கு வருகைபுரிந்து, சிங்காரவேலு முதலியார் எழுதிய நூலைக் கண்டுகளித்து அதனை மதுரைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் அனைத்தையும் மீண்டும் பலரை வைத்து எழுதச் செய்து, சென்னையிலுள்ள அச்சகத்தில் அச்சிடப் பொருளதவி செய்தார்.
இந்நூல் குறித்து சிங்காரவேலர் கூறும் போது ‘இந்நூல் ஒரு தனி நூலன்று. இது பல சான்றோர்கள் இயற்றிய நூல்களின் தொகுப்பாகும். இந்நூலை எழுதிட சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியாக வீற்றிருந்த ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அளித்த சங்க இலக்கியச் செய்யுட்கள் பேருதவியாக அமைந்தன. மேலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் வெளிவந்த கருத்துமிக்க கட்டுரைகளும் உதவியாக அமைந்தன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சென்றது, ஆயிரம் பக்கங்கள் வரை அச்சுப்பிரதியைத் தாமே பிழைதிருத்தம் செய்தார். திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு 1931 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இயற்கை எய்திவிட்டார். பின்னர் அவரது மகன் ஆ.சிவப்பிரகாசர், திருவாரூர் சோமசுந்தர தேசிகர் இருவரும் இணைந்து 1634 பக்கங்கள் கொண்ட பெருநூலாக இதனை வெளியிட்டனர்.
பலர் சேர்ந்து ஆராய்ந்து, அரசு உதவியோடு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணியான ‘அபிதான சிந்தாமணி’யைத் தனி ஒருவராய் இருந்து ஆக்கினார். அந்நூலினைத் தமிழ் அறிந்த அனைவரும் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான விவரங்களையும், விளக்கங்களையும் பெறலாம். ‘அபிதான சிந்தாமணி’ – தமிழின் தகவல் களஞ்சியம், சொல் விளக்கச் சுரங்கம். இப்படி ஒரு நூல் இதற்கு முன்பும் இருந்தது இல்லை. பின்பும் வெளிவந்ததில்லை என்பது சிறப்பு. தமிழ் அகராதி உள்ளவரை சிங்காரவேலரின் புகழ் நிலைத்து நிற்கும்!
- பி.தயாளன்