ராசராச சோழன் - கேள்வியும் பதிலும்

ராசராச சோழன் தேவாரத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம்  இருந்து மீட்டு வந்தான் என்பது உண்மையா?

இது தவறான செய்தியாகும். பக்தி இயக்கம் தோன்றி தேவாரம் பாடப்பட்டது கி.பி.7,8-ம் நூற்றாண்டுகளாகும். ஆனால்  ராசராச சோழன் கி.பி 980 முதல் 1024 வரை வாழ்ந்தவன். 200ஆண்டுகள் தேவாரம் பாடப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது என்பதை நம்ப இயலாது. மேலும் தேவாரத்தை தொகுத்தவர் என்று கருதப்படும் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி காலத்தால்  ராசராச சோழனுக்கு மிகவும் மூத்தவர். அவனுடைய முப்பாட்டனாகிய முதலாம் பராந்தகன் காலத்தை சேர்ந்தவர். பல்லவர்களின் இறுதிக்காலத்திலும் முதலாம் பராந்தகன் காலத்திலும் தமிழ்நாட்டில் உள்ள லால்குடி, ஆத்தூர், திருவள்ளம் ஆகிய ஊர்க் கோவில்களில் தேவார திருப்பதியம் பாடப்பட்டது; அவ்வாறு பாடியவர்களுக்கு நிலமும் நெல்லும் கொடையாக அளிக்கப்பட்டது என்று கல்வெட்டுச்செய்திகள் கூறுகின்றன. உமாபதி சிவாச்சாரியார் என்ற பார்ப்பன சைவ புலவர் பாடிய பாடலின் ஒரு வரியை வைத்துக்கொண்டு இரா.நாகசாமி போன்ற வரலாற்று ஆய்வாளர்கள்  ராசராச சோழன் தில்லைவாழ் அந்தணர்களிடம் வாதம் புரிந்து தேவாரத்தை மீட்டு வந்தான் என்று கூறுவது பொய்யாகும்.  ராசராச சோழன் தன்னுடைய ஆட்சியின் கீழ் உள்ள எல்லா கோயில்களிலும் தேவாரம் பாட ("ஆரியமும் தமிழும்" பாட) ஏற்பாடு செய்தான். அதை மேற்பார்வையிட ஒரு அரசு அதிகாரியை நியமனம் செய்தான் இவையே கல்வெட்டுகள் கூறும் செய்தியாகும்..   

குடவோலை முறையைக் கண்டுபிடித்தது  ராசராச சோழன் என்பது உண்மையா? 

முற்றிலும் தவறான செய்தி. குடவோலை முறை பற்றிய கல்வெட்டுகள் பண்டிய நாட்டில் தான் முதலில் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் காலம் கி.பி.760 நூற்றாண்டு. சோழ நாடு என்று வைத்துக்கொண்டாலும் ராசராச சோழனின் முப்பாட்டன் முதலாம் பராந்தகன் காலத்திலேயே  குடவோலை முறை இருந்திருக்கிறது. அந்த மன்னன் காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூர்க் கல்வெட்டுகள் இதை நமக்கு தெளிவாகவும், விரிவாகவும் தெரிவிக்கின்றன.

குடவோலை முறை மக்களாட்சியின் தொடக்கம் என்பது சரியா?

சரியன்று. குடவோலை முறை ஒரு குலுக்கல் முறையாகும். ஒரு ஊரில் உள்ள 1/4 வேலி நிலம் படைத்த உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை ஓலையில் எழுதி அதனை ஒரு குடத்தில் இடுவார்கள். அதை நன்கு குலுக்குவார்கள். பிறகு எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலைகள் மட்டும் அந்தக் குடத்தில் இருந்து எடுக்கப்படும். அவர்கள் ஊர் சபையினராக இருந்து அந்த ஊரின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார்கள். பெண்கள் இதில் பங்கு கொள்ள முடியாது. தேர்தலே இல்லாத குலுக்கல் முறையை எப்படி மக்களாட்சி என்று சொல்லமுடியும். 

குடவோலை முறையில் பார்ப்பனர்களுக்கு தனி ஒதுக்கீடு இருந்ததா?

ஆம். பார்ப்பனர்கள் வசித்த ஊர்களில் அவர்கள் மட்டுமே இந்த ஊர் சபையின் உறுப்பினர்கள். அதிலும் வேதம் கற்ற பார்ப்பனர்களுக்கு முன்னுரிமை உண்டு. அவர்கள் 1/8 வேலி நிலம் வைத்திருந்தாலும்  உறுப்பினர்கள் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள். 

பார்ப்பனர்கள் வேதம் ஒழிந்த வேறு தொழில்கள் புரிந்தது உண்டா?

உண்டு. சோழர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் படைத்தளபதிகளாகவும், மன்னனுக்கு அமைச்சர்களாகவும் இருந்திருக்கின்றனர். ராசராச சோழனின் படைத்தளபதியின் பெயர் கிருஷ்ணன் ராமன் என்கிற பிரம்மாதிராயன் (அதாவது பார்ப்பனன்)

ராசராசன் தஞ்சைப் பெரிய கோவில் விமானம் முழுவதையும் பொன்னால் ஆன தகடுகளால் மூடினான். இந்தியாவின் முதல் பொற்கோயில் தஞ்சைப் பெரிய கோவிலே- இது உண்மையா?

இது முற்றிலும் ஆதாரம் அற்ற செய்தி. எந்த கல்வெட்டிலும் இது குறித்து பதிவு செய்யப்படவில்லை. ஆனால் குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்றோர் புதியதாக ஒரு கல்வெட்டை கண்டுபிடித்து இதை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள். இந்தக் 'கல்வெட்டு' அய்யத்திற்கு உரியதாகும். 200ஆண்டுகளாக கிடைக்காத கல்வெட்டு திடீரென்று கிடைத்தது நமது அய்யத்தை மேலும் வலுவாக்குகிறது.

ராசராச சோழன் சேரர்களை வென்றது உண்மையா?

உண்மை. அதுவரை சோழ பாண்டியர்கள், சேர நாட்டை வென்றது இல்லை. முதன் முதலில் ராசராச சோழன் தான் சேர மன்னனாகிய பாஸ்கர  ரவிவர்மனை வென்றான். அதனால் 'மும்முடிச் சோழன்' என்ற  பட்டப் பெயரும் பெற்றான். அதற்கு பின்னால் வந்த மற்ற சோழர்களும் இவ்வாறே அழைக்கப்பட்டார்கள். ஆனால் இது குறுகிய காலத்திற்குத்தான். ராசேந்திர சோழன் காலத்திற்குப் பிறகு சேர நாடு மெதுவாக சோழர்களின் கையில் இருந்து  நழுவிப் போயிற்று. ஆனால் பாண்டிய நாடு கடைசி வரை (சோழர்கள் வீழ்ச்சி அடையும் வரை) சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. 

சைவப் பேரரசன் ராசராச சோழன் நாகைப்பட்டினத்து புத்த விகாரத்திற்கு நிலக்கொடை அளித்தது உண்மையா?

உண்மைதான். சோழர் காலத்து வணிகர்கள் பெரும்பாலும் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கடாரம், ஸ்ரீ விஜயம் (தற்பொழுதைய மலேசியா) போன்ற நாடுகளுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு கொண்டு இருந்தனர். அதற்குப் பரிசாக ஸ்ரீவிஜய நாட்டு மன்னன் நாகைப் பட்டினத்தில் புத்த விகாரம் கோவில் அமைப்பதற்கு உதவி செய்தான். அந்த கோவிலுக்கு ராசராச சோழன் நிலக்கொடை அளித்து உள்ளான். இதை லெய்டன் செப்பேடுகளில் ஒரு பகுதியான ஆனைமங்கலச் செப்பேடுகள்  தெரிவிக்கின்றன. ஆனால் சமணப் பள்ளி எதற்கும் கொடை வழங்கியதாக செய்திகள் கிடையாது. 

இராஜராஜ சோழனுக்கு மட்டும் பிறந்த நாள் விழா எடுக்கப்படுவது ஏன்?

இராசராச சோழன் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு சில கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் அவன் பிறந்ததாக கருதப்படுகின்ற நாளினை, ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு நாளினை எப்படி உறுதியாக சொல்ல இயலும்.? கல்வெட்டு ஆய்வாளர்கள் சிலர் கல்வெட்டின் செய்திகளின் அடிப்படையில் இதனை முடிவு செய்கின்றனர். அந்த குறிப்பிட்ட நாளில் இருந்த விண்மீன்களின் அமைப்பு சந்திரனின் சுழற்சி  ஆகியவற்றை கொண்டு (கிட்டத்தட்ட ஜாதகம் பார்ப்பது) ஐப்பசி மாதம் மேஷ ராசி சதய நட்சத்திரம் என்று முடிவு செய்து உள்ளனர். எனவே அந்த நாளை ராசராச சோழனின் பிறந்த நாளாக கொண்டாடுகின்றனர்.

இது தஞ்சை பெரிய கோயிலில் மட்டும் தான் கொண்டாடப்படுகிறதா?

ராசராச சோழன் சேர, சோழ, பாண்டிய நாடுகளை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டிருந்தான். எனவே மும்முடிச் சோழன் என்ற பெயரையும் உடையவன். தற்பெருமையும், செருக்கும் படைத்த ராசராச சோழன் தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த எல்லா கோவில்களிலும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடும்படி ஆணை பிறப்பித்தான். அவ்வாறே மூன்று மண்டலங்களிலும் உள்ள கோவில்களில் சதய திருவிழா ராசராசசோழனின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இது இதற்கு முன்னாள் எந்த தமிழ் மன்னனும் செய்யாத ஒரு செயலாகும். இக்காலத்திய அரசியல் வாதிகள், அமைச்சர்கள், சினிமா நடிகர்கள் தங்களுடைய பிறந்த நாள் விழாவை மிக ஆடம்பரமாக கொண்டாடுவதற்கு அடியெடுத்து கொடுத்தவன் ராசராச சோழன் என்பதை நினைத்தால் புல்லரித்துப்போகிறது.  

தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் நிழல் கீழே விழுவது இல்லையா?.

இது தவறான கருத்து ஆகும். மாலை நேரத்தில் சென்று பார்த்தால் கோவில் விமானத்தின் நிழல் கீழே விழுவதை எளிதில் காணலாம். ஆனாலும் தமிழன் இதை கண்டுபிடிப்பதற்கு ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டது. அதுவரை கோவில் கோபுரம் நிழல் கீழே விழாது என்ற மூடக் கருத்தையே கொண்டிருந்தான். இன்னும் பலரும் அதை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Pin It