இந்தியாவை பொருத்தவரை அக்குபஞ்சர் மருத்துவம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனினும் 2003 நவம்பர் 25ம் தேதி இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சக ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து வெளிவந்த அரசாணை (எண் 14015 / 25 / 96 U & H (R). (Pt.)) தான் அக்குபஞ்சருக்கான சட்டத்தகுதியை வழங்குகிறது. இந்தத் தகுதியே கூட வேடிக்கையாக விளைந்த ஒன்று. அந்த கதையை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய அரசின் பார்வையில் மருத்துவங்களை வரையறுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டங்கள் உள்ளன. இப்படி உருவான சட்டங்கள் ஆங்கில மருத்துவத்துக்கு The Indian medical degree act 1916, The Indian medical council act 1956t ஆகியன உள்ளன. ஹோமியயோபதி மருத்துவத்திற்கு The Indian Homeopathy Central council act 1973 உள்ளது. அதுபோல சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்று மருத்துவங்களுக்கு Indian Medicine Central act 1970 இயற்றப்பட்டுள்ளது. இந்த ஐந்து மருத்துவங்கள் நீங்கலாக மற்ற மருத்துவங்களை இந்திய அரசு சட்டபூர்வாமாக ஏற்கவுமுல்லை நிராகரிக்கவுமில்லை எனும் நிலை இருந்த காலத்தில் 1980களில் சுவாரசியமான வழக்கென்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.

டாக்டர் பிஸ்வாஸ் என்பவர் அந்த வழக்கைத் தொடுத்திருந்தார். மனுதாரர் இந்தியன் கவுன்சில் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசன்ஸ் (ICAM) என்பதன் தலைவர் தானென்றும் தன்னுடைய அமைப்புக்கு அரசால் தடைசெய்யப்படாத அதே நேரத்தில் அரசால் நெறிப்படுத்தப்படாத எலக்ட்ரோ ஹோமியோபதி, பாட்ச் மலர் மருத்துவம், இயற்கை மருத்துவம், காந்த சிகிச்சை ஆகியவற்றை பயிற்றுவிக்கவும் பதிவளிக்கவும் சட்டபூர்வ உரிமை உள்ளதென்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கொல்கத்தா உயர்நீதிமன்றம் 1990 மே.7ம் நாள் நீதியரசர் பகவதி பிரசாத் பானர்ஜி அவர்களின் நெடிய விசாரணைகளுக்குப்பின் தீர்ப்பளித்தது அத்திர்ப்பில் மனுதாரரின் வாதம் சட்டத்தகுதி உடையது என்றும் அரசால் தடைசெய்யப்படாத காரியமொன்று அரசால் மேற்கொள்ளப்படாததாய் இருந்தால் அதனை எந்த ஒரு குடிமகனும் மேந்கொள்ளவும் எந்த ஒரு சட்டபூர்வ பதிவுபெற்ற அமைப்பு அப்பணியை மேற்கொள்ளவும் தகுதி உடையதே என்று தீர்ப்பளிக்கப்பட்டது

இத்தீர்ப்பைத் தொடர்ந்து காளான்களைப் போன்று நாடெங்கும் பலப்பல மாற்றுமருத்துவப் பயிற்சி நிறுவனங்கள் தலைகாட்டத் தொடங்கின. இவற்றின் மூலமாக ஆயிரக்கணக்கான மாற்று முறை மருத்துவர்கள் உருவாயினர். இப்படி உருவானவர்கள் மாற்று மருத்துவ எல்லைகளையும் கடந்து செயல்பட்டனர். மேற்குறிப்பிட்ட பயிற்சி நிறுவனங்களும் எல்லை தாண்டி பல்கலைக் கழக மாறியக்குழு சட்ட வரம்புகளைக் கடந்து பட்டங்களையும் பதவிகளையும் வாரி வழங்கின. இவற்றில் பல நடவடிக்கைகள் மாற்று மருத்துவர்களாலும் நியாய உணர்வாளர்களாலும் ஒப்புக்கொள்ள முடியாததாக இருந்தன.

இந்நிலையில் தான் டில்லியைச் சேர்ந்த H.M. சேத்தி என்பவர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடுத்தார். அதில் அவர் மாற்று மருத்துவ நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை முறையிட்டிருந்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் மத்திய, மாநில அரசு தொடர்பான 46 எதிர் மனுதாரர்களையும் சேர்த்து வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 1998 நவம்பர் 18ம் நாள் வெளிவந்தது.

டெல்லி நீதிமன்றம் கொல்கத்தா தீர்ப்பு உட்பட எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு வழங்கிய தீர்ப்பு இது இதில் கொல்கத்தா நீதிமன்றம் அளித்தது போலவே அரசால் தடை செய்யப்படாத அரசால் மேற்கொள்ளப்படாத மாற்று மருத்துவங்களை தனியார் அமைப்புகள் தன்னார்வ நெறியாண்மை செய்ய தகுதி உடையன என உறுதி செய்த இத்தீர்ப்பு இந்த மாற்று மருத்துவ அமைப்புகள் U.G., P.G. டிகிரிகள் எதையும் வழங்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியது.

இது அடிப்படையில் சரியாக தீர்ப்பு என்ற போதிலும் BEHM, MD(EH), MD(AM), Ph.D(AM), MBBS(AM), BAMS என்றெல்லாம் பட்டமளித்து பலன் பெற்றவர்கள் அதனை ஏற்க மறுத்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். என்ன காரணத்தாலோ (?) இந்திய அரசு மேல் முறையீட்டின்போது ஆஜராகவில்லை (!) உச்சநீதிமன்றத்தில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வந்தது

இதை முறியடிக்க விரும்பிய மத்திய அரசு திடீரென விழித்துக் கொண்டு மாற்று மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக ICMR-ன் தலைமை இயக்குநர் தலைமையில் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலைக்குழு ஒன்று அமைத்தது. இந்த நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆங்கில வழி மருத்துவர்களும் ஆங்கில வழிமுறை பயின்ற மாற்றுமுறை மருத்துவர்களும் எல்லா மாற்றுமுறை மருத்துவங்களையும் ஆராய்ந்து (?) பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தனர். அதன்டிப்படையில் வெளியிடப்பட்ட ஆணைதான் முதல் பத்தியில் குறிப்பிட்ட 2003ம் ஆண்டின் அரசாணை. இதில் அக்குபஞ்சர் முழுமையான மருத்துவமல்ல என்று கூறி சிகிச்சை என்ற அளவுக்கு தகுதியளிக்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் கூடுதல் தகுதியாக பயின்று கொள்ளலாம். அக்குபஞ்சர் மட்டும் தெரிந்தவர் ஒரு தெரபிஸ்டாக யாரேனும் ஒரு பதிவு பெற்ற மருத்துவரின் கீழ் செயலாற்றலாம். இப்படி குறிப்பிடுவதன் மூலம் இந்தியாவில் வழங்கப்பட்ட அக்குபஞ்சரின் சட்டத்தகுதி அதன் நோயறி முறையை குழிதோண்டிப் புதைத்தது. இதனை உணர்ந்து கொண்டு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள நானறிந்தவரை யாரொருவரும் முயன்றதாக தெரியவில்லை.

ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆணையின் பேரிலேயே நேர்மையான நிறுவனங்கள் பயிற்சியளிக்கின்றன. மற்றவர்கள். இதனை இருட்டடிப்பு செய்துவிட்டு சென்ற இதழில் நண்பர் உமர் பாருக் எழுதியுள்ளது போல கொல்லைப் புறம் வழியாக பட்டங்களை வாங்கி போலீஸில் மாட்டாதவரை பவிசாக தொழிலாற்றுகின்றனர்.

சரியான நிலைப்பாடு என்னவாக இருக்க முடியுமென்றால் பொறுப்புள்ள எந்த ஒரு குடிமகனும் ஒன்று சட்டத்தை ஏற்று வாழ வேண்டும். சட்டம் இயற்கை நிதிக்கு எதிராக உள்ளபோது சட்டப்படி போராடி அதனை மாற்றி யமைக்க வேண்டும். இதையன்றி வேறு குறுக்குவழி ஏதுமில்லை. ஆகவே அக்குபஞ்சருக்கு உண்மையான சட்டத்தகுதியை முழு மருத்துவம் எனும் அங்கீகாரத்தைப் பெற நாம் உரிய வகையில் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் அந்த இலக்கு வெகு தூரமில்லை.

 

Pin It