“ஷூக்களை அணிந்துகொண்டு ஓடுவது எனக்கு இடையூறாக இருக்கிறது.”
இப்படி ஒரு வித்தியாசமான கருத்தை வெளியிட்டவர் வேறு யாருமல்ல. Haile Gebrselassie என்னும் பெயர்கொண்ட உலகின் அதிவேக மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்தான் ஷூக்களுக்கு எதிரான கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஷூக்களை அணிந்துகொண்டு ஓடுவது நல்லதா? வெறுங்காலுடன் ஓடுவது நல்லதா? என்பது இப்போது ஆய்வுப்பொருளாகியிருக்கிறது.
கால்களும், பருத்த புட்டங்களும், மீளெழும் வடிவம்கொண்ட பாதங்களும் மனிதன் ஓடவேண்டும் என்பதற்காகவே இயற்கை அளித்திருக்கும் சாதனங்கள். ஓட்டப் பந்தய ஷூக்கள் 1970க்குப்பிறகுதான் அதிகமாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் 1900களின் தொடக்கத்தில்தான் ஓட்டப் பந்தய ஷூக்களே கண்டுபிடிக்கப்பட்டன.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் லீபர்மான் என்னும் மனித பரிணாம இயல் வல்லுநர் ஓட்டப்பந்தயவீரர்களுக்கு ஷூக்கள் உபயோகமாக இருக்கிறதா இல்லை உபத்திரவமாக இருக்கிறதா என்பதைப்பற்றி ஆராய்ந்து வருகிறார். அவருடைய குழுவினர் 200க்கும் மேற்பட்ட ஷூக்களை அணிந்த, அணியாத, ஓட்டப்பந்தய வீரர்களை ஆராய்ந்திருக்கின்றனர். இவர்களுள் நெடுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரர்களுக்கு புகழ்பெற்ற கென்யா நாட்டவர்களும் அடக்கம். அனுபவம் மிக்க ஓட்டப்பந்தய வீரர்கள், புதியவர்கள், ஷூக்களை அணிந்து ஓடிப் பழகி இப்போது வெறும் காலுடன் ஓடுபவர்கள், வெறும் காலுடன் ஓடிப் பழகி இப்போது ஷூக்களை அணிந்து ஓடுபவர்கள், ஷூக்களை அணிந்து ஓடிய அனுபவத்தையே இதுவரை பெற்றிருக்காதவர்கள் என்று எல்லாவகையான ஓட்டப்பந்தயவீரர்களையும் இந்த ஆய்வில் டேனியல் லீபர்மானின் குழுவினர் உட்படுத்தினர்.
இந்த ஆய்வுகள் ஷூக்களை அணிந்தவர்களுக்கும், ஷூக்கள் அணியாத ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாட்டை வெளிப்படுத்தின. ஷூக்களை அணிந்தவர்கள் குதிகாலை தரையில் பதிக்கும்போது, வெறுங்காலுடன் ஓடுபவர்கள் காலின் தட்டைப்பகுதியை தரையில் பதித்தனர். ஷூக்களை அணியாமல் வெறுங்காலுடன் ஓடுபவர்களின் அதிர்வுகள் பாதத்தின் வளைவுகளிலும், குதிகாலிலும், முழங்காலிலும், கெண்டைக்கால் தசைகளிலும் கடத்தப்பட்டு ஓடுவது எளிதாக்கப்பட்டது. வெறுங்காலுடன் ஓடுபவர்கள் தங்களுடைய உடலின் 0.5 - 0.7 மடங்கு எடையை உணர்ந்தனர். ஆனால் ஷூக்களை அணிந்து ஓடியவர்கள் உடலின் 1.5-2.0 மடங்கு எடையை உணர்ந்தனர்.
இயற்கை நம்மை வெறுங்காலுடன் ஓடுவதற்காகவே படைத்திருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு. ஆனால் ஷூக்களை அணிந்து கொண்டு ஓடுவதால் கிடைக்கும் நன்மைகளை புறக்கணித்துவிட முடியாது. நகரமயமாக்கல் வீதிகளில் வீசியெறிந்த கண்ணாடி துண்டுகள், ஆணிகள், ஓடுகள் போன்றவற்றால் நம்முடைய பொன்னான பாதங்கள் புண்ணாகிப் போகாமல் காப்பாற்றுவது ஷூக்கள்தான் என்பதும் உண்மைதானே!
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க:
http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2010/127/1