தலை மற்றும் கழுத்து புற்றுநோய் (H&N cancer) என்று அழைக்கப்படும் புற்றுநோயால் 6,50,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த புற்றுநோய் 3,30,000 பேரின் மரணத்திற்குக் காரணமாக உள்ளது. இதனால் இது உலகைப் பாதிக்கும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதை குணப்படுத்த உதவும் சிகிச்சை முறைகள் பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதைக் குணப்படுத்த விஞ்ஞானிகள் வியப்பூட்டும் தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.

பாக்டீரியாவின் பங்கு

ஃப்யூஸோ பாக்டீரியா (Fusobacterium) என்பது வாயில் காணப்படும் ஒரு பொதுவான பாக்டீரியா வகை நுண்ணுயிரி. தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உள்ளவர்களின் வாயில் இவ்வகை பாக்டீரியா இருந்தால் அது புற்றுநோயைக் குணப்படுத்துகிறது என்று லண்டன் கைஸ்&செயிண்ட் தாமஸ் (Guy’s and St Thomas’) மற்றும் கிங்க்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தலை மற்றும் கழுத்தில் புற்றுநோயுள்ளவர்களின் புற்றுநோய் செல்களில் இந்த பாக்டீரியா உள்ளது.mouth 400ஆரம்ப ஆய்வுகளுக்குப் பிறகு இதன் பின் இருக்கும் செயல்முறையைப் பற்றி தீவிர ஆய்வு நடந்து வருகிறது. “தலை மற்றும் கழுத்து புற்றுநோய் செல்களில் இந்த பாக்டீரியா இருந்தால் செல் வளர்ப்பு தொழில்நுட்பத்தில் இது புற்றுநோயைக் கரைத்து அழிக்கிறது. முன்பு நினைத்திருந்ததை விட இந்த பாக்டீரியா புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பணி செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும் இந்த பாக்டீரியாவால் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகிறது. இதை சமாளிக்க புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்று கைஸ்&செயிண்ட் தாமஸ் ஆய்வு மைய தலை மற்றும் கழுப்பு புற்றுநோய் பிரிவு ஆலோசகரும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரியருமான டாக்டர் மிகேல் ரைஸ் பெரேரா (Dr Miguel Reis Ferreira) கூறுகிறார்.

எந்த வகை பாக்டீரியாக்கள் இவ்வகைப் புற்றுநோயை மிகச் சிறந்த முறையில் குணப்படுத்த உதவும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். பாக்டீரியாவை விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் புற்றுநோய் செல்களைப் பயன்படுத்தி ஆராய்ந்தனர்.

இதனுடன் புற்றுநோய் மரபணு வரிசை தரவு வங்கியில் (Cancer Genome Atlas database 150 தலை மற்றும் கழுத்து புற்றுநோயாளிகளின் கட்டிகள் பற்றிய விவரங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஆய்வகத்தில் இந்த பாக்டீரியத்தை நுண்ணுயிரிகளை வளர்க்கப் பயன்படும், குழிந்த, தெளிவாக பார்க்கக்கூடிய வகையில் அமைந்த பெட்ரி கண்ணாடி கருவியில் (Petri dish) வைத்து ஆராய்ந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு விஞ்ஞானிகள் வந்து பார்த்தபோது புற்றுநோய் முற்றிலும் இல்லாமல் போனது தெரிய வந்தது.

இந்த பாக்டீரியாவால் 70 முதல் 99% புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டன. ஆனால் இவ்வகை பாக்டீரியா இல்லாதவர்களை விட இருப்பவர்களிடம் இந்த பாக்டீரியாவால் புற்றுநோய் குணமாகிறது. இதன் மூலம் இவ்வகை புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 65% குறைந்தது. வாய், தொண்டை, குரல்வளை, மூக்கு மற்றும் சயனஸ் ஆகியவையும் அடங்கும் இவ்வகை புற்றுநோய் சிகிச்சையில் இக்கண்டுபிடிப்பு புதிய வழிகாட்டியாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வருங்கால நம்பிக்கை

கடந்த இருபது ஆண்டுகளில் தலை மற்றும் கழுத்தில் வரும் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு சில முறைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்த கண்டுபிடிப்பு வருங்காலத்தில் புதிய சிகிச்சைமுறையைப் பயன்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. ஆய்வுகளுக்கு முன்பு இந்த பாக்டீரியா தலை & கழுத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் அல்லது கதிரியக்க சிகிச்சைக்கு எதிராக செயல்படும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் எதிர்பாராத வகையில் புற்றுநோய் செல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

“புற்றுநோய் செல்கள் குறைவாக இருந்தால் பாக்டீரியா அவற்றை வேகமாக அழிக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மகத்தானது, வியப்பூட்டுவது. இந்த கண்டுபிடிப்பை பன்னாட்டு விஞ்ஞானிகள் சமூகம் ஆராய்ந்து அங்கீகரித்தது” என்று கிங்க்ஸ் கல்லூரி மூத்த ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் முண்ணனி ஆசிரியருமான டாக்டர் அஞ்சாலி சாண்டா (Dr Anjali Chander) கூறுகிறார்.

"தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சிகிச்சைத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த மகத்தான கண்டுபிடிப்புக்கு நிதியுதவி செய்ததை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். இவ்வகை புற்றுநோயைப் பற்றி கூடுதலாக அறிய, வருங்காலத்தில் இதற்கான சிகிச்சை முறையை மேலும் கருணையுடன் மேற்கொள்ள இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்” என்று கைஸ் புற்றுநோய் அறக்கட்டளையின் செயல் இயக்குனர் பார்பரா கசூமூ (Barbara Kasumu) கூறுகிறார்.

அதிகம் அறியப்படாத புற்றுநோய் சிகிச்சை துறையிலும் இந்த கண்டுபிடிப்பு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/article/2024/jul/27/type-of-mouth-bacteria-melts-some-cancers-study-finds?CMP=Share_AndroidApp_Other

- சிதம்பரம் இரவிச்சந்திரன்