அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!
அரியானா, சண்டிகர், தில்லி, இராசஸ்தான், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, மராட்டியம், தெலங்கானா, இராயலசீமா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இந்தாண்டு கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என கடந்த 15.04.2016 அன்று, இந்திய வானிலை ஆய்வுத்துறை (India Meteorological Department - IMD),, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
ஏற்கெனவே, கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள் காரணமாக, இந்தியத் துணைக் கண்டத்தில் சற்றொப்ப 2300 பேர் உயிரிழந்தனர். இதுவே உலகின் 5ஆவது மிகப்பெரும் வெப்பத்தாக்கம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், இந்தாண்டு வெப்பத்தால் நடைபெற்று வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட மேலும் உயரக்கூடும் என்ற அளவிற்கு கடும் வெப்பம் வீசி வருகின்றது.
வடநாட்டில் தொடங்கி ஆந்திரா வரை சற்றொப்ப 300க்கும் மேற்பட்டவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். ஒரிசாவின் தட்லாகர் என்ற பகுதியில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 119.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. மே 6 (2016) வரை, தெலங்கனாவில் 249 பேர் வெப்பத்தாக்கதால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வீட்டைவிட்டு வெளியில் செல்லாதீர்கள் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடும் அளவிற்கு, கடுமையான வெப்பம் வீசி வருகின்றது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (Japan Meteorological Agency - JMA), கடந்த 1891-ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஆண்டு வரையிலான சராசரி வெப்ப நிலையை ஆய்வு செய்து ஓர் அறிக்கையை 15.04.2016 அன்று வெளியிட்டது. அதில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மார்ச் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித் துள்ளதாகவும், இது மிகவும் ‘அதிர்ச்சிகர மானது’ மட்டுமல்ல, இது ‘ஒருவகையான பருவ நெருக்கடி நிலை’ என்றும் எச்சரித்துள்ளது. வட அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஐ.நா.வின் உலக வானிலைக் கழகம் (World Meteorological Organisation) ஆகிய அமைப்புகள், ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் முடிவுகளை உறுதி செய்தன.
இந்தளவிற்கு கடுமையான வெப்பம் ஏற்படுவதற்கு, காடுகள் அழிப்பு பொதுவான காரணமாக சொல்லப் பட்டாலும், குறிப்பான காரணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளின் தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளின் காரணமாக வெளியேறும் கரியமில வாயுவின் அதிகரிப்பே, இந்த வெப்ப நிலை உயர்வுக்கு முகாமையான காரணம் என அறிவியலாளர்களும், ஆய்வுகளும் கருத்துத் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வானிலை ஆய்வு சங்கம் (American Meteorological Society) வெளியிட்டு வரும் Journal of Climate என்ற பருவநிலை குறித்த ஆய்விதழில் வெளியிடப் பட்ட ஓர் ஆய்வு, ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்டவை மின் உற்பத்திக்காக அதிக அளவில் நிலக்கரியை எரிப்பது அப்பகுதியில் மட்டு மல்லாது உலக அளவில் கூட மழையின் அளவைக் கடுமையாக குறைத்து வருகிறது என்று தெரிவிக்கிறது. (காண்க: http://phys.org/news/2016-04-higher-coal-asia-stress.html)
அனல் மின்சார உற்பத்தி காரணமாக வெளி யேற்றப்படும் சல்ஃபர் டையாக்சைடு வாயு, மக்களின் உடல்நலத்திற்கு நேரடி அச்சுறுத்தல் என்பதோடு மட்டுமின்றி, உள்நாட்டு மற்றும் உலக அளவிலான பருவநிலை மாற்றத்துக்கும் அது மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக இந்த ஆய்வு முடிவு உறுதிப் படுத்துகிறது. இந்த வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்க பருவ நிலைக்கான பாரீசு மாநாட்டில் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அதன் மெய்நடப்பு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
சல்ஃபர் டையாக்சைட் வாயுவின் அதிக வெளி யேற்றம் விண்வெளியின் கீழடுக்கு, மேலடுக்கு ஆகிய வற்றின் மீது இரு தீவிர எதிர்நிலைகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்றும், இதன் காரணமாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் ஒருபுறம் குளிரையும் அதிகமாக உணர முடியும் என்றும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அதாவது, ஒருபுறம் மழையைக் குறைக்கும், கடலின் மேல்புற வெப்பநிலையை அதிகரிக்கும், இன்னொருபுறத்தில், சில பகுதிகளில் குளிரையும் அதிகப்படுத்தும். இப்படியாக கணிக்க முடியாத ஒரு பரிமாணத்தில் இதன் விளைவுகள் இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
வரும் காலங்களில் இந்த நாடுகளின் எரிசக்தி உற்பத்தி தெரிவைப் பொறுத்துதான் பருவநிலையும் தீர்மானிக்கப்படும் வாய்ப்புள்ளதாக, இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள் ளதும் குறிப்பிடத்தக்கது.
வெப்பத்தைக் குறைப்பதற்கு மரம் நடுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை! தொழிற்சாலைகளின் மின் நுகர்வைக் குறைத்தல், மின் உற்பத்தியை பசுமை வழிகளில் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல பணிகளை அரசு மேற்கொண்டால்தான், வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். புவியைப் பாதுகாக்கவும் முடியும்!