காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க, நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை இரண்டு வார காலம் துபாயில் நடந்த காப்28 மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதில் இருந்து மாறி, மற்ற ஆற்றல் எரிமூலங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வரலாற்று உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள், சூழல் போராளிகள், சூழல் இயக்க அமைப்புகள் கோரியபடி புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாகக் குறைப்பது அல்லது முற்றிலும் தடுப்பது பற்றி இந்த அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
என்றாலும் ஆற்றல் செயல்முறைகளில் இருந்து புதைபடிவ எரிபொருட்களை நீதிப்பூர்வமாக, ஒழுங்குமுறையுடன் அகற்றுவதன் மூலம் அறிவியல்பூர்வமாக கார்பன் உமிழ்வை 2050ல் சுழிநிலைக்குக் கொண்டுவர இந்த அறிக்கை இலட்சியமிட்டுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் இதுவரை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க தங்கள் நாடுகள் என்ன செய்தது என்பதை விவரிக்கும் உலகளவிலான ஒவ்வொரு நாட்டின் செயல்திட்டங்கள் (GST) பற்றி வரும் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் காலநிலை மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் குறைக்க இது வழிவகுக்கும்.
முப்பதாண்டு கனவு
கடந்த 30 ஆண்டுகளின் கனவாக இருந்து வரும் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பது பற்றிய சொல் இந்த மாநாட்டின் உடன்படிக்கையில்தான் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது பற்றி பேச விரும்பாத சௌதி அரேபியா, அமெரிக்கா, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் (OPEC) போன்றவை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல நாடுகளின் வற்புறுத்தலால் இது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்பட்டது. நிறைவேற்றப்படுவதற்கு நான்கு மணி நேரம் முன்பு மட்டுமே வரைவு அறிக்கையின் நகல் பேச்சுவார்த்தைக் கூடத்தில் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. 39 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட சிறிய தீவு நாடுகளின் கூட்டமைப்பு உடன்படிக்கை நிறைவேற்றப்படுவதை தாங்கள் தடுக்கவில்லை என்றாலும், இறுதி அறிக்கையின் அம்சங்கள் போதுமான அளவிற்கு வலுவாக இல்லை. உடன்படிக்கை பல ஓட்டைகளுடன் உள்ளது என்று கூட்டமைப்பின் தலைமைப் பேச்சாளரும், சமோவா (Samoa) நாட்டைச் சேர்ந்தவருமான ஆன் ராச்மசன் (Anne Rasmussen) கூறுகிறார். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதைபடிவ எரிபொருட்களைத் தவிர்க்கும் காலம் வந்து விட்டது என்று ஐநா தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டரஸ் கூறுகிறார்.
அடுத்த மாநாட்டில் ஒவ்வொரு உலக நாடும் தங்களின் தேசிய பங்களிப்பில் 1.5 டிகிரிக்குள் புவி வெப்ப உயர்வை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்று துபாய் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா சீனாவுடன் மாற்று எரிபொருட்கள் பற்றி ஒருங்கிணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க காலநிலைப் பிரதிநிதி ஜான் கெரி (John Kerry) கூறுகிறார். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைத்து உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை 2030ல் மும்மடங்காக அதிகரிக்க உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள்
புதிய தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுவது, கார்பன் ஹைடிரஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது பற்றி இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி பயன்பாட்டைத் தவிர்ப்பதால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய போதுமான நிதியுதவி செய்யப்பட வேண்டும் என்று காலநிலைப் போராளிகள் கோரினர். பல நாடுகள் எண்ணெய்ப் பயன்பாட்டை நிறுத்த வலியுறுத்தின.
“கடந்த 30 ஆண்டில் ஒரு காப் மாநாட்டின் இறுதி அறிக்கையில் புதைபடிவ எரிபொருட்கள் பற்றிப் பேசப்படுவது இதுவே முதல்முறை. பெட்ரோலியப் பொருட்கள் என்ற பூதம் பாட்டிலிற்குள் திரும்பிப் போகவில்லை. அதனால் வரும் மாநாடுகளில் இந்த அழுக்கு ஆற்றலை (dirty energy) நிறுத்த உதவும் திருகுகளைப் பயன்படுத்தி பாட்டிலை இறுக்க அடைத்து மூடவேண்டும். கார்பனைப் பிடித்து சேமித்துப் பயன்படுத்தல் போன்றவை அதிக செலவு பிடிக்கும் தோல்வியடைந்த திட்டங்கள்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இப்படிப்பட்ட ஒரு உடன்படிக்கை பெட்ரோல் உற்பத்தி செய்யும் ஒரு நாட்டில் இருந்து ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. புதைபடிவ எரிபொருட்கள் இல்லாத ஓர் உலகை நோக்கி நாம் செல்கிறோம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது" என்று ஆப்பிரிக்க சக்தி அமைப்பின் (Power Shift Africa) முகமது அடோ (Mohamed Adow) கூறுகிறார்.
ஏழை நாடுகளுக்கு இறப்பு சான்றிதழா?
காடுகள் அழிக்கப்படுவதை 2030ம் ஆண்டிற்குள் குறைப்பது பற்றி உடன்பாடு எட்டப்பட்டது. ஆதிவாசிகளின் பாரம்பரிய அறிவுகளை அழியாமல் பாதுகாத்து, பயன்படுத்த காப்28 உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய மாதிரி அறிக்கை புதைபடிவ எரிபொருட்கள் பற்றிய சர்ச்சைகளை எழுப்பியது. அந்த வரைவறிக்கை சிறிய தீவு, பலவீனமான நாடுகளுக்கு பணக்கார நாடுகள் வழங்கும் இறப்பு சான்றிதழாகவே கருதப்பட்டது.
இந்த வரைவறிக்கைக்கு பல வளரும் நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடைசி நிமிடத்தில் காப்28 மாநாட்டின் தலைவர் சல்ட்டர்ன் அல் ஜேபர் (Sultan Al Jaber) பல நாடுகள், குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டது. புதைபடிவ எரிபொருட்கள் தவிர்ப்பு பற்றிய அம்சம் சேர்க்கப்பட்டது. இதன் பலனாக தோல்வியடையுமோ என்ற அச்சத்தில் இருந்த மாநாடு இறுதியில் எண்ணெய்ப் பொருட்கள் பற்றிய உடன்பாட்டுடன் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றது.
துபாய் காப் 28 மாநாட்டின் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கை புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவுமா? மாநாட்டின் நோக்கம் வெற்றி அடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்