scrap eia 2020இ.ஐ.ஏ என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment 2020) ஆகும். இன்று இருக்கும் அசாதாரண நிலையில் இந்தியா சந்தித்து வரும் கடுமையான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதன் பிண்ணணி என்ன என்கிற கேள்விகள் அனைவரிடத்திலும் எழுகிறது. இன்னும் கொரோனா தொற்றிலிருந்தே எந்த ஒரு மனிதருக்கும் உத்திரவாதம் இல்லாத நிலை, புலம்பெயர்ந்த மனிதர்களின் சீரமைக்கப்படாத வாழ்வாதரம், தினந்தோறும் அதிகரிக்கும் வேலையில்லாத் தீண்டாட்டம், அரசின் மீது அவநம்பிக்கை, பேரிடர் கால நிவாரணத் தேக்கம், குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறையின்மை மற்றும் அன்றாட உணவுக்கான சூழலே திண்டாட்டமாக இருக்கிறபோது எதற்கு இந்தக் கட்டவிழ்த்துவிடும் நிலை?

இந்த இ.ஐ.ஏ திட்டத்தின் மூலம் நமது நாட்டில் எந்த இடத்திலும், உதாரணமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரையிலும் எங்கு வேண்டுமானாலும் எப்படிப்பட்ட தொழிற்சாலைகளை நிறுவிக் கொள்ளலாம், அதற்கு விதிகளைத் தளர்த்துவதுதான் இவர்களது இலக்கு. இன்றைய சூழலில் எவ்வாறு அத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவது என யோசித்து தனது சதுரங்க வேட்டையை மத்திய அரசு ஆரம்பித்த்உள்ளது.

நாம் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அல்லவா, இந்த நேரத்தில் மருந்து நிறுவனங்களை அனுமதிப்பது போன்று தன் வியூகத்தை அமைத்து, செயல்படுவதுதான் அரசின் நோக்கம். சில நாட்களுக்கு முன்பு வேடந்தாங்கலில் இப்படித்தான் பறவைகள் சரணாலயத்தை அழிக்கப் புறப்பட்டிருக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அவர்கள் இயற்கையைப் பற்றி கவலை கொள்வதே இல்லை.

1984 − ஆம் ஆண்டு போபால் விஷ வாயு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியையும், இன்றளவும் தொடரும் அதன் துயரங்களையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. தொழிற்சாலை கட்டமைப்புகளின் வரம்பு மீறிய செயலைக் கண்காணிக்க வேண்டும் என்கிற, பெயரளவில் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கையாகத்தான் 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

அதன் ஒரு அம்சமாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்கிற சட்ட நடைமுறை 1994-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. சுரங்கம், தொழிற்சாலை, அணை போன்ற வளர்ச்சித் திட்டங்களால் நாட்டின் சுற்றுச்சூழலும் வளங்களும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தின் படிமுறைகள், எந்த ஒரு திட்டத்திலும் இன்று வரை சரியாகவும் துல்லியமாகவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோபால்பட்டினத்தில் உள்ள பாலிமர் துறையைச் சார்ந்த ஆலை நிறுத்தி வைக்கப்பட்டு, திடீரென இயக்கும்போது ஏற்பட்ட பேரழிப்பையும், துயரங்களையும் அதற்குள் மறந்துவிட்டோம் அல்லவா? அதனால் தான் அவர்கள் இ.ஐ.ஏ 2020 சட்டத்தைத் துரிதப்படுத்துகிறார்கள்.

தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு - 2006 நடைமுறையில் உள்ளது. அதன் நோக்கமானது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அதைத் தடுப்பது, குறைப்பது, ஒழுங்குபடுத்துவது என்பதுதான். இது மக்களிடம் கருத்து கேட்பது, வல்லுநர்கள் அறிக்கை, ஆய்வுகள் எனப் பல வழிமுறைகளை உள்ளடக்கியது. இத்தகைய வழிமுறைகள் இருந்ததால் தான் நாம் அண்மையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி தொழிற்சாலையை நிறுத்தி வைத்துள்ளோம்.

இவ்வளவு கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் கடந்த மார்ச் 12-ம் தேதி இ.ஐ.ஏ 2020 வெளியிடப்பட்டது. இந்தச் சட்ட வரையறையின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு −2006க்கு நேர் எதிரானது. மக்கள் கருத்து கேட்கும் நாட்கள் 60 லிருந்து 40 நாட்களாகக் குறைக்கப்பட்டது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றிருந்த ஆய்வறிக்கையை அரசே ஓராண்டுக்கு ஒரு முறை சமர்பிக்கும் முறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல், உள்நாட்டு நீர்த்தடங்கள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்துவிதமான கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிப்பது ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரிய அளவில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, இயற்கையை அழிக்கும் திட்டங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எப்பொழுதுமே அரசு மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் கருத்தில் கொள்ளமால் சட்டவரையறைகளை நடைமுறைப்படுத்தும், அதை எதிர்த்து நாம் குரல் எழுப்பவதும் கடமையாக உள்ள இந்த தேசத்தில், மீண்டும் இந்தத் திட்ட வரையரையை எதிர்த்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி போராடத் தவறினால், அடுத்த தலைமுறையினர் உடலில் நிரந்தர நோய்ப் பிரச்சனையோடும், இயற்கை நிரந்தர ஊனமாகவும் மாறிவிடும் அளவிட முடியாத அபாயம் உள்ளது.

ஏற்கனவே தொழிற்சாலைக் கழிவுகளால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும், குடிப்பதற்குக் கூட நீர் இல்லாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது தண்ணீர் விற்பனை நடப்பதுபோல், O2 காற்றுப்பைகள் விற்பனையாகும் நிலை வந்துவிடும்.

இந்தச் சட்டவரையறைக்கு எதிராகக் கருத்து கூறும் காலம் வரும் ஆகஸ்டு 11ம் தேதி−2020 வரை உள்ளதால் மக்கள் ஒன்று திரண்ட எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலர், இடது சாரி சிந்தனையாளர்கள் மற்றும் பாமர மனிதர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

இந்தியாவின் பொருளாதாரம் தொழிற்சாலையால் முன்னேறுவதை விட, நம் வாழ்வாதாரமான வேளாண்விளை பொருட்களால் முன்னேற்றமடையச் செய்யலாம். நம் நாட்டின் சுற்றுச் சூழலை அழித்துதான் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால், அந்த வளர்ச்சி தேவையே இல்லை. வாழும் காலம்வரை மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து விட்டுச் செல்ல வழி விடுங்கள்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It