காவிரிக்கும், தஞ்சை தரணிக்கும் உள்ள உறவில் தான் தமிழகம் உணவு உண்கின்றது. இவ்வாறு தமிழக மக்களின் விவசாயத்திற்கு இன்றியமையாத இடமாக இருக்கும் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளை அதன் இயல்பை மாற்றக்கூடிய ஆபத்தாக இந்த மீத்தேன் எரிவாயு திட்டம் வரப்போகிறது.

கொஞ்சம் விளக்கமாக. . . . .

"இயற்கை எரிவாயு" என்பது நாம் எல்லோரும் அறிந்தவரை இயற்கையில் கிடைக்கும் வாயு நிலையில் உள்ள எரிபொருள. இந்த இயற்கை எரிவாயு தீப்பிடிக்கும் இயல்புள்ள நீர்கரிம வாயுக்களின் கலவை ( Combustible mixture of hydrocarbon gases). இந்த வாயுக்களின் கலவையில் மீத்தேன் வாயு என்பதே முதன்மையாக இருக்கின்றது மேலும் அதிகமான வெவ்வேறு நிலைகளில் மற்ற நீர்கரிம வாயுக்களும் மற்ற வாயுக்களும் கலந்து காணப்படும்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இதில் இரண்டு வகை இருக்கின்றன. பெட்ரோலிய படுகைகளில் பெட்ரோல் எரிபொருள் எடுக்கும் பொது இயல்பாகவே வருவது ஒரு வகை. இது வழக்கமான வாயு (Conventional Gas)அல்லது இயல்பான வாயு என்று அழைக்கலாம். மற்றொரு வகை வழக்கத்திற்கு மாறான முறையில் எடுக்கப்படும் எரி வாயு (Unconventional Gas) என்று அழைக்கலாம். இந்த வகை "வழக்கத்திற்கு மாறான" எரிவாயு கடினமான பாறைகளிலும், நிலத்திற்கு அடியில் மிகுந்த இறுக்கம் கொண்ட மணல் படுகைகளிலும் மற்றும் நிலக்கரி படுகைகளிலும் எடுக்கப்படுகிறது.

வழக்கமான எரிவாயு முற்றிலும் வாயுவாகவோ அல்லது சிறிது நீர்ம நிலையிலோ கிடைக்கும். முதலாவதில் முற்றிலுமான மீத்தேன் மட்டுமே கிடைக்கும். நீர்ம நிலையில் சேகரிக்கப்படும் எரிவாயுவில் மீத்தேன், ப்யூடேன், ப்ரொப்பேன் ஆகியவை கலந்து இருக்கும். இந்த எரிவாயு பெட்ரோலிய கிணறுகளில் கச்சா எண்ணை எடுக்கும் போது அதிலேயே கச்சா எண்ணையுடன் கலந்து வரும்.

இந்த வழக்கத்திற்கு மாறான எரிவாயு எடுக்கும் முறைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை

*Tight Gas எனப்படும் இறுக்கம் அதிகம் உள்ள இடங்களில் எடுக்கப்படும் எரிவாயு.

*Shale Gas எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள மிக கடினமான பாறையில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.

*Coalbed Methane எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.

இதில் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வரப்போகும் ஆபத்து என்பது Coalbed Methane என்று அழைக்கப்படும் CBM. நிலக்கரி படிமங்களில் உள்ள எரிவாயு CBM என்று அழைக்கப்படும். உயிரிகளின் இறந்த எச்சம் நிலக்கரியாக இயற்கையாக மாறும் நிலக்கரி மாற்றத்தில் நிலைகளில் இந்த இயற்கை எரிவாயு உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் எரிவாயு பாறைகள் மற்றும் நீரால் சூழப்பட்டு அவை நிலக்கரி படிமங்களிலும், பாறைகளில் உள்ளாகவும் வெளியேற வழி இல்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. இவ்வாறு தங்கிவிடும் எரிவாயு பகுதிகளை பாறைகளில், நிலக்கரி படிமங்களில் செயற்கையாக விரிசல்களை ஏற்படுத்தி ஒன்றாக சேர்த்து வாயுக்களை மொத்தமாக எடுக்கும் முறையே எரிவாயு எடுக்கும் முறை.

நிலக்கரியானது அதிக நுண் துளைகள் கொண்ட இயல்பினையும் நீர் ஊடுருவும் தன்மையும் கொண்டதாக இருப்பது. நிலத்தில் இருந்து எடுக்கும்போது நீரை உறிஞ்சி ஈரமான தன்மைகொண்டிருக்கும். இந்த நிலக்கரி படிமங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும்போது நீரை முற்றிலுமாக வெளியேற்றினால்தான் அங்கிருந்து இயற்கை எரிவாயுவை சேகரிக்க முடியும்.

இங்கு தான் விசயமே இருகின்றது. . ஆபத்தும் இருகின்றது. . . .

நீரை முற்றிலுமாக வெளியேற்றுவது என்பது நிலத்தடி நீரை. மேலும் மேலும் அதிக ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது எதற்கும் உபயோகப்படாது. ஏனனெனில் அதிக ஆழத்தில் வெவ்வேறு வகையான குணங்கள் கொண்ட தனிமங்கள் நீரில் கலந்து மேலே வரும். நிலக்கரியின் நுண் கரி துகள்களும் கலந்து வரும். இந்த நீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியாது.

cbm_512

தஞ்சாவூரில் வரும் CBM திட்டம் நிறைவேற வேண்டுமானால் நிலத்தடி நீரை முற்றிலுமாக அங்கிருந்து அப்புறப்படுத்த பட வேண்டும். இப்பொழுது இதன் ஆபத்தின் பரிமாணம் விளங்கும்.

மேலும் நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் அதை எடுக்கும் முறையில் நீர்தான் அதிக அளவு பயன்படுத்தப்படும். நீரை பயன்படுத்தி எரிவாயு எடுத்து நீரை முற்றிலுமாக அழித்து சுற்றுசூழலை மாசுபடுத்தும் இந்த CBM முறை.

இது எடுக்கப்படும் முறைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் (Hydraulic fracturing) நீரியல் விரிசல் ஏற்படுத்தும் ஆபத்து பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன். மிகுந்த தீமையை ஏற்படுத்தும் இந்த நீரியல் விரிசல் முறையை பற்றி நம் மக்களுக்கு எந்த அரசும் தெரிவிக்கப்போவதில்லை. நிறைய நாடுகள் இந்த முறையை தடை செய்துள்ளன. அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய நாட்டின் மக்கள் தொகை அதிகமான இடங்களில் இந்த முறையை தடை செய்துள்ளது அது போலவே ஆஸ்திரலியா சில இடங்களில் தடை செய்துள்ளது. இதை முற்றிலும் தடை செய்ய அங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. மிக அதிகமான எண்ணிக்கையில் சிறிய நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்தது கவனிக்க வேண்டிய விசயமாகும். இப்படிப்பட்ட ஆபத்தை நம் மண்ணுக்கு கொண்டுவர இந்திய் அரசு துடிக்கிறது.

இங்கு இந்த நீரியல் விரிசல் (Hydraulic fracturing) முறையில் ஏற்படும் தீமைகள் சிலவற்றை பார்ப்போம்.

# கழிவு கலந்து வெளிவரும் நீர்: மீத்தேன் நிலக்கரி படுகையில் இருந்து எடுக்க வேண்டுமானால் தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த நீர் மிகுந்த மாசடைந்து வேதிப்பொருட்களான பென்சீன், டொலுவீன், ஈதைல்-பென்சீன் மற்றும் கடின தனிமங்களான ஆர்சனிக், காட்மியம், ஈயம் மற்றும் பாதரசம் கலந்து வரும். உலகின் இந்தமுறையை மேற்கொண்டு மீத்தேன் எடுத்த மிகுதியான இடங்களில் கதிரியக்க தனிமங்களும் நீரில் கலந்து வெளிவந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

# நீரை அப்புறப்படுத்தல் : தினந்தோறும் பல மில்லியன் லிட்டர் அளவில் ஒவ்வொரு எரிவாயு கிணற்றில் இருந்து மாசடைந்த நீர் வெளியேற்றப்படும். இந்த நீர் பாசனத்திற்கோ மக்களின் உபயோகத்திற்கோ சற்றும் உகந்தல்ல. எனவே இந்த நீரை ஒரு ஏரி போன்ற இடத்தில தேக்கி சூரிய ஒளியில் ஆவியாக மாற்ற முயன்றார்கள். இருந்தாலும் மிகுதியான நீர் மேலும் மேலும் சேரும் பட்சத்தில் அதை அருகில் உள்ள ஆற்றில் விடுவார்கள். காவரி முற்றிலும் கழிவு கலந்து கருப்பாக ஓடும் அவலத்தையும் பார்கப்போகிறோமா? ஸ்கட்லாந்து நாட்டில் அரித் (Arith) என்ற இடத்தில அமைந்துள்ள எரிவாயு கிணற்றில் இருந்து வெளிவரும் நீரை அங்கு ஓடும் Forth என்ற நதியின் முகத்துவாரத்தில் தனியாக ஒரு குழாய் வைத்து கலக்கிறார்கள். அங்கும் மக்கள் போராடுகிறார்கள்.

# நிலத்தடி நீர் குறைதல் : தொடர்ச்சியாக வெளியேற்றப்படும் நீரினால் நிலக்கரி படுகையில் உள்ள நீரானது முற்றிலுமாக வெளியேற்றப்படும். இதனால் நிலத்தடி நீர் இன்னும் கீழே சென்று நிலக்கரி படிமங்களில் கலக்க நேரிடும். இதனால் விவசாயிகள் மற்றும் மக்களின் தேவைக்காக போடப்படும் போர்வெல் மீத்தேன் வாயு கலந்த நீரை வெளியேற்றும் ஆபத்தும் உண்டு. ஆஸ்ட்ரேலியாவில் இத்தகைய ஆபத்து நிகழ்ந்தது.

# காற்று மாசடைதல் மற்றும் தீப்பிடிக்கும் ஆபத்துகள்: மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் நாற்றம் அடிக்கும் பல்வேறு வாயுக்கள் மீத்தேன் எரிவாயு கிணற்றில் இருந்து வெளியேறும். மேலும் பரவி கிடக்கும் அதன் குழாய்களில் இருந்து பல்வேறுவிதமான தூசிகளும் வெளியேறி காற்றை மாசுபடுத்தும். தீப்பிடிக்கும் இயல்புள்ள இத்தகைய இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டதற்கான உதாரணங்கள் உள்ளன. கரும்புகை வெளியேறும் இத்தகைய எரிவாயு குழாய்களின் நெருப்பை அணைப்பது மிக எளிதல்ல.

# மீத்தேன் வாயு நீர்நிலைகளில் கலக்கும் ஆபத்து : எரிவாயு கிணறுகளில் எரிவாயுவை எடுக்க நிலத்தில் மிக ஆழத்தில் (கிட்டதட்ட 10,000 மீட்டர்) செயற்கையான நீரியல் விரிசல்கள் ஏற்படுத்தப்படும். அதிலிருந்து மிக அதிக அழுத்தத்தில் வெளியேறும் மீத்தேன் வாயுவானது எரிவாயு குழாய்களில் ஏதாவது சிறிய விரிசல் இருந்தாலும் அதன் மூலமாக வெளியேறும் ஆபத்து உள்ளது. நீர்மட்டத்தை கடக்கும் இடத்தில குழாய்களில் ஏற்படும் விரிசல் மீத்தேன் வாயுவை நீராதரங்களுக்கு கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. ஆஸ்திரிரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள காண்டமைன் ஆற்றில் இப்படி நிகழ்ந்து உள்ளது. மேலும் சில வீட்டில் உள்ள குடிநீர் குழாய்களில் இப்படி மீத்தேன் கலந்தும் வந்துள்ளது.

# கசிவுள்ள எரிவாயு குழாய்கள் : ஆய்வின்படி சராசரியாக 6% குழாய்கள் உடனடியாக கசிவுகளை உண்டாக்குகின்றன 50% எரிவாயு குழாய்கள் 15 வருடங்களுக்கு பிறகு கசிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த CBM எரிவாயு திட்டமானது நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகளை கொண்டதாகவே அமையும். இந்த எரிவாயு கிணறுகள் என்றுமே மறு உபயோகத்திற்காக சீர்செய்யப்படுவதில்லை. எரிவாயு கிணறுகளை தொடர்ந்து பராமரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை. கிணறுகளில் பதிக்கப்பெறுவதாக சொல்லப்படும் ஸ்டீல் குழாய்களும் காலபோக்கில் அவை கிணறுகளிலேயே விழுந்து கசிவுகளை நிரந்தரம் ஆக்குகின்றன.
 
எரிவாயு கிணறு அமைந்துள்ள இடத்தினால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடு : இந்த CBM எரிவாயு எடுக்கும் கிணற்றினை சுற்றிலும் கண்டிப்பாக சாலைவசதி தேவைப்படும். ஒரு நாளைக்கு கிட்டதட்ட 70 லாரிகள் ஒவ்வொரு கிணற்றிக்கும் செல்லும் தேவை உண்டு. கனரக வாகனங்கள்,மிகபெரிய லாரிகள் என்று கிணறு இயங்கும் குறைந்தபட்ச காலமான 20 ஆண்டுகாலம் வரையும் இவ்வாறு சென்றுவந்தால் அந்த இடத்தின் சாலைகள் எவ்வாறு இருக்கும் என்றும், நூற்றுகணக்கான எரிவாயு கிணறுகள் இவ்வாறு சாலைகள் மூலம் ஒன்றை ஒன்று இணைத்து கொண்டு இயங்கும். இவை பிரத்தியேகமான சாலைகள். வயல்களை அழித்து இந்த சாலைகள் போடப்பெற்றால் வயல்வெளிகள் அனைத்தும் பாழாய்ப் போகும். மேலும் அதிக வெளிச்சத்தை உமிழும் விள்க்குகள், மிகுந்த சப்தத்தை எழுப்பும் கருவிகள் என்று ஒலி,ஒளி,வளி,நிலம் அனைத்தும் நாசமாகப் போகும்.

குழாய்கள் பதிப்பது: இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு குழாய்கள் மூலம் வேறு ஒரு இடத்தில சேகரிக்கப்படும். இவ்வாறு செல்லும் குழாய்களில் ஏற்படும் கசிவு மிகப்பெரும் விபத்தினை ஏற்ப்படுத்தும் சாத்தியம் உள்ளது. மக்கள் வசிக்கும் இடங்களில் இந்த குழாய்கள் சென்றால் மக்கள் அருகில் செல்லாதவாறு குறிப்பட்ட அளவு இடம் எரிவாயு நிறுவனத்தாரால் ஆக்கிரமிக்கப்படும். இங்கு நீங்கள் GAIL திட்டத்தால் தருமபுரி, திருப்பூர் பகுதிகளில் விவசாயிகளின் வயல்களை ஆக்கிரமித்து பதித்த குழாய்களை நினைவில் வைக்கவும்.

cbm_624

சுத்திகரிப்பு நிலையங்களினால் ஏற்படும் சீர்கேடு : இந்த நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகள் அனைத்தும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு ஒரு முதன்மையான சுத்தகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும். அவ்வாறு அமைந்துள்ள சுத்தகரிப்பு நிலையங்கள், மீத்தேன் தவிர கிடைத்துள்ள தேவையில்லாத வாயுக்களை வெளியேற்றுவர். எளிதில் தீப்பிடிக்கும் இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதை தடுக்கும் விதமாக நெருப்பில் பற்ற வைத்தே அவற்றை நீக்க முடியும். நீங்கள் எரிவாயு கிணறுகளில் அருகில் பார்ப்பதாக இருக்கும் நீண்ட நெருப்பு ஜுவாலைகள் வெளியேறும் குழாய் இந்த வகையை சேர்ந்ததே. இதன் மூலம் வளிமண்டலத்தில் மிகுந்த தீமையை ஏற்ப்படுத்தும் ஆர்சனிக் கழிவுகள் கலக்கும். சுவாசிக்கும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படும்.

தொழிற்சாலை சூழலாகும் கிராமங்கள்: அமைதியான கிராம சுற்றுசூழல் இந்த எரிவாயு கிணறுகளினால் முற்றிலும் இயந்திரமயமான தொழிற்சாலை போன்ற சூழலுக்கு தள்ளப்படும். இதனால் அந்த மண்ணை சார்ந்து வாழும் உயிரிகள் முற்றிலுமாக அழிந்துவிடும் அல்லது பாதிப்படையும். முற்றிலும் கிராமங்களே அதிகமாக இருக்கும் தஞ்சை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் இதனால் மிகுந்த பாதிப்பு அடையும்.

நிறுவனங்களின் லாபத்திற்காக பலியாகும் சமூகங்கள்: இங்கிலாந்து குடியரசின் உள்ளே இந்த CBM நிறுவனங்கள் உள்ளே நுழைந்த பின்பு அங்கு வாழும் மக்களின் சமூகங்களுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் பல்வேறு வடிவங்களில் வந்தன. இதனால் வேறு வழியில்லாமல் வேறு இடங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் குடிபெயர்ந்தார்கள். மற்றும் சில சமூகங்கள் எரிவாயு கிணறுகளின் அருகிலேயே மாசடைந்த சுற்றுசூழலில் வாழும் துர்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். இந்த நிறுவனங்களின் முதலாளிகள் மட்டும் லாபத்தில் கொழிக்க மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இந்த நிலைதான் மற்ற நாடுகளுக்கு இதன் தீமைகளை எடுத்து சொல்லியது.

நிலத்தினுள் தீப்பிடிக்கும் அபாயம் : CBM எரிவாயு கிணறுகளில் தொடர்ந்து மீத்தேன் எரிவாயு எடுக்கவேண்டும் என்றால், அந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் நிலத்தின் மீது கட்டப்படிருக்கும் வீடுகள், மற்றும் அனைத்து கட்டுமானங்களும் பாதிப்படையும். இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் வாயுக்கள் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அமையும்போது பூமியின் உள்ளே இருக்கும் நிலக்கரி படுகைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உண்டு. அப்படி தீப்பிடித்தால் அதை எளிதில் அணைக்க முடியாது இதற்க்கு உதாரணமாக இங்கேயே இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜஹாரியா என்ற இடத்தில நிலக்கரி படுகையில் தீப்பிடித்து அதை இன்று வரை அணைக்க முடியவில்லை. 1916ம் ஆண்டு தான் பூமிக்கு கீழ் நிலக்கரி படுகையில் தீப்பிடித்ததை கண்டறிந்தார்கள். கிட்டத்தட்ட 97 ஆண்டுகளாக அந்த தீ இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு வாழும் மக்கள் பல்வேறு நோய்களின் பாதிப்பினால் சிரமப் படுகிறார்கள்.

நிலக்கரி எடுக்கும் மாற்றுமுறைகள் : இவ்வாறு மீத்தேன் எரிவாயு எடுத்து முடித்தபின் பூமிக்கு கீழே இருக்கும் நிலக்கரிகளின் மீது அவர்களின் கவனம் திரும்பும். சில இடங்களில் திறந்த நிலக்கரி சுரங்கங்களும் மற்ற இடங்களில் மாற்று வழியில் நிலக்கரியை இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து எடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலக்கரியானது உயிர்வேதி மாற்றத்தினால் கிடைக்கும் எரிபொருட்களிலேயே (Fossil Fuel)மிகுந்த மாசடைந்த எரிபொருள். இந்த நிலக்கரி எடுக்கும் முறைகளினால் நிலமும், சுற்றுச்சூழலும் மிகுந்த பாதிப்பு அடையும்.

பாதிப்புகளை சந்திக்கும் தற்போதைய தொழில்கள்: இந்த CBM எரிவாயு திட்டம் எங்கெங்கு எல்லாம் வருகிறதோ அங்கு இருக்கும் அனைத்து தொழில்களும் பாதிப்பு அடையும். விவசாயம், சுற்றுலா, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடும் நிலையை அடையும்.

திடீர், தற்காலிக வளர்ச்சிகளும் நீண்டகால பாதிப்புகளும்: முந்தைய தொழிற் துறைகள் அனைத்தும் இதனால் பாதிப்பு அடையும். இந்த திட்டத்தினால் நீண்டகாலமாக மக்களின் பொருளாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்த அனைத்து வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கபடும். தற்காலிக மற்றும் குறுகியகால வளர்ச்சி மற்றும் லாபத்திற்காக நீண்டகால பாரம்பரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தொழிற் துறைகள் மக்களால் கை கழுவப்படும்.

pollution_368

கன ரக வாகனங்களின் போக்குவரத்து: எரிவாயு குழாய்களை பதிக்க துளை போடும்போது வெளிவரும் மண் மற்றும் கல் கழிவுகள் பெருமளவில் மலை போல குவித்து வைக்கப்படும். இந்த மண் மற்றும் கல் குவியல்களை அங்கிருந்து அப்புறப் படுத்துதல் மிக அவசியம். ஒவ்வொரு எரிவாயு குழாய்களில் இருந்து தோண்டப் பெரும் மண் குவியல்களை அப்புறப் படுத்த பெருமளவில் கன ரக வாகனங்கள் பயன் படுத்தப்படும். இந்த வாகனங்கள் தொடர்ந்து வந்தும், போய் கொண்டும் இருப்பதால் சுற்றி இருக்கும் நிலம் பாதிக்கபடும். இது மட்டும் அல்லது துளை போடும் இயந்திரங்களை சுமந்துகொண்டு வரும் வாகனங்கள் எண்ணிலடங்காது.

சாலை பாதிப்பு மற்றும் நிலநடுக்க அபாயம்: எரிவாயு குழாய்களுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டும், கழிவுகளை சுமந்து கொண்டு வெளியேறும் வாகனங்களால் சாலை முற்றிலும் சேதமடையும். மேலும் வழக்கமான முறையில் நிலக்கரி எடுக்கும் இடங்களிலும் மற்றும் CBM எடுக்கும் முறையில் பயன்படுத்தப் பெறும் நீரியல் விரிசல் முறையில் சில இடங்களில் நிலநடுக்கங்கள் வந்துள்ளது கவனிக்க படவேண்டிய அபாயம்.
 
வசிப்பிடத்தின் பாதிப்புகள் : எரிவாயு கிணறுகளில் அருகில் வசிக்கும் மக்கள் அவர்களின் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு முற்றிலுமாக குறைந்து விடும். அதை அவர்கள் மராமத்து பண்ணுவதோ மற்றும் அவற்றை விற்பனை செய்வதாலோ எந்த பயனும் ஏற்ப்படப் போவதில்லை. இந்த எரிவாயு கிணறுகள் அமையும் இடங்களில் எரிவாயு கிணறுக்கான உள் கட்டமைப்பு அதன் அமைப்பின் இயல்பால் ஏற்கனவே இருந்த தொழிற் சாலைகள் மிகுந்த நஷ்டங்களை எதிர்கொள்ளும். உதாரணமாக, இந்த எரிவாயு கிணறுகளை இணைக்கும் சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் வழி தஞ்சையை பொறுத்த வரை அதனை சுற்றியுள்ள வயல் வெளிகளில்தான் செல்லும். எனவே எப்படி பார்த்தாலும் தஞ்சை விவசாயம் என்பது இந்த CBM திட்டத்தினால் முற்றிலும் அழியப்போகும் என்பது உறுதி.

மாற்று எரிபொருள் திட்டத்திற்கான எதிரி இந்த CBM: மேலும் மேலும் இந்த மீத்தேன் திட்டத்தில் செய்யப்படும் முதலீடானது இப்போது மிகுந்த அறிவாற்றலுடன், செயல் திறனுடனும் செய்யப்படும் அனைத்து மாற்று எரிபொருள் உற்பத்தி திட்டங்களுக்கும் மாபெரும் எதிரியாக மாறப்போகிறது. சூரிய ஒளியின் மூலமாகமின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களும், காற்றலை திட்டங்களும் இதனால் நேரடியாக பாதிக்கப்படும். மறு சுழற்சியின் மூலம் பெறப்படும் மின்சார திட்டங்கள் இப்பொழுதுதான் மிகுந்த வளர்ச்சியின் நிலையில் உள்ளன. அவற்றை அழித்துவிடக்கூடிய வல்லமை கொண்டது CBM.

காலநிலை மாற்றம் : எந்த வகையில் பார்த்தாலும் இந்த CBM மீத்தேன் வாயு எடுக்கும் முறையானது மற்ற உயிர்வேதி பொருட்களின் கால மாற்றத்தினால் தோன்றக்கூடிய மற்ற எரிபொருட்களுக்கு (Fossil Fuel) மாற்று அல்ல. ஏனெனில் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்த மீத்தேன் எரிவாயுவில் கலந்தால் மட்டுமே இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்த முடியும். மேலும் மேலும் விரிவுபடுத்தப்படும் இந்த தொழில்நுட்பமானது கரியமில பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை விரிவாக்குவதால் பூமி வெப்பமயமாதலுக்கே வழி வகுக்கும். இந்த பருவநிலையில் ஏற்படும் வேதி மாற்றமானது பஞ்சத்திற்கும், பெரு வெள்ளத்திற்கும் மற்றும் பட்டினி சாவுகளுக்கும் காரணமாகின்றது. ஆய்வுகளின் படி ஆண்டிற்கு 45,000 மக்களின் இறப்பிற்கு இந்த மீத்தேன் எரிவாயு எடுக்கும் CBM காரணமாகின்றது.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

பொருள்: மன்னன் முறை தவறி ஆட்சி செய்வானாயின் அந்த நாட்டில் பருவ மழை தவறி, மேகம் மழை பெய்யாமல் போகும்.

- த.அருண்குமார், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It