உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட உழவர்கள், உயர்மின் கோபுரங்களுக்குப் பதிலாக சாலையோரமாக புதைவடமாக அமைத்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு மாத வாடகை வழங்கிட வேண்டும் என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
கெயில் எரிகாற்று குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட உழவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து குழப்பத்திலும் தீராத மன உளைச்சலோடும் உள்ளார்கள்.
தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கையை ஏற்று சாலையோரமாக கெயில் குழாய்கள் போடப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2013 ஆம் ஆண்டு ஆணையிட்டார்கள்.ஆனால் கெயில் நிறுவனம் தமிழக அரசின் ஆணையை மதிக்காமல் உச்ச நீதி மன்றம் வரை சென்று 1962 PMP சட்டத்தைப் பயன்படுத்தி தமிழக அரசின் முடிவிற்கு எதிரான தீர்ப்பை வாங்கி விட்டார்கள்.
தமிழக அரசு, மத்திய அரசை அணுகி இந்தத் திட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தின்படி மாற்று வழியில் சாலையோரமாக செயல்படுத்த. உரிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.
இன்றைய தமிழக அரசின் அலட்சியப் போக்கால் கெயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது நிலங்களில் முறையான வேளாண்மை செய்ய முடியாமல் கடும் இழப்பிற்கு ஆளாகி வருகிறார்கள்.
பாரத் பெட்ரோலிய நிறுவனம் IDPL எண்ணெய் குழாய் திட்டத்தை உழவர்களின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்துவதற்கான அனைத்து சட்டப்பூர்வமான வேலைகளையும் மிக வேகமாக செய்து வருகிறது. IDPL திட்டத்தால் பாதிக்கப்படுகிற 7 மாவட்ட உழவர்கள் கெயில் எரி காற்றுக் குழாய் திட்டத்தில் தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தின்படி IDPL. திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றி உழவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் இடைவிடாது முறையிட்டு வருகிறார்கள்.
உயர்மின் கோபுரங்கள் பிரச்சினையில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் மின்பாதை அமைவதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 கோடி ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவோம் என தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் அரசு கொடுத்த உறுதிமொழியை செயல்படுத்தவில்லை. மாறாக, காவல் றையையும் வருவாய்த் துறையையும் வைத்து உழைக்கும் உழவர் பெருமக்களை அச்சுறுத்தி பொய் வழக்குகள் பதிந்து சிறையில் அடைத்து அடக்குமுறை செய்து வருகின்றனர். தமிழக அரசு வன்முறையின் மூலம் திட்டத்தை செயல்படுத்தியும் வருகிறது.
கேரளாவிலும், சென்னையைச் சுற்றிலும் கேபிள் பதிக்கும் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தின் கிராமங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்து உழவர்களின் உயிருக்கும் மேலான நிலத்தைச் சீரழித்து வருகிறார்கள்.
கெயில் நிறுவனம் கேரளாவிலும், கர்நாடகாவிலும், குஜராத்திலும் சாலையோரமாக எண்ணெய்/ எரி காற்று குழாய்த் திட்டங்களை சாலை ஓரமாக நிறைவேற்றியுள்ளது.
கெயில் எரிகாற்று குழாய், IDPL எண்ணெய் குழாய்த் திட்டங்களில் தமிழக சட்டசபையின் தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய்க் குழாய் பதிக்க 7 மாவட்ட உழவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக நில எடுப்பு அறிவிப்பு செய்துள்ளது.
தமிழக சட்டசபையின் தீர்மானத்தை தமிழக அரசே எப்படி மீறலாம்?
மேற்கண்ட பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட உழவர்கள் சாத்தியமுள்ள மாற்று தீர்வுகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
மேற்கண்ட நில உரிமைப் பறிப்புத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களை தமிழக முதல்வர் அழைத்துப் பேசாமல். பொய் வழக்குகளைப் பதிந்து சிறையில் அடைத்து அடக்கி ஒடுக்குவது ஏன்?
திட்டங்களை செயல்படுத்துவதற்கு காவல் துறையயும், வருவாய்த் துறையையும் அனுப்பும் ஆளும் அரசியல் கட்சிகள் தற்போது நம்மிடையே வாக்கு கேட்டு தங்கள் வேட்பாளர்களை அனுப்பியுள்ளனர்.....!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கோரிக்கை விவாத மேடை நிகழ்ச்சியில் நமது கொள்கைகளை, மாற்று தீர்வுகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்தோம்.
அதன் பலன் நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கிறது. தமிழக சட்டமன்றத்திலும் நமது கோரிக்கைகள் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதைப் போலவே வரும் உள்ளாட்சித் தேர்தலையும் நமது நில உரிமை மீட்பு போராட்டத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களது துண்டறிக்கைகளில் உயர்மின் கோபுரம், கெயில் எரிகாற்றுக் குழாய், IDPL எண்ணெய்க் குழாய் திட்டங்களில் உழவர்களின் மாற்றுத் தீர்வுகளை ஏற்றுக் கொள்கிறோம், வெற்றி பெற்ற பின்பு அதைத் தீர்மானமாக இயற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைப்போம், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற வாசகங்களை அச்சிட்டு வாக்கு கேட்பவர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.
நம்மைப் புறக்கணிப்பவர்களை நாம் மிகக் கடுமையாக புறக்கணிக்க வேண்டும்.
நமது வாக்குகளை விட மக்களாட்சி நாட்டில் மிகப் பெரிய ஆயுதம் எதுவுமில்லை.
எனவே வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை நமது கோரிக்கைக் களமாக மாற்றுவோம், நமது கோரிக்கையை நோக்கிய பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம்.
இப்படிக்கு,
உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்.
கெயில் எரி காற்று குழாய்த் திட்டத்தால் பாதிக்கப்பட்ட உழவர்கள் கூட்டியக்கம்.
பாரத் பெட்ரோலியத்தின் IDBL எண்ணெய்க் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட உழவர்கள் கூட்டமைப்பு.