மயிலாப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த 25.08.09 அன்று மயிலாப்பரை சேர்ந்த திருமதி. இலட்சுமி என்பவர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்தில் தமிழில் முன்பதிவுச் சீட்டு பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அங்கிருந்த வடநாட்டைச் சேர்ந்த கிஷோர் குமார் என்ற ஊழியர் அவ்விண்ணப்பம் தமிழில் இருப்பதைக் கண்டு, அவ்விண்ணப்பத்தை தூக்கி விசிறியெறிந்துள்ளார்.
இதனால் திருமதி. இலட்சுமி அவமானம் அடைந்தார். திருமதி. இலட்சுமி மற்றும் அவரது கணவர் திரு.மூர்த்தி ஆகியோர் மயிலாப்பூர் தொடர்வண்டி நிலைய முன்பதிவு மேற்பார்வை அலுவலர் திரு. இளங்கோவன் அவர்களிடம் முறையிட்டு புகார் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த இந்தி ஊழியர்கள் 4 பேர் சேர்ந்து கொண்டு இனவெறியுடன் திருமதி.இலட்சுமியையும் அவரது கணவரையும் தாக்க முயன்றுள்ளனர். இதனை அங்கிருந்த மேலாளரும் கண்டித்துள்ளார். இது குறித்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் 26.08.09 அன்று வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமையில் இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் 05.09.09 அன்று பகல் 12 மணியளவில் மயிலாப்பூர் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்த மேற்பார்வையாளர¢ அலுவலகத்தைத் திடீர் முற்றுகையிட்டு, நடந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் திருமதி.இலட்சுமியின் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேட்டனர். 07.09.09 அன்று இளந்தமிழர் இயக்கத் தோழர் தனஞ்செழியன், ஐந்து கோவிலான், பாலமுரளிவர்மன் உள்ளிட்ட திரைத்துறைத் தோழர்கள் தொடர்வண்டி நிர்வாகத்தைக் கண்டித்து தொடர்வண்டி நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துறைரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டு வந்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பவில்லை.
மயிலாப்பூரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டின் தேசிய மொழியான தமிழ் மொழி அறியாத வடமாநிலத்தவர்களும், மலையாளிகளும் பெரும் எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் இவ்வாறு வேற்று இனத்தவரை பணியில் அமர்த்தி தமிழ் இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை, கலப்பினத்தவர்கள் வாழும் மாநிலமாக மாற்றும் செயல்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. கடந்த மாதம¢ சென்னையில் நடத்தப்பட்ட நடுவண் அறிவியல் மற்றும் தொழில்துறை தொடர்பான ஆராய்ச்சி(சி.எஸ்.ஐ.ஆர்.) நிறுவனத்திற்கான தேர்வில் 20 கட்டாய இந்தி வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மாணவர்கள் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதால், பணிக்கும் தேர்வு பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்திய அரசின் தொடர்ச்சியான இந்தித் திணிப்புப் போக்கு கண்டிக்கத்தக்கது.
1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களைத் தகர்க்கும் விதமாக வேற்று மாநிலத்தவரை தமிழ்நாட்டில் வேண்டுமென்றேக் குடியேற்றம் செய்கிறது இந்திய அரசு. தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசுப் பணிகளில் குறைந்தது 85 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக வழங்கப்பட வேண்டும்.
வேளாண்மன்றச் சட்டம் நிறுத்தி வைப்பு
சட்டமன்றத்தில் எவ்வித திறந்த விவாதமும் இல்லாமல் தமிழக அரசு பிறப்பித்த ‘தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம்-2009’ நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி 10.09.09 அன்று அறிவித்தார்.
இச்சட்டம் தமிழக வேளாண்மையையும், தமிழ்நாட்டு உழவர்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் கட்டிப் போடும் சதித்திட்டம் என்பதை கடந்த இதழில் விளக்கியிருந்தோம். (தமிழக வேளாண்மையை நசுக்கும் வேளாண்மன்றச் சட்டம் - செப்டம்பர் 2009).
இச்சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி சார்பில் 21.08.09 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்ப்புக் கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. இதில் சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், பெண்ணாடம் பகுதிகளைச் சேர்ந்த தமிழக உழவர் முன்னணியின் 40 பேர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் இதுகுறித்து தமிழக உழவர் முன்னணியின் கண்டன அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி விரிவாக விளக்கமளித்தார். வந்திருந்த உழவர்களும் செய்தியாளர்களும் அதிகாரிகளும் வியப்பு கலந்த அமைதியோடு இச்சட்டத்தின் உழவர் விரோதப் போக்கு குறித்து ஆறுமுகம் கூறியதை கேட்டனர்.
கடந்த 09.09.09 அன்று சென்னையில், இச்சட்டத்தை எதிர்த்தும் உழவர்களின் மரபு அறிவு உரிமையை வலியுறுத்தியும் உழவர் அமைப்புகளின் கருத்தரங்கம் நடைபெற்றது. பசுமைத்தாயகம், தாளாண்மை உழவர் இயக்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், காசா ஆகியவை இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். வேளாண் அறிவியலாளர் முனைவர் தேவீந்தர் சர்மா, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, கோ.நம்மாழ்வார், தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தாளாண்மை உழவர் இயக்கப் பொறுப்பாளர் கோ.திருநாவுக்கரசு, உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன், பி.யூ.சி.எல். சுரேஷ், தாளாண்மை பாமயன் உள்ளிட்ட பலர் கருத்துரையாற்றினர்.
இதன் வெளிச்சத்தில், அன்று மதியம் இச்சட்டத்திற்கு எதிரான தொடர் கண்டன இயக்கங்கள் விரிவாகத் திட்டமிடப்பட்டன. இவ்விவாதத்தில் தமிழக உழவர் முன்னணியின் திரு.சி.ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு உழவர் இயக்கப் பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு இதழ்களிலும் கட்டுரைகள் வெளியாயின. இச்சூழலில் 10.09.09 அன்று தமிழக முதலமைச்சர் அறிவிக்கையின் மூலம், தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு உழவர்களின் விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.