பாமரனின் பாசிசக்குரல்

லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையினர் நடத்திய ‘கனாக்காலம் - 2007’ என்ற கருத்தரங்கில் ‘சினிமாவும் சமூகமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்த கவிஞர் லீனா மணிமேகலை ‘துப்பட்டா’அணியாததால் கல்லூரிவாசல் வரை சென்று திரும்பினார். அந்த கருத்தரங்கில் பாலு மகேந்திரா, அஜயன்பாலா, ஞாநி, பாமரன் போன்றோர் கலந்து கொண்டனர். இது பற்றி கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை ‘இந்த இடம் எங்களுக்கு கோயில் போன்றது’ என்று கூறுகிறார். அவருடைய பார்வையில் அது சரியானதுதான். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட பாமரன் பண்பாடு, நம்பிக்கைகள் பற்றி நிறைய பிதற்றியிருக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர் - 27.12.2007).

பெரியார் வள்ளலாரையும், சங்காரச்சாரியையும் பாமரனைப்போல ஒன்றாகப் பார்க்கவில்லை; வேறுபடுத்தித்தான் பார்த்தார். விநாயகர் சிலை உடைத்தல், ராமர் படத்தை செருப்பால் அடித்தல் போன்ற எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரியாரை பாமரன் பண்பாட்டின் பெயரால் கொச்சைப்படுத்துகிறார். “இந்துக்கள் தவிர பிற மதத்தினர் உள்ளே வரக் கூடாது. ஆண்கள் மேலாடையுடன் வரக் கூடாது, பெண்களே வரக்கூடாது” என்றெல்லாம் விதிகள் உள்ளது செருப்பைக் கழற்றிப் போட வேண்டும் என்பதைப் போல. மேலும் ‘தலித்கள், சூத்திரர்கள் கோவிலுக்கு நுழையக்கூடாது, அர்ச்சகர் ஆகக் கூடாது, தேர் இழுக்கக் கூடாது, டீக்கடையில் தனி கிளாஸில்தான் டீ குடிக்க வேண்டும்... என்றெல்லாம் விதிகள் உள்ளன. பண்பாடு கருதி பாமரன்கள் இவற்றைக் கடைபிடிக்கட்டும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.

“சண்டைக்கோழி” வசனப் பிரச்சினையில் போராட்டம் செய்தவர்கள் ‘சிவாஜி’ ‘அங்கவை, சங்கவை’ பிரச்சினையில் எங்கே போனார்கள்? “என்றெல்லாம் ‘சோ’வைப்போல மிகவும் அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் நாமும் கேள்வி எழுப்பலாம். எல்லாவற்றிற்கும் முன் நிபந்தனைகள் விதிக்கும் பாமரன் போன்றவர்கள் எதற்கு குரல் கொடுத்தார்கள் - கொடுக்கவில்லை என்று விரிவாக எழுத இங்கு இடமில்லை.

தமிழ் சினிமா சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள், அரவாணிகள், மாற்றுத்திறனுடையோர் போன்றோரை ஒவ்வொரு படங்களிலும் இழிவான முறையில் சித்தரித்து வருகிறது. தொடக்க கால கருப்பு-வெள்ளைப் படங்களிலிருந்து பாமரன் போன்றவர்கள் போற்றும் பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்கள் வரை இந்நிலைதான். அதைப்பற்றியெல்லாம் பாமரன் உள்பட பலர் தட்டிக் கேட்டதில்லை. ‘சிவாஜி’ படத்தில் ‘அங்கவை-சங்கவை’ கதாபாத்திரங்கள் மூலம் இவர்கள் கருமைநிறமுடைய பெண்களை கொச்சைப்படுத்தப்பட்டதற்காக கொதிக்கவில்லை.

பதிலாக தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க்குடிப்பெருமை மீதான தாக்குதல் என்று தாங்கமுடியவில்லை இவர்களால். அங்கவை-சங்கவைக்குப் பதிலாக குட்டி ரேவதி, லீனா மணிமேகலை என்று பெயர் வைத்திருந்தால் பாமரன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் ரஜினி, சுஜாதா, சங்கர், மன்னிக்கவும் ஷங்கர், சாலமன் பாப்பையா போன்ற வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். பாமரன் போன்றவர்கள் எழுதியும், பேசியும் வருபவை மாற்றுச் சிந்தனைகள் என்ற போர்வையில் கலாச்சார போலீஸ்களின் பாசிசக் குரலையே.

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். முத்துகுமரன் குழுவின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டு விட்டது. “மக்கள் விரும்பினால் சமச்சீர் கல்விமுறை வரும்” என்றார் திருச்சியில் பேசிய குழுவின் தலைவர் முத்துக்குமரன். மக்களின் விருப்பத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை.

அரசு மெட்ரிக் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் மதிப்பெண் பட்டியலில் 1100க்குப் பதிலாக 500க்கு அளிக்கப்படும் என்ற ‘புரட்சி’கரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி வெறும் மதிப்பெண் பட்டியலுடன் நின்று விடும் அபாயம் இருக்கிறது.

10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க, ஆதரவாக வந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைய ஏதுமில்லை. மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்பாடம் சுமையாக இருப்பதாகச் சொல்லி குறைக்க வைக்கிறார்கள். (தமிழ் என்று ‘இந்துத்துவா’ தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது வேறு விஷயம்.) நாம் இதரப் பாடங்களில் சுமை குறைக்கப்பட வேண்டும் என்கிறோம். அரசு மதிப்பெண் சுமையைக் குறைத்து 1100ஐ 500க்கு மாற்றித்தர சித்தமாக உள்ளது. இதேபோன்று இனி மெட்ரிக் மற்றும் அரசுப்பள்ளிகளில் ஒரே வண்ணச் சீருடை, ஒரே நேரத்தில் தேர்வு, பெயரில் உள்ள மெட்ரிக் என்ற வார்த்தை நீக்கம் போன்ற ‘அதிரடி’ திட்டங்களையும் செயல்படுத்தலாம்.

சர்வ சிக்ஷ அபியான் (SSA) திட்டத்தில் எந்த அளவிற்கு முன்னேற்றம் என்பது அதன் மூலம் பலனடைந்தவர்களுக்கே வெளிச்சம். இன்னமும் சேர்க்கை விண்ணப்பத்தில் “பெரியம்மை தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளதா?”, என்று கேட்பதைப் போல “பள்ளியில் சேர்க்கப்படவேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் சேர்க்கப்படாமல் இல்லை” என்று கண்ணைமூடிக் கொண்டு எழுதி வைத்திருக்கிறார்கள் கல்வி அலுவலகங்களில். SSA திட்டத்தைப் பற்றி உணர்ச்சி மேலிட, பக்திப்பெருக்கோடு எம்.எல்.ஏ. ரவிக்குமார் காலச்சுவடு பிப்ரவரி 2008 இதழில் ‘விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!’ (கமல் சார், ரஜினிசார் என்பது போல) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆந்திரமாநிலம் ரிஷி வாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயல்வழிக் கற்றல் (ABL) அம்மாநிலத்திலேயே நடைமுறையில் இல்லை. இதில் ஈடுபடும் அதிகாரிகள், ஆசிரியர்கள் வீட்டுக் குழந்தைகள் இப் பள்ளிகளில் படிப்பதும் இல்லை. அரசு சிறப்பானது என்று சொல்கிற திட்டத்தை ஏன் ஆங்கிலப் பள்ளிகளில் அமல்படுத்தவில்லை? என்பது போன்ற பல்வேறு வினாக்கள் எழுப்பப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்திருந்தால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது, அரசு நடத்தும் சமத்துவ விழாக்கள் மற்றும் அடிக்கடி எடுக்கப்படும் ‘ஒழிப்பு’ உறுதிமொழிகளைப் போல. எண்ணங் களிலும் செயல்பாட்டிலும் தோழமை உணர்வு வரவேண்டும். மேலும் திட்ட இயக்குநர் விஜயகுமாரை ‘தமிழ்நாட்டு பாவ்லோ ஃபிரேயர்’ ஆக மிகைப்படுத்தி கற்பனை செய்ய வேண்டியதில்லை.

தொடர்ந்து ரவிக்குமார், “தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்து அத்வானி அழுததாக ஒரு செய்தியைப் படித்தேன். அத்வானி மட்டுமல்ல, நரேந்திர மோடி கூட அழுது விடுவார்” என்றும் எழுகிறார். தமிழ்நாட்டில் மோடி ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது போலிருக்கிறது. அந்த இருவருக்கும் ‘பர்ஸானியா’ படத்தைப் போட்டுக் காட்ட ரவிக்குமார் ஏற்பாடு செய்யலாம். பாவம், அழுதவர்களை கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படுத்தலாம் அல்லவா?

சமத்துவமில்லாத பொங்கல்

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாட உத்தரவு வருகிறது. கிராமங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் மிகவும் கவனமாக தனித்தனி பானைகளில் பொங்கலிட்டு டி.வி.களில் பேட்டியும் கொடுக்கிறார்கள். எல்லா சாதியினரும் அவரவர் வீட்டு அரிசியை ஒன்றாகப் பொங்கி சாப்பிடுவார்களா? தலித் வீட்டு பொங்கலை பிற சாதியினர் ஏற்றுக் கொள்வார்களா? மத நீக்கம் செய்யப்பட்ட பண்டிகைகள் சாத்தியமா? என்று தெரியவில்லை. இங்கு பொங்கல் உள்பட அனைத்துப் பண்டிகைகளும் மத அடையாளங்களுடன் தான் நிகழ்த்தப்படுகிறது. வீடுகளில் நடைபெறும் இந்நிகழ்வு களை அரசுக் கொண்டாட்டமாக மாற்றத் தேவையில்லை.

இதே போல் கல்வியில் மத நீக்கம் நடைபெறவேயில்லை. மொழிப் பாடங்கள் மற்றும் வரலாற்றில் (அறிவியலையும் சேர்த்து) மதக் கூறுகள் ஆழப்படிந்த இந்துத்துவா, தமிழையும், வரலாற்றையும் குழந்தை களிடம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். சர°வதி படம், சரஸ்வதி பூஜை (கலைமகள் ஆராதனை விழாவாம்) கொண்டாடாத பள்ளிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டம் தொடங்கி, அனைத்து விழாக் களும் மத அடையாளத்துடன் தான் நடத்தப் படுகின்றன. மதம்/சாதி நீக்கம் சாத்தியப்படாத வரையில் சமத்துவத்திற்கு வாய்ப்பில்லை.

நரேந்திர மோடியை வாழ்த்தும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

குஜராத் 2002-ல் இனப்படுகொலை நடத்தி, குஜராத்தில் கோர வெறித்தாண்டவமாடிய ‘மரண வியாபாரி’ நரேந்திரமோடி நமது போலியான ஜனநாயக அமைப்பைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வராயிருக்கிறார். வாழ்த்து சொல்லும் சம்பிர தாயம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுமானால் தேவைப்பட்டிருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவருக்கு என்ன அவசியம் வந்தது?

மேலும் மோடி மதவெறியுடன் கூடவே, ‘கர்மயோக்’ என்ற குஜராத் அரசு செலவில் வெளியிடப்பட்ட நூலில், “மலமள்ளுவது புனிதமான பணி அதைச் செய்பவர்கள் ‘யோக நிலை’ அடைவார்கள் என்றும் எழுதி தலித்துகளை கேவலப்படுத்தியுள்ளார். தமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று நினைக்கிறாரா? கிருஷ்ணசாமி. இந்நிலையில்தான் தலித் ஒற்றுமை அவசியமாக இருக்கிறது.

“பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நீங்கள் ஈட்டிய வெற்றி ஈடு இணையற்றது. நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள். சி.எம். என்றால் காமன் மேன் என அளித்த விளக்கம் அற்புதம். வருங்காலத்திலும் சாமானியர்களின் முதல்வராகத் திகழ்ந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைக் காட்டிலும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களே உங்களுக்குப் பெரிதும் கை கொடுத்துள்ளன. அந்தத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது பகுதிக்கு என்ற பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கும் சமமாக அமைய வேண்டும். காலம் காலமாக சமுதாய ரீதியாக ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தனி கரிசனமும் கவனமும் செலுத்த வேண்டும்.” தினமணி (திருச்சி), 27 டிசம்பர், 2007.

பல்லாயிரம் முஸ்லீம்களை கொன்று குவித்தும் லட்சக்கணக்கில் மக்களை அகதிகளாக்கியும் கிடைத்த வெற்றி ஈடு இணையற்றதுதான். இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக குஜராத் ‘மாதிரி’யை ஒரிசா போன்ற பிற மாநிலங்களுக்கும் செயல்படுத்தத் துவங்கியுள்ளது சங் பரிவார் கும்பல். குஜராத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை காவிமயப்படுத்துவது மோடிக்கு அவர்கள் மீதுள்ள கரிசனம் இன்றி வேறென்ன? ரஜினியின் உண்ணாவிரதத்திற்கு சென்று அருகே அமர்ந்து கொண்டது போல மதுரையில் நடத்தும் ‘சமநீதி சமூக மாநாட்டிற்கும்’ மோடியை அழைத்து கவுரப்படுத்தியிருக்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் மோடியின் ‘கர்மயோக்’ நூலுக்கு எதிர்ப்பு அறிக்கை (30.11.2007) வெளியிடப்பட்டது. மேலும் நரேந்திர மோடியின் தமிழக வருகையை எதிர்த்து பாசிச எதிர்ப்பு முன்னணி (AFF) ஜனவரி 14, 2008-ல் நடத்திய கருப்புக் கொடி முற்றுகைப் போராட்டத்தில் இணைந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அடித்தள மக்களுக்கு எதிரான போராட்ட வடிவங்கள்

பிறரை வருத்தாமல் தன்னையே வருத்திக் கொள்ளும் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களையே காந்தி விரும்பினார். எதிர்க்கலாச் சாரவாதியான பெரியாருக்கு உண்ணாவிரதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இன்று நடக்கின்ற போராட்டங்கள் அடித்தள மக்களின் வாழ்வை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது. மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது ‘ஷூக்களுக்கு பாலிஷ் போடும் போராட்டம் நடைபெற்றது. தமிழக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் தெருக் கூட்டுதல், எருமை, கழுதைகள் மேய்த்தல்... இன்னபிற கலக(!?) போராட்ட வடிவங்கள் அரங்கேறின. இவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசாத, எழுதாத அரசியல் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ இல்லை (பா.ம.க. தவிர). அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இல்லாவிட்டால் அவர்களும் இதில் இணைந்திருப்பார்கள்.

ஒரு இதழ் இவர்களின் போராட்ட வடிவங்களை பாராட்டி தனிக் கட்டுரையே வெளியிட்டது. இந்த மாதிரியான போராட்டங்கள் நடத்துவோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? (வன்கொடுமைச் சட்டம் நீதிமன்றத்தில் என்ன பாடுபடுகிறது என்பது ராஜேஷ் சுக்லாவின் கட்டுரையில் தெரிகிறது). வைக்கோலையும் குப்பைக் கூளங்களையும் போட்டு கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தும்போது அதை அணைக்க காவல்துறை படும்பாட்டை தொலைக்காட்சிகளில் அடிக்கடி காணமுடிகிறது. சிலசமயம் படுகாயம் கூட ஏற்படுகிறது. ஆனால் மேற்கண்ட போராட்டங்களின் மீது காவல்துறையோ, பொதுமக்களோ எவ்வித வருத்தமும் அடைவதில்லை போராட்டக் காரர்கள் இனிவரும் காலங்களில் மலமள்ளும் போராட்டம், சாக்கடையை சுத்தம் செய்யும் போராட்டம் போன்றவற்றையும் நடத்தலாம். அரசும் இவர்களது சேவயைப் பயன்படுத்திக்கொண்டு கஷ்டப்படும் தொழிலாளிக்கு ஒரு நாளாவது ஓய்வு அளிக்கலாம்.

குமுதமும் ஞாநியும்

ஞாநி முன்பு வெளியிட்ட “தீம்தரிகிட” இதழ் ஒவ்வொன்றிலும் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். “தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமையுடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம். படைப்பாளியின் உரிமையை தன் உரிமையாக அறிவித்து வரும் குமுதம் குழும இதழ்களைத் தவிர.” இதைப் படித்ததும் எழுத்துரிமைப் போராளி பிம்பம் வந்து தொலைக்கிறது. தற்போது குமுதத்தில் ஞாநியின் ‘ஓ... பக்கங்கள்’ பெருத்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. குமுதம் தன்னுடைய வாசகங்களை மாற்றிக் கொண்டதாக யாரும் நினைக்க வேண்டாம்; அப்படியேதான் இருக்கிறது. மேலே உள்ள ஞாநியின் வாசகங்களைப் பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது. “கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”. (நன்றி-குமுதம்). இதற்கு பதில் ஞாநியிடம் இருக்கிறதோ இல்லையோ காலச்சுவடு கண்ணனிடம் கண்டிப்பாக இருக்கும்.

Pin It