கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (16.4.2009) இதழுக்கு கழகத் தலைவர் கொளத்தூர்மணி அளித்த பேட்டி:
‘ராஜீவ் காந்தி கொலையை மரணதண்டனை என நியாயப்படுத்திப் பேசினால் அரசு வேடிக்கைப் பார்க்குமா?’ என உங்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததை கலைஞர் நியாயப்படுத்தியிருக்கிறார். அதில் என்ன தவறு?
“ராஜீவ் கொலையைப் பற்றி நான் பேசினால் மட்டும்தான் அரசுக்கு ஆத்திரம் வரும்போல் தோன்றுகிறது. ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமி ஒரு நூலே எழுதியிருக்கிறாரே. உங்கள் இதழுக்கு அவர் பிப்ரவரி மாத இறுதியில் அளித்த பேட்டியில்கூட, ராஜீவ் கொலைக்கு சோனியா, அவருடைய தாயார், அர்ஜுன்சிங், மார்க்கரெட் ஆல்வா ஆகியோர்தான் காரணம் என்றும், சோனியா பணம் கொடுத்து விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி இந்த கொலையைச் செய்ய வைத்தார் என்றும் கூறியுள்ளாரே, அதைப் பார்த்துக் கொண்டு கலைஞர் ஏன் உப்புக்கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தி போல் கள்ள மவுனம் சாதிக்கிறார்?”
இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் கைதுகளுக்குச் சொல்லும் காரணங்கள் சரியில்லை என்கிறீர்களா?
“காவிரி நீர் சிக்கலை, முல்லைப் பெரியாறு, ஒகேனக்கல் சிக்கல்களைத் தீர்க்க வக்கில்லாத வேசி மக்கள் என்று சீமான் பேசியதுதான் அவர் கைதுக்குக் காரணம் என்றார்கள். இந்த தேசத்தின் பாதுகாப்புக்கு அவர் பேச்சால் என்ன கேடு வந்து விட்டது? வேண்டுமானால் அவதூறான பேச்சு என்ற பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்திருக்கலாம். பெரியாரின் விரல் பிடித்து நடை பயின்ற கலைஞருக்கு ‘வேசி மகன்’ என்ற சொல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யும் அளவுக்கு இழிவானது, கேவலமானது என்று தோன்றுமேயானால், இதே பொருள் கொண்ட ‘சூத்திரன்’ என்ற சொல் இந்து மதத்தின் 97 விழுக்காடு மக்களைக் குறிக்கும், சட்ட அங்கீகாரம் பெற்ற சொல்லாகத் தொடர்கிறதே? அதை நீக்க சிறு முயற்சியையாவது கலைஞர் செய்திருக்கிறாரா? அப்புறம் ஏன் பெரியார் ஆட்சி? அண்ணா ஆட்சி?
போகிற போக்கைப் பார்த்தால் பெரியாரையும் அண்ணாவையும் கலைஞர் எதிர்க்கிறார் என்று கூட சொல்வீர்கள் போலிருக்கிறதே?
எதிர்க்கிறார் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் இருவரையும் சற்று ஒதுக்கி வைத்து, தனது ஆட்சியை, முழு குத்தகைக் காலத்துக்கும் காப்பாற்ற வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறார் என்று சொல்ல வருகிறேன்.
வீரமணியோடு கலைஞர் நெருக்கமாக இருப்பது தான் அவர் மீதான உங்கள் கோபத்துக்குக் காரணமா?
மன்னிக்க வேண்டும். பெரியார் தி.க.வோ, அல்லது அதன் முன்னணித் தோழர்களான நாங்களோ தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அடிப்படையில் இயங்குபவர்கள் அல்லர். எங்கள் அமைப்பின் மூத்த தலைவர்களான திருவாரூர் தங்கராசு, ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் செ. துரைசாமி போன்றோர் சிறிது நெகிழ்ந்து கொடுத்திருந்தால் அவர்கள் இருக்க வேண்டிய இடங்களே வேறு. நாங்கள் கலைஞரிடமோ, வேறு எவரிடமோ எப்போதுமே எதையும் எதிர்பார்ப்பவர்கள் அல்லர். எங்கள் ஆதரவும் எதிர்ப்பும் கொள்கை அடிப்படையிலும் அவர்களின் செயல்பாட்டை ஒட்டியும்தான் இருக்கும்.
‘ஒன்றுபட்டு நிற்காமல் போராளிக் குழுக்களுக்குள் நடந்த சகோதர யுத்தமும், பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கம்தான் தமிழீழம் மலர்வதை தள்ளிப் போட்டுவிட்டது’ என கலைஞர் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது?
சகோதர யுத்தம் என்ற வார்த்தையை எல்லா பொது நிகழ்ச்சியிலும் கலைஞர் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டதாக கலைஞர் சொல்லும் சிறீ சபாரத்தினத்தின் டெலோ இயக்கத்தில் அவரோடு நின்று ஆயுதம் தாங்கிப் போராடிய போராளிகளான செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா பத்மநாபனின் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கப் போராளித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், அமிர்தலிங்கத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் சம்பந்தம் ஆகியோர் புலிகள் தலைமையில், வழி காட்டலில் இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனரே.
கடந்த கால நிகழ்வுகள் குறித்து அவர்களுக்குள் மன வருத்தம் இல்லாமல் இருக்காது. என்றாலும் இன்றையச் சூழலில் ஈழத் தமிழர்களின் உயிர்களை, உடைமைகளை, உரிமைகளை வென்றெடுக்கும் ஒரே பாதுகாப்பு அரண் புலிகள் என உணர்ந்து இணைந்து செயல்படுகின்றனர். அதே நேரத்தில் இங்கு ‘சகோதர யுத்தம்’ என்ற ஒப்பாரியை அவர் ஓயாமல் பாடிக் கொண்டிருப்பது ஈழத் தமிழர்கள் மீதுள்ள அக்கறையினாலா? அல்லது புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பினாலா? என சிந்திக்க வேண்டும்.
சர்வாதிகார சிந்தனை உள்ளவர் பிரபாகரன் என கலைஞர் கூறுவது கூட தவறா என்ன?
1984 இல் எனக் கருதுகிறேன். ஃபிரண்ட்லைன் இதழுக்கு பேட்டியளித்த பிரபாகரன், ‘விடுதலைக்குப் பின் தமிழீழம், யூகோஸ்லாவியாவின் ஆட்சிமுறை போன்ற ஒற்றைக் கட்சி ஆட்சி முறையாக இருக்கும்’ என்று சொன்னார். யூகோஸ்லாவியாவை அவர் சுட்டிக்காட்டியதற்குக் காரணம் பொதுவுடைமை இயக்கத்தவரான அந்நாட்டு அதிபர் டிட்டோ, ரஷ்ய அணியில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் அணி சேரா நாடுகள் அமைப்பில் நின்று நடுநிலை பேசிய அமைதி விரும்பி.
‘ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்றால் அது சர்வாதிகாரம் என்று தானே பொருள்?’ என அறிக்கை விட்ட கலைஞர், ‘நான் என் வாழ்நாளில் சந்திக்க விரும்பும் மாமனிதர் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ’ என்று கூறியிருக்கிறார். இன்று கியூபாவில் நடப்பதும் ஒற்றைக் கட்சி ஆட்சி முறை தானே? இளைஞரணி மாநாட்டை ஒட்டி கடிதங்கள் வாயிலாக தொடர்ந்து தி.மு.க. இளைஞரணியினருக்கு லெனின், மாவோ, ஸ்டாலின் என பல தலைவர்களை நீங்கள் அறிமுகப்படுத்தினீர்களே! அவர்களெல்லாம் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை நடத்தியவர்கள்தான். போராட்டம் நிகழும் வேளையில் விதிக்கும் சில கட்டுப்பாடுகளுக்காகவே பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொல்ல முடியுமானால், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, பேச்சுக்களுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம், இருநூறு வழக்கறிஞர்கள் மண்டை உடைப்பு இதைச் செய்ததற்காக கலைஞரை என்ன பெயரால் அழைக்கலாம்? நீங்களே சொல்லுங்கள்.
1987 ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த அடிப்படையில் தீர்வு காணலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். அது சரியானது தானே?
இந்த ஒப்பந்தத்தைப் பற்றி இந்த யோக்கியர்கள் ஏன் கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாகப் பேசவில்லை? ஒப்பந்தத்தில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்கள் பகுதி ஒரே ஆட்சிப் பகுதியாக மாற்றப்படும் என இருந்தது. ஆனால், இந்தச் சிறிய நடவடிக்கையைக்கூட இலங்கை உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என்று தீர்ப்புக் கூறியது. அதற்கு எதிராக இந்திய - தமிழக அரசுகள் எடுத்த முயற்சிகள் என்ன?
‘இந்தியாவின் நலனுக்கு எதிராக எந்த ஒரு நாடும் இந்தியாவின் அனுமதியின்றி இலங்கையில் கால்பதிக்கக் கூடாது’ என அந்த ஒப்பந்தம் சொல்கிறது. ஆனால், தற்போது அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்ற சீன, ஜப்பானிய நிறுவனங்களும், மன்னாரில் பெட்ரோலிய ஆய்வுப் பணி என சீன நிறுவனமும் அங்கு உள்ளன. பாகிஸ்தானின் ராணுவத் தளபதிகளும் அங்கு உள்ளனர். இதற்கெல்லாம் இந்திய அரசு எடுத்த எதிர் நடவடிக்கை என்ன?
நமது பகை நாடான பாகிஸ்தான்கூட, எல்லை தாண்டிப் போகும் இந்திய மீனவர்களை இதுவரை சுட்டதில்லை. ஆனால், இலங்கையோ அன்றாடம் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்கிறதே.... இதற்குக் கண்டன அறிக்கையைக்கூட மத்திய அரசு வெளியிடவில்லையே?
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மீதான உங்கள் கோபம் சரியானது என வைத்துக் கொண்டாலும், அதற்காக தி.மு.க.வையும் எதிர்த்து இந்தத் தேர்தலில் எதிர்ப்புப் பிரசாரம் செய்ய உங்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளதாமே? அது சரியா?
தமிழீழப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்தே இந்தத் தேர்தல் நிலைபாட்டை எடுத்துள்ளோம். பெரியார் காலத்திலிருந்தே திராவிடர் கழகம் தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட யார் வந்துவிடக் கூடாது என்பதில்தான் கூடுதல் கவனம் செலுத்தும் என்பது நாடறிந்த உண்மை. அந்த அடிப்படையில் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அனைத்து வழிகளிலும் போராடியும் கூட, ‘இலங்கை அரசே போரை நிறுத்து’ என மத்திய அரசு நேரிடையாகச் சொல்லவில்லையே. மத்திய அரசைத் தலைமையேற்று நடத்தும் காங்கிரசுக்கும், மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிரானது தான் எங்களின் இந்தத் தேர்தல் நிலைப்பாடு.
அதற்காக அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கிறீர்களாமே?
தமிழர் விரோத காங்கிரஸ், தமிழ் மண்ணை விட்டு அடையாளம் இல்லாமல் அகற்றப்பட வேண்டும். எனவே, காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டுமெனில் அதற்கு இணையான வலுவுள்ள எதிர் வேட்பாளருக்கு வாக்களிப்பதே சரி எனக் கருதுகிறோம்.
ஜெயலலிதா எப்போதுமே புலிகளுக்கு எதிராக இருப்பவர். தேர்தலுக்காக ஈழ ஆதரவு வேஷம் போடுகிறார் என்ற பேச்சு உண்டே?
உண்மைதான். விடுதலைப்புலிகளை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பவர் ஜெயலலிதா. எதிர்காலத்தில் அவர் எப்படியிருப்பார் என்றும் சொல்ல முடியாது. ஆனால், தேர்தலுக்காகவாவது தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு இணக்கமாக - வேஷத்துக்காகவாவது ‘தனி ஈழம்’ என்று பேசுகிறார். ஆனால், நடிப்புக்காகக்கூட புலிகளை விமர்சித்துப் பேசுவதை நிறுத்தாத கலைஞரையும், தேர்தலுக்காகக்கூட போர் நிறுத்தத்தை வலியுறுத்தாத காங்கிரசையும் அவருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இந்தத் தேர்தல் வெற்றியால் ஏற்படும் ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர்களின் எல்லா உரிமைகளையும் மீட்டுக் கொடுத்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. ஆனால், ‘கருப்பனைக் கட்டி வைத்து அடிக்கிற அடியில், வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓட வேண்டும்’ என நாட்டுப்புற சொலவடை உண்டு. அதுபோல இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு விழுகின்ற அடி, தமிழின உணர்வுகளை மதிக்காத எல்லோருக்கும் நல்ல புத்தி கற்பிக்கும் என்றே கருதுகிறோம். மேலும் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் எனக் கோரவில்லை. எங்களுக்கு காங்கிரசை ஒழிப்பதுதான் நோக்கமே தவிர, மற்றவர்களை ஆதரிப்பது என்பது அல்ல.
உங்கள் அமைப்பு மூலம் ஒரு குறுந்தகடு வெளியிட்டீர்களாமே? அந்த சி.டி.யையும், உங்கள் இயக்கத்தையும் தடை செய்யுமாறு தங்கபாலுவும், பீட்டர் அல்போன்ஸும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டதாகச் செய்திகள் வந்ததே?
தங்கபாலு சரி. பீட்டர் அல்போன்ஸ் எப்படி உடன் போனார் என்று தெரியவில்லை. அவர் கொஞ்சம் விவரமானவர் என்று இதுவரை எண்ணியிருந்தோம். இந்தக் குறுந்தகடு குறித்து எங்களால் போதிய அளவு விளம்பரப்படுத்த இயலாமலிருந்தது. அந்த இலவச விளம்பரத்திற்கு தங்கபாலுவுக்கு நன்றி.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தேர்தலில் யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்கே முன்னுரிமை தருகிறோம்
- விவரங்கள்
- கொளத்தூர் மணி
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009